உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 1/22 பக். 24-27
  • ‘நதியின் கண்கள்’ ஜாக்கிரதை!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘நதியின் கண்கள்’ ஜாக்கிரதை!
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கொடிய ‘நதியின் கண்கள்’
  • ஆடம்பரம் அவற்றின் தப்பிப்பிழைத்தலை அச்சுறுத்துகிறது
  • வெகுகாலமாக நம்பிவந்த சில கட்டுக்கதைகள் மறைந்தன
  • எல்லாம் கொடியதும் வன்முறையுமல்ல
  • முதலையை—அண்மையில் பார்வையிடுதல்
    விழித்தெழு!—1995
  • முதலை வாய்
    விழித்தெழு!—2015
  • முதலையைப் பார்த்து புன்னகைப்பீர்களா?
    விழித்தெழு!—2005
  • உப்புநீர்—முதலை ஊர்வன உலகின் அரசன்
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 1/22 பக். 24-27

‘நதியின் கண்கள்’ ஜாக்கிரதை!

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

துணிச்சல் வீரமுடைய பொழுதுபோக்குநர் ஒருவர், ஆஸ்திரேலியாவின் வட மாநிலத்தின் வெட்லேண்ட் ஆச்சரியப்பரவச கக்கடூ தேசியப் பூங்காவிலுள்ள ஈஸ்ட் அலிகேட்டர் ரிவர்–ன் ஓர் உபநதி வழியே அமைதியாகத் தன் சிறுபடகைத் துடுப்பினால் செலுத்திக் கொண்டிருந்தார். திடீரென்று, மிதந்துவரும் தீங்கற்ற கட்டையென்று அவர் நினைத்த ஏதோவொன்று அவரது சிறுபடகை அடிக்க ஆரம்பித்தது. அது ஒரு பயங்கரமான உவர்நீர் முதலை, மேலும் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லையில் வருடத்தின் மிக அபாயகரமான சமயத்தில் அந்தச் சுற்றுப்பயணி அங்கிருக்க நேர்ந்துவிட்டது.

படபடத்து, ஒரு மரத்தொகுதியை நோக்கி அவர் துடுப்பைச் செலுத்தினார். கிளைகள் ஒன்றின்மீதில் தன் அடியை எடுத்துவைக்கையில், முதலை தண்ணீரைவிட்டு வெளியே வந்து, அவரை மறுபடியும் கீழே இழுத்து, மொத்தத்தில் மூன்று முறை உருட்டியது. முதலை அதன் பிடியை ஒவ்வொரு முறை தளர்த்தும்போதும், அந்தப் பெண் சேறுநிறைந்த நதிக்கரைக்குமேல் ஏறுவதற்கு, விடாமல் தொடர்ந்து முயற்சி செய்தார். மூன்றாவது முயற்சியில், அவர் கஷ்டப்பட்டுக் கரையேறி, உதவிக்காக நம்பிக்கையற்ற விதத்தில் அலறியதைக் காட்டு இலாகா அதிகாரி ஒருவர் கேட்கும்வரை, சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் தரதர-என்று தன்னையே இழுத்துக்கொண்டு சென்றார். கோரமான காயங்களடைந்தபோதிலும், அந்தப் பெண் தப்பிப்பிழைத்தார்.

மயிரிழையில் உயிர்தப்பிய இந்தப் பெருவிபத்து 1985-ல் நடந்தது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர் ஓர் அமெரிக்கப் பெண் சுற்றுப்பயணி, சாதகமற்ற நிலைக்குள்ளானார். தன் கூட்டாளிகளின் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல், மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள முதலைகள் நிறைந்த பிரின்ஸ் ரீஜன்ட் ரிவர்-ல் நீந்த முடிவுசெய்தார். அவர் ஓர் உவர்நீர் முதலையால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அத்தண்ணீரில் இளம் முதலைகள் இருந்ததாக அறிக்கைகள் காட்டுவதானது, ஒருவேளை அம்முதலை தன் குஞ்சுகளைக் காப்பாற்றவந்த ஒரு பெண் முதலையாக இருக்கலாம் என்று குறித்துக்காட்டுகிறது.

