சாலை சீற்றம்—நீங்கள் எப்படி சமாளிக்கலாம்?
பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்
கோபப்படுதலும் அதன் விளைவாக ஏற்படும் வன்முறையுமே உலக செய்தி அறிக்கைகளில் பேரளவு இடம்பெறுகின்றன. தள்ளு வண்டி சீற்றம் (சூப்பர் மார்க்கெட்டில் தள்ளு வண்டிகளை அல்லது உணவு வண்டிகளை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் ஒருவர் மீது ஒருவர் கோபத்தை வெளிக்காட்டுவது) தொலைபேசி சீற்றம் (நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர், வேறொருவரோடு பேசுவதற்காக உங்களை காக்க வைக்கும்படி செய்ய உதவும் தொழில்நுட்பத்தால் தூண்டப்படுவது) போன்றவற்றின் மத்தியில் இப்போது பிரிட்டனிலுள்ள மக்களின் கவனத்தைக் கவர்ந்திருப்பது சாலை சீற்றம் ஆகும்.
சாலை சீற்றம் அவ்வளவு பரவலாக இருப்பதால் அது பிரிட்டனில், “கொள்ளை நோயைப்போன்ற அளவுகளை எட்டி, கடந்த வருடத்தில் ஏறக்குறைய பாதி ஓட்டுநர்கள் ஏதாவது ஒருவித தாக்குதலை அல்லது துர்ப்பிரயோகத்தை அனுபவிப்பதில்” விளைவடைந்திருக்கிறது என்று ஓட்டும் பழக்கங்கள் பற்றிய 1996-ன் அறிக்கை உரிமைபாராட்டியது! வாகன கூட்டுறவு சங்கத்தின் சுற்றாய்வு ஒன்று, “பத்து வாகன ஓட்டுநர்களில் ஒன்பது பேர் சாலை சீற்றத்தால் பாதிக்கப்பட்டதாக உரிமை பாராட்டினார்கள்” என்று அறிவிப்பதன் மூலம் சாலை சீற்றம் மிகப் பரவலாக இருக்கிறது என கூறியது. அக்கறைக்குரிய விதமாக, “பத்தில் [ஓட்டுநர்களில்] ஆறு பேர் மட்டுமே ஓட்டும்போது தாங்கள் கோபமடைந்ததாக ஒப்புக்கொண்டார்கள்” என்று அதே சுற்றாய்வு கூறியது.
சாலை சீற்றத்தை தூண்டுவது எது? நீங்கள் பாதிக்கப்பட்டவராக இருந்தால், உங்களை காப்பாற்றிக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்? மற்றொருவர் ஓட்டும் விதம் உங்களை கோபமடையச் செய்தால், நீங்கள் என்ன செய்யவேண்டும்? உண்மையில், சாலை சீற்றம் உலகமுழுவதிலும் பரவிக்கொண்டிருப்பதனால், நீங்கள் எப்படி சமாளிக்கலாம்?
காரணமும் விளைவும்
ஓட்டுநர்கள் கோபப்படுவது நூதனமான விஷயமல்ல. ஆங்கில கவிஞரான லார்ட் பைரன் முற்காலத்தில் சட்டத்தை மீறியவர்களுள் ஒருவராவார். சாலையில் தனக்கு ஏற்பட்ட ஒரு சச்சரவைப் பற்றி அவர் 1817-ல் எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார். அறிவிக்கப்பட்டபடி, சாலையில் வந்துகொண்டிருந்த மற்றொருவர் பைரனின் குதிரையிடம் “மரியாதையில்லாமல்” நடந்துகொண்டார். அதன் விளைவாக, கவிஞர் அந்த ஆளின் செவிட்டில் அறைந்தார்.
