கடவுளுடைய வார்த்தையின் மாணாக்கருக்கு பட்டமளித்தல்
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பின்பற்றி, வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பதில் யெகோவாவின் சாட்சிகள் உலகளாவ அறியப்பட்டுள்ளனர். உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 102-வது வகுப்பு பட்டமளிப்பு நிகழ்ச்சியின் ஆரம்ப வார்த்தைகளில் இந்த வேலை வலியுறுத்திக் காண்பிக்கப்பட்டது.
மார்ச் 1, 1997-ல், யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினராகிய ஆல்பர்ட் ஷ்ரோடர், லீ பான் என்ற பிரெஞ்சு இதழில் சமீபத்தில் வெளிவந்த ஒரு கட்டுரைக்கு கவனத்தைத் திருப்பினார். இத்தாலியில் வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையை ஆரம்பிப்பதற்கு ரோமன் கத்தோலிக்கர் எடுக்கும் திட்டங்களை அது குறிப்பிட்டது. “ஆகவே யெகோவாவின் சாட்சிகளுடைய களத்தில் போட்டியிட [வத்திக்கன் மிஷனரிகள்] வெறுங்கையோடு வரக்கூடாது என்பதற்காக புனித மாற்குவின் சுவிசேஷத்தை பத்து லட்சம் பிரதிகள் அச்சடிக்குமளவுக்கு வத்திக்கன் சென்றிருக்கிறது; ஏனெனில் வீட்டுக்கு வீடு நற்செய்தியை ‘அளிக்கையில்’ வீராங்கனைகளை [சாட்சிகளை] அவர்களுடைய அணியினர் எதிர்ப்படுகின்றனர்” என அந்தக் கட்டுரை குறிப்பிட்டது.
கடவுளுடைய வார்த்தையைப் பரப்புவதில் இயேசுவின் கைதேர்ந்த பிரசங்க முறைகளைப் பின்பற்றியிருக்கிறவர்களின் மத்தியில் இந்த 48 பட்டதாரிகள் இருக்கின்றனர். நியூ யார்க், பாட்டர்ஸனில் உள்ள உவாட்ச்டவர் கல்வி மையத்திற்கு எட்டு நாடுகளிலிருந்து அவர்கள் வந்திருந்தனர். அவர்களுடைய ஐந்து மாத பள்ளி படிப்பில், பைபிளை அவர்கள் கரைத்துக்குடித்திருந்தனர். அவர்களுடைய பாடத்திட்டத்தில் கடவுளுடைய அமைப்பின் வரலாறு, மிஷனரி வாழ்க்கையின் நடைமுறை அம்சங்கள், கடவுளுடைய ஆவியின் கனிகள் ஆகியவையும் அடங்கியிருந்தன. இவையனைத்தும் ஒரே இலக்கை மனதிற்கொண்டே—அதாவது, அவர்கள் அனுப்பப்படும் 17 நாடுகளில் அயல்நாட்டு மிஷனரி சேவைக்காக அவர்களை தயார்படுத்துவதற்கே—செய்யப்பட்டது. அவர்கள் பட்டம்பெற்றபோது, சர்வதேச பார்வையாளர்களாகிய 5,015 பேர் அந்த நிகழ்ச்சியின் சந்தோஷத்தை அனுபவித்தனர். அந்த கிலியட் மாணாக்கர்கள் என்ன நடைமுறையான அறிவுரையைக் கடைசியில் பெற்றனர்?
