உலகத்தைக் கவனித்தல்
“மிகப் பெரிய பொறுப்பு” அசட்டைசெய்யப்படுகிறது
அநேக ஆண்டுகளாக, கிறிஸ்தவமண்டலம் சகல ஜாதிகளையும் சீஷராக்கும்படியாக தம்மைப் பின்பற்றுவோருக்கு இயேசு கொடுத்த கட்டளையை “மிகப் பெரிய பொறுப்பு” என்பதாக குறிப்பிட்டு வந்திருக்கிறது. என்றபோதிலும், அ.ஐ.மா., வட கரோலினா பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் ஆய்வுக்கான நிறுவனம் சமீபத்தில் நடத்திய வாக்கெடுப்பின்படி, ஐக்கிய மாகாணங்களில் வெகு சில “கிறிஸ்தவர்கள்” மாத்திரமே இந்தப் பொறுப்பை மிக முக்கியமானதாக கருதுகின்றனர். பாரம்பரியமாக அதிக மதப்பற்றுள்ளவர்கள் வாழும் தெற்கத்திய மாநிலங்களுக்கு வெளியே, கிறிஸ்தவர்களென தங்களைக் கருதுபவர்களில் 32 சதவீதத்தினர் மாத்திரமே மற்றவர்களைத் தங்கள் விசுவாசத்துக்கு மதமாற்றுவது தங்களுடைய சர்ச்சின் “மிக முக்கியமான” பொறுப்பு என்பதாக நினைத்தார்கள். தெற்கே, அந்த எண்ணிக்கை 52 சதவீதமாக மாத்திரமே இருந்தது.
புகை எங்கேயோ அங்கே நெருப்பு
புகைபிடிப்பதால் வரும் நன்கு அறியப்பட்ட அநேக ஆபத்துக்களில், அநேகமாக கவனத்தைத் தப்பிவிடும் ஒன்று இருக்கிறது: தீ. ஐ.மா. தேசிய தீ பாதுகாப்பு சங்கத்தின்படி, எரிந்துகொண்டிருக்கும் புகையிலைப் பொருட்கள் 1991-ல் மாத்திரமே ஐக்கிய மாகாணங்களில் சுமார் 1,87,000 தீ விபத்துக்களை ஏற்படுத்தின, (தீயணைப்புப் படையினரை சேர்க்காமல்) 951 பேர் உயிரிழந்தனர். இவ்விதமாக, வசிப்பிடங்களில் அந்த ஆண்டில் தீ விபத்துக்களினால் ஏற்பட்ட 25 சதவீத சாவுகளுக்குப் புகைபிடித்தலே காரணமாக இருந்திருக்கிறது—வேறு எந்தக் காரணத்தாலும் ஏற்படும் தீ விபத்துக்களைவிட அதிகமான அவலங்கள். புகைபிடித்தலோடு சம்பந்தப்பட்ட தீ விபத்துக்களினால் அதே ஆண்டில் 3,381 பேர் காயமடைந்தனர், 55 கோடியே 20 லட்சம் டாலர் மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் மெத்தைபோடப்பட்ட ஃபர்னிச்சர்களும், மெத்தைகளும், மெத்தை விரிப்புகளுமே மிகப் பொதுவாக தீப்பற்றும் வீட்டுப் பொருட்களாக காணப்பட்டன.
