அவர்கள் தங்களையே அர்ப்பணிக்கிறார்கள்
“உம்முடைய ஜனங்கள் தங்களை மனப்பூர்வமாய் அர்ப்பணிப்பார்கள்.” (சங்கீதம் 110:3, NW) இந்த வார்த்தைகள், உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 118-வது வகுப்பில் கலந்துகொண்ட 46 மாணாக்கர்களுக்கு விசேஷ அர்த்தத்தை அளிக்கின்றன. மிஷனரிகளாக அயல்நாடுகளுக்குப் போய் அங்குள்ளவர்களுக்கு ஆன்மீக ரீதியில் உதவுவதற்குப் பயிற்றுவிக்கும் இப்பள்ளியில் கலந்துகொள்ள அவர்கள் எவ்வாறு தங்களைத் தயார்படுத்திக் கொண்டார்கள்? இந்த 118-வது வகுப்பில் கலந்துகொண்ட மைக், ஸ்டேஸி தம்பதியர் இவ்வாறு விளக்கினார்கள்: “எளிய வாழ்க்கை வாழ நாங்கள் தீர்மானித்தோம்; இதனால் எங்கள் கவனம் சிதறாதபடி பார்த்துக்கொள்ளவும், ஆன்மீக காரியங்களுக்குத் தொடர்ந்து முதலிடம் கொடுக்கவும் முடிந்தது. வியாபாரத்தில் கொள்ளை லாபம் கிடைத்து வந்தாலும், அது எங்கள் ஆன்மீக இலட்சியங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடாதபடி நாங்கள் பார்த்துக்கொண்டோம்.” இந்தத் தம்பதியரைப் போலவே இவ்வகுப்பில் கலந்துகொண்ட மற்ற மாணாக்கர்களும் மனமுவந்து தங்களையே அர்ப்பணித்தார்கள், தற்போது அவர்கள் அனைவரும் நான்கு கண்டங்களில் ராஜ்ய அறிவிப்பாளர்களாகச் சேவை செய்து வருகிறார்கள்.
மார்ச் 12, 2005 சனிக்கிழமை அன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது; அப்போது கொடுக்கப்பட்ட பேச்சுகளைக் கேட்க கூடிவந்திருந்த 6,843 பேரும் ஆனந்தத்தில் திளைத்தது தெளிவாகத் தெரிந்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அங்கத்தினரான தியோடர் ஜாரக்ஸ் இந்த விழாவில் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்காக 28 நாடுகளிலிருந்து வந்திருந்தவர்களை அவர் கனிவுடன் வரவேற்றார்; பிறகு, பைபிள் கல்வி எவ்வளவு மதிப்புமிக்கது என்ற விஷயத்திடம் அனைவரின் கவனத்தையும் ஒருமுகப்படுத்தினார். “பைபிளைத் திருத்தமாக அறிந்திருக்கும் ஒருவரை கரைகண்ட கல்விமான் என்று குறிப்பிடுவது சாலப் பொருந்தும்” என வில்லியம் லையான் ஃபெல்ப்ஸ் என்ற கல்விமான் சொன்னதை அவர் மேற்கோள் காட்டினார். உலக கல்வி பயனுள்ளதுதான், ஆனால் பைபிள் கல்விக்கு இணை வேறேதுமில்லை. கடவுளைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு இது உதவுகிறது; இந்த அறிவு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது. (யோவான் 17:3) பைபிள் கல்வி புகட்டும் இந்த உலகளாவிய வேலையில் பெருமளவு பங்குகொள்வதற்காகத் தங்களை மனமுவந்து அர்ப்பணித்ததற்கு, சகோதரர் ஜாரக்ஸ் பட்டதாரிகளைப் பாராட்டினார்; இந்தக் கல்வி புகட்டும் வேலை உலகெங்கும் 98,000-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் நடைபெறுகிறது.
