உலகத்தைக் கவனித்தல்
குற்றச்செயல் செலவுகள்
தி வாஷிங்டன் போஸ்ட் சொல்லுகிறபடி, குற்றச்செயல்களின் காரணமாக ஐக்கிய மாகாணங்கள் ஒவ்வொரு வருடமும் 16,300 கோடி டாலர் செலவழிக்கிறது அல்லது இழக்கிறது. பணவீக்கத்திற்கான தொகையைக் கூட்டிய பிறகும்கூட, இந்த மொத்தத் தொகையானது 1965-ல் செலவு செய்ததைவிட சுமார் நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாக அந்தச் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. குற்றச்செயலின் செலவுகள் கீழ்க்கண்டவற்றை உட்படுத்துகின்றன என்று அந்தச் செய்தித்தாள் மேலும் கூறுகிறது: “மாகாண அரசு மற்றும் மத்திய அரசு காவல்துறைக்கு 31.8 பில்லியன் டாலர், சீர்திருத்தல் திட்டங்களுக்கு 24.9 பில்லியன் டாலர், சிறிய சிறிய இழப்புகளுக்கு 36.9 பில்லியன் டாலர், காப்பீட்டுறுதி மோசடிக்கு 20 பில்லியன் டாலர், தனிப்பட்டோரின் சொத்து இழப்புகள் மற்றும் மருத்துவ செலவுகளுக்கு 17.6 பில்லியன் டாலர். இன்னும், கூடுதலாக 15 பில்லியன் டாலர் தனிப்பட்டவர்களின் பாதுகாப்பிற்கும், 9.3 பில்லியன் டாலர் நீதிமன்ற செலவுகளுக்கும், 7.2 பில்லியன் டாலர் வழக்கு விசாரணைக்கும் பொதுமக்கள் சார்பாக வாதிடவும் செலவழிக்கப்படுகிறது.” உதாரணமாக, வாஷிங்டன், டி.ஸி. பகுதியில் நடைபெறும் ஒரு சாதாரண துப்பாக்கி சூட்டில் பலியானவருக்கு, சுடப்பட்ட பிறகு முதல் சில மணிநேரங்களுக்குச் சிகிச்சையளிக்க சராசரியாக 7,000 டாலர் செலவாகிறது என்று போஸ்ட் குறிப்பிடுகிறது. சுடப்பட்ட அந்த ஆள் பிழைத்துக்கொண்டார் என்றால், ஏற்படும் செலவு சுமார் 22,000 டாலர் ஆகும். குற்றவாளியைக் கண்டுபிடித்து தண்டனையளிக்க அரசாங்கம் முயற்சி செய்யுமானால், அவனை சிறையிலடைத்து வைக்க வருடத்திற்கு சுமார் 22,000 டாலர் செலவாகிறது.
பிலிப்பீன்ஸில் பாதுகாப்பற்ற இரத்தம்
பிலிப்பீன்ஸில், இரத்தமேற்றும் சேவை, “பாதுகாப்பற்றதும், திறமையற்றதும், வீணானதுமாக,” இருக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்கிறது, பிலிப்பீன்ஸைச் சேர்ந்த மருத்துவர்களின் குழுவால் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆராய்ச்சி. அந்நாட்டின் சுகாதார அமைச்சர் க்வான் ஃப்ளாவ்யார், “அதிக கவலைக்கிடமானது,” என்று அழைத்த கண்டுபிடிப்பில், தேசத்தின் இரத்த வங்கிகளில் பாதிக்குச் சற்று குறைவானவற்றில், எய்ட்ஸ், சிஃபிலிஸ், ஹெபடைடஸ் பி, மலேரியா ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சோதனைகளை நடத்தவல்ல பணியாளர்களைக் கொண்டிருந்தன என்று அந்த ஆராய்ச்சி காண்பித்தது. மேலும், அந்த ஆராய்ச்சி இரத்த வங்கிகளில் இருந்து வந்த 136 இரத்த மாதிரிகளைச் சோதித்து, பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டிருந்த இரத்தங்களிலும்கூட சுமார் 4 சதவீதம் மாசுப்படுத்தப்பட்டிருந்தது என்பதைக் கண்டுபிடித்தது.
