எமது வாசகரிடமிருந்து
விசுவாசமுள்ள இளைஞர் “கடவுளை முதன்மையாக வைத்த இளைஞர்” என்ற தொடர் கட்டுரைகள் என் மனதைத் தொட்டன. (மே 22, 1994) நான் பருவ வயதுள்ளவனாய் இருந்த போது, எனக்கு மூளையில் கட்டி இருந்தது. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக நான் இருப்பதனால் மருத்துவர்களிடம் இவ்வாறு சொன்னேன்: “நான் இரத்தம் ஏற்றிக்கொள்ள விரும்பவில்லை.” இரத்தத்தைக் கட்டாயப்படுத்தி ஏற்றுவதற்காக ஒரு நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருந்தாலும், இரத்தமின்றி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இந்த விசுவாசமுள்ள கடவுளுடைய இளம் ஊழியர்களைப் பற்றி நான் வாசித்தபோது, என் கண்களில் எனக்குக் கண்ணீர் வந்தது. நான் அனுபவத்திருந்ததைப் போன்றே அவர்களும் அனுபவித்திருக்கின்றனர்! அவர்களுடைய கதைகள் என் இருதயத்தைத் தொட்டன, கடவுள் பேரில் இருக்கும் என் அன்பை பலப்படுத்தின.
M. P., ஐக்கிய மாகாணங்கள்
எனக்கு வயது 17, ஒரு நாள் அப்படிப்பட்ட நிலைமை எனக்கு ஏற்படுமோ என்று பயமாயிருக்கிறது. மரித்துப் போவது எனக்கு பயத்தைக் கொடுப்பதில்லை, ஆனால் யெகோவாவின் சட்டங்களை புறக்கணித்து விடுவேனோ என்ற பயம் உள்ளது. அழுத்தங்கள் வரும்போது விட்டுக்கொடுத்து விடுவது மோசமாய் இருக்கும். அந்தக் கட்டுரை எனக்கு அதிக பலத்தைக் கொடுத்தது.
C. K., ஜெர்மனி
நான் அந்தக் கட்டுரைகளை வாசித்த போது, என்னால் கண்ணீர் விடாமல் இருக்க முடியவில்லை. அதற்குப் பிறகு நான் அதிக கவனத்தோடு உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்? (உவாட்ச்டவர் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்டது) என்ற சிறு புத்தகத்தை நான் வாசித்தேன். அதே நிலைமை எனக்கு ஏற்பட்டதென்றால் நான் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது எனக்கு இப்போது தெரியும்.
Y. G., ஜெர்மனி
நான் குணப்படுத்தப்படமுடியாத லூக்கேமியா என்ற வியாதியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதால், யெகோவாவிடமாக தங்கள் பக்தியை நிரூபித்துக் காண்பித்திருக்கும் இளைஞர்களின் அனுபவங்கள் வயதில் பெரியவராயிருக்கும் எனக்கு உற்சாகமூட்டுவதாய் இருந்தன. மிக்க நன்றி.
H. K., ஆஸ்திரியா
எனக்கு வயது 18. அக்கட்டுரைகளை நான் நேற்று வாசித்த போது கிளர்ச்சியடைந்தேன், அதிர்ச்சியடைந்தேன். அந்த விசுவாசமுள்ள பிள்ளைகள் மரித்துப் போனதைக் குறித்து நான் வாசித்த போது என்னால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. அப்படிப்பட்ட நிலைமைகளின்கீழ் நான் என் உத்தமத்தன்மையைக் காத்துக் கொள்வேனா என்று என்னையே நான் கேட்டுக் கொள்ளும்படி அவர்களுடைய விசுவாசம் என்னை செய்வித்திருக்கிறது.
