கிலியட் பள்ளி—60 வருட மிஷனரி பயிற்சிப் பள்ளி
“தீவிரமாய் பைபிள் படித்ததால் நாங்கள் யெகோவாவிடம் நெருங்கி வந்தோம், அவருடைய அமைப்பை பற்றியும் நிறைய தெரிந்துகொண்டோம். அயல்நாட்டில் மிஷனரி வாழ்க்கைக்கு இது எங்களை ஆயத்தமாக்கியது.” உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளி நடத்திய முதல் வகுப்பில் பட்டம் பெற்ற ஒரு பெண்மணி, அங்கு கொடுக்கப்பட்ட பாடத் திட்டங்களைப் பற்றி இப்படித்தான் வர்ணித்தார். 60 ஆண்டுகளுக்கு முன்னர் இது ஆரம்பிக்கப்பட்டது முதற்கொண்டு, பல நாடுகளுக்கு மிஷனரிகளை கிலியட் பள்ளி அனுப்பி வந்திருக்கிறது. மார்ச் 8, 2003-ல், நியு யார்க், பாட்டர்சனில் உள்ள உவாட்ச்டவர் கல்வி மையத்தில் 114-ம் வகுப்பு பட்டமளிப்பு விழா இனிதே நடைபெற்றது. அந்த அரங்கத்திலும் தொலைக்காட்சி வழியே இந்நிகழ்ச்சியை அனுபவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட மற்ற இடங்களிலும் குழுமியிருந்த 6,404 பேரும் இதை கூர்ந்து கவனித்தனர்; பேச்சுக்கள், பேட்டிகள், தொகுதியாக கூடி நிகழ்த்திய உரையாடல் ஆகியவை இதில் இடம்பெற்றன.
ஆளும்குழு அங்கத்தினர் தியடோர் ஜாரஸ் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இவர் தனது ஆரம்ப உரையில், பார்வையாளர்கள் பல நாடுகளிலிருந்து—ஆசியா, கரீபியன், மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து—வந்திருந்ததற்கு கவனத்தை ஈர்த்தார். 2 தீமோத்தேயு 4:5-ஐ அடிப்படையாகக் கொண்டு, கிலியட்டில் பயிற்றுவிக்கப்பட்ட மிஷனரியின் பிரதான வேலையை—“சுவிசேஷகனுடைய வேலையை”—சகோதரர் ஜாரஸ் வலியுறுத்திக் காட்டினார். பைபிளைப் பற்றி மக்களுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் மிஷனரிகள் சத்தியத்திற்கு சாட்சி பகருகின்றனர்.
மாணவர்களுக்கு கடைசி அறிவுரை
தொடர்ந்து வந்த சிற்றுரைகளுக்கு ஆரம்பமாக, “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” என்ற விசுவாசத்தைப் பலப்படுத்தும் பொருளில் ஐக்கிய மாகாணங்களின் கிளைக் குழுவின் அங்கத்தினர் ஜான் லார்ஸன் உரையாற்றினார். (ரோமர் 8:31) மாணவர்கள் தங்களுடைய வேலையில் எதிர்ப்படும் எந்தத் தடையையும் வெல்வதற்கு உதவ யெகோவாவின் வல்லமையில் முழு நம்பிக்கை வைப்பதற்கு பைபிள்பூர்வ ஆதாரத்தை இப்பேச்சாளர் விளக்கினார். ரோமர் 8:38, 39-ஐ பயன்படுத்தி, மாணவர்களுக்கு சகோதரர் லார்ஸன் புத்திமதி வழங்கினார்: “உங்கள் சார்பாக கடவுள் பயன்படுத்தும் சக்தியை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள், யெகோவா உங்கள் மீது வைத்திருக்கும் தனிப்பட்ட அக்கறையை எதுவும் முறிக்க முடியாது என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள்.”
நிகழ்ச்சியில் அடுத்து வந்தவர் ஆளும்குழு அங்கத்தினராகிய கை பியர்ஸ். “உங்கள் கண்களை சந்தோஷமாய் வைத்திருங்கள்!” என்ற கருப்பொருளில் இவர் பேசினார். (லூக்கா 10:23) உண்மையான சந்தோஷம் என்பதில் யெகோவாவைப் பற்றி அறிவதும் அவருடைய நித்திய நோக்கத்தை புரிந்துகொள்வதும் பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி வருவதை காண்பதும் உட்பட்டுள்ளது என அவர் விளக்கினார். எங்கு சென்றாலும்சரி, மாணவர்கள் தங்களுடைய கண்களை சந்தோஷமாய் வைத்திருப்பதன் மூலம் உண்மையான மகிழ்ச்சியை காத்துக்கொள்ள முடியும் என்றார். யெகோவாவின் நற்குணத்தை ஆழ்ந்து தியானிக்கும்படியும், அவருடைய சித்தத்தை செய்வதன் மீது மனதையும் இருதயத்தையும் ஒருமுகப்படுத்தும்படியும் பட்டதாரிகளை சகோதரர் பியர்ஸ் உற்சாகப்படுத்தினார். (சங்கீதம் 77:12) நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்வதன் மூலம் அவர்கள் எதிர்ப்படும் எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும்.
