உங்கள் எதிர்காலம் அது என்னவாக இருக்கக்கூடும்?
மனித ஜீனோம் ஆய்வு ஒரு நபர் இறுதியில் அனுபவிக்கக்கூடிய சாத்தியமான நோய்களைப் பற்றி அதிகத்தை ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் சாத்தியமான சிகிச்சையைப் பற்றி, இப்படிப்பட்ட நோய்களைத் தவிர்ப்பதைப் பற்றியும்கூட என்ன?
தாவரங்கள், விலங்குகள், மற்றும் மனிதர்களின் ஜீனோமைப் பற்றி ஆய்வாளர்கள் அதிகமதிகமாக கற்றுக்கொள்ளும்போது, நோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் கண்டுபிடிப்பதற்கு அதிகமதிகமான சாத்தியங்கள் இருக்கின்றன என்பதாக லண்டனின் தி டைம்ஸ் உறுதியாகச் சொல்கிறது. இருப்பினும், இண்டஸ்டிரி வீக் பத்திரிகை அறிவிக்கிறபடி, இந்தச் செயல்முறை நோய் “அறுதிசெய்வதற்கு 20 முதல் 50 ஆண்டுகள் பின்னால் தாமதமாக இருக்கக்கூடும்,” என்பதாக அறிவியல் அறிஞர்கள் ஒரு எச்சரிப்பைக் கொடுக்கின்றனர். உயிர்வேதியல் பேராசிரியர் சார்லஸ் கான்டர் என்பவரின்படி, இந்நிலைமை, ஒரு நபரை “உண்மையில் . . . நம்பிக்கை இழந்தவராக,” விட்டுச்செல்கிறது. ஆனால் அது அவ்வாறில்லை.
எல்லா நோய்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதாக பைபிள் தெளிவாக வாக்களிக்கிறது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின,” என்பதாக வெளிப்படுத்துதல் 21:4 சொல்கிறது. கிறிஸ்தவ சகாப்தம் என்ற ஆங்கில பத்திரிகை “மரபியல் உடன்படைப்பு” என்று அழைக்கும் ஒன்றால் மரபியல் வல்லுநர்கள் இதை உண்மையாகக் கொண்டுவருவார்களா? பைபிள் வாக்குறுதிகள் நிறைவேற்றமடைவது, மனித ஜீனோம் திட்டம் முழுமைபெறுவதை, எந்த ‘மரபியல் உடன்படைப்பை’ அல்லது ஆம், நம்முடைய சுற்றுச்சூழலின் படிப்படியான முன்னேற்றுவிப்பை சார்ந்ததாக இல்லை. மாறாக, அதனுடைய நிச்சயத்தன்மை கடவுளுடைய கிரியை நடப்பிக்கும் சக்தியாகிய, அவருடைய பரிசுத்த ஆவியையே முழுவதுமாக சார்ந்திருக்கிறது.
மரபு மற்றும் சுற்றுச்சூழலின் தீய பாதிப்புகளைத் தடுத்தல்
சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு இஸ்ரவேல அரசன் பின்வருமாறு சொன்னார்: ‘நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டேன்.’ இன்றைய மனித ஜீனோம் திட்டத்தைப்பற்றி தாவீது எதையும் அறியாதவராய் இருந்தபோதிலும், அவர் கடவுளைத் துதித்து பின்வருமாறு பாடினார்: “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.”—சங்கீதம் 139:14, 16.
ஒரு கருவாக தன்னுடைய தாயின் கருப்பையில் இருக்கையில் தன்னுடைய வளர்ச்சி ‘எழுதப்பட்ட’ அறிவுரைகளைப் பின்பற்றுகிறது என்பதை இந்தப் பண்டைய அரசன் எவ்வாறு அறிந்திருந்தார்? தாவீதுதானே இதை ஒப்புக்கொண்டார்: “கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.” (2 சாமுவேல் 23:2) ஆம், படைப்பாளருடைய செயல் நடப்பிக்கும் சக்தியாகிய பரிசுத்த ஆவி தாவீது எழுதும்படி ஏவின.
இன்று அநேக ஆட்கள் அசட்டைசெய்யும் அல்லது குறைந்தபட்சம் சிந்திக்க தாமதிக்கும் ஒரு பாடம் இங்கே இருக்கிறதல்லவா? மரபும் சுற்றுச்சூழலும் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதற்கு ஓரளவு காரணமாயிருந்தாலும், கடவுளுடைய பரிசுத்த ஆவி நம்மை பலத்தவிதமாய் பாதித்து, மற்ற செல்வாக்குகளின் தீய பாதிப்புகளைத் தடுத்திடவும்கூடும்.