புதிய மிஷனரிகளுக்கு காலத்திற்கேற்ற ஊக்கமளிப்பு
அக்கிராசனரின் ஆரம்ப வார்த்தைகளுக்குப் பிறகு, புதிய மிஷனரிகளுக்காக நடைமுறையான அறிவுரையைக் கொண்ட சுருக்கமான முதல் பேச்சைக் கொடுத்தார் ஆளும் குழுவின் அலுவலர் ஆலோசனைக் குழு (Personnel Committee) உதவியாளர் ரால்ஃப் வால்ஸ். “அன்புகூர மறவாதீர்கள்” என்பதே அவர் ஆற்றிய சொற்பொழிவின் பேச்சுப் பொருள். இந்த உலகம் மேன்மேலும் அன்பற்ற உலகமாக மாறிவருமென்பதை 2 தீமோத்தேயு 3-ம் அதிகாரத்தில் பைபிள் முன்னறிவித்ததை சுட்டிக்காட்டினார். காலத்திற்கேற்ற இந்த நினைப்பூட்டுதல்களை புதிய மிஷனரிகளுக்கு அவர் வழங்கினார்; அது 1 கொரிந்தியர் 13:1-7-ல் காணப்படும் அன்பின் வர்ணனைக்கு ஒத்திருந்தது: “மிஷனரிகளாகிய நீங்கள் ஊழியத்தில் அதிக மணிநேரம் செலவழித்தாலும்; உங்களுடைய கிலியட் பயிற்சியினால் ஏராளமான அறிவை சம்பாதித்தாலும்; அல்லது கிளை அலுவலக நியமிப்புகளில் நாங்கள் வைராக்கியமாய் அதிக மணிநேரம் வேலை செய்தாலும்; அன்புகாட்ட மறந்துவிடுவோமானால் நம்முடைய எல்லா முயற்சிகளிலும் தியாகங்களிலும் பிரயோஜனம் ஒன்றுமில்லை.”
நிகழ்ச்சியில் அடுத்து வந்தவர் ஆளும் குழுவைச் சேர்ந்த கேரி பார்பர்; “யெகோவா நம்மை வெற்றிப்பாதையில் வழிநடத்தி வருகிறார்” என்ற பொருளில் கலந்தாலோசித்தார். முதல் உலகப் போரைத் தொடர்ந்து அவர்களுடைய சிறிய ஆரம்பம் முதற்கொண்டு, ராஜ்ய நற்செய்தியை அறிவிப்பதில் யெகோவா தேவன் தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களை துன்புறுத்தலின் மத்தியிலும் வெற்றிப்பாதையில் வழிநடத்தியிருக்கிறார். 1931-ல், பைபிள் மாணாக்கர்கள், அந்தச் சமயத்தில் அவர்கள் அவ்வாறுதான் அறியப்பட்டிருந்தனர், யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றுக்கொண்டனர்; இது கிறிஸ்தவமண்டல பாதிரிமாருக்கு எரிச்சலூட்டியது. சகோதரர் பார்பர் சொன்னார், “முடிந்தளவுக்கு அநேகர் அந்தப் பரிசுத்த பெயரை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் மதிப்புமிக்க வேலையில் பெரும்பங்கு கொள்ளும் மகத்தான சிலாக்கியத்தை 102-வது வகுப்பு கிலியட்-பயிற்றுவிப்பு மிஷனரிகள் பெற்றிருக்கிறார்கள்.” கிலியட் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்டு, 1943-ல் 54 நாடுகளிலிருந்து இன்று 233 நாடுகளில் கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதை விரிவாக்க உதவி செய்திருக்கிற 7,131 மிஷனரிகளின் நீண்ட பட்டியலில் இவர்கள் சேர்ந்துள்ளனர்.
அடுத்த பேச்சாளராகிய லாயட் பாரி, இவரும்கூட ஆளும் குழுவைச் சேர்ந்தவர், 11-வது கிலியட் வகுப்பு பட்டதாரியாக இருந்தார்; ஜப்பானில் 25 ஆண்டுகளுக்கும் மேல் ஒரு மிஷனரியாக சேவைசெய்தார். “இவைகளில் நிலைகொண்டிருங்கள்” என்ற தனது பேச்சு தலைப்பை பயன்படுத்தி ஊக்கமளித்தார். “சகித்திருப்பதால் நீங்கள் பேரளவான சந்தோஷத்தைப் பெறுவீர்கள்” என்று அந்த மாணாக்கர்களுக்கு சொன்னார். மிஷனரி வேலையிலோ அல்லது எந்தவொரு தேவராஜ்ய வேலையிலோ சகித்திருப்பதிலிருந்து என்ன பலன்கள் கிடைக்கின்றன? “எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய சகிப்புத்தன்மை யெகோவாவின் இருதயத்தை மகிழ்விக்கிறது . . . சோதனையின்போது உத்தமத்தைக் காத்துக்கொள்வதிலேயே அதிக திருப்தி இருக்கிறது. . . . மிஷனரி சேவையையே உங்களுடைய வாழ்க்கைப் பணியாக ஆக்கிக்கொள்ளுங்கள் . . . இருதயத்துக்கு அனலூட்டும் ‘சபாஷ்’ என்ற போற்றுதல் உங்களுடைய பலனாக இருக்கும்.” (மத்தேயு 25:21, NW; நீதிமொழிகள் 27:11) அவருடைய பேச்சை முடிக்கையில், புது மிஷனரிகள் தங்கள் மிஷனரி ஊழியத்தையே வாழ்க்கையாக ஆக்குவதற்கு உறுதியாய் நிலைத்திருப்பதன் மூலம் ‘இவைகளில் நிலைகொண்டிருக்கும்படி’ சகோதரர் பாரி உள்ளப்பூர்வமாய் பரிந்துரை செய்தார்.—1 தீமோத்தேயு 4:16.
