இளைஞர் கேட்கின்றனர்
எய்ட்ஸ்—நான் ஆபத்திலிருக்கிறேனா?
அந்த அறிவிப்பு ‘உலகைத் திகைப்பில் ஆழ்த்தியது,’ என்று நியூஸ்வீக் பத்திரிகை சொன்னது. நவம்பர் 7, 1991 அன்று, ஐ.மா.-வின் புகழ்பெற்ற விளையாட்டு வீரன் அர்வன் “மேஜிக்” ஜான்ஸன் தான் எய்ட்ஸ் வைரஸைக் கொண்டிருப்பதாக செய்தித் துறைக்குத் தெரிவித்தார். திடுக்கிடவைக்கும் இந்த ஒப்புக்கொள்ளுதலைத் தொடர்ந்து, எய்ட்ஸ் தகவல் நேரடி தொலைபேசி சேவைகள் (hotlines) ஓயாது தொலைபேசி அழைப்புகளைப் பெற்று சுறுசுறுப்பாயிருந்தன. சில மருத்துவமனைகளில் எய்ட்ஸ் சோதனைகள் செய்வதற்கான வேண்டுகோள்கள் வந்து குவிந்தவண்ணமிருந்தன. சில ஜனங்கள்—தற்காலிகமாகவாவது—வரைமுறையற்றுப் பாலுறவுகொள்ளும் தங்களுடைய நடத்தையைக்கூட கட்டுப்படுத்திக்கொண்டனர்.
இந்த அறிவிப்பின் மிக ஆழ்ந்த பாதிப்பு ஒருவேளை இளைஞருக்கு ஏற்பட்டிருக்கலாம். ஒரு பல்கலைக்கழக சுகாதார சேவையின் இயக்குனர் இவ்வாறு சொல்கிறார்: “‘அவனுக்கு அப்படி நடந்துவிட்டது, எனக்கும் அப்படி நடக்கலாம்’ என்ற செய்தி மாணாக்கர்களைச் சிறிது காலம் பாதித்தது. . . . ஆனால் பெரும்பாலான மாணாக்கர்களுக்கு, மேஜிக் ஜான்ஸனுக்கு ஏற்பட்டது அவர்களுடைய நடத்தையில் மாற்றங்களை உண்டுபண்ணுவதாக இல்லை. அவர்கள் இன்னும் ‘அதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்,’ என்று நினைக்கின்றனர்.”
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலப்பகுதி ‘கொள்ளைநோய்களால்,’ அதாவது அதிவேகமாக பரவும் தொற்றுநோய்களால் தனிப்படுத்திக் காட்டப்படும் என்று பைபிள் தீர்க்கதரிசனம் உரைத்தது. (லூக்கா 21:11) எய்ட்ஸ் நிச்சயமாகவே ஒரு கொள்ளைநோய் என்றழைக்கப்படலாம். ஐக்கிய மாகாணங்களில் முதல் 1,00,000 எய்ட்ஸ் நோயாளிகளைக் கண்டுபிடிக்க—1981 முதல் 1989 வரை—எட்டு வருடங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால் இரண்டாம் 1,00,000 நோயாளிகள் அறிக்கை செய்யப்பட இரண்டே வருடங்கள்தான் எடுத்துக்கொள்ளப்பட்டன!
ஐ.மா. நோய்க் கட்டுப்பாட்டு மையங்களின் பிரகாரம், துயரளிக்கும் இந்தப் புள்ளிவிவரம் “ஐக்கிய மாகாணங்களில் [எய்ட்ஸ்] கொள்ளைநோயின் துரிதமாக அதிகரித்துக்கொண்டிருக்கும் அளவை அழுத்திக் காட்டுகிறது.” இருப்பினும், எய்ட்ஸ் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா போன்ற தேசங்களில் அதிக மரணத்தையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தும், ஓர் உலகளாவிய கொள்ளைநோயாக இருக்கிறது. லாஸ் ஏஞ்சலிஸ் குழந்தை மருத்துவமனையின் டாக்டர் மார்வன் பெல்ஸர், எய்ட்ஸைக் குறிப்பிடத்தக்க வகையில், “1990-களில் இளைஞரை எதிர்ப்படும் மிகுந்த பீதியுண்டாக்கும் பிரச்னை,” என்று அழைக்கிறார்.