இயானின் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். “நான் மிகவும் சுலபமாக உணர்ச்சிவசப்படக்கூடிய சிறுவனாக இருந்தேன்,” என்பதாக அவர் விளக்குகிறார். “என்னுடைய அப்பாவும் சில சமயங்களில் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவார், இப்பொழுது என்னுடைய சிறு பையன்களும் அதேவிதமாகவே இருக்கின்றனர். நான் இளைஞனாக இருந்தபோது, வெகுவாக பயந்த சுபாவமுடையவனாய் இருந்தேன். என்னால் தெற்றாமலும் திக்காமலும் எதையும் சொல்லமுடியாது, அப்பொழுது நான் இதற்கு தீர்வுகாண மதுபானங்களைக் குடிக்க ஆரம்பித்தேன். அது என்னை அமைதிப்படுத்தியது அல்லது அது அமைதிப்படுத்தியதாக நினைத்தேன். உண்மையில், குடிப்பழக்கம் என்னுடைய நரம்புகளை மோசமாக்கியது.” இயான் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, தன்னுடைய நரம்புகளைக் கட்டுப்படுத்துவற்கு மதுபானத்தின்மீது சார்ந்திருப்பதை நிறுத்தவேண்டும் என்பதை உணர்ந்தார். “என்னுடைய சொந்த மனோபலமே போதுமானது என்பதாக நினைத்தேன், முழு வருடமும் குடிப்பதை நிறுத்திவிட்டேன். ஆனால், குடிப்பதிலிருந்து தொடர்ந்து என்னால் விலகியிருக்க முடியவில்லை,” என்பதாக அவர் ஒப்புக்கொள்கிறார்.
“ஒரு நாள் கொட்டும் மழையில் நான் தெருவில் நடந்துகொண்டிருந்தேன், சாகும்வரை நடந்துகொண்டிருப்பேன் என்று நினைத்தேன். நான் குடிப்பதை பல முறை நிறுத்திவிட்டு மறுபடியுமாக பல முறை ஆரம்பித்துவிட்டிருந்தேன். பின்னர் என்னுடைய குடிப்பழக்கத்தை யெகோவாவின் வழியில் அல்ல, என்னுடைய வழியில் மேற்கொள்ள முயற்சிசெய்து கொண்டிருந்ததை உணர்ந்தேன். ஆகவே நான் யெகோவாவிடம் ஜெபித்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன், இப்பொழுது அவருடைய வழியில் காரியங்களைச் செய்யப்போவதாக யெகோவாவிடம் சொல்லி என்னைப் பலப்படுத்துவதற்காக அவருடைய பரிசுத்த ஆவியை அருளிச்செய்யும்படியாக உண்மையில் அவரிடம் கேட்டேன்.” அது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பாகும். இயான் இப்பொழுது எப்படி இருக்கிறார்?
“என்னுடைய பலவீனங்களைக் கட்டுப்படுத்த நான் இன்னும் உழைக்கவேண்டியுள்ளது,” என்பதாக அவர் ஒப்புக்கொள்கிறார். “நான் தொடர்ந்து முன்னேறுவதற்காக யெகோவாவின்மீது அதிகமாக சார்ந்திருக்க கற்றுக்கொண்டிருக்கிறேன்,” என்று அவர் ஒப்புக்கொள்கிறார். இதுவரையாக அவருடைய வெற்றிக்கு இயான் எதைக் காரணம் காட்டுகிறார்? “யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக்குத் திரும்பிவந்தப் பிறகு, என்னுடைய முதல் பைபிள் வாசிப்பு நியமிப்பு எனக்கு நினைவிருக்கிறது. அது சங்கீதம் 116 (NW), அது இவ்விதமாக ஆரம்பிக்கிறது: ‘யெகோவா என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால் நான் அவரில் அன்புகூருகிறேன்.’ பாதிவந்தபோது நான் இவ்வாறு வாசித்தேன்: ‘யெகோவா எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்?’ [வசனம் 12] ஒருவிதமான இயல்பு நிலைக்குத் திரும்ப எனக்கு உதவிய ஒரு படியைப் போல இது இருந்தது.” இதுபோன்ற ஒரு நிலைமையிலுள்ள எவருக்கும் இயான் பின்வருமாறு ஆலோசனை சொல்கிறார்: “உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.” மேலுமாக அவர் சொல்கிறார்: “நான் கடைசியாக பிரச்சினைகளின் பேரில் செயல்பட்டு என்னுடைய தீர்மானத்தைப் பலப்படுத்துவதற்கு யெகோவாவின் ஆவிக்காக ஜெபித்த போது வெற்றிபெற ஆரம்பித்தேன்.”
இயான், ஏறக்குறைய 50 லட்ச மற்ற யெகோவாவின் சாட்சிகளோடுகூட, மிக அதிக முக்கியமான அறிவுரை புத்தகமாகிய பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள வழியைப் பின்பற்றுவதற்குத் தனக்கு உதவிசெய்யும்படியாக யெகோவாவின் ஆவியின் மீது சார்ந்திருக்கிறார். உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்து இயேசுவின் கைகளில் கடவுளுடைய ராஜ்யத்தை, அவருடைய பரலோக அரசாங்கத்தைப் பற்றிய அதனுடைய தெளிவான சிக்கலற்ற எளிமையான செய்தியை நீங்கள் வாழும் இடத்திலுள்ள சாட்சிகள் உங்களுக்குத் தெரிவிக்க அனுமதியுங்கள். இந்த அமைப்பு மரபு சார்ந்த குறைகளின் ஒவ்வொரு தடயத்தையும் சீக்கிரத்தில் நீக்கி என்றுமாக வாழ்வதற்கு ஒரு பரதீஸிய சுற்றுச்சூழலை மனிதவர்க்கத்துக்குக் கொடுக்கும். நீங்களும்கூட அங்கு இருக்கலாம்!