“நீங்கள் எதைப் பார்ப்பீர்கள்?” என்பதே கார்ல் ஆடம்ஸ் எழுப்பிய கேள்வி, இவர் அநேக கிலியட் வகுப்புகளுக்குப் போதிப்பதில் பங்குகொண்டிருக்கிறார். இந்தப் புதிய மிஷனரிகள் தங்கள் நியமிப்புகளில் எதைப் பார்ப்பார்கள் என்பது அவர்களுடைய மாம்சப்பிரகாரமான பார்வையில் மட்டுமல்ல, ஆனால் அவர்களுடைய மனக்கண்களிலும் சார்ந்திருக்கிறது என சுட்டிக்காட்டினார். (எபேசியர் 1:19) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை இஸ்ரவேல் வேவுகாரர்கள் சுற்றிப்பார்த்தபோது அவர்கள் பார்த்த காரியத்தால் இது விளக்கிக் காண்பிக்கப்பட்டது. மாம்சப்பிரகாரமான நோக்குநிலையில் அனைத்து 12 வேவுகாரர்களும் ஒரே மாதிரியான காரியங்களையே பார்த்தார்கள், ஆனால் இரண்டுபேர் மட்டுமே கடவுளுடைய நோக்குநிலையில் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை பார்த்தார்கள். மிஷனரிகளும்கூட காரியங்களை வித்தியாசமான முறைகளில் நோக்கலாம். அவர்கள் சேவிக்கும் நாடுகள் சிலவற்றில், வறுமையையும் வேதனையையும் நம்பிக்கையில்லாமையையும் காணலாம். ஆனால் அவர்கள் எதிர்மறையாக சிந்தித்து, தங்கள் நியமிப்பை கைவிட்டு விடக்கூடாது. சமீபத்தில் நடந்த ஒரு வகுப்பில் கலந்துகொண்ட மிஷனரி ஒருவர் கூறியதைப் பற்றி சகோதரர் ஆடம்ஸ் சொன்னார்: “இந்த அனுபவங்களெல்லாம் நான் இங்கேயே தங்கிவிட வேண்டுமென என்னை உணரச் செய்தன. இந்த மக்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை தேவைப்படுகிறது. அவர்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவிக்க நான் விரும்புகிறேன்.” புதிய மிஷனரிகள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட தேசங்களை யெகோவா தம்முடைய பூகோள பரதீஸின் பாகமாக்குவதற்கு தீர்மானித்திருக்கிற பகுதிகளாக பார்க்கும்படியும் அங்குள்ள மக்களை புதிய உலக சமுதாயத்தின் வருங்கால அங்கத்தினர்களாக நோக்கும்படியும் உற்சாகப்படுத்தி சகோதரர் ஆடம்ஸ் தனது பேச்சை முடித்தார்.
இந்த நிகழ்ச்சிநிரல் பாகத்தின் கடைசி பேச்சு வாலஸ் லிவரன்ஸ் என்பவரால் கொடுக்கப்பட்டது, இவர் கிலியட் போதனையாளராக ஆவதற்கு முன்பு அநேக ஆண்டுகள் மிஷனரி சேவைசெய்தவர். “கடவுளுடைய அதிசயக்கத்தக்க கிரியைகளில் உட்பார்வையுடன் செயல்படுங்கள்” என்பதே அவருடைய பேச்சுப் பொருள். உட்பார்வையுடன் செயல்படுவது என்பது மதிநுட்பத்துடன், விவேகத்துடன், தெளிந்த புத்தியுடன் செயல்படுவதை உட்படுத்துகிறது. அது இஸ்ரவேல் ராஜாவாகிய சவுல் செய்யத் தவறிய ஒரு காரியமாகும்.—1 சாமுவேல் 13:9-13; 15:1-22.