இன்ஃபர்மேஷன் சூப்பர்ஹைவேயில் குப்பைக்கூளங்கள்
இன்ஃபர்மேஷன் சூப்பர்ஹைவே எனப்படும் ஒரு கம்ப்யூட்டர் கட்டமைப்பு முறை, கம்ப்யூட்டர் பயன்படுத்துவோருக்கு இடையில் ஒரு தகவல் இணைப்பகமாக இருந்து வருகிறது. இது தொழில்நுட்பத்தின் அதிசயம் என்று மிகப் பரவலாக பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதில் குறைபாடுகளும் இருக்கின்றன. ஆராய்ச்சி செய்யும் குறிக்கோளோடு தான் இந்த ‘ஹைவேயை’ பயன்படுத்திய இரண்டு மாத அனுபவத்தைப் பத்திரிகையாளர் ஷோன் சில்கோஃப், கனடாவின் க்ளோப் அண்ட் மெயிலில் எழுதினார். அது “மகா மட்டமானது” என்றும் “மேற்கத்திய பண்பாட்டின் கழிவுகளால் முழுக்க முழுக்க மாசுப்படுத்தப்பட்டிருக்கிறது” என்றும் அவர் முடிவுக்கு வந்தார். அவர் உபயோகித்த முறைமையில், 3,500-க்கும் அதிகமான “கலந்தாலோசிப்புத் தொகுதிகள்” இருந்தனவென்றும், அவற்றில் அநேகம் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நட்சத்திரங்களைப் பற்றிய கிசுகிசுப்பு, காதுகொடுத்துக் கேட்க சகிக்காத ரசனையற்ற தமாஷ், பிரபலமான டிவி நிகழ்ச்சிகளைப் பற்றிய பிரயோஜனமற்ற துணுக்குச் செய்திகள் போன்ற விஷயங்களைக் கொண்டிருந்தன. அதில் ஒரு தொகுதி தற்கொலை செய்து கொள்ளும் முறைகளையும்கூட சிறப்பித்துக் காண்பித்தது. “மிகுந்த வல்லமைவாய்ந்த ஒன்றாக இருக்கும் வாய்ப்பையுடைய ஒரு கருவியானது, மனநோயாளிகளால் நிறைந்திருப்பதாகத் தோன்றும் ஒரு சமுதாயத்தால் வீணடிக்கப்படுகிறது என்று சில்கோஃப் குறிப்பிட்டார்.”
புண்ணுக்குத் தேனா?
கனடாவின் மெடிகல் போஸ்ட்டில் எழுதுகையில், டாக்டர் பேசில் ஜே. எஸ். க்ரோகோனோ, குடல்புண்ணால் அவதிப்படுபவர்களுக்குச் சாதாரண தேனீ, கடந்த பல பத்தாண்டுகளில் அடிக்கடி கொடூரமான அறுவைசிகிச்சை செய்துவந்திருக்கிற டாக்டர்களால் செய்ய முடிந்திருப்பதைவிட அதிகத்தைச் செய்ய வல்லதாய் இருக்கலாம் என்று கூறுகிறார். ஹெலிகோபேக்டர் பைலோரி எனப்படும் ஒரு சிறிய நுண்கிருமி குடல்புண்களை ஏற்படுத்துவதில் வகிக்கும் பங்கை அநேக நிபுணர்கள் புரிந்திருக்கின்றனர் என்பதாக அவர் குறிப்பிடுகிறார். இந்த நுண்கிருமியை முறியடிக்க மருந்துகளை உபயோகிக்கும்படி சிலர் சிபாரிசு செய்திருக்கிறார்கள். ஆயினும் இந்த மருந்துகள் ஏற்கத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்றும், அந்த நுண்கிருமிகள் இம்மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ளலாம் என்றும் க்ரோகோனோ கூறுகிறார். மறுபட்சத்தில், பாக்டீரியாக்களுக்கு எதிராக செயலாற்ற தேனுக்குள்ள தன்மைகள் சோதிக்கப்பட்ட, ஜர்னல் ஆஃப் தி ராயல் சொஸையிட்டி ஆஃப் மெடிஸினில் பிரசுரிக்கப்பட்டிருந்த ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை அவர் சுட்டிக்காட்டுகிறார். மானகா என்றழைக்கப்படும் தாவரத்தை உணவாக உட்கொண்ட நியூ ஜீலாந்து தேனீக்களிலிருந்து வரும் ஒரு இனமானது, புண்ணுண்டாக்கும் நுண்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக இருந்தது.