கொடிய ‘நதியின் கண்கள்’

கழிமுக மீனவர் நிலவொளியில் பார்ப்பதெல்லாம் தெளிந்த நீரின்மீது ஒரு பூச்சி ஊர்ந்துசெல்வதனால் ஏற்படும் சிற்றலைகளேயாகும். அப்படியிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் தொலைதூர வடக்கிலுள்ள மீனவர், காணப்படாத ஒன்றைக்குறித்து—‘நதியின் கண்கள்’-ஐக் குறித்து எப்போதும் உணர்வுடனிருக்கிறார். அவர் தன் டார்ச்சை வைத்து ஒளியடிக்க வேண்டியதாயிருந்தால், மெதுவாக நீரின் பரப்பை விலக்கிக்கொண்டு தெரியும் முதலைக் கண்கள் பிரகாசமான சிவப்பாக ஒளிரும். ஒரு பழங்கால விலங்குதின்னியின் எல்லையில் அவர் வற்புறுத்தி உட்புகும் ஒருவராகிறார்.

வேறு இடங்களிலும் காணப்படும் ஆஸ்திரேலியாவின் உவர்நீர் முதலை, உலகின் 12 முதலை இனங்களிலேயே மிகப்பெரியதும் மிக அபாயகரமுமானது. அது நீளத்தில் 23 அடி வரை வளரக்கூடும். எதிர்பாராத இரைவிலங்கு, மினுமினுக்கும் கண்களைப் பார்த்து தப்புவதற்குள் அதன் திடீர்த் தாக்குதலுக்கும் மோசமான மரண-உருட்டு மூழ்கடிக்கும் முறைக்கும் உட்பட்டுவிடுகிறது. எருமை, பசு, மற்றும் குதிரைகள் போன்ற பெரியளவான இரைவிலங்குகள் நீரின் விளிம்பில் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்கையில் தாக்கப்பட்டிருக்கின்றன.

ஆடம்பரம் அவற்றின் தப்பிப்பிழைத்தலை அச்சுறுத்துகிறது

ஒரு முதலை அதன் பலியாள் மீது மாய்மாலமான சோகக்கண்ணீர் வடிக்கிறது என்ற பழங்காலக் கட்டுக்கதை, நவீன பண்பாட்டுச் சொல்லமைப்பில் “முதலைக் கண்ணீர்” என்று மாறியுள்ளது. ஆனால் முதலையின்மீது அதிகளவு மனிதக் கண்ணீர் சிந்தப்பட்டுவிடவில்லை. அதற்குமாறாக, நீர்-விரும்பும் இந்த ஊரும் பிராணி அதன் மதிப்புமிக்க தோலுக்காக இரக்கமின்றி வேட்டையாடப்படுகிறது.

முதலைகளில் பல, நவநாகரிகப் பொருட்காட்சியகங்களில், விலையுயர்ந்த தோல்பொருட்களின் வடிவில், மாடல் அழகிகளால் அணியப்பட்டு வீறுநடை போட்டிருக்கின்றன. ஏனெனில் உவர்நீர் முதலையின் தோல் உலகத்திலேயே மிகச்சிறந்த தோலாக—கிடைப்பதில் வெகு மிருதுவானதும் நீடித்துழைப்பதுமான தோலாக—சிலரால் கருதப்படுகிறது. சமீபத்தில் லண்டனில் விற்பனைக்கு இருந்த பெண்களின்-கைப்பை ஒன்று $15,000 விலையிடப்பட்டிருந்தது. முதலைத்தோல் இன்னும் சமூக அந்தஸ்தின் ஓர் அடையாளமாக உலகின் பல பாகங்களில் உள்ளது.

கொள்ளை இலாபங்களுக்கான வசீகரம், ஆஸ்திரேலியாவிலுள்ள உவர்நீர் முதலை தப்பிப்பிழைப்பதை அச்சுறுத்தியது. 1945-லிருந்து 1971 வரை, இந்த ஊரும் பிராணிகளில் சுமார் 1,13,000, வட மாநிலத்தில் மட்டும் கொல்லப்பட்டன. அவை முற்றிலும் துடைத்தழிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, ஆரம்ப 1970-களில் முதலை வேட்டை மட்டுப்படுத்தப்பட்டது, அதன் விளைவாக 1986-ல், காட்டுப்பகுதியில் அவற்றின் எண்ணிக்கை இயல்நிலையை அடைந்திருந்தது. ஆகவே அதன் இயற்கை வாழ்விடம் பயமுறுத்தப்படுவதாக சிலர் விவாதித்தபோதிலும் ஆஸ்திரேலியாவில் முதலை இனிமேலும் பயமுறுத்தப்படுகிறதில்லை.