டிவி வன்முறை அளவிடப்படுகிறது
அமெரிக்கன் டிவியில் வன்முறை குறித்து, எல்லா ஆர்ப்பாட்டத்தின் மத்தியிலும்—அதைத் தடுக்க டிவி இணைத்திட்ட ஒளிபரப்பு நிலையக் கோவை கொடுத்துள்ள அநேக வாக்குறுதிகளின் மத்தியிலும்—டிவி-யில் வன்முறை உண்மையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது என்பதாக விவாதத்துக்குரிய புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வை செய்தித்துறை மற்றும் பொது விவகாரங்களுக்கான மையம் நடத்தியது. இது பத்து நிலையங்களில் ஒருநாளின் நிகழ்ச்சியைக் கண்காணித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அதே தேதியின் நிகழ்ச்சியோடு அதன் பொருளடக்கத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் இந்த முடிவுகளுக்கு வந்தது. சரீரப்பிரகாரமாய் தீங்கிழைப்பதில் அல்லது உடைமைகள் அழிக்கப்படுவதில் விளைவடையும் வேண்டுமென்றே உடல்மீதான வலுவந்தத் தாக்குகிற செயல்கள் என்பதாக விவரிக்கப்படும் வன்முறைச் செயல்கள் கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் 41 சதவீதம் அதிகரித்துள்ளதைக் கண்டுபிடித்தது. அதிக வினைமையான வன்முறைச் செயல்கள் உயிருக்கு ஆபத்தானவையாக அல்லது கவலைக்கிடமான காயத்தை ஏற்படுத்துபவையாக விவரிக்கப்பட்டன, இவற்றின் எண்ணிக்கை 67 சதவீதமாக உயர்ந்துள்ளது. “வன்முறைச் சம்பவங்களின் சராசரி விகிதம் ஒரு அலைவரிசைக்கு ஒரு மணிநேரத்தில் 10-லிருந்து ஏறக்குறைய 15 காட்சிகளாக அதிகரித்துள்ளது,” என்பதாக டிவி கைடு அறிவிக்கிறது.
உலகளாவிய ஊட்டச்சத்துக் குறைவு
உலகளாவிய ஊட்டச்சத்துக் குறைவைப் பற்றிய நற்செய்தியுமுண்டு, துர்ச்செய்தியுமுண்டு. உலகளாவிய குழந்தை உடல்நலச் செய்தி மற்றும் மறுபார்வை-படி, (ஆங்கிலம்) ஊட்டச்சத்துக் குறைவினால் அவதியுறும் ஐந்து வயதுக்குட்பட்ட எல்லா பிள்ளைகளின் சராசரி 1975-ல் 42 சதவீதமாக இருந்தது 1990-ல் 34 சதவீதமாக குறைந்துள்ளது. என்றபோதிலும், ஊட்டச்சத்துக் குறைவுள்ள பிள்ளைகளின் முழுமையான எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வளர்ந்துவரும் நாடுகளிலுள்ள ஐந்து ஆண்டுகளுக்கு உட்பட்ட சுமார் 19.3 கோடி பிள்ளைகள் மிதமாக அல்லது மிகமோசமாக குறைந்த எடையுள்ளவர்களாகவும், அவர்களில் மூன்றில் ஒரு பாகத்தினர் மிகமோசமாக ஊட்டச்சத்துக் குறைவுள்ளவர்களாகவும் இருக்கின்றனர். ஒரு குழந்தை சற்றே ஊட்டச்சத்துக் குறைவுடன் இருக்கையில் வியாதியினால் மரணம் ஏற்படும் ஆபத்து இரட்டிப்பாகிறது. மிதமான ஊட்டச்சத்துக் குறைவுள்ள குழந்தைக்கு ஆபத்து மும்மடங்காக இருக்கிறது. மிகமோசமான ஊட்டச்சத்துக் குறைவுள்ள குழந்தைக்கு வியாதியினால் மரணம் ஏற்படும் ஆபத்து 11 மடங்கு அதிகமாயுள்ளது. தொழில்துறையில் முன்னேறியுள்ள நாடுகளில், குழந்தைகளில் அதிக பொதுவான ஊட்டச்சத்துக் குறைவு கொழுத்திருக்கும் வடிவில் காணப்படுகிறது என்பதாக செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. உதாரணமாக, வட அமெரிக்காவில், பிள்ளைகள் தங்களுடைய 50 சதவீத சக்தியைக் கொழுப்புப் பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்கின்றனர்—இது “பரிந்துரை செய்யப்படுவதற்கு இரண்டு மடங்கு அதிகம்.”
கருங்கடலா “சவக்” கடலா?”
