உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 12/22 பக். 3-5
  • மதிப்புமிக்க நமது வளிமண்டலம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மதிப்புமிக்க நமது வளிமண்டலம்
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உயிர் காக்கிறது
  • அதிசயமான ஒரு கலவை
  • விசேஷித்த ஒரு கிரகத்தின் அத்தாட்சி
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • தாறுமாறான வானிலை
    விழித்தெழு!—1998
  • நமது வளிமண்டலம் எவ்வாறு காக்கப்படும்
    விழித்தெழு!—1994
  • நமது வளிமண்டலம் சேதமடையும்போது
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 12/22 பக். 3-5

மதிப்புமிக்க நமது வளிமண்டலம்

மால்கோம் ராஸும் விக் ப்ராத்தரும் மே 4, 1961-ல் வானில் 34.6 கிலோமீட்டர் உயரத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அந்தச் சமயத்தில், புதிய ஒரு சாதனை படைப்பது ராஸுக்கு அதிக கிளர்ச்சியூட்டுவதாக இருக்கவில்லை. அவரைக் கவர்ந்தது என்னவென்றால், தேவையான போது திறந்து மூடக்கூடிய சட்டங்கள் பதித்த கதவைக் கவனமாக முதல் முறையாக உயர்த்தியபோது ஊர்தியிலிருந்து அவர் பார்த்த அந்தக் காட்சியே ஆகும்.

“30,500 மீட்டர் உயரத்தை நாங்கள் எட்டியபோது பார்த்த காட்சி ‘முழுவதும் அபாரமாக’ இருந்தது என அவர் நினைவுகூருகிறார். வளிமண்டலத்தின் பல்வேறு அடுக்குகளைக் குறிப்பிட்டுக் காட்டும் வண்ணங்களைப் பார்த்து ராஸ் வியந்துபோனார். முதலாவதாக, பூமிக்கு மேலே சுமார் 16 கிலோமீட்டர் தொலைவுக்குப் பரந்துகிடக்கும் “பிரகாசமான வெண்மைகலந்த நீல நிறத்தில்” அடிவளிமண்டலம் இருக்கிறது. பின்னர் அடர்த்தியான நீல நிற மீவளிமண்டலம் கடைசியாக முழுவதும் கருப்பாகும்வரையாக கருமையாகிக்கொண்டே போகிறது. “வளிமண்டலத்தின் வானவெளி அழகை மெளனமாக பயபக்தியோடு நாங்கள் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம்,” என்பதாக ராஸ் நேஷனல் ஜியோகிராஃபிக் என்ற பத்திரிகையில் எழுதினார்.

ஆம், நம்முடைய அழகிய வளிமண்டலம் கூர்ந்து பார்த்து சிந்திப்பதற்குத் தகுதியானதே.

உயிர் காக்கிறது

உண்மையில், நம்முடைய வளிமண்டலம் சுமார் 80 கிலோமீட்டர் உயரத்துக்குப் பூமியைச் சுற்றியிருக்கும் பரந்த காற்றுவெளியாகும். அது 50 கோடா கோடி டன்னுக்கும் மேலான எடையுள்ளதாக, கடல் மட்டத்தில் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 1.03 கிலோகிராம் வேகத்தில் நம்முடைய தலையை அழுத்திக் கொண்டிருக்கிறது. அந்தக் காற்றழுத்தம் இல்லாவிட்டால், நாம் உயிர் வாழ முடியாது, ஏனென்றால் நம்முடைய உடலிலுள்ள திரவங்கள் ஆவியாக மாறுவதை அது தடைசெய்கிறது. வளிமண்டலத்தின் மேற்பகுதியில் மனித உயிரைக் காப்பதற்கு போதிய காற்றழுத்தம் இல்லை. அதன் காரணமாகவே ராஸும் ப்ராத்தரும் அழுத்தக்கட்டுப்பாடுள்ள விண்வெளி உடைகளை அணிந்துகொள்ள வேண்டியவர்களாக இருந்தனர். “செயற்கை அழுத்தம் இல்லாவிடில், எங்களுடைய இரத்தம் கொதித்து, எங்களுடைய இரத்தக் குழாய்களும் உறுப்புக்களும் வெடித்துவிடும்,” என்பதாக ராஸ் விளக்கினார்.

நிச்சயமாகவே, தொடர்ந்து சுவாசித்துக்கொண்டிருப்பதற்கும்கூட இந்தப் பரந்த காற்றுவெளி நமக்குத் தேவையாக இருக்கிறது. என்றபோதிலும், நாம் அதைப் பார்க்க முடியாததால், நம்மில் பெரும்பாலானவர்கள் அதைப் பற்றி ஆழ்ந்து யோசிப்பது கிடையாது. பண்டைய காலத்திலிருந்த மதப்பற்றுள்ள ஒரு மனிதன் போற்றுதலுடன் இவ்வாறு சொன்னார்: ‘[கடவுள்] எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிறார்.’—அப்போஸ்தலர் 17:24, 25.