நூற்றாண்டுகளாக ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் தெரிந்தோ தெரியாமலோ முதலையின் எண்ணிக்கையைப் பாதுகாத்தனர். சில இனத்தவர் தேர்ச்சிபெற்ற முதலை வேடராயிருந்தபோது, மற்ற இனத்தவர் மத காரணங்களுக்காக அவை வேட்டையாடப்படுதலைத் தடுத்தனர்.

சமீப வருடங்களில் முதலை வளர்ப்பு, கல்வியின்மீது ஓர் அழுத்தத்துடன் சேர்ந்து முதலைகளின் பாதுகாப்புக்கு உதவிசெய்துள்ளது. முதலைப் பண்ணைகளின் பணசம்பந்தமான வெற்றிக்கு நிச்சயமளிக்கும் வகையில், சுற்றுப்பயணிகள் ஏராளமாய் அங்குத் திரண்டுவருகின்றனர், அதேசமயத்தில் இனவிருத்தி திட்டங்கள் இயற்கைச் சூழலில் உள்ள முதலைகளைத் தாக்குதல் செய்யாமல் முதலைத் தோலையும் மாமிசத்தையும் பக்குவப்படுத்த அனுமதிக்கின்றன.

ஒரு புகழ்-பெற்ற ஆஸ்திரேலிய முதலைப் பண்ணையாளர், மக்கள் தாங்கள் விரும்பும், புரிந்துகொள்ளும் பொருட்களுக்கே பாதுகாப்பளித்து தங்கள் இடத்திலும் நேரத்திலும் கொஞ்சத்தை அனுமதிக்கின்றனர் என்று நம்புகிறார். அவர் கூறினார்: “ஆகவே அதற்கான ஒரு வாய்ப்பை முதலைகள் பெறுகிறதில்லை. ஆனால் அவற்றின் உயிரின வாழ்க்கைச்சூழல் ஆய்வின் மதிப்பு அழகிய எந்தப் பொருட்களுக்கும் இணையானது.”

ஒருவர் சேற்று-நிறம் கொண்ட, தோல்போன்ற அந்த ஊரும் பிராணிகளை மிக அருகில்—ஆனால் கம்பிவலையாலான பாதுகாப்பிற்குப் பின்னாலிருந்து—நோக்குகையில் ஒரு முதலைப் பண்ணையைச் சென்றுபார்ப்பது கிளர்ச்சியூட்டுகிறது. பண்ணை வேலையாட்கள் பயத்தை மேற்கொண்டு வேலியடைப்புக்குள் சென்று முதலைகளை விளையாட்டு காட்ட அழைத்து அவற்றிற்கு புதிதான கோழிமாமிசமும் பிற மாமிசமும் கொடுப்பதன்மூலம் வெகுமதியளிக்கின்றனர். என்றபோதிலும், ஒரு பண்ணை வேலையாள், ஒரு முதலையை ஒருபோதும் சர்வசாதாரணமாக நினைத்துவிடக்கூடாது என்பதை ஒரு கசப்பான அனுபவத்தின்மூலம் கற்றுக்கொண்டார். எதிர்பாராத விதத்தில், அவ்வூரும் பிராணி திடீரென்று அவர்மீது பாய்ந்து அவரது இடது கையை முற்றிலும் கிழித்தெறிந்தது!

மறுபட்சத்தில், 12-மாத வயதுடைய ஒரு முதலைக் குஞ்சைப் பிடித்துப்பார்ப்பது ஒரு சிறந்த அனுபவமாகவும் மிகவும் விவரிக்கும் தன்மைகொண்டதாகவும் இருக்கிறது. அதன் அடிவயிற்றின் தோல் குறிப்பிடத்தக்க வகையில் மிருதுவாக இருக்கிறது, அதேசமயத்தில் அதன் முதுகிலுள்ள ஆஸ்டியோடெம்ஸ் என்ற எலும்புபோன்ற தகடுகள் நீரியக்க ஆயுதங்களாகின்றன. அவற்றின் தோல் ஏன் அவ்வளவு விலைமதிப்புள்ளது என்பதை இப்போது புரிந்துகொள்ளலாம். ஆனால் “தத்துநடை போடும்” இப்பிராணியிடம் ஜாக்கிரதையாயிருங்கள். 12-மாத வயதுடைய ஒரு முதலைகூட அதன் தாடைகள் பாதுகாப்பாகக் கட்டப்பட்டிருந்தாலும் அதன் உருவளவிற்கு பலமுடையது.