மறைந்திருந்து தாக்குதல்
இந்த விநோதமான நோய்தான் என்ன, அது ஏன் அவ்வளவு சாவுக்கேதுவானதாக இருக்கிறது? ஒரு நுண்கிருமி—HIV (Human Immunodeficiency Virus) என்றழைக்கப்படும் மனிதரில் நோய்த்தடைகாப்பைக் குறைக்கும் ஒரு வைரஸ், இரத்த ஓட்டத்தினுள் நுழைந்து தாக்கும்போது அந்த எய்ட்ஸ் உருவாகிறதென்று மருத்துவர்கள் கருதுகின்றனர். அங்கு நுழைந்ததும், அந்த வைரஸ் உடலின் இரத்த வெள்ளையணுக்களுக்கு, உதவும் T செல்களுக்கு எதிராக, தேடி-அழிக்கும் ஒரு வேட்டையில் இறங்கிவிடுகிறது. உடலை நோய்க்கெதிராக பாதுகாத்துக்கொள்ள உதவுவதில் இந்தச் செல்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. எனினும், அந்த எய்ட்ஸ் வைரஸ், அவற்றைச் செயலிழக்கச் செய்து, நோய்த்தடைகாப்பு அமைப்பை (immune system) அழிக்கிறது.
தாக்கப்பட்டவன் நோயுற்றிருப்பதை உணர கணிசமான காலம் கடந்துவிடலாம். சிலருக்குக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் வரை அறிகுறிகளே தோன்றாமல் இருக்கலாம். ஆனால் காலப்போக்கில் ஃப்ளூவைப் போன்ற அறிகுறிகள்—எடைகுறைதல், பசியின்மை, காய்ச்சல், பேதி—தோன்றுகின்றன. நோய்த்தடைகாப்பு அமைப்பு தொடர்ந்து அழிந்துகொண்டேயிருக்கும்போது, நோயாளி—நுரையீரல் அழற்சி, மூளை உறையழற்சி, காச நோய், அல்லது குறிப்பிட்ட சில புற்றுநோய்கள் போன்ற—அநேக நோய்த்தாக்குதல்களுக்கு ஆளாகிறான். அவை சந்தர்ப்பவாதிகள் என்றழைக்கப்படுகின்றன. ஏனென்றால், அவை பலியாளின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றன.
“எனக்கு எந்நேரமும் வலித்துக்கொண்டே இருக்கிறது,” என்று சொல்கிறார் 20 வயது எய்ட்ஸ் பலியாள் ஒருவர். அந்த நோய் அவனது பெருங்குடலிலும் மலக்குடலிலும் புண்களை உண்டாக்கிவிட்டிருக்கிறது. இருப்பினும், முழுநிலையை அடைந்த எய்ட்ஸ் அசெளகரியத்தையும் வலியையும்விட அதிகத்தை உட்படுத்துகிறது. காரணம் நடைமுறையில் அதன் பலியாட்கள் அனைவருக்கும் மரணமே முடிவாயிருந்திருக்கிறது. இந்த வைரஸ் 1981-ல் இருந்து ஐக்கிய மாகாணங்களில் மட்டும் 10 லட்சம் ஜனங்களுக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. ஏற்கெனவே 1,60,000-க்கும் அதிக ஆட்கள் மரித்திருக்கின்றனர். மரணத்தின் இந்த எண்ணிக்கை 1995-ம் வருடத்தின்போது இரண்டு மடங்காகும் என்று நிபுணர்கள் முன்கணிக்கின்றனர். தற்போது எய்ட்ஸுக்குத் தெரிந்த சிகிச்சை ஒன்றும் கிடையாது.
இளைஞர் அபாயத்தில்
இதுவரை, அறிக்கை செய்யப்பட்ட எய்ட்ஸ் நோயாளிகளில் மிகச் சிறியளவே—ஐக்கிய மாகாணங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே—பருவ வயதினரை உட்படுத்துகிறது. எனவே அந்த நோயினால் இறந்துபோன எந்த இளைஞரையும் உங்களுக்குத் தனிப்பட்ட வகையில் தெரியாமல் இருக்கலாம். இளைஞர் அபாயத்தில் இல்லை என்பதை இது அர்த்தப்படுத்தாது! ஐக்கிய மாகாணங்களில் உள்ள எய்ட்ஸ் பலியாட்களில் சுமார் ஐந்திலொரு பகுதியினர் தங்களுடைய 20-களில் இருக்கின்றனர். அதன் அறிகுறிகள் தெளிவாக வெளிப்பட அநேக ஆண்டுகள் ஆவதால், இந்தத் தனிநபர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய பருவ வயதில் இருந்தபோது தாக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய போக்குமுறை தொடர்ந்திருக்குமானால், இன்னும் ஆயிரக்கணக்கான இளைஞர் எய்ட்ஸ் நோயாளிகளாவர்.
