மனமுவந்து செயல்பட மனமுள்ளோரை வரவேற்கும் கிலியட்
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளி ஒப்புக்கொடுத்த ஆண்களையும் பெண்களையும் அயல் நாட்டு மிஷனரி ஊழியத்திற்காக பயிற்றுவிக்கிறது. யார் இப்பள்ளியில் பயில தகுதியானவர்கள்? மனமுவந்து செயல்பட மனமுள்ளவர்களே. (சங்கீதம் 110:3) 2001, செப்டம்பர் 8-ம் தேதி 111-ம் வகுப்பு பட்டம் பெற்றபோது அது உண்மையிலேயே தெள்ளத் தெளிவானது.
ஏற்கெனவே அந்த வகுப்பை சேர்ந்த மாணாக்கர்களில் சிலர் மனமுவந்து, தங்கள் குடும்பத்தாரையும், நண்பர்களையும் தாய் நாட்டையும் விட்டுவிட்டு எங்கு தேவை அதிகமோ அங்கு சேவை செய்ய வந்திருந்தார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் வேறுபட்ட சுற்றுச்சூழலில் வாழ்வதற்கு ஏற்ற மாற்றங்களைச் செய்ய தங்களால் முடியுமா என தங்களையே சோதித்துப் பார்த்திருந்தார்கள். உதாரணமாக, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு ரிஷேயும் நாடாலீயும் பொலிவியாவிற்கும், டாடும் மிஷெலும் டோமினிகன் குடியரசிற்கும், டேவிட்டும் மோனிக்கும் ஆசியாவிலுள்ள ஒரு நாட்டிற்கும் செல்வதற்கு வசதியாக காரியங்களை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள். மற்ற மாணாக்கர்கள் ஏற்கெனவே நிகராகுவா, ஈக்வடார், அல்பேனியா ஆகிய நாடுகளில் ஊழியம் செய்தவர்கள்.
உயர்நிலைப் பள்ளியில் ஸ்பானிய மொழி பயிலும்படி கிறிஸ்டீக்கு உற்சாகம் கிடைத்தது; இது மணமுடிப்பதற்கு முன்பு ஈக்வடாரில் இரண்டு ஆண்டுகளை ஊழியத்தில் செலவிட அவளை தயார்படுத்தியது. மற்றவர்கள் தங்கள் நாட்டிலேயே, பிறமொழி சபைகளோடு கூட்டுறவு கொள்ள ஆரம்பித்தார்கள். கிலியட் பள்ளிக்கு வருவதற்கு முன்பு சவுலும் ப்ரிஷில்லாவும் வித்தியாசமான சவாலை அதாவது, ஆங்கில மொழியில் முன்னேற்றம் செய்வதற்கு கடினமாக உழைக்கும் சவாலை எதிர்ப்பட்டார்கள். இவ்வாறு தாங்கள் மனமுவந்து செயல்பட மனமுள்ளவர்களாய் இருப்பதை காட்டினார்கள்.
இருபது வார மிஷனரி பயிற்சி காலம் சட்டென பறந்துவிட்டது. பட்டம் பெறும் நாளும் வந்தது. தங்கள் நண்பர்களும் குடும்பத்தாரும் அருகிலிருக்க, மாணாக்கர்கள் ஞானமான அறிவுரைக்கும் உற்சாகமளிக்கும் பிரியாவிடை பேச்சுக்களுக்கும் செவிசாய்த்தார்கள்.