பிற்பாடு இந்த வகுப்பினர், தினமும் பாடம் நடத்திய போதனையாளர்கள் இருவரிடமிருந்து ஊக்கமூட்டும் வார்த்தைகளால் பிரியாவிடை பெற்றனர். “நீங்கள் மகிமையைத் தேடுகிறீர்களா?” என்ற கேள்வியை லாரன்ஸ் போவன் தனது பேச்சின் தலைப்பில் கேட்டார். தங்களுக்கென பாராட்டு, புகழ், தனி மதிப்பு ஆகியவற்றைப் பெறுவதே மகிமை என அநேகர் கருதுகிறார்கள். ஆனால் சங்கீதக்காரனாகிய ஆசாப் உண்மையான மகிமையை—யெகோவாவுடன் வைத்திருக்கும் மதிப்பிற்குரிய உறவாகிய விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை—புரிந்துகொள்ள ஆரம்பித்தார். (சங்கீதம் 73:24, 25) தொடர்ந்து பைபிளை ஆழமாக ஆராய்ந்து படிப்பதன் மூலம் யெகோவாவுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ளும்படி பட்டம்பெறும் மாணவர்கள் உந்துவிக்கப்பட்டார்கள். கிறிஸ்துவின் மூலம் யெகோவாவின் நோக்கம் நிறைவேறி வருவதோடு சம்பந்தப்பட்ட விவரங்களை தேவதூதர்கள் ‘உற்றுப்பார்க்க ஆசையாயிருக்கிறார்கள்.’ (1 பேதுரு 1:12) தங்களுடைய பிதாவின் மகிமையை பிரதிபலிப்பதற்கு முடிந்தளவு அவரைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். பின்பு பேச்சாளர், விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தைக் கண்டுபிடிக்க பிறருக்கு உதவி செய்வதன் மூலம் தங்களுடைய மிஷனரி நியமிப்புகளில் யெகோவாவை மகிமைப்படுத்தும்படி மாணவர்களை உந்துவித்தார்.
“பரிசுத்த இரகசியத்திலுள்ள கடவுளுடைய ஞானத்தைப் பேசுங்கள்” என்ற கருப்பொருளில் உரையாற்றி, இந்த ஆரம்ப தொடர்பேச்சை நிறைவு செய்தார் பள்ளி பதிவாளர் வாலஸ் லிவரன்ஸ். (1 கொரிந்தியர் 2:7, NW) தனது மிஷனரி சேவையின் போது அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்ட கடவுளுடைய இந்த ஞானம் எது? சர்வலோக சமாதானத்தையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுவதற்கு யெகோவா பயன்படுத்தும் ஞானமான, வலிமையான வழிமுறையே இது. இந்த ஞானம் இயேசுவை மையமாகக் கொண்டது. பவுல் ஒரு சமூக நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்குப் பதிலாக, ஆதாமின் பாவத்தால் விளைந்த பாதிப்புகளை கடவுள் எப்படி சரிப்படுத்துவார் என்பதைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவினார். (எபேசியர் 3:8, 9) செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இந்தப் பேச்சாளர் இவ்வாறு புத்திமதி கூறினார்: “யெகோவா எவ்வாறு தமது நோக்கத்தை நிறைவேற்றுவார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள உதவி செய்வதற்குத் தன்னுடைய மிஷனரி வேலையை பயன்படுத்திய பவுலைப் போலவே, நீங்களும் உங்களுடைய ஊழிய சிலாக்கியத்தை பயன்படுத்துங்கள்.”