முட்டையிலிருந்து வெளிவராத முதலைக் குஞ்சுகள் அவற்றின் ஓட்டிற்குள் கர்ஜிக்கையிலும் அவற்றின் சிறிய மூக்கின் நுனியின்மேலுள்ள ஒரு தற்காலிகப் பல்லின் உதவியைக் கொண்டு திடீரென்று வெளிவருகையிலும் பார்வையாளர்களை மகிழ்வூட்டுகின்றன. ஒருவேளை இக்கட்டத்தில்தான் ஒரு முதலை உண்மையிலேயே நேர்த்தியாக இருக்கும் என்பதை மிகப்பெரும்பாலானோர் ஒத்துக்கொள்கின்றனர்!

வெகுகாலமாக நம்பிவந்த சில கட்டுக்கதைகள் மறைந்தன

முதலைப் பண்ணையில் வளர்க்கப்படும் இந்தப் பயமுறுத்தும் ஊரும் பிராணிகளின் பழக்கவழக்கத்தை உன்னிப்பாக கவனித்தறிவதானது, சில நீண்ட காலக் கட்டுக்கதைகள் மறைவதற்கு உதவியிருக்கின்றன. ஒரு முதலை அதன் இரைவிலங்கை மின்னல்வேகத்தில் எதிர்பாராதவகையில் அடிப்பதற்கு முன்பாக நாட்கணக்கில், வாரக்கணக்கில்கூட பொறுமையாக பதுங்கிப் பின்பற்றிச்சென்று அதை வேட்டையாடுகிறது என்று பல வருடங்களாக நம்பப்பட்டது. என்றபோதிலும், தற்போதைய கூர்ந்த-கவனிப்பு, முதலைகள் வெறுமனே தங்கள் எல்லைக்குள் மட்டுமே அவற்றின் இணைசேரும் காலமாகிய மழைக்காலத்தின்போது வலியத் தாக்கும் தன்மைகொண்டுள்ளன என்று வெளிப்படுத்தியிருக்கிறது. இச்சமயத்தில் இரைவிலங்கு அதன் எல்லையில் நுழைந்தால், முதலை வலியத்தாக்கும்வகையில் அதன்பின்னால் செல்லலாம், ஆனால் வருடத்தின் மற்றொரு சமயத்தில் அதே விலங்கை எந்தவித அக்கறையுமின்றி தொலைவிலிருந்து சும்மா பார்த்துக்கொண்டிருக்கலாம்.

இன்று பொழுதுபோக்குப் பகுதியில் பார்வையிடுகையில், தேர்ச்சிபெற்ற முதலை வேட்டைக்காரரால் முதலைகள் ஓரிடத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு வேறொரு இடத்திற்கு மாற்றப்படுகின்றன. அவர்களது உத்தியின் ஒரு பகுதியானது, ஆதாரமான கீழ்த்தாடையை சுருக்குக்கயிறு போட்டு, அதை உயர்த்தி, வேகமாய் மேல் மற்றும் கீழ்த்தாடைகளை ஒன்றாகக் கட்டிவிடுவதாகும். அது முதலையின் தாடையை நடைமுறையில் வலுவற்றதாக்குகிறது, ஏனெனில் கீழ்த்தாடையின் மூடும் தசைகள் மிதமிஞ்சி வலுவுள்ளதாயிருக்கையில், திறக்கும் தசைகள் பலவீனமாக உள்ளன. என்றபோதிலும், ஒரு வேட்டைக்காரர் கவனமுள்ளவராயிராவிட்டால், முதலையின் சக்திவாய்ந்த வாலால் அவர் எளிதில் கீழே தள்ளப்படக்கூடும்.