அந்த நிகழ்ச்சியின் சேர்மனாக தியோடர் ஜாரஸ் இருந்தார்; இவர் கிலியட் பள்ளியின் ஏழாவது வகுப்பு பட்டதாரியும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் தற்போதைய அங்கத்தினரும் ஆவார். கிலியட் எந்தக் குறிக்கோளோடு மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கிறதோ அதிலிருந்து நாம் ஓர் அமைப்பாக ஒருபோதும் வழிவிலகி சென்றதில்லை என்பதை அவருடைய ஆரம்ப வார்த்தைகள் வலியுறுத்தின. அந்தக் குறிக்கோள்: குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பது. (மாற்கு 13:10) முன்பு செய்து வந்ததைவிடவும் அதிகளவில் இந்தப் பிரசங்க ஊழியத்தில் ஈடுபடுவதற்கும், பயிற்றுவிக்கப்பட்ட மிஷனரிகள் முக்கியமாக உலகில் எங்கு தேவைப்படுகிறார்களோ அங்கு அனுப்புவதற்கும் திறம்பட்ட மாணாக்கர்களை கிலியட் தயார்படுத்துகிறது. ஏற்கெனவே மிஷனரிகள் சேவை செய்து வரும் 19 நாடுகளுக்கு இந்தப் பட்டதாரிகள் நியமிப்பைப் பெற்றதால் தங்கள் கிலியட் பயிற்றுவிப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ளும்படி மாணாக்கர்களுக்கு சகோதரர் ஜாரஸ் புத்திமதி கூறினார்.
பட்டம் பெறுபவர்களுக்கு பொருத்தமான புத்திமதி
பின்னர் அநேக பேச்சுக்கள் கொடுக்கப்பட்டன. ஐக்கிய மாகாணங்களின் கிளை அலுவலக குழுவின் அங்கத்தினரான வில்லியம் வான் டி வால், “மிஷனரிகளின் ஆர்வம்—உண்மை கிறிஸ்தவர்களின் ஓர் அடையாளம்” என்ற தலைப்பில் பேசினார். மத்தேயு 28:19, 20-ல் பதிவு செய்யப்பட்டுள்ள ‘சீஷராக்கும்’ வேலையிடம் கவனத்தை ஒருமுகப்படுத்தினார்; “ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் தம் மிஷனரி நியமிப்பை செய்து முடித்த இயேசுவை பின்பற்றுங்கள்” என அவர் மாணாக்கர்களை தூண்டுவித்தார். தங்கள் மிஷனரி ஊழியத்திடம் தொடர்ந்து ஆர்வத்தைக் காத்துக்கொள்ள வருங்கால மிஷனரிகளுக்கு உதவும் விதத்தில் அவர்களை அவர் உற்சாகப்படுத்தினார்: “நடைமுறையான அட்டவணையைப் பின்பற்றுங்கள்; தனிப்பட்ட படிப்பு பழக்கத்தில் நல்ல ஒழுங்கைக் காத்துக்கொள்ளுங்கள், தேவராஜ்ய காரியங்களை அத்துப்படியாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்; ஏன் அங்கு ஊழியம் செய்கிறீர்கள் என்பதற்கான காரணங்களை எப்போதும் கவனத்தில் வையுங்கள்.”
அடுத்து ஆளும் குழுவின் அங்கத்தினரான கை பியர்ஸ் நிகழ்ச்சியில் உரையாற்றினார். “‘உங்கள் பகுத்தறியும் திறனை’ தொடர்ந்து வளர்த்துக்கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் பேசினார். (ரோமர் 12:1, NW) யோசிப்பதற்கும் பகுத்தறிவதற்கும் கடவுள் கொடுத்த திறமையை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள உற்சாகப்படுத்துவதன் மூலம் பட்டம் பெறும் வகுப்பாருக்கு அவர் நடைமுறையான ஆலோசனைகளை அளித்தார். “தம்முடைய வார்த்தையின் மூலம் யெகோவா உங்களுக்கு சொல்வதை தொடர்ந்து ஆழ்ந்து தியானியுங்கள். இது உங்களைப் பாதுகாக்கும்” என குறிப்பிட்டார். (நீதிமொழிகள் 2:11) சொந்த கருத்துக்களை வலியுறுத்துவதன் மூலம் தங்கள் ‘பகுத்தறியும் திறனுக்கு’ முட்டுக்கட்டையாய் இராதவாறு பார்த்துக்கொள்ளவும் அந்த வகுப்பாருக்கு சகோதரர் பியர்ஸ் ஆலோசனை அளித்தார். இந்தப் பொருத்தமான நினைப்பூட்டுதல்கள், இந்தப் பட்டதாரிகள் மிஷனரிகளாக சேவிக்கையில் நிச்சயம் அதிக பயனுள்ளவையாய் இருக்கும்.