ஈயமும் ஒயினும்
பெல்ஜியம் மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பிரெஞ்சு ஒயின்களில் ஆபத்தாக இருக்கவல்ல ஒன்றை அடையாளம் கண்டுபிடித்திருக்கின்றனர்—ஈயம். ஈயம் பூசப்பட்ட படிகக்கல் வடிகலங்களிலிருந்தும், ஈய உலோகத் தகடுகளிலிருந்தும் ஈயம் ஒயினுடன் கலக்கலாம். ஆனால் சயன்ஸ் நியூஸில் அறிக்கை செய்யப்பட்ட புதிய ஆராய்ச்சி, சில வருடத்திய திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் பிரெஞ்சு ஒயின்களில் அதிகளவு கரிம ஈய சேர்மங்களுக்கான மூலமாக இருப்பது ஈயம் அடங்கியுள்ள பெட்ரோல்தான் என்று கண்டுபிடித்துள்ளது. போக்குவரத்து அதிகமுள்ள நெடுஞ்சாலைகளின் ஓரமாக இருக்கும் திராட்சைத் தோட்டங்களில் வளரும் திராட்சைப் பழங்களுக்குள், புகைப்போக்கிகளிலிருந்து வரும் புகையிலுள்ள ஈயம் நுழைந்திருக்கிறது. இந்த ஒயின்களில் உள்ள கரிம ஈய சேர்மங்களின் அளவுகள் குடிநீரில் காணப்படுகிற அளவுகளைவிட 10 முதல் 100 மடங்கு அதிகமாக இருந்தன. ஈயம் கலந்த எரிவாயுவின் உபயோகம் 1970-களின் பிற்பகுதியில் குறைந்து கொண்டிருந்ததால், 1975-க்கும் 1980-க்கும் இடையில் உற்பத்தி செய்யப்பட்ட திராட்சைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒயின்களை மட்டும் தவிர்க்கும்படி, பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தின் ரிச்சர்ட்
லாபின்ஸ்கி சிபாரிசு செய்கிறார். இருப்பினும், ஈயம் கலந்த பெட்ரோல் இப்பொழுதும், முக்கியமாக மத்திய ஐரோப்பாவிலும் முன்னாள் சோவியத் யூனியனிலும் உபயோகத்தில் உள்ளது என்றும்கூட அவர் கூறுகிறார். சாதாரண ஈயத்தைவிட கரிம ஈய சேர்மங்கள் மிகவும் ஆபத்தானவை, ஏனென்றால் இவை “எளிதில், முக்கியமாக மூளையால், உறிஞ்சிக்கொள்ளப்படக்கூடும்.”
டிவி இல்லாத தீவில் பிள்ளைகள்
மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவிற்கு செல்லும் வழியின் சுமார் மூன்றிலொரு பங்கு தூரத்தில் செ. ஹெலினா என்ற ஒரு சிறிய தீவு இருக்கிறது. இது “உலகத்திலேயே நல்ல சமநிலையுள்ள பிள்ளைகளை” கொண்டிருப்பதாக பெருமை பாராட்டிக்கொள்கிறது என்பதாக, கற்றுக்கொள்வதற்கு ஆதரவு என்ற கல்வி பத்திரிகையின் (ஆங்கிலம்) அறிக்கையைக் குறிப்பிட்டுக் காட்டி சொல்கிறது லண்டனின் தி டைம்ஸ். அந்தத் தீவில் உள்ள 9 முதல் 12 வயது பிள்ளைகளில் 3.4 சதவீதத்தினருக்கு மட்டுமே சிக்கலான நடத்தைப் பிரச்சினைகள் இருந்தன என்று அந்த அறிக்கையை தயாரித்த டாக்டர் டோனி சார்ல்ட்டன் கண்டுபிடித்தார். இந்த வீதம் “உலகின் எந்தப் பாகத்திலும் எந்த வயது வரம்பு பிள்ளைகளுக்கும் இதுவரை பதிவு செய்யப்பட்டதைவிட மிகக் குறைவு,” என்று தி டைம்ஸ் குறிப்பிடுகிறது. சமநிலையுள்ள பிள்ளைகளுக்கான காரணம்? ஒரு சாத்தியம் என்னவென்றால் அங்குப் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் தரமான, தாராளமாகக் கிடைக்கும் கல்வியாகும். ஆனால் சார்ல்ட்டன் சாத்தியமாக இருக்கக்கூடிய இன்னொரு அம்சத்தையும் கண்டுபிடிக்க திட்டமிடுகிறார். சமீபத்தில் செயற்கைக்கோள் கட்டமைப்பு (satellite hookup) ஒன்றை நிறுவியதுவரை, இந்தத் தீவில் டிவி ஒளிபரப்பு ஒருபோதும் இருந்ததில்லை. மூன்று வருடங்களுக்குள்ளாக இந்தத் தீவிலுள்ள 1,500 குடும்பங்களில் 1,300 குடும்பங்கள் டிவியை வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விளைவாக இந்தத் தீவின் பிள்ளைகளில் ஏற்படும் ஏதேனும் மாற்றங்களைப்பற்றி சார்ல்ட்டன் விரைவில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்ளுவார்.