வளிமண்டலம் இல்லாவிடில், நீர்த்துளிகள் தோன்றுவதற்கு அவசியமாயிருக்கும் தூசியைப் பிடித்திருப்பதற்கு வானில் ஒரு ஊடக சாதனம் இருக்காது. ஆகவே மழை பெய்யாது. நம்முடைய வளிமண்டலம் மாத்திரம் இல்லையென்றால், நாம் நேரடியான சூரிய கதிர்களால் பொசுங்கிவிடுவோம், இரவில் உறைந்து போவோம். இரவுகள் கடுங்குளிராக இராதபடிக்கு சூரியனின் வெப்பத்தில் கொஞ்சத்தை அடைத்துவிடும் வளிமண்டலம் ஒரு கம்பளியைப் போல செயலாற்றுவதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும்.

மேலுமாக, விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி உள்ளே வந்துகொண்டிருக்கும் எரிநட்சத்திரங்கள் பூமியில் வாழ்பவர்களுக்குத் தீங்கிழைக்காத வண்ணம் வளிமண்டலம் பாதுகாப்பை அளிக்கிறது. “ஒவ்வொரு நாளும் விண்வெளியிலிருந்து வளிமண்டலத்தின் வெளிவட்டத்திற்கு தோராயமாக பல ஆயிரக்கணக்கான டன் பொருட்கள் வருவதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது,” என்பதாக ஹர்பட் ரீல் வளிமண்டலத்துக்கு அறிமுகம் (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில் விளக்குகிறார். என்றபோதிலும், பெரும்பாலான எரிநட்சத்திரங்கள் பூமியின் மேற்பரப்பை அடைவதற்கு முன்பே சிதைந்துவிடுகின்றன.

வளிமண்டலம் வாழ்க்கையில் நம்முடைய மகிழ்ச்சியைக் கூட்டுகிறது. நம்முடைய அழகிய நீல வானங்கள், பஞ்சுபோன்ற தோற்றமுள்ள மேகங்கள், புத்துயிரளிக்கும் மழை, பகட்டான சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனங்கள் ஆகியவற்றை அது நமக்கு கொடுக்கிறது. மேலுமாக, வளிமண்டலம் இல்லாவிட்டால் நம்முடைய அன்பானவர்களின் குரல்களையோ நமக்கு விருப்பமான இசையையோ கேட்கமுடியாது. ஏன்? ஏனென்றால் ஒலி அலைகளுக்குப் பயணம் செய்வதற்கு ஒரு சாதனம் தேவைப்படுகிறது. காற்று ஒலியை துல்லியமாக எடுத்துச்செல்கிறது, ஆனால் விண்வெளியில் எந்தச் சப்தமும் கேட்கப்படுவதில்லை.

அதிசயமான ஒரு கலவை

பண்டைய காலங்களில் மனிதர்கள் வளிமண்டலத்தை ஒரே ஒரு வஸ்துவாகக் கருதினார்கள். பின்னர், 18-வது நூற்றாண்டில், அறிவியல் அறிஞர்கள் அது பிரதானமாக பூர்த்திசெய்கிற இரண்டு வாயுக்களான நைட்ரஜனாலும் ஆக்ஸிஜனாலும் ஆனது என்பதைக் கண்டுபிடித்தார்கள். வளிமண்டலத்தில் 78 சதவீதம் நைட்ரஜனும் 21 சதவீதம் ஆக்ஸிஜனும் இருக்கிறது; மீதமுள்ள 1 சதவீதம் ஆர்கான், நீராவி, கார்பன் டைஆக்ஸைடு, நியான், ஹீலியம், க்ரிப்டான், ஹைட்ரஜன், செனான், ஓசோன் ஆகிய வாயுக்களால் ஆனது.

நிச்சயமாகவே, ஆக்ஸிஜன், சுவாசித்தலின் மூலமாக நம்முடைய உடல்கள் உட்கொள்ளும் உயிர்காக்கும் வாயுவாகும். நம்முடைய வளிமண்டலத்திலுள்ள ஆக்ஸிஜனின் அளவு பூமியில் உயிர்வாழ்வதற்கு துல்லியமாக தேவைப்படும் அளவாக இருக்கிறது. அது குறிப்பிடத்தக்க விதமாக குறையுமானால், நாம் தூங்கி விழுந்து கடைசியில் உணர்விழந்து விடுவோம். அதன் செறிவு அளவுக்கு மேலாக அதிகரிக்குமானால், ஈரமான குச்சிகளும் காட்டிலுள்ள புற்களும்கூட தீப்பற்றிக்கொள்ளும் என்பதாகச் சொல்லப்படுகிறது.