பட்டதாரிகளுக்கு உரிய நேரத்தில் கிடைத்த உற்சாகம்
சகோதரர் ஜாரக்ஸின் ஆரம்பப் பேச்சிற்குப் பிறகு, சங்கீதம் 52:8-ன் அடிப்படையில் வில்லியம் சாம்யல்சன் பேசினார்; அவருடைய பேச்சின் பொருள், “கடவுளுடைய வீட்டில் பசுமையான ஒலிவ மரத்தைப் போலிருப்பதற்கான வழி” என்பதாகும். பைபிளில் ஒலிவ மரம் அடையாள அர்த்தத்தில் செழுமை, அழகு, கண்ணியம் ஆகியவற்றின் சின்னமாகப் பயன்படுத்தப்படுகிறது என அவர் குறிப்பிட்டார். (எரேமியா 11:16) மாணாக்கர்களை ஒலிவ மரங்களுக்கு ஒப்பிட்டு பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்: “மிஷனரிகளாக நீங்கள் நியமிக்கப்படும் பகுதியில் ராஜ்ய பிரசங்க வேலையை உண்மையுடன் செய்து வரும்போது, யெகோவா உங்களை அழகுள்ளவர்களாகவும் கண்ணியமிக்கவர்களாகவும் கருதுவார்.” வறட்சிமிக்க காலத்தில் ஒலிவ மரம் பட்டுப்போகாமல் இருப்பதற்கு அதன் வேர்கள் ஆழமாக ஊன்றியிருப்பது அவசியம்; அதுபோலவே, அயல்நாட்டில் ஊழியம் செய்யும்போது சந்திக்கவிருக்கிற அலட்சிய போக்கையும், எதிர்ப்பையும், சோதனைகளையும் சகிப்பதற்கு மாணாக்கர்களின் ஆன்மீக வேர்கள் ஆழமாக ஊன்றியிருப்பது அவசியம்.—மத்தேயு 13:21; கொலோசெயர் 2:6, 7.
ஆளும் குழு அங்கத்தினர்கள் மூன்று பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்; அதில் ஒருவரான ஜான் பார், “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” என்ற பொருளில் பேசினார். (மத்தேயு 5:13) உணவுப்பொருள் கெட்டுப் போகாதவாறு உப்பு பாதுகாக்கிறது; அதைப் போலவே, கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை மிஷனரிகள் பிரசங்கிப்பது உயிர்களைப் பாதுகாக்கிறது, அதோடு அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்போரை, ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் கெட்டுப்போகாதவாறு பாதுகாக்கிறது. பின், ஒருவருக்கொருவர் ‘சமாதானமாய்’ இருக்கும்படி பட்டதாரிகளை சகோதரர் பார் ஊக்குவித்தபோது ஒரு தகப்பனுக்குரிய கனிவு அவரது குரலில் வெளிப்பட்டது. (மாற்கு 9:50) மேலும், “ஆவியின் கனியை வளர்த்துக்கொள்ளுங்கள், உங்கள் நடத்தையிலும் பேச்சிலும் எப்போதும் தயவையும், அன்பையும் வெளிக்காட்டுங்கள்” என்று அவர் அறிவுறுத்தினார்.
கிலியட் போதனையாளர்களில் ஒருவரான வாலஸ் லிவரன்ஸ், “ஆழ்கடலில் பயணிக்கும் கப்பலில் இருங்கள்” என்ற பொருளைச் சிறப்பித்துக் காட்டினார். ஆழ்கடலில் பயணிக்கும் ஒரு கப்பலால் சரியான திசையில் செல்ல முடியும்; அதைப் போலவே, “தேவனுடைய ஆழங்களை,” அதாவது கடவுளுடைய நோக்கத்தையும் அதன் நிறைவேற்றத்தையும் பற்றிய சத்தியங்களை, புரிந்துகொள்ளும் ஒருவரால் ஆன்மீக ரீதியில் முன்னேற முடியும். (1 கொரிந்தியர் 2:10) ‘தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களில்’ மட்டும் திருப்தியடைந்து, ஆழமற்ற ஆன்மீகத் தண்ணீரில் தங்கிவிடுவது, நம் ஆன்மீக முன்னேற்றத்துக்கு அணைபோடுவதாய் இருக்கும்; அதுமட்டுமல்ல, ‘நம் விசுவாசமாகிய கப்பல் சேதமடைய’ நாமே வழிசெய்துவிடுவது போலவும் இருக்கும். (எபிரெயர் 5:12, 13; 1 தீமோத்தேயு 1:19) “‘தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம்’ உங்கள் மிஷனரி நியமிப்புகளில் உங்களைக் காப்பதாக” எனச் சொல்லி சகோதரர் லிவரன்ஸ் பேச்சை முடித்தார்.—ரோமர் 11:33.