“கருங்கடல் உலகிலேயே அதிகமாக தூய்மைக்கெடுக்கப்பட்ட கடலாக மாறி, வேதனைமிகுந்த ஒரு மரணத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறது.” இப்படியாக ரஷ்ய செய்தித்தாள் ராசிஸ்கேயி கெஸிட்டா குறிப்பிடுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் கருங்கடல் “பாதியளவு ஐரோப்பாவுக்கு பொதுச் சாக்கடையாக—அதிகமான அளவுகளில் பாஸ்பரஸ் கூட்டுப்பொருட்கள், பாதரசம், DDT, எண்ணெய் மற்றும் அதன் கரையோரப் பகுதிகளில் வாழும் 160 மில்லியன் மக்களிடமிருந்து வரும் மற்ற நச்சுத்தன்மையுள்ள கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு ஓரிடமாக மாறியிருக்கிறது.” தூய்மைக்கேடு சில ஆபத்தான அறிகுறிகளை உண்டாக்கியிருக்கிறது. 1960-களில் மீனவர் கருங்கடலில் முன்னால் பிடித்த 26 வகையான மீன்களில் 5 வகை மாத்திரமே மீந்திருக்கிறது. ஆரோக்கியமாக இருந்த கடல் டால்பின் (பாலூட்டி) தொகை ஒருகாலத்தில் 10,00,000-ஆக இருந்தது 2,00,000-ஆக திடீரென குறைந்திருக்கிறது. மீந்திருக்கும் அநேக டால்பின்களுக்கு பன்றி ஜுரம் தொற்றிக்கொண்டிருக்கிறது, ஏனென்றால் அநேக காட்டுப்பன்றி பண்ணைகள் அதன் கழிவுநீரை டான்யூப் கழிமுகத்திற்குள் திருப்பிவிடுகின்றன.
மாரிஹுவானாவும் ஞாபக மறதியும்
“உலகிலேயே முதலானவர்களாக, சிட்னி ஆய்வாளர்கள் வெகு நாளாக அநேக ஆட்கள் சந்தேகித்துவந்த காரியத்தை—மாரிஹுவானா புகைப்பதால் ஏற்படும் ஞாபக மறதியும் கவனத்தை ஒருமுகப்படுத்த இயலாமையும் போதைப்பொருளை உபயோகிப்பதை மக்கள் நிறுத்தி நீண்ட காலமான பின்பும்கூட தொடர்ந்திருக்கிறது என்பதை—நிரூபித்து காண்பித்திருக்கின்றனர்,” என்பதாக ஆஸ்திரேலியாவின் தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் அறிவிக்கிறது. மாரிஹுவானா உண்டுபண்ணும் சேதம் புகைக்கும் அளவுக்கும் பழக்கம் நீடிக்கும் காலத்துக்கும் தகுந்தவாறு உள்ளது என்பதை மெக்வாரி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு உறுதிசெய்தது. செய்தி இன்னும் மோசமாக உள்ளது: “இந்தக் கெடுதிகளைச் சரிசெய்ய முடியாமல் இருக்கலாம்.” மாரிஹுவானாவை இன்னும் புகைத்துக்கொண்டிருப்பவர்களைப் போலவே, முற்காலங்களில் அதைப் பயன்படுத்தியவர்களும்கூட அதே “அறிவாற்றல் சார்ந்த கெடுதிகளை” அனுபவிக்கிறார்கள் என்பதை ஆய்வு காண்பித்தது. முக்கியமாக போதை வஸ்துவை ஐந்து அல்லது அதற்கும் அதிகமான வருடங்கள் பயன்படுத்தியிருப்பவர்கள் ஞாபக சக்தியைவிட அதிகத்தை இழந்துபோகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தகவலை ஆராய்ந்து முடிவுகளை எடுப்பதில் மெதுவாகவும் தங்கள் கவனத்தை குறைவாகவே ஒருமுகப்படுத்த முடிகிறவர்களாகவும் கவனச்சிதறல்களைத் தவிர்க்க இயலாதவர்களாகவும் இருப்பது காணப்பட்டது. ஒருங்கிணைந்த அத்தாட்சிப்படி, மாரிஹுவானா புகைப்பது உண்மையில் மூளையின் செயல்பாட்டினை மாற்றிவிடுகிறது என்பதாக அறிக்கை முடிக்கிறது.