பெரும்பாலான நாடுகளில், போக்குவரத்து அதிகரிப்பதால் ஓட்டுநர்களின் எரிச்சலும் அதிகரிக்கிறது. படுமோசமான வாகன விபத்துகளுக்கு காரணம் “சாலை சீற்றம்” என்று 1980-களில் ஐ.மா. செய்தித்தாள்கள் விவரித்தன. சாலை சீற்றம் சட்டப்படி குற்றமில்லாதபோதிலும், மற்ற ஓட்டுநர்களின் ஓட்டும் விதத்தால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுடைய அநேக வன்முறையான காரியங்களுக்கு அடிப்படையாக இருக்கும் உணர்ச்சிகளை அது நன்றாகவே சித்தரிக்கிறது.
நான்-முந்தி என்ற மனப்பான்மை நம்முடைய சாலைகளில் எங்கும் காணப்படுகிறது. “நியாயப்படி பார்த்தால் அநேகமாக தாங்கள்தான் மற்றவர்களுடைய சமூக விரோத செயல்களால் எப்போதுமே பாதிக்கப்படுவதாக, வன்முறையை அல்லது சண்டையை தூண்டுபவர்கள் நம்புகின்றனர்” என்று ஓட்டும் பழக்கங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் முடிவு செய்கின்றனர். என லண்டனின் த டைம்ஸ் அறிவிக்கிறது. ஒரு ஓட்டுநர் தன்னுடைய வாகனத்தை எவ்வளவுதான் காட்டுத்தனமாக ஓட்டினாலும், தான் செய்வது சரி என்றே உணருகிறார். ஆனால் மற்றொரு ஓட்டுநர் சாலை விதிகளைப் பின்பற்றுவதில் ஒரு சிறிய தவறு செய்துவிட்டாலும், சாலை சீற்றம் பற்றி எரிகிறது.
இளைஞர் மத்தியில் மிகவும் பரவலாக காணப்படும் போதைப்பொருள் துர்ப்பிரயோகமும்கூட சாலை சீற்றத்திற்கு வழிநடத்துகிறது. ஒரு மருத்துவ ஆலோசகர் கூறுகிறபடி கொக்கையின் துர்ப்பிரயோகம், “குடித்துவிட்டு ஓட்டுவதற்கு சமமாகும்.” போதைப்பொருட்கள் உட்கொள்ளும் ஓட்டுநர்கள், அடிக்கடி தங்கள் திறமைகளைப் பற்றிய மிகைப்பட்ட கருத்தை உடையவர்களாக இருக்கின்றனர். இதன் காரணமாக, சிலர் தங்களுடைய வாகனங்களை ஜெட் வேகத்தில் ஓட்டுகின்றனர். அவர்களுடைய நியாயத்தன்மை பாதிக்கப்படுவதால், மற்றவர்கள் தாறுமாறாக ஓட்டுகின்றனர்.
ஒரு ஓட்டுநர்மீதுள்ள அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்பையும்கூட சிந்தித்துப் பாருங்கள். மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் காரி கூப்பர், 1990-களில் நிலவும் அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களும் நிச்சயமற்ற தன்மையுமே பெரும்பாலான சாலை சீற்றத்திற்கான காரணங்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார். “ஓட்டுநர்கள் அதிகமதிகமான அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்; வன்முறையான தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது” என்று ராயல் ஆட்டோமோபைல் கிளப்பின் சார்புப் பேச்சாளர் கூறுகிறார். வேலைக்கு போவதிலும் வருவதிலும் அதிக மணிநேரங்களை இப்போது ஓட்டுவதில் செலவழிக்கும் படுபிஸியாய் உள்ள மக்கள் தொடர்பு அலுவலர் ஒருவர், தான் முன்பிருந்ததைப்போல அவ்வளவு சகிப்புத்தன்மை உள்ளவளாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். “முன்பு எனக்கு தொந்தரவாக இருந்திராத மிகச் சிறிய விஷயங்களுக்குக்கூட இப்போது நான் சீக்கிரத்தில் கோபப்பட்டு பேசி, எரிச்சலடைந்து விடுகிறேன்” என்று அவர் கூறியதாக த ஸண்டே டைம்ஸ் அறிவிக்கிறது. ஒருவேளை நீங்களும் அவ்வாறே உணரலாம். அப்படியென்றால், நீங்கள் என்ன செய்யலாம்?