உட்பார்வையுடன் செயல்படுவதற்கு ஒரு வழி என்னவென்றால், ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதும் புதிய பிராந்தியத்திலுள்ள மக்களை அறிந்துகொள்வதும் உட்பட, புது வாழ்க்கை முறைக்கு மாற்றிக்கொள்ளும் சவால்களை ஏற்றுக்கொள்வதும் ஆகும். சவால்களை எதிர்ப்படுவதிலும் தடைகளை சமாளிப்பதிலும் மிஷனரிகள் வைத்திருக்கும் அனுபவங்கள், யோசுவாவும் காலேபும் தங்களுக்கு நியமிக்கப்பட்ட தேசத்தை வென்றபோது பலப்படுத்தப்பட்ட விதமாகவே அவர்களை ஆவிக்குரிய முறையில் பலப்படுத்த முடியும்.
பேட்டிகள்
அதைத் தொடர்ந்து வந்த நிகழ்ச்சிநிரலின் பாகத்தில் தொடர்ச்சியான பேட்டிகள் அடங்கியிருந்தன. ஹேரால்டு ஜேக்ஸன் என்பவர் யுலிசஸ் கிளாஸை பேட்டி கண்டார்; இவர் கிலியட் பள்ளியின் பதிவாளரும் நீண்டகால போதனையாளருமாய் இருக்கிறார், இப்பொழுது இவருக்கு 85 வயது. இன்னும் ஊழியம் செய்கிற அநேக மிஷனரிகள், பல ஆண்டுகளாக இவர் செய்துவரும் உண்மையான போதனையையும் பயிற்றுவிப்பையும் வெகுவாக நினைவுகூருகின்றனர். அடுத்து வந்தவர் மார்க் நியூமர், இவர் கிலியட் பள்ளி ஊழியராக சேர்வதற்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஒரு மிஷனரியாக பல ஆண்டுகளைச் செலவழித்த கிலியட் போதனையாளர். மாணாக்கர்களுடைய ஐந்து மாத பள்ளிப் படிப்பின்போது அவர்கள் பெற்ற ஊழிய அனுபவத்தைப் பற்றி பேட்டிகண்டார். கடவுளுடைய வார்த்தையைக் கேட்பதில் உள்ளூர் பிராந்தியத்திலுள்ள ஆட்கள் அக்கறையுள்ளவர்களாய் இருப்பதை அவர்களுடைய அனுபவங்கள் காண்பித்தன.
அதன் பின்பு ராபர்ட் சிரன்கோ என்பவரும் சார்லஸ் மாலஹன் என்பவரும் அனுபவம்வாய்ந்த சகோதரர்களுடன் பேசினார்கள்; இந்த சகோதரர்கள் அங்கு நடந்துகொண்டிருந்த மற்றொரு பள்ளியில், அதாவது கிளை குழு அங்கத்தினருக்கான பள்ளியில் கலந்துகொள்ள வந்திருந்தார்கள். பட்டம்பெறும் வகுப்பினருக்கு அவர்கள் கொடுத்த புத்திமதியில், மனத்தாழ்மையாக இருப்பதும் சபையின் ஐக்கியத்திற்கு உதவுவதும் உட்பட்டிருந்தன. பட்டதாரிகள், மிஷனரி வேலையில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி முன்கணிக்கப்பட்ட எண்ணங்களை வைத்திருக்கக் கூடாது, அதற்கு பதிலாக, தாங்கள் செல்லும் பாதையில் எதுவந்தாலும் வெறுமனே அதை ஏற்றுக்கொள்ளும் மனவிருப்பத்துடன் இருக்க வேண்டுமென அவர்கள் ஆலோசனை தெரிவித்தார்கள். இந்த அறிவுரையைப் பின்பற்றுவது, கடவுளுடைய வார்த்தையை போதிப்பவர்களாக தங்கள் நியமிப்புகளை நிறைவேற்ற இந்தப் புதிய மிஷனரிகளுக்கு உதவிசெய்யும் என்பதில் சந்தேகமில்லை.