கிலியட் பள்ளியின் மற்றொரு போதனையாளரான மார்க் நியூமார், “உங்கள் ஆஸ்திக்கு ஏற்ப வாழ்வீர்களா?” என்ற பொருளில் பேசினார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக, உவாட்ச் டவர் பைபிள் கிலியட் பள்ளி பட்டதாரிகள் கொடுத்த ‘நல்ல சாட்சி குவிந்திருக்கிறது’; இதனால் இந்தப் பள்ளி நம்பிக்கைக்குரிய ஒன்றாகி, மிகச் சிறந்த பெயரைப் பெற்றிருக்கிறது. (ஆதியாகமம் 31:48) இந்த ஆஸ்தி, 118-வது வகுப்பைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பூர்வத்தில் நெகேமியாவின் காலத்தில் வாழ்ந்த தெக்கோவா ஊராரின் முன்மாதிரியைப் பின்பற்றும்படியும், அங்குள்ள சபையோடும் சக மிஷனரிகளோடும் மனத்தாழ்மையுடன் ஒத்துழைக்கும்படியும் சகோதரர் நியூமார் மாணாக்கர்களை உற்சாகப்படுத்தினார். நெகேமியா குறிப்பிட்ட அந்தப் பெருமையுள்ள ‘பிரபுக்களுடைய’ மனப்பான்மையைத் தவிர்க்கும்படியும் தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்ளாமல் அடக்கத்துடன் ஊழியம் செய்ய மனமுள்ளவர்களாக இருக்கும்படியும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.—நெகேமியா 3:5.
போதனையளித்த அனுபவங்களும் பேட்டிகளும்
“தேவவசனம் விருத்தியடைந்தது” என்பதுதான் அடுத்த பேச்சின் தலைப்பாக இருந்தது. (அப்போஸ்தலர் 6:7) கிலியட் போதனையாளரான லாரன்ஸ் பொவெனின் தலைமையில், பள்ளி காலத்தில் கிடைத்த வெளி ஊழிய அனுபவங்களை மாணாக்கர்கள் நிஜ சம்பவ நடிப்புகளாக நடித்துக்காட்டினார்கள். கடவுளுடைய வார்த்தையை மாணாக்கர்கள் வைராக்கியத்துடன் அறிவித்தார்கள் என்பதையும், அவர்களுடைய முயற்சிகளை யெகோவா அபரிமிதமாக ஆசீர்வதித்தார் என்பதையும் அந்த அனுபவங்கள் நன்றாகவே காட்டின.
இப்பள்ளி இனிதே நடைபெறுவதற்குப் பாடுபட்ட பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களை ரிச்சர்ட் ஆஷ் பேட்டி கண்டார். கிலியட் பள்ளி நடந்த சமயத்தில் கிலியட் மாணாக்கர்கள் முழுமையாகப் பயனடைவதற்காக பெத்தேல் குடும்பத்தார் எந்தளவுக்கு ஒத்துழைத்தார்கள் என்பதை அவர்களுடைய குறிப்புகளிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது. பிறகு, முன்னாள் கிலியட் பட்டதாரிகள் சிலருடன் சேர்ந்து ஜெஃப்ரீ ஜேக்ஸன் உரையாடினார். யெகோவாவுக்குத் துதியையும் கனத்தையும் சேர்க்கும் எண்ணற்ற வாய்ப்புகளுக்கு மிஷனரி வாழ்க்கை வழிசெய்வதை அவர்கள் சிறப்பித்துக் காட்டினார்கள். “ஒரு மிஷனரியாக நீங்கள் செய்வதையெல்லாம் ஜனங்கள் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். காதுகொடுத்துக் கேட்பார்கள், கூர்ந்து கவனிப்பார்கள், ஞாபகத்தில் வைத்துக்கொள்வார்கள்” என அவர்களில் ஒருவர் சொன்னார். எனவே எல்லாச் சமயத்திலும் மாணாக்கர்கள் நல்ல முன்மாதிரி வைப்பதற்குக் கவனமாய் இருக்கும்படி உற்சாகப்படுத்தப்பட்டார்கள். நடைமுறையான இந்தப் புத்திமதி இனிவரும் நாட்களில் அவர்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆளும் குழுவின் அங்கத்தினரான ஸ்டீவன் லெட் முடிவான பேச்சைக் கொடுத்தார்; அதன் பொருள், “‘ஜீவத் தண்ணீரை’ சுமந்து செல்லுங்கள்” என்பதே. (யோவான் 7:38) கடந்த ஐந்து மாதங்களாக கடவுளுடைய சத்திய வார்த்தையிலிருந்து அதிகம் பருகியதன் மூலம் மாணாக்கர்கள் ஒப்பற்ற விதத்தில் பயனடைந்திருப்பதாக அவர் சொன்னார். இவ்வாறு பெற்றுக்கொண்ட விஷயங்களை வைத்துக்கொண்டு இந்தப் புதிய மிஷனரிகள் என்ன செய்ய போகிறார்கள்? மற்றவர்களும் தங்களுக்குள் ‘நித்திய காலமாய் ஊறுகிற நீரூற்றைப்’ பெறும்படி இந்த ஆன்மீகத் தண்ணீரைத் தன்னலமின்றி மற்றவர்களுக்கும் கொடுக்கும்படி சகோதரர் லெட் மாணாக்கர்களை ஊக்குவித்தார். (யோவான் 4:14) மேலும், “மறக்காமல், ‘ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய’ யெகோவாவுக்கு உரித்தான கனத்தையும் மகிமையையும் செலுத்துங்கள். வறட்சிமிக்க மகா பாபிலோனிலிருந்து வெளிவந்தவர்களுக்குக் கற்பிக்கும்போது பொறுமையாய் இருங்கள்” என்றும் அவர் சொன்னார். (எரேமியா 2:13) தன் பேச்சின் முடிவில் அவர் இவ்வாறு சொல்லி பட்டதாரிகளை ஊக்குவித்தார்: ஆவியும் மணவாட்டியும் எப்போதும் “வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” இந்த ஆவியையும் மணவாட்டியையும் ஆர்வத்துடன் பின்பற்றும்படி அவர்களை ஊக்குவித்தார்.—வெளிப்படுத்துதல் 22:17.