சாலை சீற்றத்தை தூண்டுவதைத் தவிருங்கள்
மற்ற ஓட்டுநர்கள் பரிபூரணரல்ல என்பதை உணருங்கள். அவ்வப்போது அவர்கள் சட்டங்களை மீறுவார்கள். நீங்கள் ஓட்டும்போது இந்த உண்மையை கவனத்தில் வைத்தவர்களாக ஓட்டுங்கள். முன்னதாகவே சிந்தியுங்கள். உதாரணமாக, பல பாதைகளுள்ள நெடுஞ்சாலையில், மெதுவாக செல்ல வேண்டிய பாதையில் அல்லது இடதுபுற பாதையில் நீங்கள் ஓட்டிக்கொண்டு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் பிறகு ஒரு சாலை சந்திப்பை நீங்கள் எதிர்ப்படுகிறீர்கள்; அங்கே ஒரு சிறிய குறுக்கு ரோடு, போக்குவரத்தை ஒழுங்கமைத்து நெடுஞ்சாலையில் மெதுவாக வந்து சேருவதற்கு உதவுகிறது. முன்னால் பார்க்கும்போது, அந்த ரோடு வழியாக ஒரு கார் நெடுஞ்சாலையை நோக்கி வருவதை கவனிக்கிறீர்கள். நீங்கள்தான் அங்கே முதலாவது வந்தது, ஆகவே உங்கள் பாதையில் செல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் யோசிப்பீர்களா? வந்து சேரும் போக்குவரத்திற்கு நீங்கள் ஏன் இடம் கொடுக்க வேண்டும்? அந்த ஓட்டுநர் நெடுஞ்சாலைக்கு வர உதவியாக, அடுத்த பாதையில் இடமிருந்தால், நீங்கள் ஏன் விலகிச் செல்லவேண்டும்? ஆனால் இதை சிந்தித்துப் பாருங்கள்: உங்கள் பாதையில் நீங்கள் தொடர்ந்து வேகத்தை குறைக்காமல் சென்றால் என்ன நேரிடும்? நெடுஞ்சாலையை வந்து சேரும் ஓட்டுநரும் ஒருவேளை அவ்வாறே சிந்திக்கலாம். நிச்சயமாகவே யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும்; அல்லது பேராபத்து ஏற்படலாம்.
ஞானமாய், சாலை சீற்றம் தூண்டப்படுவதை தவிர்க்க விரும்பும் ஓட்டுநர் முன்னால் பார்த்தபடி கவனத்துடன் ஓட்டுகிறார். சந்தர்ப்பம் இருக்கும்போது அவர் வழிவிடுகிறார், மேலும் அடுத்த ஓட்டுநர் தனக்கு காண்பிக்கப்பட்ட மரியாதையை அங்கீகரிக்க தவறினாலும் இவர் கோபப்படாமல் இருக்கிறார். ஒவ்வொரு மூன்று ஓட்டுநர்களில் ஒருவர் ஆபத்தான மனப்பான்மை சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவராக இருக்கிறார் என்று பிரிட்டனைச் சேர்ந்த முன்னேறிய ஓட்டுநர்கள் கழகத்தின் பிரதிநிதி கணிக்கிறார். இந்த ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை திறமையாக ஓட்ட முடிந்தபோதிலும், அவர்கள் நல்ல மரியாதை இல்லாதவர்களாக இருக்கின்றனர். அவர்கள் “ஓட்டுவதில் நல்ல திறமையுள்ளவர்கள், ஆனால் நல்ல மரியாதை தெரியாதவர்கள்” என்று கூறுகிறார்.