E. A. O., நைஜீரியா
அதில் குறிப்பிடப்பட்டிருந்த எல்லா இளைஞர்களின் தளர்வுறாத உறுதியைப் பார்த்து நான் உண்மையில் ஆச்சரியப்பட்டேன். அக்கட்டுரைகளை வாசித்தப்பின் நான் அதிகமாக அழுதேன், தங்கள் மரணம் வரையாக அப்படிப்பட்ட கஷ்டங்களை எதிர்ப்படுவதற்கு யெகோவா அவர்களுக்குக் கொடுத்த பலத்துக்காக நான் யெகோவாவுக்கு நன்றி கூறினேன். அதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது என்னுடைய பருவ வயது பிரச்சினைகள் எல்லாம் உண்மையில் ஒன்றுமில்லை என்று நான் உண்மை மனதோடு சொல்ல முடியும்.
R. C., இத்தாலி
மனதைத் தொடும் இக்கட்டுரைகள் அதை வாசிக்கும் எல்லா இளைஞரையும் உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்த இளைஞர்கள் எல்லாருமே இரத்தம் ஏற்றிக்கொள்வதை மறுப்பதில் உறுதியாயிருந்தனர்; அதே சமயத்தில், தங்கள் சொந்த தீர்மானங்களை எடுப்பதற்கும் தங்களைத் தெளிவாக விளக்குவதற்கும் திறமையுள்ளவர்களாய் இருந்தனர். எப்படிப்பட்ட அழுத்தங்களும் சோதனைகளும் வந்தாலும்கூட, நமக்கு பலத்தையும் தேவையான உதவியையும் கொடுப்பதற்கு யெகோவா தவற மாட்டார் என்பதை அறிந்து உற்சாகப்படுத்தப்பட்டேன்.
R. T., ஜப்பான்
எழுதப் படிக்கத் தெரியாமை “எழுதப் படிக்கத் தெரியாமையை முறித்தல்” என்ற தொடர் கட்டுரைகளை நான் போற்றினேன். (பிப்ரவரி 22, 1994, ஆங்கிலம்) சீனாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு 1950-களில் நான் தப்பி ஓடிய போது, அங்கு பேசப்பட்ட மொழிகள் எதையும் என்னால் பேச முடியவில்லை. என்றபோதிலும், யெகோவாவின் சாட்சிகள் பைபிளை ஆங்கிலத்தில் புரிந்துகொள்வதற்கு பொறுமையோடு எனக்கு உதவி செய்தனர். தேவராஜ்ய ஊழியப்பள்ளி உட்பட அவர்களுடைய கூட்டங்களுக்கும் நான் ஆஜரானேன். என்னுடைய ஆங்கிலம் படிப்படியாக முன்னேறியது, நான் இப்போது வீட்டுக்கு வீடு ஊழியத்தில் தைரியமுள்ளவனாய் இருக்கிறேன்.
W. W., தென் ஆப்பிரிக்கா
மறுபிறப்பு நான் ஒரு முகமதியனாக இருந்தபோதிலும், விழித்தெழு! பத்திரிகையை ஒழுங்காக வாசிக்கிறேன். “முன்பு நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்களா? மறுபடியும் நீங்கள் வாழ்வீர்களா?” (ஜூன் 8, 1994) என்ற தலைப்புகளைக் கொண்ட உங்களுடைய சமீபத்திய கட்டுரைகளுக்கு நான் என்னுடைய மெய்யான நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அது அதிக தகவல் நிரம்பியதாக இருந்ததை நான் கண்டேன். மறுபிறப்பு இருப்பதைக் குறித்து வற்புறுத்தும் என் நண்பர்கள் சிலரை திருத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய தகவலை நான் நீண்ட காலமாக தேடிக்கொண்டிருந்தேன். உயிர்த்தெழுதல் ஒன்று இருப்பதனால் மறுபிறப்பு இருக்கமுடியாது என்பதை அவர்கள் நிச்சயமாக ஒத்துக்கொள்வர் என்று கொடுக்கப்பட்டிருக்கும் தகவலிலிருந்து நான் நம்புகிறேன்.
K. S., நைஜீரியா