பல்வேறு நாடுகளிலிருந்து வந்த வாழ்த்து மடல்களை வாசிப்பதுடன் சகோதரர் ஜாரக்ஸ் நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இதன் பின்பு பட்டதாரி ஒருவர் நன்றி மடல் ஒன்றை வாசித்தார்.
எங்கு தேவை அதிகமிருக்கிறதோ அங்கு ஊழியம் செய்ய உங்களையே அர்ப்பணிக்க முடியுமா? முடியுமென்றால், பட்டம் பெற்ற இந்த மாணாக்கர்கள் செய்ததைப் போலவே நீங்களும் ஆன்மீக இலக்குகளை நாடுங்கள். மிஷனரியாக அயல் நாட்டில் ஊழியம் செய்வதாக இருந்தாலும் சரி, ஊழியராக உள்ளூரில் சேவை செய்வதாக இருந்தாலும் சரி, கடவுளுடைய சேவையில் ஒருவர் மனமுவந்து உற்சாகத்துடன் தன்னை அர்ப்பணிக்கையில் பெறும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள்.
[பக்கம் 13-ன் பெட்டி]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 8
அனுப்பப்பட்ட நாடுகள்: 19
மாணவர்களின் எண்ணிக்கை: 46
சராசரி வயது: 33.0
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 16.5
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 12.9
[பக்கம் 15-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 118-வது வகுப்பு
[பக்கம் 15-ன் படக்குறிப்பு]
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) பிராக்மைர், ஏ.; மலோனி, எஸ்.; சைமன்ட்ஸ், என்.; லோபெஸ், வை.; ஹௌவார்ட், சி. (2) ஜாஸ்ட்ரெப்ஸ்கீ, டி.; ப்ரௌன், டி.; ஹெர்நான்டெஸ், ஹெச்.; மாலாகான், ஐ.; ஜோன்ஸ், ஏ.; கானல், எல். (3) ஹௌவார்ட், ஜே.; லாரூ, ஈ.; ஷாம்ஸ், பி.; ஹேய்ஸ், எஸ்.; ப்ரௌன், ஓ. (4) பரல், ஜே.; ஹெமர், எம்.; மேயர், ஏ.; கிம், கே.; ஸ்டான்லி, ஆர்.; ரேனீ, ஆர். (5) ஜாஸ்ட்ரெப்ஸ்கீ, பி.; ஸிலவெட்ஸ், கே.; பெரஸ், எஸ்.; டாரெஸ், பி.; டாரெஸ், எஃப். (6) கானல், ஜே.; ஹெர்நான்டெஸ், ஆர்.; மலோனி, எம்.; மாலாகான், ஜே.; ஷாம்ஸ், ஆர்.; ஹேய்ஸ், ஜே. (7) பெரஸ், ஏ.; ஹெமர், ஜே.; ஸ்டான்லி, ஜி.; கிம், சி.; சைமன்ட்ஸ், எஸ்.; லோபெஸ், டி.; பரல், டி. (8) பிராக்மைர், டி.; மேயர், ஜே.; ரேனீ, எஸ்.; ஸிலவெட்ஸ், எஸ்.; ஜோன்ஸ், ஆர்.; லாரூ, ஜே.