பெரும்பாலான ஓட்டுநர்கள், சாலையில் செல்லும் மற்றவர்களை சில சமயங்களில் அசட்டை செய்துவிடுகின்றனர். ஆனால் நீங்களும் அவ்வாறே நடந்துகொள்வதை இது நியாயப்படுத்தாது. சாத்தியமான விளைவுகளை சிந்தித்துப் பாருங்கள். உங்கள் பங்கில் பிடிவாதமாக இருப்பதனால், ஒரு டிராபிக் ஜாம் ஏற்படுவதை நிச்சயமாகவே நீங்கள் விரும்ப மாட்டீர்கள். உங்கள் உணர்ச்சிகள் உங்களை கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். திறமையுள்ள ஓட்டுநர் ஒருவர் இவ்வாறு அறிவுரை கூறுகிறார்: “சாலையில் எதிர்ப்படும் வம்புசண்டைக்கு ஒருபோதும் பிரதிபலிக்காதீர்கள் அல்லது எதிர்த்து செயல்படாதீர்கள்.” சாலை சீற்ற கும்பலில் சேர்ந்துகொள்ள மறுத்துவிடுங்கள்!
நீங்கள் பாதிக்கப்பட்டவரா?
ஏறக்குறைய ஒவ்வொரு ஓட்டுநரும் ஏதாவது ஒரு சமயத்தில் சாலை சீற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். கைமுஷ்டியை ஓங்குதல், சத்தமாக வசைபாடுதல், வேண்டுமென்றே வம்புக்கிழுக்கும் விதமாக ஓட்டும் சாகசங்கள் ஆகியவை பயத்தை ஏற்படுத்தலாம், ஏற்படுத்தவும் செய்கின்றன. சண்டையை தவிர்ப்பதே மிகச் சிறந்த பாதுகாப்பு. மற்றொரு ஓட்டுநர் தன்னை முந்திச்செல்ல விரும்பியபோது பாதிக்கப்பட்டவர் பயந்தவராக உணர்ந்தார். கடைசியில், கோபமடைந்த அந்த ஓட்டுநர் அவரை முந்திச்சென்று, முன்னால் குறுக்கிட்டு பாய்ந்து, தங்கள் கார்கள் மோதிவிடுமோ என்று அந்தப் பாதிக்கப்பட்டவர் பயப்படும் அளவுக்கு வேகத்தை சட்டென்று குறைத்தார். இது கொஞ்ச தூரத்திற்கு தொடர்ந்தது; அந்தப் பாதிக்கப்பட்டவர் வேறொரு வழியில் திரும்பிய பிறகுதான் அது முடிவுக்கு வந்தது.
மற்ற ஓட்டுநர்கள் உங்களை முந்திச்செல்ல விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் கவனித்தால், அவர்களைப் போகவிட உங்களால் ஆனதையெல்லாம் செய்யுங்கள். சாலையில் நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே இருப்பதற்கான உங்கள் உரிமையை விட்டுக்கொடாமல் இருக்க நினைக்காதீர்கள். மற்றவர்களை நீங்கள் அறிந்தே எரிச்சலூட்டியிருந்தால், மன்னிப்பு கேளுங்கள். தெரியாமல் தவறு செய்துவிட்டாலும்கூட அதற்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்பதை செய்கை மூலம் காட்டுங்கள். அமைதலான வார்த்தை சீற்றத்தை குறைக்கலாம் என்பதை நினைவில் வையுங்கள்.
ஆனால், சாலை சீற்ற தாக்குதலால் பாதிக்கப்பட்டவராக நீங்கள் இருந்தால், எந்தக் காரணத்திற்காகவும் பதிலுக்குத் தாக்காதீர்கள். “நீங்கள் பெற்றதையே அவருக்குத் திருப்பிக் கொடுக்காதீர்கள்” என்று ஃபோகஸ் பத்திரிகை அறிவுரை கூறுகிறது. “ஆபத்தான ஆயுதமாக பயன்படக் கூடியவற்றை உங்கள் காரில் கொண்டு செல்லாதீர்கள்.” மற்ற குறிப்புகள்: உங்கள் காரின் கதவுகளைப் பூட்டி, ஜன்னல்களை மூடி வையுங்கள். தாக்குபவரை நேருக்குநேர் பார்க்காதீர்கள்.
