முதலையை—அண்மையில் பார்வையிடுதல்
கென்யாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
அமெரிக்க சுற்றுலாப் பயணி மாரா நதியின் பக்கமாக நீர்யானைகளை ஆசையோடு படம்பிடித்துக்கொண்டிருந்தபோது ஒருசில பாறைகளில் வழுக்கி உள்ளே விழுந்துவிட்டார். இது, வெயிலில் அப்போது குளித்துக்கொண்டிருந்த தோலின் தோற்றமுள்ள மிருகமாகிய முதலையின் கண்ணில்பட்டது. ஊர்வனவான இது பொதுவாக மீனை உண்டு வாழ்ந்துவந்தாலும், சுவையான இந்த உணவுப்பொருளின் தோற்றம் எதிர்க்கமுடியாதபடி அத்தனை கவர்ச்சியாக இருந்தது. உடனடியாக அது தண்ணீருக்குள் ஆராய்வதற்காக நழுவிச்சென்றது. நல்ல வேளையாக, சுற்றுலாப் பயணி முதலை வருவதைப் பார்த்துவிட்டார், நதியைவிட்டு அத்தனை வேகமாக அவர் வெளியேறியது, அவர் தண்ணீரில் நடப்பது போல இருந்தது!
ஆப்பிரிக்க நதிகள், ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்களைச் சுற்றிப்பார்க்க வருபவர்கள் அநேகமாக இந்த முதலைகளைப் பார்க்க நேரிடுகிறது. ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட பீதியடைந்த சுற்றுலாப் பயணிக்கு ஒருவேளை சந்திப்பு மிக அருகாமையில் நிகழ்ந்தது. நைல் முதலை வாழுமிடம் கென்யாவாகும். உள்ளூரில் பேசப்படும் சுவாஹிலி மொழியில், அது வெறுமனே மாம்பா என்றழைக்கப்படுகிறது. 7 மீட்டர் உயரமுள்ள முதலைகள் ஊர்வனவாக, நிலத்திலும் நீரிலும் விரைந்து செயல்படக்கூடியவை. அவற்றின் வால் தட்டையாக துடுப்பு வடிவத்தில் இருப்பதால் அவற்றால் தண்ணீரில் அதிவேகத்தை அடையமுடிகிறது. மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்துக்கு அவற்றால் நீந்தமுடியும்! இரண்டு, மூன்று மணிநேரங்களும்கூட தண்ணீரின்கீழ் அவை இருப்பது வழக்கத்துக்கு மாறாக இல்லை. நிலத்தில் அவை குறுகிய குபீர்பாய்ச்சல்களில் ஓடுகின்றன.
அப்படியென்றால் பயத்தைத் தோற்றுவிக்கும் கடவுளுடைய படைப்புகளுக்கு ஒரு உதாரணமாக லிவியாதான் என்றழைக்கப்படும் முதலையை பைபிள் குறிப்பிடுவது ஆச்சரியமாயில்லை. யோபு 41:8, 10 சொல்கிறது: ‘அதின்மேல் [லிவியாதான்மேல்] உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய். அதை எழுப்பத்தக்க தைரியவான் இல்லை.’ மிக ஞானமான எச்சரிக்கைகள்! மாரீஸ் ரிச்சர்ட்ஸன் எழுதிய ஊர்வனவற்றின் கவர்ச்சி என்ற ஆங்கில புத்தகத்தின்படி, முதலைகள் கப்பலுக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள விசைப்பொறிகளைத் தாக்குவது அறியப்பட்டுள்ளது! யோபு 41:25 பொருத்தமாகவே பின்வருமாறு சொல்கிறது: “அது எழும்பும்போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்.”
