நீங்கள் பத்திரமாக ஓட்டுபவரா?
ஒரு வாகனம் ஓட்டும்போது உங்களுக்கு இருக்கும் மனநிலை வாகனம் ஓட்டுவதற்கான உங்களுடைய திறமையைப் பெரிதும் பாதிக்கிறது. பிரிட்டனில் 17-க்கும் 20-க்கும் இடைப்பட்ட வயது ஆண்களில் ஒவ்வொரு வருடமும் 22 சதவீதத்தினர் குறைந்தது ஒரு சாலை விபத்திலாவது உட்படுகின்றனர் என்று பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் அசோஸியேஷன் நடத்திய ஒரு ஆராய்ச்சி வெளிப்படுத்தியது.
அவர்களுடைய ஆபத்தான ஓட்டும் பழக்கங்களுக்கான முக்கிய காரணிகள் எவை? மதுபானங்கள், குறிப்பிடத்தக்க மனநிலை மாற்றங்கள், உரத்த இசை போன்றவற்றோடுகூட, “அபாயகரமாக ஓட்டுவதற்கு தங்களுடைய சகாக்களாலும் அநேகர் தூண்டப்படுகின்றனர்” என்று அந்த ஆட்டோமொபைல் அசோஸியேஷனின் துணைப் பொது இயக்குநர் கெனத் ஃபேர்க்ளாத் குறிப்பிடுகிறார். இதன் விளைவாக, பயிற்சியளிக்கையில் மனநிலைகளுக்கு அதிக கவனம் செலுத்தி ஓட்டும் முறைகளுக்குக் குறைந்த கவனம் செலுத்தும்படி ஆட்டோமொபைல் அசோஸியேஷன் சிபாரிசு செய்கிறது.
உதாரணமாக, உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘அசட்டை மனப்பான்மையோடு துணிந்திறங்கி அதன் மூலம் எனது காரில் இருக்கும் பயணிகளைக் கவர முயற்சிக்கிறேனா? கார் ஓட்டும்போது எனக்கிருக்கும் மனநிலைதான் என் நடத்தையைத் தீர்மானிக்கிறதா? சாலையில் ஓட்டிவரும் மற்ற ஓட்டுநர்களை வெல்லப்படவேண்டிய தடைகளாகத்தான் நான் கருதுகிறேனா?’ இத்தகைய கேள்விகளுக்கான விடைகள் நீங்கள் என்ன வகையான டிரைவர் என்பதை வெளிக்காட்டும்.
நீங்கள் ஆணோ பெண்ணோ, சிறுவரோ முதியவரோ, ஓட்டும்போது சிநேகப்பான்மையான மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள். “மற்றவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படியே மற்றவர்களையும் நீங்கள் நடத்துங்கள்.” (மத்தேயு 7:12, ஃபிலிப்ஸ்) அவ்வாறு செய்வதானது நீங்கள் பத்திரமாக ஓட்டுவதற்கு உதவிசெய்யும்.