நமது வளிமண்டலம் எவ்வாறு காக்கப்படும்
மனிதர்கள் தாங்களாகவே முன்வந்து நம்முடைய வானங்களை அழுக்கினால் நிரப்புவதை நிறுத்திவிடுவார்களா? இப்படித்தான் நம்முடைய வளிமண்டலம் காக்கப்படுமா?
இல்லை. மதிப்புமிக்க வளிமண்டலம் காக்கப்படுவது தூய்மைக்கேடு எதிர்ப்பு தேவைகளுக்கு மனிதர் உடன்படுவதன் பேரில் சார்ந்தில்லை. மாறாக, உன்னத அதிகாரம் படைத்தவர் குறுக்கிடுவதுதானே சுத்திகரிக்கப்பட்ட வளிமண்டலத்தை மட்டுமல்லாமல் சுத்தமான ஒரு பூமியையும்கூட கொண்டுவரவிருக்கிறது.
படைப்பாளர் பூமியிலும் அதன்மீதுள்ள உயிர்களிலும் அக்கறையுள்ளவர் என்பது அவர் அதை வடிவமைத்திருக்கும் முறையினால் காட்டப்படுகிறது. எக்காலத்துக்காகவும், என்றென்றுமாகவும் நிலைத்திருக்க அதை உண்டுபண்ணினார்.—சங்கீதம் 104:5, 24.
பராமரிப்புக்கு ஏற்பாடுகள்
உதாரணமாக, வளிமண்டலமானது தன்னைத்தானே பழுதுபார்த்து சுத்திகரித்துக்கொள்ளும் வண்ணமாக படைக்கப்பட்டது. வளிமண்டலத்தின் மேல் பகுதியிலுள்ள ஓசோனை எடுத்துக்கொள்ளுங்கள். பூமியிலுள்ள மனிதர்களுக்குச் சாவுக்கேதுவானதாக இருக்கும் புறஊதாக் கதிர்களை உறிஞ்சுக்கொள்ளும்படியாக ஓசோன் கேடயம் புத்திக்கூர்மையுடன் உண்டாக்கப்பட்டது. அதே சமயத்தில், பூமியில் வாழ்வதற்குத் தேவையான ஒளி கடந்துசெல்வதை அது அனுமதிக்கிறது.
மனிதன் உண்டுபண்ணும் குளோரோஃப்ளுரோகார்பன்கள் வளிமண்டலத்தின் மேல் பகுதிக்குச் சென்று ஓசோன் கேடயத்தை மிக மோசமாக சேதப்படுத்துகின்றன என்பதை நாம் முன்னர் கற்றறிந்தோம். பாதுகாப்பான ஓசோன் கேடயம் எவ்விதமாக நிரப்பப்படும்? அதிசயமாக, படைப்பாளர், தன்னைத் தானே பழுதுபார்த்துக்கொள்ளும் விதமாக அதைப் படைத்திருக்கிறார். ஆம், ஓசோன் இடைவிடாமல் வளிமண்டலத்தின் மேல்பகுதியில் உருவாகிக்கொண்டே இருக்கிறது—உண்மையில், ஓசோன் வடிந்து வெளிவரக் காரணமான அதே ஆபத்தான சூரிய கதிர்களின் மூலமாகவே உருவாகிறது. மனிதன் செய்யும் தூய்மைக்கேடு வேகமாக ஓசோனை அழித்துவருகிற அதே சமயத்தில் ஓரளவு ஓசோன் உருவாகிக்கொண்டிருக்கிறது.
50 கோடா கோடி டன்னுக்கும் அதிகமான காற்றில் பெருமளவு காணப்படும் வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியிலும் நிலைமை இவ்விதமாகவே இருக்கிறது. இயற்கை சுழற்சிகள், மாசுப்படுத்தும் பொருட்களிலிருந்து இந்தக் காற்றைக் குறிப்பிடத்தக்க வழிகளில் வேகமாக சுத்தப்படுத்திவிடுகின்றன. உவார்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது: “காற்று தூய்மையைக்கெடுக்கும் பொருட்களைச் சிதறடித்துவிடுகிறது, மழையும் பனியும் நிலத்திற்குள் அவற்றை அடித்துச்சென்றுவிடுகின்றன.”