எல்லாம் கொடியதும் வன்முறையுமல்ல

ஆபத்தான காயத்தை ஏற்படுத்தவல்ல அதே தாடைகள் ஒரு திறமையான அசைவையும் செய்யமுடிவதாய் உள்ளன. முட்டைக்குள்ளிருக்கும் முதலைகள் தங்கள் ஓட்டிலிருந்து வெளிவருவதற்கு சோம்பேறித்தனமாக உணர்ந்தால், தாய்முதலை குஞ்சுகளை செயல்புரியவைக்கும்படி முட்டைகளை அப்படியொரு மென்மைத்தன்மையோடு உருட்டுவாள்.

முதலையின் பற்கள் துண்டிக்கும்படியிருப்பதைவிட இறுக்கிப் பிடிக்கும்படியே அமைக்கப்பட்டுள்ளன. சிறிய அளவுள்ளதாயிருக்கையில், இரைவிலங்கு முழுவதுமாக விழுங்கப்படுகிறது. அல்லாவிடில், அது கிழிக்கப்பட்டு துண்டுதுண்டாக விழுங்கப்படுகிறது. இறந்த ஊரும் பிராணிகளின் மீது பிணிக்கூற்றாய்வு, அவற்றின் வயிறுகளில் கற்கள் இருந்ததை வெளிப்படுத்தியுள்ளன. வேண்டுமென்றே தின்றனவோ அல்லவோ, இக்கற்கள் மூழ்குவதில் அடிச்சுமையாகச் செயல்படுவதாய் நம்பப்படுகின்றன.

நதிக்கரையிலிருக்கையில் முதலைகள் தங்கள் பெரிய தாடைகளைப் பிளந்துகொண்டு திறந்துவைத்திருப்பதை சுற்றுப்பயணம் சென்றுபார்ப்பவர்கள் அடிக்கடி கவனிக்கின்றனர். இந்நிலை, ஒருவேளை வலியத்தாக்க முனைவதை அடையாளப்படுத்துவதாய் ஊகிப்பர். அதற்குமாறாக, திறந்த-தாடை நிலையானது, புற வெப்பநிலைக்கேற்ப மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது. எல்லா ஊரும் பிராணிகளைப் போலவே, முதலைகள் அவற்றின் உடல் வெப்பநிலையை இடைவிடாமல் மாற்றிக்கொள்கின்றன.

வெகு ஆச்சரியமூட்டும் வகையில் ஒரு முதலை, ஊரும் பிராணியாக இருந்தாலும், ஒரு பாலூட்டியைப் போலவே நான்கு அறைகளைக் கொண்ட இருதயத்தைக் கொண்டுள்ளது. என்றபோதிலும், ஒரு முதலை மூழ்கும்போது, ஒரு மாற்றம் ஏற்படுகிறது, இருதயம் மூன்று அறைகளைக் கொண்ட ஒன்றாகச் செயல்படுகிறது.

உவர்நீர் முதலை குறுகிய மூக்கைக் கொண்டுள்ளதிலும், அவற்றின் தாடைகள் மூடியிருக்கையில் கீழ்த்தாடையிலுள்ள பற்கள் வெளியே தெரிவதிலும் ஓர் அலிகேட்டரிலிருந்து வேறுபடுகிறது. அசல் முதலைகள், குள்ள முதலைகள் வாழும் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிலும், பிறகு ஆசியா முழுவதிலும் பாப்புவா நியூ கினீ வரையிலும் காணப்படக்கூடும். அவை ஆஸ்திரேலியாவைப் போன்ற தொலைதூரத் தெற்கில் வாழ்கின்றன, மேலும் நீரின் விளிம்புக்கருகில் அவற்றின் உறைவிடங்களைக் கட்டுவதற்கென்று கடற்கரையின் மாங்குரோவ் துண்டுநிலத்தையும் வெப்பமண்டல ஈரநிலங்களையும் தெரிவுசெய்கின்றன. இதனால் இயற்கையில் நேரிடும் தீமையானது, அடிக்கடி வெள்ளப்பெருக்கெடுக்கையில் முதிர்வுறா முதலைக் கருவுயிர்களை தண்ணீர்கள் மூழ்கடிக்கின்றன. முதிர்ந்த முதலைகள், பரமண்டி மீன், நங்கீன் பறவை போன்ற கொன்றுதின்னிகளால் 50 சதவீதம் முதலைக் குஞ்சுகள் மட்டுமே தப்பிப்பிழைக்கின்றன.