கிலியட் போதகர்களில் ஒருவரான லாரன்ஸ் போவனை அடுத்ததாக பேசுவதற்கு சேர்மன் அழைத்தார்; அவர், “வேறெதையும் அறியாதிருக்க தீர்மானமாயிருங்கள்” என்ற தலைப்பில் பேசினார். கொரிந்துவில் தன் மிஷனரி ஊழியம் சம்பந்தமாக அப்போஸ்தலனாகிய பவுல் ‘இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையே அன்றி, வேறொன்றையும் . . . அறியாதிருக்கத் தீர்மானித்திருந்ததை’ அவர் சுட்டிக்காட்டினார். (1 கொரிந்தியர் 2:2) பைபிள் முழுவதிலும் வெளிப்படும் செய்திக்கு, அதாவது வாக்குப்பண்ணப்பட்ட வித்துவின் மூலம் கடவுளுடைய அரசதிகாரம் நியாயநிரூபணம் செய்யப்படும் செய்திக்கு அகிலத்தின் மாபெரும் சக்தியாகிய பரிசுத்த ஆவியின் ஆதரவு இருப்பதை பவுல் அறிந்திருந்தார். (ஆதியாகமம் 3:15) பவுலையும் தீமோத்தேயுவையும் போல இருந்து, “ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொ”ள்வதன் மூலம் மிஷனரிகளாக வெற்றி காணும்படி பட்டம் பெறவிருந்த 48 மாணாக்கர்களும் ஊக்குவிக்கப்பட்டார்கள்.—2 தீமோத்தேயு 1:13.
“உங்கள் ஊழிய சிலாக்கியத்தை கடவுளிடமிருந்து பெற்ற வரமாக போற்றுங்கள்” என்பதே ஆரம்ப தொடர் பேச்சுக்களுக்கு முத்தாய்ப்பாய் அமைந்த பேச்சின் தலைப்பு. ஊழிய சிலாக்கியங்களுக்கு அவர்கள் உரிமையுள்ளவர்கள் அல்லது தகுதியுள்ளவர்கள் அல்ல, ஆனால் அவை கடவுளுடைய தகுதியற்ற தயவின் வெளிக்காட்டுதல்கள் என்பதை பட்டம் பெறவிருந்தவர்கள் புரிந்துகொள்ள கிலியட் பள்ளியின் பதிவாளரான வாலஸ் லிவ்வரன்ஸ் உதவினார். அப்போஸ்தலனாகிய பவுலின் உதாரணத்திலிருந்து சகோதரர் லிவ்வரன்ஸ் இதைக் குறிப்பிட்டார்: “பவுல் அந்த நியமிப்பை பெற உரிமை பெற்றிருந்தார் அல்லது அதற்கு தகுதியானவராக இருந்தார் என தோன்றினாலும், புறதேசத்தாருக்கு அப்போஸ்தலனாக சேவிக்கும்படி அவருடைய செயல்களை வைத்து பவுலை யெகோவா தேர்ந்தெடுக்கவில்லை. அந்தத் தெரிவு, பல ஆண்டு கால ஊழியத்தையோ, அனுபவத்தையோ சார்ந்ததல்ல. மனித நோக்குநிலையில், பர்னபாவே அதற்கு அதிக பொருத்தமானவராக தோன்றியிருக்கலாம். அது தனிப்பட்ட திறமையை சார்ந்ததல்ல; பவுலைவிட அப்பொல்லோ சிறந்த பேச்சாற்றல் மிக்கவராக இருந்ததாக தெரிகிறது. அது யெகோவாவின் தகுதியற்ற தயவின் வெளிக்காட்டுதலே.” (எபேசியர் 3:7, 8) மற்றவர்கள் கடவுளுடைய நண்பர்களாக ஆவதற்கும் ‘தேவனுடைய கிருபைவரமாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவனைப்’ பெறுவதற்கும் தங்கள் வரத்தை அல்லது ஊழிய சிலாக்கியத்தை பட்டம் பெறவிருப்பவர்கள் பயன்படுத்தும்படி சகோதரர் லிவ்வரன்ஸ் உற்சாகப்படுத்தினார்.—ரோமர் 6:23.