அப்படியென்றால், மனிதர்கள் காற்றின் தூய்மையைக் கெடுப்பதை நிறுத்திவிட்டால் அல்லது இப்படிப்பட்ட தூய்மைக்கேட்டை வெகுவாக கட்டுப்படுத்திக்கொண்டால், விரைவில் எல்லா இடங்களிலும் காற்று இதமாயும் நறுமணமுள்ளதாயும் இருக்கும் என்பது தெளிவாக உள்ளது. என்றபோதிலும், மேல் கூறப்பட்ட நோக்கீட்டுப் புத்தகம் பிரச்சினையைக் கண்டுபிடித்து இவ்விதமாக விளக்குகிறது: “அநேக இடங்களில், தூய்மையைக்கெடுக்கும் பொருட்கள், வானிலைகள் அவற்றை அப்புறப்படுத்தும் வேகத்தைவிட அதிக வேகமாக காற்றில் எறியப்படுகின்றன.”
அப்படியென்றால் மனிதன் சுயநலத்துக்காக வளிமண்டலத்தின் தூய்மையைக் கெடுப்பது எவ்வாறு நிறுத்தப்படும்?
சுத்திகரிக்கப்பட்ட ஒரு பூமி சமீபத்தில் இருக்கிறது
தூய்மைக்கேடு கடவுள் குறுக்கிடும்போது அவராலேயே நிறுத்தப்படும். அவர் ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பார்’ என்பதாக பைபிள் முன்னறிவிக்கிறது. (வெளிப்படுத்துதல் 11:18) பேராசைமிக்க மனிதர்கள் இந்த அழகிய பூமி மற்றும் உயிர்காக்கும் அதன் வளிமண்டலத்தின் தூய்மையைத் தொடர்ந்து என்றென்றுமாக கெடுத்துக்கொண்டிருப்பதை அனுமதிக்கமாட்டார். அவர் இவ்வாறு வாக்களிக்கிறார்: “பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.”—சங்கீதம் 37:9.
பொல்லாதவர்களுக்கு எவ்வாறு ஒரு முடிவு கொண்டுவரப்படும்? போதிய திறமையற்ற மனிதர்களின் அரசாங்கங்களை மாற்றீடு செய்யப்போகும் கடவுளுடைய ராஜ்யமாகிய அவருடைய பரலோக அரசாங்கத்தின் மூலமாக அது நடக்கும். பைபிள் வாக்களிக்கிறது: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) கடவுளுடைய இந்த ராஜ்ய அரசாங்கத்துக்காகவே பின்வருமாறு ஜெபிக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றினோருக்கு கற்பித்தார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.”—மத்தேயு 6:10.
மனிதர்கள் தம்முடைய ராஜ்யத்தால் ஆளப்பட்டு, இவ்விதமாக தூய்மைக்கெடுக்கப்படாத சுற்றுச்சூழலில் வாழ்க்கையை அனுபவித்து மகிழவேண்டும் என்பதே பூமிக்கான கடவுளுடைய சித்தமாயிருக்கிறது. அதன் காரணமாகவே கடவுள் ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பதற்கு’ தீர்மானமுள்ளவராய் இருக்கிறார். (வெளிப்படுத்துதல் 11:18) அது என்னே ஒரு வல்லமையுள்ள விடுவிக்கும் செயலாக இருக்கும்!
சுயநலமுள்ள மனிதர்கள் பூமியின்மீது குவித்திருக்கும் எல்லா தூய்மைக்கேட்டிலிருந்தும் விடுபட்ட ஒரு பூமியில் வாழ்வதைக் கற்பனை செய்து பாருங்கள்! அந்தச் சமயத்தில் மதிப்புமிக்க நம்முடைய வளிமண்டலம் ஆரோக்கியமான ஒரு நிலைமைக்கு திரும்பக் கொண்டுவரப்பட்டிருக்கும். பின்வரும் பைபிள் வாக்குறுதி நிறைவேறும்போது இது சம்பவிக்கும்: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடே இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:3, 4; 2 பேதுரு 3:13.
கடவுள் வாக்களிக்கும் நீதியுள்ள புதிய உலகிற்குள் தப்பிப்பிழைப்பதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும்? கடவுள் தம்முடைய பிரதிநிதியாக பூமிக்கு அனுப்பினவருடைய போதகங்களைப் பற்றி நீங்கள் கற்றறிந்து அவற்றைப் பின்பற்றுவது அவசியமாகும். (யோவான் 3:16; 7:29) இயேசு கிறிஸ்துவாக இருக்கும் இவர் கடவுளிடம் ஜெபிக்கையில் இவ்வாறு சொன்னார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”—யோவான் 17:3.
[பக்கம் 10-ன் படம்]
சுத்தமான, தூய்மைக்கெடுக்கப்படாத ஒரு பூமி சமீபத்தில் இருக்கிறது