இதைத் தொடர்ந்து மற்றொரு கிலியட் போதனையாளராகிய மாற்கு நியூமர், வகுப்பு மாணவர்கள் அநேகர் பங்கேற்ற உற்சாகமான உரையாடலுக்குத் தலைமை ஏற்றார். “கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது வைராக்கியமான ஊழியர்களைப் பிறப்பிக்கிறது” என்ற கருப்பொருள், ரோமர் 10:10-ல் பதிவு செய்யப்பட்டுள்ள பவுலின் வார்த்தைகளைச் சிறப்பித்துக் காட்டியது. இந்தப் பள்ளியில் பயின்ற காலத்தில் தாங்கள் அனுபவித்து மகிழ்ந்த வெளி ஊழிய அனுபவங்கள் பலவற்றை இந்த வகுப்பினர் விவரித்தார்கள். கடவுளுடைய வார்த்தையைப் படித்து தியானிக்கும்போது, யெகோவா தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் பற்றிய மகத்தான காரியங்கள் நம்முடைய இருதயத்தை நிரப்பும், அவை நம்முடைய உதடுகளிலும் வெளிப்படும் என்பதை அவர்களுடைய அனுபவங்கள் மெய்ப்பித்துக் காட்டின. உவாட்ச்டவர் கல்வி மையத்தில் தங்கியிருந்த ஐந்துமாத காலத்தில், அருகிலுள்ள சபைகளால் அடிக்கடி ஊழியம் செய்யப்பட்ட பிராந்தியங்களில் இந்த மாணவர்கள் 30-க்கும் அதிகமான பைபிள் படிப்புகளை ஆரம்பித்தனர்.
முதிர்ச்சி வாய்ந்தவர்கள் பேசுகிறார்கள்
பள்ளி நடைபெற்ற காலத்தில், ஐக்கிய மாகாணங்களின் பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களுடன் கூட்டுறவு கொண்டதிலிருந்து மாணவர்கள் பயனடைந்தார்கள். உவாட்ச்டவர் கல்வி மையத்தில் தற்பொழுது விசேஷ பயிற்சி பெற்று வரும் பயணக் கண்காணிகள் உட்பட, நீண்ட காலமாய் யெகோவாவுக்கு உண்மைத்தன்மையுடன் சேவை செய்தவர்களை கிளைக் குழு அங்கத்தினர்களாகிய ராபர்ட் சிரான்கோ மற்றும் ராபர்ட் பி. ஜான்சன் பேட்டி கண்டார்கள். பேட்டி காணப்பட்ட அனைவரும் ஒருகாலத்தில் மிஷனரிகளாக சேவை செய்த கிலியட் பட்டதாரிகள். முதிர்ச்சிவாய்ந்த இந்த ஆவிக்குரிய மனிதர்கள் உதிர்த்த ஞானம் பொருந்திய வார்த்தைகள், மாணவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் நம்பிக்கையூட்டின.
அவர்களுடைய புத்திமதிகளில் சில: “முடிந்தவரை ஊழியத்திலும் சபையிலும் உங்களை அதிக சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.” “உங்களை முக்கியமான ஒருவராக நினைக்காதீர்கள். மிஷனரியாக உங்களுடைய நோக்கத்தின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள், நீங்கள் சேவை செய்யும் இடத்தை உங்களுடைய வீடாக ஆக்கிக்கொள்ளுங்கள்.” எங்கு நியமிக்கப்பட்டாலும்சரி, நற்கிரியைகளில் சிறந்து விளங்க எவ்வாறு கிலியட் பயிற்சி ஓர் ஊழியருக்கு உதவுகிறது என்பதை பயனுள்ள பிற குறிப்புகள் சித்தரித்துக் காட்டின. இதோ, அவற்றில் சில: “ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து ஒன்றுசேர்ந்து வேலை செய்ய நாங்கள் கற்றுக்கொண்டோம்.” “புதிய கலாச்சாரங்களை ஏற்றுக்கொள்வதற்கு இந்தப் பள்ளி எங்களுக்கு உதவியது.” “வேதவசனங்களைப் புதுப்புது கோணத்தில் பயன்படுத்த நாங்கள் கற்பிக்கப்பட்டோம்.”