நைட்ரஜன், ஆக்ஸிஜனின் செறிவைத் துல்லியமாக தளர்த்தும் பொருளாக இருக்கிறது, இருந்தாலும், உயிர்காப்பதில் அது மந்தமான ஒரு பங்கைக் காட்டிலும் அதிகத்தைக் கொண்டிருக்கிறது. உயிர்வாழ்வதற்கு எல்லா உயிரினங்களுக்கும் அது தேவையாகும். தாவரங்கள் நைட்ரஜனை மின்னல் மற்றும் விசேஷித்த ஒரு வகையான பாக்டீரியாவின் உதவிகொண்டு வளிமண்டலத்திலிருந்து பெற்றுக்கொள்கின்றன. முறையே, நைட்ரஜனை நாம் உண்ணும் உணவிலிருந்து பெற்றுக்கொள்கிறோம்.

நம்முடைய வளிமண்டலம் ஆக்ஸிஜனையும் நைட்ரஜனையும் சரியான விகிதத்தில் காத்துக்கொள்வது அதிசயமாக உள்ளது. நுண்ணுயிர்களின் மதிப்புள்ள வேலையின் காரணமாக, நைட்ரஜன் வளிமண்டலத்துக்குத் திருப்பித் தரப்படுகிறது. ஆக்ஸிஜனைப் பற்றி என்ன? எரிப்பதினாலும் மனிதர்களும் விலங்குகளும் சுவாசிப்பதினாலும் பெரும் அளவில் அது பயன்படுத்தப்பட்டுவிடுகிறது. என்றபோதிலும் வளிமண்டலம் அதன் 21 சதவீத ஆக்ஸிஜன் அளவை தொடர்ந்து காத்துவருகிறது. எவ்விதமாக? ஒளிச்சேர்க்கையின் மூலமாக—பச்சை இலைகள் மற்றும் கடற்பாசியில் நடைபெறும் ஒரு வேதியியல் மாற்றம்—ஒவ்வொரு நாளும் நூறுகோடி டன்னுக்கும் மேலாக ஆக்ஸிஜனை வளிமண்டலத்துக்குள் வெளிவிடுகிறது.

கார்பன் டைஆக்ஸைடு—வளிமண்டலத்தில் 0.03 சதவீதமாக மட்டுமே மிகக் குறைந்த அளவுகளில் இருக்கும் வாயு—இல்லாமல் ஒளிச்சேர்க்கை நடைபெற முடியாது. ஒளியின் துணையோடு, தாவரங்கள் வளர்ந்து கனிகளையும் கொட்டைகளையும் தானியங்களையும் காய்கறிகளையும் விளைவிப்பதற்கு அவை கார்பன் டைஆக்ஸைடைச் சார்ந்திருக்கின்றன. கார்பன் டைஆக்ஸைடு வெப்பத்தைத் திரும்ப பூமியினிடமாக வெளிவிட்டு நம்முடைய கோளத்தை அனலாக வைக்க உதவுகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக மரம், கரி, வாயு, எண்ணெய் ஆகியவை எரிக்கப்பட்டு கார்பன் டைஆக்ஸைடின் அளவு அதிகரித்திருந்தால், உயிர் இல்லாமற்போகும் அளவு பூமியின் சீதோஷ்ணம் அதிக உஷ்ணமாகிவிடும். மறுபட்சத்தில், கார்பன் டைஆக்ஸைடு அளவுக்கு அதிகமாக குறைந்துவிட்டால், ஒளிச்சேர்ச்சை நின்றுவிடும், நாம் பட்டினியாய் இருப்போம்.

ஓசோன் என்பது பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு நம்பியிருக்கும் குறைந்த அளவுகளில் காணப்படும் மற்றொரு வாயுவாகும். மீவளிமண்டலம் என்றழைக்கப்படும் வளிமண்டலத்தின் மேற்பாகத்தில் இருக்கும் ஓசோன் சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்களை உறிஞ்சிக்கொள்கிறது. இவ்விதமாக பூமியின் மீதுள்ள நாம் தீங்கிழைக்கும் இந்தப் புறஊதாக் கதிர்களிலிருந்து காக்கப்படுகிறோம்.