பிள்ளைக்கு ஜீவனாம்சம் இல்லையேல் லைசென்ஸும் இல்லை
அ.ஐ.மா.-வின் மெய்ன் மாகாணம், நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்ட பிள்ளை ஜீவனாம்சத்தைக் கொடுக்க மறுக்கிற பெற்றோர் சம்பந்தமாக மிக கடுமையான தீர்மானத்தை எடுத்திருக்கிறது. அவ்வாறு குற்றம் செய்த எட்டு பெற்றோரின் டிரைவிங் லைசென்ஸை அது கைப்பற்றியிருக்கிறது. தி நியூ யார்க் டைம்ஸ் சொல்லுகிறபடி, அந்த எட்டு பெற்றோரும் மொத்தம் 1,50,000 டாலர் தரவேண்டி இருந்தது; அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய லைசென்ஸை இழக்கும் ஆபத்தில் இருந்தனர் என்று போதுமான எச்சரிக்கையைப் பெற்றதாக மெய்னின் மனித சேவை ஆணையர், ஜேன் ஷீஹேன் சொல்லுகிறார். “யாருக்கும் இது ஆச்சரியமாக இருக்க வேண்டியதில்லை. இப்படியொரு நாள் வருமென்று போன ஆகஸ்டிலிருந்தே மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருந்தோம்,” என்று அவர் சொன்னதாக டைம்ஸ் மேற்கோள் காட்டுகிறது. பிள்ளை ஜீவனாம்சத்தை 90 நாட்களுக்குமேல் கொடுக்காதிருந்த 17,400 பெற்றோருக்கு அதைப்போன்ற எச்சரிக்கைகளை அவருடைய அலுவலகம் அனுப்பி வைத்திருந்தது. இதன் விளைவாக இதுவரை, சுமார் 1 கோடியே 15 லட்சம் டாலர் தொகை வசூலாகியிருக்கிறது.
புத்திசாலி விவசாயிகளும் சாமர்த்தியமுள்ள காகங்களும்
ஜப்பானில், தோட்டத்திலுள்ள பயிர்களை யார் அறுவடை செய்வதென்ற போராட்டம் தொடர்ந்துவருகிறது. விவசாயிகள் கண்டுபிடிக்கும் சூழ்ச்சி முறைகளையெல்லாம் தந்திரமுள்ள அந்தக் காகங்கள் விரைவில் புரிந்துகொண்டு, இவ்வாறு காகங்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் ஓயா போராட்டம் இருந்து வருகிறது. இருப்பினும் இப்பொழுது நாகானோ மாவட்டத்தில் உள்ள புத்திசாலி விவசாயிகள் இப்பறவைகளைப் பிடிப்பதற்கு அவற்றின் மோசமான உள்ளுணர்வைப் பயன்படுத்துகின்றனர் என்று ஆஸாஹி ஈவ்னிங் நியூஸ் சொல்லுகிறது. தங்களுடைய பயிர்களுக்கு அருகில், ஒன்பது சதுரமீட்டரும் மூன்று மீட்டர் உயரமுமுள்ள ஒரு கூண்டைக் கட்டிவைத்து வேறொரு பகுதியைச் சேர்ந்த காகங்களைப் பிடித்து அதனுள் அடைத்து வைத்தனர். தங்களுடைய எல்லையின் ஆக்கிரமிப்பாளர்கள் மீது கோபமடைந்த இந்தப் பேராசையுள்ள உள்ளூர் காகங்கள், அந்த “அன்னிய” காகங்களைத் தாக்குவதற்குப் பறந்துவந்து அந்தக் கூண்டிற்குள் புகுந்துகொண்டு, தாங்களாகவே பிடிபட்டன. இறுதியில் வெற்றியடைந்தாகிவிட்டதா? விவசாயிகளில் ஒருவர் சொல்லுகிறார்: “மெய்யாகவே இந்தக் கூண்டினால் ஏமாற்றப்பட்ட காகங்களில் பெரும்பாலானவை ஊர்சுற்றித் திரியும் காகங்களாக இருக்கின்றன. அந்த உள்ளூர் காகங்கள் எங்களையே முட்டாள்களாக்கிவிட்டு பறந்து போகுமளவுக்குச் சாமர்த்தியமுள்ளவையாய் இருக்கின்றன.” ஆகவே இந்தப் போராட்டம் தொடர்கிறது.