பருவ வயதினரும் ஆபாசமான வீடியோக்களும்
ஜப்பானின் நிர்வாக மற்றும் ஒத்திசைவு ஏஜென்சி நடத்திய ஒரு சுற்றாய்வின்படி, ஜப்பானில் திடுக்கிடும் விதமாக 77 சதவீத உயர்நிலைப் பள்ளி பையன்களும் 24 சதவீத உயர்நிலைப் பள்ளி பெண் பிள்ளைகளும் ஆபாசமான வீடியோக்களைப் பார்த்திருக்கின்றனர். 13 அல்லது 14 வயதே நிரம்பிய ஜூனியர் உயர்நிலைப் பள்ளி பையன்களிலும்கூட 25 சதவீதத்தினர் இப்படிப்பட்ட வீடியோக்களைப் பார்த்திருக்கின்றனர். விளைவுகள்? “வயதுவந்தவர்களுக்குரிய வீடியோக்களைப் பார்த்திருக்கும் அந்த மாணவர்கள் பாலியல் குற்றச்செயல்களைக் குறித்து மிக மோசமான மனச்சாட்சி உணர்வையும் இப்படிப்பட்ட குற்றங்களுக்கு ஆளான பலியாட்களுடைய உணர்ச்சிகளுக்கு குறைந்த மதித்துணருதலையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை சுற்றாய்வு காட்டுகிறது,” என்று மேனிச்சி டேய்லி நியூஸ் அறிவித்தது. நிலைமையைப் பெற்றோர் அறிந்திருந்தனரா? ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களில் 12 சதவீதத்தினர் மாத்திரமே தங்கள் பிள்ளைகள் ஆபாசமான வீடியோக்களைப் பார்ப்பதை அறிந்திருப்பதை அல்லது பார்க்கக்கூடும் என்று சந்தேகிப்பதை அதே ஆய்வு வெளிப்படுத்தியது.
அற்புதமா, நுண்ணுயிர்களா?
“கத்தோலிக்க சர்ச்சின் மிகவும் பிரசித்தி பெற்ற அற்புதங்களில் ஒன்று தெய்வீக ஊற்றுமூலத்தைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக நுண்ணுயிர் சார்ந்ததாக இருக்கலாம்,” என்பதாக நியூ சையன்டிஸ்ட் பத்திரிகை அண்மையில் அறிவித்திருந்தது. “பால்சனாவின் அற்புதம்” என்பதாகக் கருதப்படுவது 1263-ல் நிகழ்ந்தது. பொஹீமியா நாட்டைச் சேர்ந்த ஒரு பாதிரி ஒரு பூசையின்போது புனித இறைவழிப்பாட்டு மெல்லிய புளிப்பில்லா அப்பத்தை எடுக்கச் சென்றபோது இது நிகழ்ந்தது. பழங்கதையின் பிரகாரம், கத்தோலிக்க சர்ச் போதிக்கும் வண்ணமாக மெல்லிய புளிப்பில்லா அப்பம் உண்மையில் கிறிஸ்துவின் சரீரமாக மாறுமா என்பதாக அவர் யோசித்துக்கொண்டிருந்தார். பின்னர், அவருக்கு ஆச்சரியம் ஏற்படும் விதமாக, புளிப்பில்லாத மெல்லிய அப்பத்திலிருந்து இரத்தம் போன்று ஏதோ கசிவதை அவர் பார்த்தார்! என்றபோதிலும், விஞ்ஞானிகள் மாவினால் செய்யப்பட்ட உணவுப்பொருட்களில் அனலான தட்ப வெப்பத்தில் விருத்தியாகும் பிரகாசமான சிவப்பு நிறமுள்ள சொட்டும் காளான் இந்நிகழ்ச்சிக்குக் காரணமாக இருக்கும் என்பதாக ஊகித்து வெகு காலமாக சொல்லி வந்திருக்கின்றனர். அ.ஐ.மா., வர்ஜீனியாவில் ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜோஹன்னா கெல்லன் வரலாற்றின் இடைநிலைக் காலப்பகுதியின் நிலைமைகளை அண்மையில் மறுபடியும் உருவாக்கி சந்தேகிக்கப்பட்ட பாக்டீரியாவை மெல்லிய புளிப்பில்லா அப்பத்தின்மீது வளரச்செய்து காண்பித்தார். அது விரைவில் இரத்த சிவப்பாக மாறியது.
