பிள்ளைகள் அந்நியர்களால் கடத்தப்படும்போது
“தயவுசெய்து அவளைக் கண்டுபிடிக்க உதவுங்களேன். தயவுசெய்து உதவிசெய்யேன், சாரா, ப்ளீஸ்!”
வேதனையால் துடிதுடிக்கும் பெற்றோர் இருவரின் தாங்கமுடியாத அங்கலாய்ப்பு இது. அவர்களுடைய 12 வயது மகள் சாரா ஆன் உட்-ஐ திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் ஐக்கிய மாகாணங்கள் முழுவதும் இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. மூன்று வாரங்களுக்குமுன் கிராமத்திலுள்ள தன் வீட்டுக்குச் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தபோது அவள் கடத்திச் செல்லப்பட்டாள்.
அந்தச் சிறுமி காணாமல்போனதற்கான தடயங்களுக்காக காடுகளிலும், வயல்வெளிகளிலும், அருகில் இருக்கும் ஏரிகளிலும் முறைப்படி வலைவீசித் தேடப்பட்டது. கிட்டத்தட்ட அதே சமயத்தில் அடுத்த மாகாணத்தில் உள்ள டினா பீரைனன் என்ற சஞ்சலப்பட்ட மற்றொரு பெற்றோரும், காணாமல்போன தன்னுடைய மகளைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டிக்கொள்ள தொலைக்காட்சியில் தோன்றினார். காடுகளினூடே செல்லும் பாதையில் ஆசைகாட்டி கொண்டுபோகப்பட்ட பத்து வயது ஹால்லி ஒரு மணிநேரத்துக்கும் குறைவான நேரத்தில் காணாமல்போனாள். பின்னர் ஒரு வயலில் அவளுடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
காணாமல்போகும் பிள்ளைகளின் பெற்றோருக்கு வாழ்க்கை கடும்துயர் நிறைந்த ஒரு சோதனையாக இருக்கிறது. தங்களுடைய பிள்ளை உயிரோடுதான் இருக்கிறதா, ஒருவேளை சரீரப்பிரகாரமாக கொடுமைப்படுத்தப்பட்டதோ, அல்லது பாலினத் துர்ப்பிரயோகம் செய்யப்பட்டதோ, அல்லது இறந்துபோய் விட்டதோ என்ற அநிச்சயத்தால் அவர்கள் தினமும் வாதிக்கப்படுகின்றனர். சிறுமி ஆஷ்லியின் விஷயத்திலும் இப்படித்தான் இருந்தது. தன்னுடைய சகோதரன் கால்பந்து போட்டியில் விளையாடுவதைப் பார்க்க ஆஷ்லி தன்னுடைய குடும்பத்தாரோடு சென்றாள். விளையாட்டைப் பார்ப்பது சலிப்புத்தட்டியபோது, அவள் விளையாடுவதற்காக மைதானத்துக்கு நடந்துபோனாள்—பின்பு காணாமல்போனாள். பிறகு, ஆஷ்லியின் உடல் அருகிலிருந்த ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டது. அவள் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டிருந்தாள்.
பயங்கரமான கொடுங்கனவு
ஐக்கிய மாகாணங்களில் ஒவ்வொரு வருடமும், 200 முதல் 300 குடும்பங்கள், அவற்றின் பிள்ளை கடத்தப்பட்டு, ஒருவேளை இனி ஒருபோதும் அதை உயிரோடு பார்க்கவே முடியாமல் போவதைப் பற்றிய பயங்கரமான கொடுங்கனவை அனுபவிக்கும். நடைபெறும் மற்ற வன்முறையான குற்றச்செயல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த எண்ணிக்கை மிகச் சிறியதாக தோன்றலாம். ஆனால் சமுதாயங்கள் முழுவதற்கும் பரவும் திகில் ஆயிரக்கணக்கானோரைப் பாதிக்கிறது. அதிர்ச்சியடைந்த அவர்கள், ‘அத்தகைய துயரம் ஏன் சம்பவிக்கவேண்டும்? காணாமல்போகும் அடுத்தக் குழந்தை என்னுடையதாக இருக்குமா?’ என்று யோசிக்கின்றனர்.