ஆம், வளிமண்டலத்தைப் பற்றி நாம் எவ்வளவு அதிகத்தை அறிகிறோமோ அவ்வளவு அதிசயிப்பதற்கு அதிகம் இருக்கிறது. நைட்ரஜன், ஆக்ஸிஜன் மற்றும் குறைந்த அளவுகளிலுள்ள வாயுக்கள் துல்லியமாக சரியானளவில் இருக்கின்றன. பூமியின் அளவும்கூட சமநிலையைக் காத்துக்கொள்வதற்கு மிகவும் சரியாக உள்ளது. பூமி சிறியதாகவும் குறைவான எடையுள்ளதாகவும் இருந்திருந்தால், அதன் ஈர்ப்பு சக்தி மிகவும் வலிமை குன்றியதாக இருக்கும், மதிப்புமிக்க நம்முடைய வளிமண்டலம் விண்வெளிக்குள் நழுவிச்சென்றுவிட்டிருக்கும்.

“மறுபட்சத்தில், பூமி இப்போதிருப்பதைவிட சற்று பெரியதாக இருந்திருந்தால், அதிகப்படியான ஈர்ப்பு சக்தி வாயுக்களை அதிக அளவில் தக்கவைத்துக் கொண்டிருக்கும். . . . வளிமண்டலத்தின் வாயுக்களிடையே உள்ள நுட்பமான சமநிலை குலைக்கப்பட்டிருக்கும்,” என்பதாக உயிரின் சுற்றுச்சூழல் (ஆங்கிலம்) என்ற அறிவியல் பாடப்புத்தகம் குறிப்பிடுகிறது.

என்றபோதிலும், “நுட்பமான சமநிலை” மனிதனின் நவீன வாழ்க்கைப் பாணியால் குலைக்கப்பட்டு வருவது வருத்தத்திற்குரியதாகும். நிலைமை எத்தனை கவலைக்கிடமாக உள்ளது, நம்முடைய மதிப்புமிக்க வளிமண்டலம் நாசமாவதிலிருந்து காக்கப்படும் என்பதற்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?

[பக்கம் 5-ன் பெட்டி]

சூரிய அஸ்தமனங்கள் மேம்பட்ட தோற்றமளிக்கையில்

வானத்துக்கு ரம்மியமான நீல நிற தோற்றத்தைக் கொடுக்கும் விதமாக வளிமண்டலம் சூரிய கதிர்களைப் பிரதிபலிக்கிறது. சூரியன் அடிவானத்தை நோக்கிச் சாய்கையில், அதனுடைய கதிர்கள் இன்னும் அதிகமான வளிமண்டலத்தைக் கடந்து செல்லவேண்டும். இது நகரவாசிகள் ஒருவேளை ஒருபோதும் பார்க்க முடியாத கண்ணைப் பறிக்கும் பல்வேறு வண்ணங்களை உண்டுபண்ணுகிறது.

தொழில்துறைக்கென்று அமைக்கப்பட்ட நகரங்களில் சூரிய அஸ்தமனங்கள் பொதுவாக மங்கலாகவும் வித்தியாசமான சிவப்பு நிறங்களைத் தவிர வேறு வண்ணங்கள் இல்லாமலும் காணப்படலாம். அது மிக மோசமாக தூய்மைக்கேடடைந்த இடமாக இருந்தால், “சூரியன் அடிவானத்தை அடைவதற்குள்ளும்கூட மறைந்துவிடக்கூடிய மங்கலான சிவப்பு நிற வட்டமான வில்லையைப் போன்று தோற்றமளிக்கிறது,” என்பதாக நியூ சையன்டிஸ்ட் பத்திரிகை குறிப்பிடுகிறது.

“அசாதாரணமாக தெளிந்த, தூய்மைக்கேடில்லாத வளிமண்டலத்தில், சூரிய அஸ்தமனங்களின் வண்ணங்கள் விசேஷமாக கண்ணைப் பறிப்பதாக இருக்கின்றன. சூரியன் மஞ்சள் நிறமாகவும், அடுத்தாற்போலுள்ள வானப்பகுதியில் வித்தியாசமான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களிலும் இருக்கிறது. சூரியன் அடிவானத்தின் கீழே மறைகையில், வண்ணங்கள் படிப்படியாக ஆரஞ்சிலிருந்து நீலத்துக்கு மாறுகின்றன. தாழ்வான பகுதிகளிலுள்ள மேகங்கள் சூரியன் மறைந்துவிட்ட பின்னும்கூட தொடர்ந்து அதன் ஒளியைப் பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றன,” என்பதாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள பத்திரிகை விளக்குகிறது.

தூய்மைக்கேடில்லாத உலகில் அனுபவித்துக் களிக்கப்பட இருக்கும் பல்வேறு அழகான சூரிய அஸ்தமனங்களைச் சற்று கற்பனை செய்துபாருங்கள்!—வெளிப்படுத்துதல் 21:3-5.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்