இரத்தத்திலிருந்து எய்ட்ஸா?
இரத்தமேற்றுதல் அல்லது இரத்தப் பொருட்களிலிருந்து எய்ட்ஸ் நோய் பெற்றுக்கொள்ள இருக்கும் வாய்ப்புகள் என்ன? ஜோஹனஸ்பர்க் செய்தித்தாளாகிய தி ஸ்டார்-ன் படி, உலகம் முழுவதிலும் 6,00,000 பேர்—அல்லது நோயினால் பாதிக்கப்பட்ட அனைவரிலும் 15 சதவீதத்தினர்—எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது முதற்கொண்டு இரத்தம் அல்லது இரத்தப் பொருட்களிலிருந்து எய்ட்ஸ் நோய் தொற்றப் பெற்றிருக்கின்றனர். தற்போது, HIV-க்காக இரத்தத்தைப் பரிசோதனை செய்வது அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதாகவும் அதிக பணச்செலவை உட்படுத்துவதாகவும் உள்ளது. இரத்தம் குறைந்தபட்சம் ஏழு வித்தியாசமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதாக சிலர் முடிவுசெய்திருக்கிறார்கள். அநேகமாக, வளர்ந்துவரும் நாடுகள் இந்தப் பரிசோதனைகளைப் பயன்படுத்திக்கொள்ள பணத்தையோ அல்லது பயிற்சியையோ பெறாதவர்களாக இருக்கின்றனர். பரிசோதனை செய்யப்படுகின்ற பணக்கார நாடுகளிலும்கூட, பிழைகள் ஏற்படுகின்றன. டச்சு இரத்தமேற்றுதல் சேவையின் மருத்துவத் தலைவரான பால் ஸ்ரென்னர்ஸ் இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “HIV நச்சுக்கிருமி அல்லது கல்லீரல் அழற்சியைப் பொருத்தவரை எந்த இரத்தப் பொருளும் 100 சதவீதம் பாதுகாப்பானது என்று நம்மால் சொல்லமுடியாது.”
வராத விருந்தினர்
மார்ச் 1993-ல் ஆஸ்திரேலியாவிலும் பிரான்ஸிலும் வான் கணிப்பாளர்கள் பார்த்த வால் நட்சத்திரம் அதைத் தொடர்ந்து வந்த ஜனவரியில் சர்வதேச வானாராய்ச்சி சங்கத்தினால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மக்நாட்ரஸல் என்பதாக பெயரிடப்பட்டது. ஆனால் சீன வான் கணிப்பாளர்கள்—சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பாக அதை முதலில் கவனித்திருக்கக்கூடும்! நியூ சையன்டிஸ்ட் பத்திரிகையின்படி, இந்த வால்நட்சத்திரம் சூரியனைச் சுற்றிவர அசாதாரணமான நீண்ட காலத்தை எடுத்துக்கொள்கிறது என்பதை ஒரு வான்கணிப்பாளர் கணக்கிட்டுள்ளார்: 1,419 வருடங்கள். அக்கறையூட்டும்விதமாக, சீன வான்கணிப்பாளர்கள் அலைந்துகொண்டிருந்த ஒரு “நட்சத்திர”த்தைப் பார்த்ததாக பண்டையப் பதிவுகள் காண்பிக்கின்றன, இதே வால் நட்சத்திரமாக அது இருக்கக்கூடும். ஜின் டீ என்றழைக்கப்பட்ட காலப்பகுதியில் மூன்றாவது வருடத்தில், இரண்டாவது சந்திர மாதத்தில், ஊ ஊ என்றழைக்கப்பட்ட ஒரு நாளில்—அல்லது பொ.ச. 574, ஏப்ரல் 4-ம் தேதி கண்டதாக பதிவுசெய்திருக்கின்றனர். இந்த வால்நட்சத்திரம் அடுத்த முறை நமக்கு அண்மையில் இருக்கும் சூரிய மண்டலத்துக்கு சுமார் 3412-ம் ஆண்டில் வருகை தரவிருக்கிறது.