செதிள்கள் மூடிய இந்த மிருகத்தைப் பார்த்த மட்டில் மக்கள் ஏன் திகிலில் ஓடிவிடுகிறார்கள்? வசனம் 14 ஒரு காரணத்தை விளக்குகிறது: “அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார்? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள்.” முதலையின் மேல் மற்றும் கீழ்த்தாடை ஆகிய ஒவ்வொன்றிலும் பல்வேறு அளவுகளில் 24 பற்கள் வரையாக இருக்கின்றன, வாழ்நாள் முழுவதிலுமாக அவை மாற்றீடு செய்யப்பட்டுவருகின்றன. அக்கறையூட்டும் வண்ணமாக, முதலையின் கீழ்த்தாடையின் நான்காவது பல் மேல் தாடையிலுள்ள நீண்ட குறுகிய ஒரு பள்ளத்தில் வெளியே பொருந்துவதால், தாடைகள் மூடியிருக்கும்போது அதை எளிதில் காணமுடிகிறது. இதே குடும்பத்தைச் சேர்ந்த பெரிய அலகுடைய முதலையிலிருந்து வித்தியாசப்படுத்துவதற்கு இது உதவியாக இருக்கிறது. பிரச்சினையானது, பல் சம்பந்தமான இந்த ஆய்வைச் செய்வதற்கு நீங்கள் மிக அருகாமையில் சென்றுவிட்டால், உள்ளேயிருந்துகொண்டு முதலையின் எல்லா பற்களையும் ஆய்வுசெய்துகொண்டிருக்கும் நிலையில் உங்களை காண நேரிடலாம்!
அதன் காரணமாகவே பாதுகாப்புள்ள அனுகூலமான ஓரிடத்திலிருந்து நீங்கள் முதலையை அருகாமையில் பார்க்க விரும்பக்கூடும், அவ்விதமாக பார்ப்பதற்கு கென்யாவில் இப்படிப்பட்ட இடங்கள் அநேகமுண்டு. உதாரணமாக மாம்பா கிராமம் என்பது மொம்பாஸாவிலுள்ள ஓரிடமாகும், இங்கே முதலைகள் அடைத்து வைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
‘ஆனால் முதலாவதாக ஒருவர் முதலைப் பண்ணை வைக்க ஏன் விரும்புவார்?’ என்பதாக நீங்கள் கேட்கலாம். ஒரு காரியமானது அவற்றை மறைந்துபோவதிலிருந்து பாதுகாப்பதற்கே. காட்டுப் பகுதியில் முதல் வருடத்தின்போது முதலைகளின் இறப்பு எண்ணிக்கை 99 சதவீதமாக இருக்கிறது. இராட்சத உருவ பல்லிகள், ஆப்பிரிக்க நாரைகள் மற்றும் சில மனிதர்களும்கூட முதலை முட்டைகளையும் முட்டையிலிருந்து வெளிவரும் சிறுகுஞ்சுகளையும் விரும்பி சாப்பிடுகின்றனர். என்றபோதிலும், ஒரு முதலைப் பண்ணையில் சரியாக பராமரிக்கப்படும் முதலையின் இறப்பு வீதம் 10 சதவீதத்திற்கும்கீழாக குறைந்துவிடுகிறது. ஒரு வருடத்துக்குள், முதலைக் குட்டிகள் 1.5 மீட்டர் நீளத்தை அடைகின்றன—பெரும்பாலான ஆபத்துக்களை எதிர்த்திட போதுமான அளவு பெரியதாக இருக்கின்றன. காட்டுப்பகுதியில் இதே நீளத்தை அடைய முதலைக் குட்டிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை எடுக்கலாம்.
முதலைப் பண்ணைகள் வியாபார நோக்கங்களுக்காகவும்கூட இந்த உயிரினங்களை வளர்க்கின்றன. சர்வதேச சந்தையில், முதலையின் வயிற்றுப்பகுதியிலுள்ள மென்மையான தோலிலிருந்து செய்யப்பட்ட காலணிகள், பெல்ட்டுகள், கைபைகள் இன்னும் மற்ற நவீன பாணி உருப்படிகளையும்கூட நீங்கள் காணமுடியும். தோல் பதனிடுவதற்காக சுமார் 2,000 தோல்கள் ஒவ்வொரு ஆண்டும் இத்தாலி மற்றும் பிரான்ஸ் போன்ற மற்ற நாடுகளுக்கு மாம்பா கிராமத்திலிருந்து ஏற்றுமதிசெய்யப்படுகின்றன. விலங்கின் மற்ற பாகங்களுக்கு என்ன நேரிடுகிறது? கென்யாவில், முதலை இறைச்சியை சுற்றுலாத் தொழில் விரும்பத்தக்க விருந்துணவாக பயன்படுத்திக்கொள்கிறது.