இதைத் தொடர்ந்து, “நல்ல பலன்களைப் பெற்றுத் தரும் தயாரிப்பு” என்ற தலைப்பில் மாணாக்கர்கள் பலரோடு சுவையான கலந்துரையாடலை மற்றொரு கிலியட் போதகரான மார்க் நியூமர் நடத்தினார். (நீதிமொழிகள் 21:5) பிரசங்கிக்க செல்பவர் ஊழியத்திற்காக நன்கு தயாரிக்கையில் முக்கியமாய் தன் இருதயத்தை தயார்படுத்துகையில், ஜனங்களிடம் உண்மையான அக்கறையைக் காட்டுவார் என்பதை அந்த அனுபவங்கள் படம்பிடித்துக் காட்டின. அப்படி செய்கையில் அந்த நபர் என்ன பேசுவதென தெரியாமல் திணறமாட்டார். மாறாக, அவருடைய சொல்லும் செயலும் மற்றவர்களுக்கு ஆவிக்குரிய உதவி அளிப்பவையாகவே இருக்கும். “இதுவே மிஷனரியாக வெற்றி காண்பதற்கான திறவுகோல்” என ஆப்பிரிக்காவில் மிஷனரியாக பணியாற்றியபோது பெற்ற அனுபவத்திலிருந்து சகோதரர் நியூமர் குறிப்பிட்டார்.
மிஷனரி ஊழியம்—திருப்தியளிக்கும் பணி
பேட்டர்சன் கல்வி மையத்தில் விசேஷ பயிற்சி பெற வந்திருந்த சில அனுபவம் வாய்ந்த மிஷனரிகளை ரால்ஃப் வால்ஸ், சார்ல்ஸ் உட்டீ ஆகியோர் பேட்டி கண்டார்கள். ஜனங்களிடமுள்ள அன்பே மிஷனரி ஊழியத்திற்கு சந்தோஷம் சேர்க்கிறது என்பதை பேட்டிகள் வலியுறுத்தின. மிஷனரி ஊழியம் ஏன் திருப்தியளிக்கும் பணி என்பதை நேரடியாக ருசித்திருந்த அனுபவசாலிகளான மிஷனரிகள் சொல்வதை கேட்பது மாணாக்கர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் நண்பர்களுக்கும் அதிக உறுதியளிப்பதாய் இருந்தது.
ஆளும் குழுவில் சேவிக்கும் ஜான் ஈ. பார் “யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்” என்ற தலைப்பில் அந்த நாளின் முக்கியப் பேச்சை அளித்தார். (ஏசாயா 42:10) ‘புதுப்பாட்டு’ என்ற பதம் பைபிளில் ஒன்பது முறை உபயோகிக்கப்பட்டிருப்பதாக சகோதரர் பார் குறிப்பிட்டார். “அந்தப் புதுப்பாட்டு எதைப் பற்றி சொல்கிறது?” என அவர் கேட்டார். “யெகோவா அரசதிகாரம் செய்வதில் ஏற்படும் புதுப்புது வளர்ச்சிகளின் காரணமாக புதுப்பாட்டு பாடப்படுவதை சூழமைவு காட்டுகிறது” என அவர் சொன்னார். மேசியானிய ராஜாவாகிய கிறிஸ்து இயேசுவின் கைகளில் வெற்றி சிறக்கும் கடவுளுடைய ராஜ்யத்தின் புகழை வாயார துதிக்கும் பாடலில் தொடர்ந்து பங்குகொள்ளும்படி அவர் மாணாக்கர்களை ஊக்குவித்தார். கிலியட்டில் பெற்ற பயிற்சி, இந்தப் ‘புதுப்பாட்டின்’ பல்வேறு அம்சங்களை ஒருபோதும் இல்லாதளவுக்கு நன்கு புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவியிருக்கிறது என சகோதரர் பார் குறிப்பிட்டார். “நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் சகோதர சகோதரிகளுடன் ஒத்திசைந்து யெகோவாவுக்கு துதிகளைப் ‘பாட’ வேண்டிய தேவையை இந்தப் பள்ளி உங்களுக்கு வலியுறுத்தியிருக்கிறது; உங்கள் நியமிப்புகளில் மற்றவர்களுடன் ஐக்கியத்தை எப்போதும் வளர்த்துக்கொள்ளுங்கள்.”