ஐக்கிய மாகாணங்களில், கடத்திச் செல்லப்பட்டதாக அறிக்கை செய்யப்பட்ட பிள்ளைகளின் வருடாந்தர எண்ணிக்கை 3,200 முதல் 4,600 ஆகும். இவர்களில் இரண்டில் மூன்று பாகத்தினரோ அதற்குக் கூடுதலானவர்களோ பாலினத் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர். காணாமல்போன மற்றும் சுயநலத்திற்காக துர்ப்பிரயோகிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான தேசிய மையத்தின் தலைவர் அர்னஸ்ட் இ. ஏல்லன் இவ்வாறு குறிப்பிட்டார்: “கடத்தலுக்கான முக்கிய காரணம் பாலின சம்பந்தப்பட்டதாகவும், அதற்கடுத்ததாக கொலைசெய்வதற்கான நோக்கமாகவும் இருக்கிறது.” மேலும், நீதித் துறை சொல்லுகிற பிரகாரம், ஒவ்வொரு வருடமும் மற்ற வகையான 1,10,000 கடத்தல் முயற்சிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை வாகனத்தில் செல்பவர்களால், பொதுவாக ஆண்களால் நடத்தப்படுகின்றன. இவர்கள் ஒரு பிள்ளைக்கு ஆசைகாட்டி தங்களுடைய காருக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றனர். பிள்ளைகளுக்கு எதிராக செய்யப்படும் வன்முறையின் அலை மற்ற தேசங்களிலும் பாய்கிறது.
சமுதாயத்தின் மீதும் குற்றம் இருக்கிறதா?
பிள்ளைகளைக் கொல்வதுபற்றி சொல்லும்போது, அது ஒன்றும் “திடீரென நடக்கும் ஒரு சம்பவமில்லை,” என்று ஒரு ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர் காண்பிக்கிறார். அப்பாவிகளின் கொலை—பிள்ளையைக் கொல்லுபவர்களும் அவர்களுடைய பலியாட்களும் என்ற தனது ஆங்கிலப் புத்தகத்தில், பால் வில்சன் இவ்வாறு கூறுகிறார்: “கொல்லுகிறவர்களும் கொல்லப்படுகிறவர்களும் நயவஞ்சகமான ஒரு சுழற்சியில் இழுப்புண்டு மாட்டிக்கொள்கின்றனர். இச்சுழற்சியை உருவாக்கியிருப்பது சமுதாயம்தானே.”
பிள்ளைகளைச் சுயநலத்திற்காக துர்ப்பிரயோகப்படுத்துவதும், கொல்லுவதும் பயங்கரமான செயல்கள் என்பதாக பெரும்பாலானோர் காண்கின்றனர். ஆகவே இந்தத் துயரத்திற்கு சமுதாயம் காரணமாக இருக்கலாம், இல்லையென்றால் அதற்கு உதவியாவது அளிக்கலாம் என்று யோசிப்பது வினோதமாகத் தோன்றலாம். எனினும், தொழில்துறையில் முன்னேற்றமடைந்த சமுதாயங்களில், ஏன், அவ்வளவாக முன்னேற்றம் அடையாத சமுதாயங்களிலும்கூட, பாலினத்தையும் வன்முறையையும் தலையில் தூக்கிவைத்துப் போற்றும் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், புத்தகங்கள், பத்திரிகைகள் போன்றவை நிரம்பி வழிகின்றன.
பிள்ளைகளை, பெரியவர்களையும்கூட பிள்ளைகளைப்போல் தோன்றும்படி உடைகளை உடுத்திவிட்டு, ஆபாசமாகக் காண்பிக்கிற அப்பட்டமான ஆபாச திரைப்படங்கள் இப்போது அதிகமதிகமாக இருக்கின்றன. இவை பிள்ளைகளை உட்படுத்தும் பாலுறவையும் வன்முறையையும் பச்சைப்பச்சையாகக் காண்பிக்கின்றன. ஒரு சிறுபிள்ளையின் மரணம், கொஞ்சம் கொஞ்சமாக சித்தரவதை, கைகால்களை வெட்ட பழகிக்கொள்வோருக்கு ஆலோசனைகள் போன்ற ஆங்கில திரைப்படப் பெயர்களும் இருக்கின்றன என்று வில்
சன் தனது புத்தகத்தில் மேலும் குறிப்பிடுகிறார். துன்பப்படுத்தி அதனால் மகிழ்ச்சியைக் காணும் வன்முறை மற்றும் ஆபாசம் போன்றவற்றை எவ்வளவு அதிகமானோர் காண்கின்றனர்? அது கோடிக்கணக்கான-டாலர் வியாபாரமாக இருக்கிறது!
