காணாமல்போகும் பிள்ளைகள்—இத்துயரம் எவ்வளவு பரவலானது?
‘என் குழந்தையைக் காணவில்லையே!’
பெரும்பாலான பெற்றோருக்கு இந்த வார்த்தைகளைச் சொல்லவேண்டி இருப்பதைவிட கவலையைத் தூண்டுவிக்கும் பெரிய காரணங்கள் அநேகம் இருக்கமுடியாது. உலகம் முழுவதும் தங்களுடைய வீடுகளிலிருந்து காணாமல்போன பிள்ளைகளின் எண்ணிக்கை இதுதான் என்று துல்லியமாக தீர்மானிக்கமுடியாது. இருந்தபோதிலும், அநேக நாடுகளில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின் வாயிலாக, இந்தத் துயரம் எந்தளவு பரவலான ஒன்று என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
ஐக்கிய மாகாணங்களில், ஒவ்வொரு வருடமும் 5,00,000 முதல் 10,00,000-க்கும் அதிகமான பிள்ளைகள், எந்த வகையைச் சேர்ந்தவர்களாக பிரிக்கப்படுகின்றனரோ அதைப் பொருத்து, ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய வீடுகளிலிருந்து காணாமல்போனதாக பட்டியலிடப்படுகின்றனர். அவர்கள் கொஞ்ச காலத்திற்குக் காணாமல்போயிருக்கலாம் அல்லது நிரந்தரமாகக் காணாமல்போயிருக்கலாம். ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1,00,000 பிள்ளைகள் காணாமல்போவதாக இங்கிலாந்து அறிக்கை செய்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை இதைவிட இன்னும் அதிகமாக இருக்கிறது என்பதாக சிலர் கூறுகின்றனர். பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் காணாமல் போயிருப்பதாக முன்னாள் சோவியத் யூனியன் குறிப்பிட்டது. தென் ஆப்பிரிக்காவில் இந்த எண்ணிக்கை 10,000-க்கும் கூடுதலாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. லத்தீன் அமெரிக்காவில் லட்சக்கணக்கான பிள்ளைகள் இந்தத் துயரத்தை எதிர்ப்படுகின்றனர்.
இத்தாலிய உள்துறை அமைச்சகப் பிரதிநிதி ஒருவர் எல் இண்டிப்பென்டென்ட்டெவில் பின்வருமாறு எழுதுகையில் அங்கு இந்தப் பிரச்சினை எந்தளவு பரவலாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுக் காண்பித்தார்: “அவர்கள் சாதாரண நாட்களில் வீட்டிலிருந்து புறப்படுகிறதைப்போலத்தான் ஒருநாள் வீட்டைவிட்டுப் புறப்பட்டுப் போகின்றனர். பள்ளிக்கூடத்திற்கோ விளையாடவோ போகின்றனர், ஆனால் திரும்ப வருவதே கிடையாது. அவர்கள் மறைந்துபோகின்றனர், காணாமலேபோய்விடுகின்றனர். குடும்பத்தினரோ பதறியடித்துக்கொண்டு அவர்களைத் தேடியலைகின்றனர். ஆனால் தெளிவான தடயங்களோ போதுமான துப்புகளோ ஒன்றும் கிடைப்பதில்லை, கண்ணால் பார்த்த சாட்சிகளும் வெகு சிலராக—ஆனால் நிச்சயமில்லாதவர்களாக—இருக்கின்றனர்.”
இந்தப் பிரச்சினை எவ்வளவு பரவலாக இருக்கிறது என்பதன்பேரில் ஐக்கிய மாகாணங்களில் சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியொன்று, “காணாமல்போகும் பிள்ளைகள்” என்ற தலைப்பு உண்மையில் பல வகைப் பிள்ளைகளை உட்படுத்துகிறது என்பதாக வெளிப்படுத்திற்று. அந்நியரால் கடத்திக்கொண்டு போகப்படும் பிள்ளைகள் அதில் ஒரு வகையினராக இருக்கின்றனர். பிள்ளையை வளர்க்கும் உரிமை வழக்கில் ஏற்படுவதைப்போல, பெற்றோர் ஒருவரால் கடத்திக்கொண்டு போகப்படும் பிள்ளைகள் மற்றொரு வகையினராக இருக்கின்றனர். பெற்றோருக்கோ பாதுகாப்பாளர்களுக்கோ வேண்டாத பிள்ளைகளும் இருக்கின்றனர். வீட்டைவிட்டு ஓடிப்போகிற பிள்ளைகள் மற்றொரு பெரிய வகையைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். மேலும் ஒருசில மணிநேரங்களுக்கோ சில நாட்களுக்கோ குடும்பத்தினரைவிட்டு வழிதவறிப்போன பிள்ளைகளும் அல்லது மற்றபடி குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்படும் பிள்ளைகளும் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கப்பால் வீட்டுக்கு வெளியே தங்கியிருந்தவர்களாகவோ அல்லது அவர்களுடைய உள்நோக்குகளைப் பெற்றோரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர்களாகவோ இருக்கின்றனர். ஒரேயடியாகக் காணாமல்போகிறவர்கள் வெகு சிலரே.
எனினும், மிகச் சிக்கலான வகைகளில் காணாமல்போகும் பிள்ளைகளுக்கு என்ன நேரிடுகிறது? இந்தத் துயரம் ஏன்தான் ஏற்படுகிறது? விழித்தெழு!-வின் இந்த வெளியீடு இத்துயரத்தின் பல்வேறு அம்சங்களையும் துருவி ஆராய்ந்து, இது எப்பொழுது முடிவடையும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கிறது.