மனித மரபியலைப் பிரித்தறிதல்
பிரிட்டனிலுள்ள விழித்தெழு! நிருபர்
“உயிரியலின் முதல் ‘விரிவான அறிவியல்’ திட்டம்,” “நவீன உலகின் ஏழு அற்புதங்களில்” ஆறாவது—இவை இரண்டுமே உங்களைப் பிரித்தறிய சர்வதேச முயற்சியாக இருக்கும் மனித ஜீனோம் திட்டத்தினுடைய விவரிப்புகளாகும்! ஜீனோம் என்பது என்ன? அது உங்கள் அப்பாவிடமிருந்து சுதந்தரித்துக்கொண்ட ஒரு பாகமும் உங்கள் அம்மாவிடமிருந்து சுதந்தரித்துக்கொண்ட ஒரு பாகமும் அடங்கிய ஆனால் இப்போது தனித்தன்மை வாய்ந்த உங்கள் மரபியல் உருவமைப்பின் மொத்த விளைவாக இருக்கிறது.
மரபியல் வல்லுநர்கள் சர் வால்டர் பாட்மர் மற்றும் ராபின் மெக்கி, ஜீனோம் திட்டத்தை “மனிதனின் புத்தகம்” என்ற சிறப்புப்பெயரால் அழைக்கின்றனர். ஆனால் அதை வாசிப்பது சுலபமான வேலையல்ல. “இதைவிட அதிக முக்கியமான அறிவுரைப் புத்தகத் தொகுப்பை மனிதர்கள் ஒருபோதும் காணமாட்டார்கள்,” என்பதாக இப்பொழுது பிரபலமாக இருக்கும் டி.என்.ஏ. மூலக்கூறுகளின் உருவமைப்பைக் கண்டுபிடித்த பெருமையுள்ள விஞ்ஞானிகளில் ஒருவரான ஜேம்ஸ் வாட்சன் குறிப்பிடுகிறார். “கடைசியாக விளக்கப்படுகையில், நம்முடைய டி.என்.ஏ. மூலக்கூறுகள் தன்னகத்தே கொண்டிருக்கும் மரபு தகவல்கள் மனித வாழ்வின் வேதியல் அஸ்திவாரத்துக்கு அடிப்படை பதில்களை அளிக்கும்” என்பதாக அவர் சொல்கிறார்.
எந்த ஒரு பெரிய மற்றும் அதிக செலவை உட்படுத்தும் அறிவியல் திட்டத்தைப் போலவே, மனித ஜீனோம் திட்டம் நம்புகிறவர்களையும் ஐயுறவாதிகளையும் கொண்டிருக்கிறது. “ஜீனோம் திட்டம் அந்தரங்க வாழ்வின் வரம்பை மீறுவதாக இருக்கலாம்,” என்பதாக விஞ்ஞான எழுத்தாளர் ஜோயல் டேவிஸ் எச்சரிக்கிறார், “அல்லது புதுப்பிக்கப்பட்ட வாழ்வுக்கு, ஆரோக்கியத்துக்கு, குணப்படுத்துதலுக்கு அசாதாரணமான வாயிலாக அது அமையலாம்.” ஆனால் அது எதை நிறைவேற்றினாலும், “அது மரபியல் துறையை முற்றிலுமாக மாற்றிவிடும்,” மேலும் “புத்திக்கூர்மையுள்ள மனித இனத்தின் இயல்புக்கு முற்றிலும் மறுவடிவம் கொடுக்கலாம்,” என்பதாக அவர் நம்புகிறார். 1989-ல், ஹாவர்டு ஹீயுஸ் மருத்துவ நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜார்ஜ் காஹில் நம்பிக்கையுள்ளவராக இருந்தார். “மனித ஜீனோமைப் பிரித்தறிவது நமக்கு எல்லாவற்றையும் சொல்லப்போகிறது,” என்று அவர் சொன்னார். “பரிணாமம், நோய், அனைத்துமே டி.என்.ஏ. என்றழைக்கப்படும் அந்த அற்புதமான டேப்பில் இருப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.”
பிரமாண்டமான ஒரு பணி
1988-ல் விஞ்ஞானிகளின் ஒரு சர்வதேச குழு, அதில் கலந்துகொள்ளும் தேசங்களிலுள்ள ஜீனோம் ஆய்வாளர்களின் வேலையை ஒத்திசைவாக்க HUGO-என்பதை (Human Genome Organization) நிறுவியது. ஏறக்குறைய 350 கோடி டாலர் செலவில், செயல்படும் HUGO அவற்றின் ஆய்வு முடிவுகளைக் கம்ப்யூட்டர் விவரத் தொகுப்புக்கு அனுப்பிவைக்கிறது. இப்பொழுது கம்ப்யூட்டர்களால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான அதன் பாகங்களிலுள்ள குறியீடுகளின் தகவலை அறிய முடிந்தாலும், ஜீனோம் அத்தனை சிக்கல்வாய்ந்ததாக இருப்பதால், விஞ்ஞானிகள் 21-ஆம் நூற்றாண்டில் ஏதோவொரு சமயம் வரையாக அதை முழுவதுமாக பிரித்தறிய எதிர்பார்ப்பதில்லை. ஜீனோம் ஒரு புத்தக வடிவில் பிரசுரிக்கப்பட்டால், அதை வாசித்து முடிப்பது “வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை” எடுத்துக்கொள்வதாக இருக்கும் என்பதாக சையன்டிபிக் அமெரிக்கன் பத்திரிகை மதிப்பிடுகிறது.
அதிகமான விவாதத்துக்குப் பின் விஞ்ஞானிகள் பின்வரும் சூழ்ச்சிமுறையைப் பின்பற்ற தீர்மானித்தனர். முதலாவது, 1,00,000 ஜீன்களின் இடத்தைக் குறிப்பதற்காக ஒரு குரோமசோமில் ஜீன்களின் அமைப்பைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றனர். அடுத்து, ஜீனோமின் வரிசை முறை என்றழைக்கப்படும் ஒரு செயல்முறையின் மூலமாக இந்த ஒவ்வொரு ஜீன்களையும் உண்டுபண்ணும் பொருட்களின் வரிசையைக் கண்டுபிடிக்க முற்படுகின்றனர். அவர்களுடைய கடைசி இலக்கு நம்முடைய மரபு பொருளிலுள்ள மற்ற 95 முதல் 98 சதவீதத்தின் வரிசையை நிர்ணயம் செய்வதாகும்.
இவையனைத்தையும் முயன்று அடைவது மனித வாழ்க்கையைப் பற்றி அறியவேண்டிய அனைத்தையும் வெளிப்படுத்துமா? ஜீனோம் மனிதன் எக்காலத்திலும் கண்டுபிடித்திருக்கும் ‘அதிமுக்கியமான அறிவுரைப் புத்தகத் தொகுப்பைக்’ கொண்டுள்ளதா? மனித ஜீனோம் திட்டம் மனிதர்களின் எல்லா கேடுகளுக்கும் பரிகாரத்தை அளிக்குமா? பின்வரும் கட்டுரைகள் இந்தக் கேள்விகளைச் சிந்திக்கிறது.