சாலை சீற்றத்தை சமாளிப்பதற்கான மேற்சொன்ன ஆலோசனைகள் புதியவையல்ல. இஸ்ரவேலின் அரசனாகிய தாவீது பல காலங்களுக்கு முன்பு கொடுத்த ஆலோசனைக்கு இசைவாகவே இவை இருக்கின்றன: “பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு” என்று அவர் ஆலோசனை கூறினார்.—சங்கீதம் 37:1, 8.
சாலை சீற்றம் அதிகரித்துக் கொண்டிருந்தாலும், அது உங்களில் வளர அனுமதிக்காதீர்கள்!
[பக்கம் 23-ன் பெட்டி]
சாலை சீற்றத்தை கட்டுப்படுத்துதல்
சாலை சீற்றத்தை நீக்குவதில் “பொறியியல் சார்ந்த தடுப்பு முறைகள் எந்தளவு முக்கியமோ அந்தளவுக்கு மனப்பான்மைகளில் மாற்றமும் முக்கியம்” என்று வாகன கூட்டுறவு சங்கம் கூறுகிறது. உங்கள் ஓட்டும் திறமைகளைப் பற்றியும் சாலையில் செல்லும் மற்ற ஓட்டுநர்களுடைய திறமைகளைப் பற்றியும் சரியான நோக்குநிலை உடையவர்களாய் இருப்பது சாலை சீற்றத்தை சமாளிக்க மிகவும் முக்கியம். மற்றவர்களுடைய தவறுகள் உங்கள் கண்களுக்கு முன்பாக நின்றாலும், ஓட்டுவதில் உங்களுடைய சொந்த தவறுகளை அசட்டை செய்துவிடாதீர்கள். சாலை விதிகளை மீறும் ஓட்டுநர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். ஓட்டும்போது நீங்கள் முழு கவனத்துடன் இருக்கிறீர்கள் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். சோர்வு அழுத்தத்திற்கு வழிநடத்தும். ஒரு நொடி கவனக்குறைவும் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
பின்வரும் ஆலோசனைகளையும் ஞானமான அரசனாகிய சாலொமோனின் நீதிமொழிகளோடு அவை எப்படி பொருந்துகின்றன என்பதையும் கவனியுங்கள்.
• உங்களுடைய கோபத்தை உங்கள் பயணிகள் கவனிக்கிறார்களா? நீங்கள் அமைதலடையும்படி ஒருவேளை அவர்கள் கூறலாம். அவர்களுடைய ஆலோசனையை வெறுமனே உதறிவிட்டு, பின்னாலிருந்து அவர்கள் உங்களை கட்டுப்படுத்துகிறார்கள் என்று எதிர்த்துப் பேசாதீர்கள். ஒரு அமைதலான மனப்பான்மை அதிக ஆரோக்கியமானது என்றும் சொல்லர்த்தமாகவே அதிக வருடங்கள் வாழ உங்களுக்கு உதவக்கூடும் என்பதையும் நினைவில் வையுங்கள்! “சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்.”—நீதிமொழிகள் 14:30.
• அடுத்த ஓட்டுநரைப் பற்றி சிந்தித்துப் பார்த்து, பிரச்சினைகளைத் தவிர்த்திடுங்கள். “ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங் கொண்டு துணிகரமாயிருக்கிறான்.”—நீதிமொழிகள் 14:16.
• மன்னிப்பு கேட்கும் விதமான செய்கை அல்லது வார்த்தை மூலம் கோபத்தை குறைத்துவிடுங்கள். “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்.”—நீதிமொழிகள் 15:1.
• மற்றவர்கள் சாலை சீற்றத்திற்கு ஆளாகலாம், ஆனால் நீங்கள் அவர்களைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. “கோபக்காரனுக்குத் தோழனாகாதே.”—நீதிமொழிகள் 22:24.
• மற்றவர்களுடைய சச்சரவுகளில் தலையிடுவதை தவிருங்கள். “விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.”—நீதிமொழிகள் 17:14.