நூறுகோடிக்கும் அதிகமான புகைபிடிப்போர்
உலக சுகாதார நிறுவனத்திலிருந்து (WHO) கிடைத்திருக்கும் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, உலக முழுவதிலும் சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கை 110 கோடியாகும். தற்போதைய போக்குத் தொடருமானால், “இப்பொழுது உயிரோடிப்பவர்களில் சுமார் அரை பில்லியன் மக்கள் புகையிலையினால் கொல்லப்படுவார்கள்; மேலும் 250 மில்லியன் பேர் நடுத்தர வயதில் மரிப்பார்கள்,” என்று WHO எச்சரிக்கிறது. 1980-களிலிருந்து தொழில் முன்னேற்றமடைந்த நாடுகளில் சிகரெட் குடிப்பது ஓரளவு குறைந்திருக்கிறது. ஆனால் வளரும் நாடுகளில் அதிகரிப்பு இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக உலக நுகர்வு வயதுவந்த ஒருவருக்கு வருடத்திற்கு 1,650 சிகரெட்டுகளாகவே இருந்துவருகிறது. வஸ்துக்கள் துர்ப்பிரயோகத்தின் மீதான WHO திட்டத்தின் இயக்குநராகிய ஹான்ஸ் எம்ப்ளாட் இவ்வாறு கூறுகிறார்: “இதுவரை, வளரும் நாடுகளில் வெற்றிகரமாக புகையிலை வியாபாரம் செய்ததன் இறுதி விளைவானது, புகையிலையை அதிக அளவில் உபயோகிப்பது, வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்து வளரும் நாடுகளுக்கு மாறியுள்ளதாகவே இருந்து வருகிறது. புகையிலைக் கொள்ளைநோய் இன்னும் உலகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படவில்லை.”
தீங்கற்ற திக்குவாய்
தங்களுடைய சிறு பிள்ளைகளுக்கு இருக்கும் கெடுதிவிளைவிக்காத திக்கிப்பேசும் பழக்கத்தைப்பற்றி பெற்றோர் அளவுக்குமீறி கவலைப்படவேண்டாம் என்று, ஜெர்மனியின் டார்ம்ஸ்டேட்டில் நடந்த ஒரு மாநாட்டில், திக்குவாய் சிகிச்சைக்கான உட்தழுவியதுறை குழுவின் அங்கத்தினர்கள் எச்சரித்தனர். “நான்கிலிருந்து ஆறு வயதுவரை உள்ள ஒவ்வொரு ஐந்து பிள்ளைகளிலும் நான்கு பேருக்குச் சிறிய பேச்சுக்குறைகள் ஏற்படுகின்றன. அது திக்கிப் பேசுவதைப்போலவே கேட்டாலும் சாதாரணமாக அது தானாகவே சரியாகிவிடுகிறது,” என்று ஸுயெடோய்ச்ச ட்ஸைடுங் செய்தித்தாள் அறிவிக்கிறது. ஒரு சிறு பிள்ளை திக்கித்திக்கிப் பேசும்போது பெற்றோர் என்ன செய்யவேண்டும்? “திக்கிப்பேசும் பழக்கத்தைக் குழந்தை இயற்கையாகவே விட்டுவிடுவதைத் தடைசெய்யாதபடிக்கு,” அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது, “நன்றாகப் பேசச் சொல்லி அந்தக் குழந்தையை வற்புறுத்துவதைத் தவிர்க்கவேண்டும். அதிக காலம் அனுமதித்து அவனுடைய தன்னம்பிக்கையை வளர்த்துவிட வேண்டும்.”