மாணாக்கர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்ட பிறகு, கிலியட்டில் பெற்ற பயிற்றுவிப்புக்கு தங்கள் உளமார்ந்த போற்றுதலை வெளிப்படுத்தும் கடிதத்தை வகுப்பின் பிரதிநிதி ஒருவர் வாசித்தார்.
ஊழியத்தை இன்னும் விரிவாக்கவும் அதிக பலன் தரத்தக்கதாக ஆக்கவும் உங்களால் முடியுமா? முடியுமென்றால், பட்டம் பெற்ற இந்த மாணாக்கர்களைப் போல, நீங்களும் ஊக்கமாக செயல்படுங்கள். இப்படி செய்ததே மிஷனரி ஊழியத்திற்கு தகுதி பெற அவர்களுக்கு உதவியிருக்கிறது. கடவுளுக்கு சேவை செய்ய ஒருவர் சந்தோஷத்துடன் தன்னை மனமுவந்து அளிக்கையில் பெரும் மகிழ்ச்சி கிடைக்கிறது.—ஏசாயா 6:8.
[பக்கம் 25-ன் பெட்டி]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 10
அனுப்பப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 19
மாணவர்களின் எண்ணிக்கை: 48
சராசரி வயது: 33.2
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 16.8
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 12.6
[பக்கம் 26-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 111-வது வகுப்பு
கீழ்க்காணும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) யோமன்ஸ், சி.; டோகாரீ, ஏ.; நூன்யெஸ், எஸ்.; ஃபிலிப்ஸ், ஜே.; டாக்கன், எம்.; சில்வெஸ்ட்ரீ, பி. (2) மாரன், என்.; பைனி, ஜே.; லோபஸ், எம்.; வான் ஹௌட், எம்.; கான்டூ, ஏ.; ஸில்வாஷி, எஃப். (3) வில்லியம்ஸ், எம்.; ஈட்டோ, எம்.; வான் காய்லீ, எஸ்.; லெவ்வரிங், டி.; ஃபூஸல், எஃப்.; கைஸ்ல, எஸ். (4) யோமன்ஸ், ஜே.; மாஸ், எம்.; ஹாஜின்ஸ், எம்.; டட்டிங், எஸ்.; பிரீஸென்யோ, ஜே.; ஃபிலிப்ஸ், எம். (5) லோபஸ், ஜே.; ஈட்டோ, டி.; ஸாம்மரூட், எஸ்.; கோஸா, சி.; ஃபூஸல், ஜீ.; மாஸ், டி. (6) வில்லியம்ஸ், டி.; டட்டிங், ஆர்.; கைஸ்ல, எம்.; மாரன், ஆர்.; பைனி, எஸ்.; கான்டூ, எல். (7) டாக்கன், எம்.; ஹாஜின்ஸ், டி.; லெவ்வரிங், எம்.; சில்வெஸ்ட்ரீ, எஸ்.; வான் ஹௌட், டி.; பிரீஸென்யோ, ஏ. (8) வான் காய்லீ, எம்.; நூன்யெஸ், ஏ.; கோஸா, பி.; ஸாம்மரூட், ஜே.; டோகாரீ, எஸ்., ஸில்வாஷி, பீ.