ஐ.மா. நோய்க் கட்டுப்பாட்டு மையங்களின் பிரகாரம், மரணத்தை விளைவிக்கும் அந்த வைரஸ், “தொற்றப்பட்ட ஜனங்களின் இரத்தத்திலும், விந்துவிலும், புணர்புழைத் திரவங்களிலும்” பதுங்கித் திரிகிறது. ஆகவே, “நோய்த் தொற்றப்பட்ட ஆளோடு—புணர்புழை, மலவாய், வாய் போன்றவற்றின் வழியே—உடலுறவு கொள்ளும்போது” HIV கடத்தப்படுகிறது. பெரும்பான்மையோர் இந்த நோயை இவ்வாறே பெற்றுக்கொண்டிருக்கின்றனர். “நோய்த் தொற்றப்பட்ட ஓர் ஆளால் அல்லது ஆளுக்கு உபயோகப்படுத்தப்பட்ட ஊசி அல்லது ஊசிக்குழல் போன்றவற்றை உபயோகிப்பதால்கூட,” எய்ட்ஸ் கடத்தப்படலாம். மேலும், HIV வைரஸால் மாசுப்படுத்தப்பட்ட “இரத்தத்தை ஏற்றிக் கொள்வதாலும் சிலருக்கு இந்நோய் தொற்றியிருக்கிறது.”—வாலண்டரி HIV ஆலோசனை வழங்குதலும் சோதனை நடத்துதலும்: உண்மைகள், பிரச்னைகள், பதில்கள் (Voluntary HIV Counseling and Testing: Facts, Issues, and Answers).
இறுதி விளைவாக அநேக இளைஞர் அபாயத்தில் இருக்கின்றனர். கவலை தரக்கூடிய எண்ணிக்கையில் (ஐக்கிய மாகாணங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் என்று சிலர் கூறுகின்றனர்) இளைஞர் சட்டவிரோதமான போதை மருந்துகளை உபயோகித்துப் பார்த்திருக்கின்றனர். இந்த மருந்துகளில் சில ஊசிமூலம் ஏற்றப்படுவதால், மாசுப்படுத்தப்பட்ட ஓர் ஊசி வழியாக நோயால் தொற்றிக்கொள்ளப்படும் அபாயம் மிக அதிகமாக இருக்கிறது. ஓர் ஐ.மா. சுற்றாய்வின் பிரகாரம், மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் 82 சதவீதத்தினர் மது பானங்களை உபயோகித்திருக்கின்றனர், சுமார் 50 சதவீதத்தினர் தற்போதும் உபயோகித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு பாட்டில் பீர் குடிப்பதால் உங்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றிக் கொள்வதில்லை. ஆனால் அதைக் குடித்தபின் உங்களுடைய சீர்தூக்கிப்பார்க்கும் திறமை பாதிக்கப்பட்டு, உள்ள நடத்தைகளிலேயே—வரைமுறையற்ற பாலுறவு, ஒத்தபாலினத்தவர்புணர்ச்சி அல்லது ஈரினப்புணர்ச்சி போன்ற—மிகவும் அபாயகரமான சில நடத்தைகளில் உங்களை ஈடுபடச் செய்யும் வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.
1970-ல் 15 வயது மங்கையரில் 5 சதவீதத்திற்குக் குறைவானவர்களே உடலுறவை அனுபவித்திருக்கின்றனர். 1988-ன்போதோ அந்த எண்ணிக்கை 25 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. சுற்றாய்வுகள்கூட காண்பிக்கிறதுபோல, 20 வயதாகும்போது, ஐக்கிய மாகாணங்களின் பெண்களில் 75 சதவீதத்தினரும் ஆண்களில் 86 சதவீதத்தினரும் பாலுறவுகொள்வதில் மும்முரமாக இருக்கின்றனர். பீதியுண்டாக்கும் மற்றொரு புள்ளிவிவரம்: பருவ வயதினரில் கிட்டத்தட்ட ஐந்திலொருவர் நான்குக்கும் மேற்பட்ட கூட்டாளிகளோடு உடலுறவை அனுபவித்திருக்கின்றார். ஆம், அதிகமதிகமான இளைஞர் திருமணத்திற்கு முன்பே உடலுறவில் ஈடுபடுகின்றனர், அதுவும் எப்போதும் இருந்ததைப் பார்க்கிலும் இளைய வயதிலேயே தொடங்குகின்றனர்.