அக்டோபர் முதல் ஏப்ரல் வரை முதலையின் இனப்பெருக்கக் காலமாகும். காட்டுப்பகுதியில் ஒரு பெண் முதலை சுமார் 20 முதல் 80 முட்டைகளை எங்கேயாவது இடலாம். அந்தச் சமயத்தில், அடைத்து வைக்கப்பட்டு வளர்க்கப்படும் பெண் முதலைகள் பல்வேறு குளங்களையும் சுற்றி சுமார் 36 முட்டைகளை இடும். பின்னர் முட்டைகள் சேகரிக்கப்பட்டு அடைகாப்பதற்காக அடைகாப்பு கருவிகளுக்கு மாற்றப்படுகின்றன. இது மூன்று மாத காலத்தை எடுக்கிறது.
வியப்பூட்டும் இந்த உயிரினங்களைப் பாதுகாப்போடு கவனிப்பதற்கு மாம்பா கிராமம் மிகச் சிறந்த வாய்ப்பை அளிக்கிறது. அது 20 ஏக்கர் கற்சுரங்கப் பரப்பில் அமைந்துள்ளது, இது ஒரு முதலைப் பண்ணை, தாவரப் பூங்கா, கடல்வாழ் காட்சியகம் மற்றும் ஒரு பொழுதுபோக்கு வளாகம் ஆகியவற்றிற்காக மீண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 10,000-க்கும் மேலான இந்த ஊர்வன இங்கு வாழ்கின்றன. நிச்சயமாகவே நீங்கள் அவை அனைத்தையும் பார்க்க மாட்டீர்கள். ஆனால் இரண்டு வளர்ப்பு இடங்களிலும் நூற்றுக்கும் மேலான பெரிய முதலைகளையும், மற்ற பகுதிகளில், வளர்ச்சியின் எல்லா பருவத்திலுமுள்ள முதலைக் குட்டிகளையும் காணமுடியும்.
சாப்பாட்டு வேளைகளில் முதலைகள் வித்தையையே நடத்திக் காட்டிவிடுகின்றன. குளத்துக்கு மேலே தொங்கவிடப்பட்டிருக்கும் இறைச்சியைப் பிடிப்பதற்காக அவை தண்ணீரிலிருந்து வெளியே குதிக்கவும் செய்கின்றன. இங்கே, தானா நதிப் பகுதியில் மக்களைப் பீதியடையச்செய்து அதைப் பிடித்து பண்ணைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பாக குறைந்தபட்சம் ஐந்து பேரையாவது கொன்றுவிட்ட பிக் டாடி என்றழைக்கப்படும் பயங்கரமான முதலையை நீங்கள் காணலாம். நேருக்கு நேர் முதலைகளைக் காண்பது உங்களுக்கு நடுக்கமாக இருந்தால், நீங்கள் வீடியோ அரங்கத்தில் நன்றாக அவற்றைப் பார்க்க முடியும்.
முதலையை அண்மையில் பார்ப்பது உங்களைக் கவரவோ அல்லது ஒருவேளை நடுங்கவோ செய்யக்கூடும். ஆனால் யோபு 41:34-ல் முதலையைக் குறித்து பைபிள் ஏன் பின்வருமாறு சொன்னது என்பதை நீங்கள் நல்ல விதமாக புரிந்துகொள்வீர்கள்: “அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது.”
[பக்கம் 17-ன் படம்]
வலது: மாம்பா கிராமத்தின் காட்சி
[பக்கம் 17-ன் படம்]
வலக்கோடி: சாப்பாட்டு வேளையின்போது இறைச்சியைப் பெறுவதற்காக தண்ணீரிலிருந்து வெளியே குதிக்கும் ஒரு முதலை