கடைசியாக, ஆளும் குழுவின் அங்கத்தினராகிய தியடோர் ஜரெஸ், “யாரை எது செல்வாக்கு செலுத்துகிறது?” என்ற பொருளில் பார்வையாளர்களிடம் பேசினார். கிறிஸ்தவர்களாக நாம் ஆவியின் கனிகளை வெளிப்படுத்துகையில், மற்ற மக்கள்மீது நாம் நன்மைக்கேதுவான விதத்தில் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை அவர் விளக்கிக் காண்பித்தார். “யெகோவாவின் அமைப்பால் அனுப்பப்படும் மிஷனரிகள் நற்பயனுள்ள, ஆவிக்குரிய விதத்தில் மக்கள்மீது செல்வாக்கு செலுத்தும் பாராட்டத்தக்க பதிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள்” என அவர் குறிப்பிட்டார். அதன் பின்பு, மிஷனரிகள் வைத்த நல்ல முன்மாதிரிகளின் பலனாக கடவுளை சேவிக்க உதவப்பட்டிருக்கிற தனிப்பட்ட நபர்களுடைய குறிப்புகள் சிலவற்றை சொன்னார். “யெகோவாவின் மக்கள் பெற்றிருக்கிற நன்மதிப்பை காத்துக்கொண்டு, தகுதிவாய்ந்தவர்களைத் தேடுபவர்களாய் உங்களுடைய அயல்நாட்டு நியமிப்பில் உள்ள வீடுகளைத் தொடர்ந்து தட்டுங்கள் . . . அதோடு, உங்களுடைய நேர்மையான, சுத்தமான நடத்தையின்மூலம் இந்த உலகத்தின் ஆவியை எதிர்த்துநின்று யெகோவாவின் துதிக்கும் கனத்துக்கும் நன்மையான செல்வாக்காக இருங்கள்” என்று சொல்லி பேச்சை முடித்தார்.
நிகழ்ச்சிநிரலின் சுருக்கமான அறிக்கையில், எல்லா இடங்களிலிருந்தும் வந்திருந்த வாழ்த்துதல்களை அக்கிராசனர் பகிர்ந்துகொண்டார், அதன் பிறகு டிப்ளமோக்களைக் கொடுத்து மிஷனரி நியமிப்புகளை அறிவித்தார். பின்பு பட்டதாரிகளில் ஒருவர் வகுப்பு உறுதிமொழியை வாசித்து, கொடுக்கப்பட்ட போதனைக்காக நன்றி நவில்ந்தார். இந்த 102-வது வகுப்பு பட்டமளிப்பு நிகழ்ச்சிநிரல், ஆஜராயிருந்த அனைவரும் கடவுளுடைய வார்த்தையை அறிவிப்பதில் முன்னோக்கிச் செல்லுவதற்கு அதிக உறுதியானவர்களாய் ஆகும்படி செய்தது என்பது தெளிவாக இருக்கிறது.
[பக்கம் 31-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம்பெறும் 102-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும் பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) டஃபி, சி.; அலெக்ஸிஸ், டி.; ஹார்ஃப், ஆர்.; லி, ஜே.; காரி, வி.; நார்ட்டம், டி.; மாரா, என்.; ஜார்னெட், எஃப். (2) யுப்விக், எல்.; சிங், கே.; ஹார்ட், பி.; கர்காரியன், எம்.; லி, எஸ்.; ராஸ்டல், எஸ்.; ஸூலன், கே.; கோலட், கே. (3) சிங், டி.; பிட்லூ, ஜே.; பிட்டிலூ, எஃப்.; போகாக், என்.; டார்மா, சி.; மஸ்லோ, ஏ.; ரிச்சர்டுசன், சி.; நார்ட்டம், டி. (4) ஹார்ஃப், ஜே.; ஜார்னெட், கே.; பார்பர், ஏ.; லோபர்டோ, ஜே.; லோபர்டோ, ஆர்.; மஸ்லோ, எம்.; மாரா, ஆர்.; ஹார்ட், எம். (5) டார்மா, எஸ்.; ராஸ்டல், ஏ.; டையஸ், ஆர்.; டையஸ், ஹெச்.; வைஸர், எம்.; வைஸர், ஜே.; கர்காரியன், ஜி.; ஸூலன், ஏ. (6) அலெக்ஸிஸ், ஆர்.; பார்பர், டி.; யுப்விக், ஹெச்.; டஃபி, சி.; கோலட், டி.; ரிச்சர்டுசன், எம்.; போகாக், எஸ்.; காரி, ஜி.