தேனீக்கு—எதிராகக் கம்ப்யூட்டர்
சாதாரண தேனீ எந்தளவு புத்திசாலித்தனமானது? தெளிவாகவே, இன்றைய அதிசக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்களைவிட மிக மிகப் புத்திசாலித்தனமானது. மேலும் அவை சிறியளவு திட்டமைப்பின் அதிசயமாகும்.
உலகிலுள்ள மிக மிகச் சக்திவாய்ந்த கம்ப்யூட்டர்களில் ஒன்று, அற்புதகரமாக, 16 கிகா ஃபிளாப்புகள் செயற்பாட்டு வேகத்தை அடையக்கூடும். பாமர மொழியில் சொன்னால், அத்தகைய கம்ப்யூட்டரானது, 1,600 கோடி சாதாரண கணக்கைப் போட முடியும்; அதாவது, நொடிக்கு இரண்டு எண்களைக் கூட்டுவது போன்றவையாகும். மாறாக, தேனீயின் மூளையில் நடக்கும் மின்சார, ரசாயன நிகழ்ச்சிகள் யாவற்றையும் தோராயமாகக் கணக்கிடுவது, தாழ்நிலையிலுள்ள தேனீ நொடிக்குப் பத்து லட்சம் கோடிக்குச் சமமான செயற்பாடுகளைச் செய்வதாகக் காட்டப்படுகிறது. அற்புதமே!
கம்ப்யூட்டரைவிட மிக மிகக் குறைந்த சக்தியைப் பெற்று, அவ்வெல்லாவற்றையும் செய்கிறது தேனீ. பைட் பத்திரிகையின்படி, “தேனீயின் மூளை 10 மைக்ரோவாட்டுக்கும் குறைவாகச் சக்தியிழக்கிறது. . . . உற்பத்தி செய்யப்பட்டுள்ள இன்றைய மிகத் திறம்பட்ட கம்ப்யூட்டர்களோடு, மாக்னிட்யூட் அளவில் சுமார் ஏழு ஆர்டர்கள் (seven orders of magnitude) மேம்பட்டதாக இருக்கிறது.” எனவே, ஒரு கோடிக்கும் மேற்பட்ட தேனீயின் மூளைகள், தனியொரு 100 வாட் பல்புக்குத் தேவையான மின்சாரத்தில் இயங்க முடியும். இன்றைய மிக மிகத் திறம்பட்ட கம்ப்யூட்டரானது, அதற்குச் சம எண்ணிக்கையான இயக்க வேலைகளைச் செய்ய கோடிக்கணக்கான தடவைக்கும் மேலான சக்தியை உபயோகிக்கிறது.
எனினும், தேனீக்கள் கம்ப்யூட்டர்களைவிட அதிகத்தைச் செய்கின்றன. அவற்றால் வண்ணங்களை வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியும், முகர முடியும், பறக்க முடியும், நடக்க முடியும் மேலும் தங்கள் சமநிலையை இழக்காமல் வைத்துக்கொள்ள முடியும். பூவிலுள்ள மதுத்தடத்தின் மூலங்களைக் கண்டுபிடிக்க நீண்ட தூர கடல்யாத்திரைகள் மேற்கொண்டு, அதற்குப் பிறகு கூட்டுக்குத் திரும்பி உடனிருக்கும் தேனீக்களுக்குச் சரியான மார்க்கங்களைக் கூற முடியும். மேலும், அவை மிகத் திறம்பட்ட ரசவாதிகளாகும். தேனைத் தயாரிக்க விசேஷ செரிமானப் பொருட்களைப் பூவிலுள்ள மதுவோடு சேர்க்கின்றன. கட்டடத்தில் பயன்படுத்தவும் தங்கள் கூடுகளைப் பழுதுபார்க்கவும் அவை தேன்மெழுகை உண்டுபண்ணுகின்றன. ராயல் ஜெல்லி, மலர் துகள் போன்ற விசேஷ உணவுப்பொருட்களைத் தங்கள் சிறு தேனீக்களுக்குத் தயாரித்தளிக்கின்றன. அத்துமீறி நுழைபவர்களை அறிந்து விரட்டுவதன் மூலம் தங்கள் கூட்டைப் பாதுகாக்கின்றன.
வீட்டுப் பராமரிப்பாளர்களாக, ஒழுங்காகக் குப்பைகளையும் இதர கூளங்களையும் தங்கள் கூட்டிலிருந்து அகற்றுகின்றன. குளிர்காலத்தில் சூட்டிற்காகக் கும்பலாகக் கூடுவதன் மூலமாகவோ கோடைக்காலத்தில் துப்புரவான காற்றை வீசி தண்ணீர் தெளிப்பதன் மூலமாகவோ கூட்டில் சீதோஷ்ணநிலையைக் கட்டுப்படுத்துகின்றன. அவற்றின் கூட்டில் நெருக்கம் ஏற்பட்டால், சில தேனீக்கள் வெளியேற வேண்டும் என்பதை அறியுமளவுக்கு அவை புத்திசாலித்தனமாக நடந்துகொள்கின்றன. ஆகவே, இம்மட்டுமாக இருந்துவந்த தேன்கூட்டிற்கு ஒரு புதிய ராணித் தேனீயைத் தெரிந்தெடுக்கின்றன; பழைய ராணித் தேனீயும் வேலைசெய்ய மற்றநேக தேனீக்களும் ஒரு புதிய கூட்டை உருவாக்க கும்பலாகச் சேர்ந்து போகின்றன. என்றாலும், முதலில், புதிய இடங்களைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை அனுப்பிவைக்கின்றன. இவை சொல்லப்போனால், திரும்பிவந்து, தகவல்களைப் பகிர்ந்துகொள்கையில், கூடு இருக்கும் இடத்தை அறிந்த தேனீக்கள் அந்தத் தேனீ கும்பலை அதன் புது வீட்டிற்கு போவதற்கு வழிநடத்தி செல்கின்றன.
தாழ்நிலையிலுள்ள இந்தத் தேனீக்கள் எந்த வெளி உதவியையோ வழிநடத்துதலையோ பெறாமல் இதெல்லாவற்றையும் செய்கின்றன. அவை சுயேச்சையாகச் செயல்படுகின்றன. சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கோ, கட்டளையாளர்களும் பொறியியலாளர்களும் தொழில்நுட்ப பணியாளர்களும் அடங்கிய குழுக்கள் தேவைப்படுகின்றன. ஈடிணையேயில்லை! நிச்சயமாகவே, தேனீக்கள் சிறிய திட்டமைப்பின் அதிசயமாகும்.
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
L. Fritz/H. Armstrong Roberts