திகைப்பூட்டும் விதத்தில், முதலைகள் தங்கள் சொந்த உணவுப்பண்டத்தோடு பிறந்திருக்கின்றன. முதல் சில வாரங்களாக, அவற்றின் உடல்களினுள்ளேயே இருக்கும் ஒரு மஞ்சட்கரு ஊனீர்ப்பைக் கட்டிலிருந்து (yolk sac) உணவை எடுத்துக்கொள்கின்றன. இருந்தபோதிலும், பெரும்பாலும், அவற்றின் தாய் மெதுவாக அவற்றைத் தன் வாயில் எடுத்துச்சென்று நீரின் விளிம்பிற்கு இடமாற்றம் செய்தவுடனேயே, அவை அவற்றின் மூக்கிற்குப் பயிற்சிகொடுக்க ஆரம்பித்து, அவற்றிற்கு எட்டும் தூரத்திலுள்ள எவற்றையாவது கவ்வுகின்றன.

ஏன் ‘நதியின் கண்கள்’ என்று பெயரிட்டு அழைப்பது அவ்வளவு பொருத்தமாயுள்ளது? ஏனெனில் குஞ்சுகளாயிருந்தாலும்கூட, அவற்றின் சிறிய கண்கள் இரவில் செயற்கை விளக்கொளியில் சிவப்பாக ஒளிர்கின்றன. விழித்திரைக்குப் பின்னாலுள்ள படிகங்களின் ஓர் அடுக்கு, இரவுப் பார்வையை மேம்படுத்தி, சிவப்பாக ஒளிர்வதற்குக் காரணமாயுள்ளது.

ஆம், முதலை மெய்யாகவே ஒரு கபடம்நிறைந்த ஊரும் பிராணியாகும்—அதனிடமிருந்து ஒரு பாதுகாப்பான தூரத்தை நாம் எப்போதுமே வைத்துக்கொள்ள வேண்டும். எந்தவொரு மீனவரும் நன்கு அறிந்துள்ளபடி, லிவியாதானை அடக்குவதற்கு எடுக்கும் முயற்சிகள் பயனற்றவை.

யோபுவின் செய்யுள் சரியாகவே முதலையை “லிவியாதான்” என்று விவரிக்கிறது: “லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ? அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டக்கூடுமோ? குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தக்கூடுமோ? அது உன்னைப் பார்த்து அநேக விண்ணப்பஞ் செய்யுமோ? உன்னை நோக்கி இச்சகவார்த்தைகளைச் சொல்லுமோ? அது உன்னோடே உடன்படிக்கை பண்ணுமோ? அதைச் சதாகாலமும் அடிமைகொள்வாயோ? ஒரு குருவியோடே விளையாடுகிறதுபோல், நீ அதனோடே விளையாடி, அதை நீ உன் பெண்மக்களண்டையிலே கட்டிவைப்பாயோ? கூட்டாளிகள் அதைப் பிடிக்கப் பிரயத்தனப்பட்டு, அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ? நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ? அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய்.”—யோபு 41:1-8.

அஜாக்கிரதையானவர்களையும் ஆவலுள்ளவர்களையும் விரட்டும் எச்சரிப்பின் ஞானமான வார்த்தைகள்: ‘நதியின் கண்கள்’—வலிமையுள்ள, பயப்படத்தகுந்த முதலை ஜாக்கிரதை!

[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]

By courtesy of Australian International Public Relations

[பக்கம் 25-ன் படம்]

இரவில் நீரின்மீது ஒளி பிரகாசிக்கையில், முதலையினுடைய ‘நதியின் கண்கள்’ சிவப்பாக ஒளிரும்

By courtesy of Koorana Crocodile Farm, Rockhampton, Queensland, Australia

[பக்கம் 26-ன் படங்கள்]

இடது: ஒரு முதலைக் குஞ்சு முட்டையிலிருந்து திடீரென வெளிவருதல்

உள்படம்: மேரி ரிவர்-ன் சேறுநிறைந்த கரையில் வளர்ச்சியடைந்த ஒரு முதலைதானேயும் சூரியனில் குளிர்காய்தல்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்