சுயநலத்திற்காக பிள்ளைகளைத் துர்ப்பிரயோகிப்பவர்களின் வாழ்க்கையில் அப்பட்டமான வன்முறையும் ஆபாசமும் பெரும் பாதிப்பைக் கொண்டிருக்கின்றன. சிறு பையன்கள் ஐந்துபேரைக் கொலை செய்ததற்காக தண்டனை விதிக்கப்பட்ட பாலின குற்றவாளி மனம்திறந்து சொன்னதாவது: “சிறுவர் ஓரினப் புணர்ச்சிக்காரனான நான் கொலைக் குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய வீழ்ச்சிக்கு ஆபாசம்தான் ஒரு தீர்மானிக்கும் காரணியாக இருந்தது.” குழந்தை ஆபாசம் கொண்டிருக்கும் பாதிப்பைப்பற்றி ஆஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பெரிட் ஆஸ் விவரிக்கிறார்: “1960-களின் முடிவில் நாங்கள் ஒரு பெரிய தப்பைச் செய்துவிட்டோம். பாலின குற்றவாளிகள் தங்கள் உணர்ச்சிகளைத் தீர்த்துக்கொள்ள ஆபாசம் ஒரு வழியாக இருந்து, பாலினக் குற்றச்செயல்களை மாற்றீடு செய்யும் என்றெண்ணி ஆபாசத்தின்மீது விதித்திருந்த தடைகளையெல்லாம் நீக்கினோம். நாங்கள் செய்தது தப்பு என்று இப்போது எங்களுக்குப் புரிகிறது: அத்தகையை ஆபாசம் பாலின குற்றச்செயல்களைச் சட்டப்படி செல்லத்தக்கதாக்குகிறது. குற்றம் செய்பவர்களை ‘நான் இதைப் பார்க்கலாமென்றால், அதைச் செய்வதும் சரியானதாகத்தான் இருக்கவேண்டும்’ ” என்று நினைக்கவைக்கிறது.
வயதுவந்த ஒருவன் ஆபாசத்துக்கு அடிமையாகும்போது, அவனுடைய காமவுணர்ச்சிக்கான ஆசை தீவிரமடைகிறது. இதன் விளைவாக, சிலர் கற்பழிப்பு, கொலை போன்றவற்றை உள்ளிட்ட, இயற்கைக்கு முரண்பட்ட தங்களுடைய உபயோகத்திற்காக பிள்ளைகளை அடைவதற்குப் பலாத்காரத்தையோ வன்முறையையோ பயன்படுத்த மனமுள்ளவர்களாக இருக்கின்றனர்.
பிள்ளையைக் கடத்திக்கொண்டு போவதற்கு மற்ற காரணங்களும் இருக்கின்றன. மோசமான பொருளாதார சூழ்நிலைகளின் காரணமாக இது சில நாடுகளில் அதிகரித்திருக்கிறது. பணக்காரக் குடும்பங்களால் கொடுக்கப்பட முடிகிற பெரிய பிணைத்தொகைக்கு ஆசைப்பட்டு, பிள்ளைபிடிப்பவர்கள் பிள்ளைகளைக் குறிவைக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் அநேக பிள்ளைகள் திருடப்பட்டு, பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தத்தெடுப்புக் கும்பல்களிடம் விற்கப்படுகின்றனர்.
காணாமல்போகும் பிள்ளைகளின் பெரும்பகுதியினர் எப்படிப்பட்டவர்களாக இருக்கின்றனர்? அவர்களுக்கு என்ன ஏற்படுகிறது? இந்த விஷயத்தை அடுத்த இரண்டு கட்டுரைகளும் அலசி ஆராயும்.
[பக்கம் 6-ன் பெட்டி]
இலட்சக்கணக்கான குழந்தை விபசாரர்கள்
ஐக்கிய நாடுகளின்படி, பெரும்பாலும் வளரும் நாடுகளில், சுமார் ஒரு கோடி குழந்தைகள் விபசாரத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இவர்களில் அநேகர் கடத்தப்பட்டவர்கள். இந்தக் கொடிய வியாபாரம், ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்போடே சேர்ந்து அதிகரித்திருக்கிறது. சில பகுதிகளில், முக்கியமாக பணக்கார நாடுகளிலிருந்து வரக்கூடிய, லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளில் மூன்றிலிரண்டு பாகத்தினர் “பாலின சுற்றுலாப் பயணிகள்” ஆவர். ஆனால் கணக்குக் கொடுக்கவேண்டிய ஒரு நாள் வருகிறது. ஏனென்றால் மனிதனுடைய குற்றச்செயல்களெல்லாம், யெகோவா தேவனுடைய, ‘கண்களுக்குமுன்பாக வெளியரங்கமாயிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.’—எபிரெயர் 4:13.
[பக்கம் 5-ன் படம்]
ஒரு பிள்ளை கடத்தப்படும்போது அது ஒரு பயங்கரமான கொடுங்கனவாக இருக்கிறது