நீண்ட காலமாய் ஆளும்குழு அங்கத்தினராக இருக்கும் ஜான் ஈ. பார் இந்நிகழ்ச்சியில் முக்கிய சொற்பொழிவை ஆற்றினார். “அவர்களுடைய சத்தம் பூமியின் கடைமுனை வரை சென்றது.” (ரோமர் 10:18, NW) இன்று கடவுளுடைய ஜனங்களால் இந்தச் சவாலை சந்திக்க முடிந்திருக்கிறதா? என்ற கேள்வியை அவர் கேட்டார். ஆம், நிச்சயமாகவே! “நீங்கள் பிரசங்கித்து வருகிறீர்களா?” என்ற கேள்வி 1881-லேயே ஆங்கில காவற்கோபுர பத்திரிகையின் வாசகர்களிடம் கேட்கப்பட்டது. பின்பு பேச்சாளர், 1922-ல் அ.ஐ.மா., ஒஹாயோவிலுள்ள சீடர்பாய்ன்ட் என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில், “ராஜாவையும் ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள்!” என விடுக்கப்பட்ட அழைப்பை கூட்டத்தாருக்கு நினைப்பூட்டினார். காலங்கள் உருண்டோடுகையில், கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் வைராக்கியத்தால் தூண்டப்பட்டு சகல தேசத்தாருக்கும் மகத்தான ராஜ்ய சத்தியங்களை அறிவித்திருக்கிறார்கள். பிரசுரங்களின் மூலமாகவும் வாய் வார்த்தைகள் மூலமாகவும் நற்செய்தி மக்கள் குடியிருக்கும் பூமியின் கடைமுனை மட்டும் சென்றிருக்கிறது—இவையெல்லாம் யெகோவாவின் கனத்திற்கும் துதிக்குமே. உந்துவிக்கும் முடிவுரையில், பட்டதாரிகள் தாங்கள் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களை எண்ணிப் பார்க்கும்படி சகோதரர் பார் புத்திமதி கூறினார். “ஒவ்வொரு நாளும் உங்களுடைய வேலையைக் குறித்து யெகோவாவிடம் ஜெபிக்கும்போது, ‘அவர்களுடைய சத்தம் பூமியின் கடைமுனை வரை சென்றது’ என்ற வார்த்தைகளை நிறைவேற்றுவதில் உங்களுக்கும் ஒரு பாகம் இருப்பதற்காக இருதயத்தின் ஆழத்திலிருந்து அவருக்கு நன்றி செலுத்துங்கள்.”
இந்தப் பேச்சிற்குப்பின், வாழ்த்துச் செய்திகள் வாசிக்கப்பட்டன, தலைமை தாங்கியவர் ஒவ்வொரு பட்டதாரிக்கும் பட்டம் வழங்கினார். பிற்பாடு, அருமையான இந்தப் பள்ளியை விட்டுப் பிரியும் சோகமும் சந்தோஷமும் கலந்த உணர்ச்சியுடன் வகுப்பின் பிரதிநிதி ஒருவர் இருதயப்பூர்வமான உறுதிமொழியை ஆளும் குழுவிற்கும் பெத்தேல் குடும்பத்திற்கும் வாசித்து, “இதுமுதல் என்றென்றைக்கும்” யெகோவாவை துதிப்பதற்கு பட்டதாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தைத் தெரிவித்தார்.—சங்கீதம் 115:18.
இவர்களுக்கு முன்பு சென்று 60 ஆண்டுகளாக ஊழியம் செய்திருக்கிறவர்களைப் போலவே, இந்தப் பட்டதாரிகளும் தங்களுடைய புதிய வீடுகளுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு உலகளாவிய பிரசங்க வேலையின் வளர்ச்சிக்கு சிறந்த பங்காற்றும்படி ஜெபிக்கிறோம்.
[பக்கம் 23-ன் பெட்டி]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 12
அனுப்பப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 16
மாணவர்களின் எண்ணிக்கை: 48
சராசரி வயது: 34.4
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 17.6
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 13.5
[பக்கம் 24-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 114-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
[பக்கம் 24-ன் படம்]
(1)ரோஸா, டி.; காரிகோலாஸ், ஜே.; லின்ட்ஸ்ட்ரம், ஆர்.; பாவனெலோ, பி.; டேட், என். (2) வான் ஹௌட், எம்.; டானாபாயர், சி.; மார்டினஸ், எல்.; மில்லர், டி.; ஃபெஸ்ட்ரே, ஒய்.; நட்டர், எஸ். (3) மார்டினஸ், பி.; க்ளார்க், எல்.; மான், பி.; ஃபிஷர், எல்.; ரோமோ, ஜி. (4) ரோமோ, ஆர்.; ஈடி, எஸ்.; டைமன், சி.; கேம்ப்பெல், பி.; மில்லர், டி.; ரோஸா, டபிள்யு. (5) லின்ட்ஸ்ட்ரம், சி.; காரிகோலாஸ், ஜெ.; மார்க்கவிக், என்.; லின்டாலா, கே.; வான் டென் ஹூவல், ஜே.; டேட், எஸ்.; நட்டர், பி. (6) மான், பி.; பாவனெலோ, வி.; ஈடி, என்.; வெஸ்ட், எ.; க்ளார்க், டி.; மார்க்கவிக், ஜே. (7) ஃபிஷர், டி.; டானாபாயர், ஆர்.; கறி, பி.; கறி, ஒய்.; கார்ஃபானோ, டபிள்யு.; வெஸ்ட், எம்.; டைமன், எ. (8) வான் ஹௌட், எம்.; கேம்ப்பெல், சி.; ஃபெஸ்ட்ரே, ஒய்.; கார்ஃபானோ, சி.; வான் டென் ஹூவல், கே.; லின்டாலா, டி.