மற்ற தேசங்களிலும் இக்காட்சி அவ்வளவு கோரமானதாக இல்லாமலில்லை. லத்தீன்-அமெரிக்க தேசங்களில், பருவ வயது இளைஞரில் முக்கால் பாகத்தினர் வரை திருமணத்திற்குமுன்பே உடலுறவில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸ் வைரஸிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் முயற்சியில் அநேக ஆண்கள் பருவ வயது மங்கையரைத் தங்களுடைய உடலுறவு கூட்டாளிகளாகத் தெரிந்துகொண்டிருப்பதாக அறிக்கை செய்யப்படுகின்றனர். அதன் விளைவு? பருவ வயது ஆப்பிரிக்க மங்கையர் மத்தியில் எய்ட்ஸ் நோயாளிகளின் திடீர் அதிகரிப்பு.
எய்ட்ஸ் நோயின் பரவுதல் அழிவுக்குரிய இந்த நடத்தையின் போக்குமுறையை நிறுத்த ஒன்றும் செய்துவிடவில்லை. லத்தீன்-அமெரிக்க தேசம் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்களேன். “பாலுறவுகொள்வதில் மும்முரமாக இருக்கும் திருமணமாகாத இளைஞரில்,” 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் “எய்ட்ஸ் வைரஸைப் பெற்றுக்கொள்ளும் அதிக அபாயத்தைக் கொண்டிருக்கின்றனர்.” எனினும், 10 சதவீதத்திற்கும் குறைவானவரே தாங்கள் தனிப்பட்ட விதத்தில் அபாயத்தில் இருப்பதாக உணருகின்றனர். ‘எனக்கெல்லாம் அந்த நோய் வராது,’ என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்கின்றனர். ஆனால் இந்த நாடு “அமெரிக்க நாடுகளிலேயே மிக உயர்வான HIV தொற்றுதல் வீதங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது.”—ஐ.மா. நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள்.
அது வந்துவிடலாம்!
பாலின ஒழுக்கக்கேட்டின் “முடிவோ எட்டியைப்போல” கசக்கும் என்ற பைபிளின் எச்சரிக்கை வாஸ்தவம் தான் என்பதை எய்ட்ஸ் கொள்ளைநோய் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. (நீதிமொழிகள் 5:3-5; 7:21-23) சந்தேகமின்றி, பைபிள் முக்கியமாக ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சிசம்பந்தமான கெடுதிகளைக் குறிக்கிறது. ஆனால் பாலின ஒழுக்கக்கேடு சரீரப்பிரகாரமாகவும் அநேக பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது நமக்கு ஆச்சரியமானதாக இருக்கவேண்டியதில்லை.
ஆகவே இளைஞர் எய்ட்ஸ் மற்றும் இதர பாலுறவு நோய்களைப் பெற்றுக்கொள்ளும் அபாயத்தை நடைமுறையாக தவிர்ப்பது இன்றியமையாததாக இருக்கிறது. எய்ட்ஸ் ‘எனக்கு வராது’ என்ற சுய-திருப்தி மனநிலை மரணத்துக்கேதுவானதாக நிரூபிக்கலாம். “நீங்கள் பதினைந்து அல்லது பதினாறு அல்லது பதினேழு, பதினெட்டு, பத்தொன்பதும்கூட, அல்லது இருபது வயதாயிருக்கும்போது, நீங்கள் எளிதில் ஆளாக மாட்டீர்கள் என்று எண்ண விரும்புகிறீர்கள்,” டேவிட் என்ற பெயருடைய ஓர் இளைஞன் சொன்னான். எனினும், உண்மையோ அதற்கு எதிர்ப்பதமாக நிரூபிக்கிறது. டேவிட் 15 வயதில் எய்ட்ஸ் வைரஸைப் பெற்றுக்கொண்டான்.
வெளிப்படையாக சொன்னால்: நீங்கள் சட்டவிரோதமான போதை மருந்துகளை உபயோகித்தால் அல்லது திருமணத்திற்குமுன்பே உடலுறவில் ஈடுபட்டால், நீங்கள் அபாயத்தில் இருக்கிறீர்கள்! “அபாயமற்ற பாலுறவு” (safe sex) கொள்ளலாம் என்று கூறப்படுவதைப்பற்றி என்ன? இந்தக் கொள்ளைநோயிலிருந்து ஒருவர் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் நடைமுறையான வழிகள் உள்ளனவா? இந்தத் தொடர்வரிசையில் வெளியாகும் எங்களுடைய அடுத்தக் கட்டுரை இந்தக் கேள்விகளை அலசி ஆராயும். (g93 8/22)
[பக்கம் 14-ன் பெட்டி]
பாலுறவால் கடத்தப்படும் மற்ற நோய்கள்
எய்ட்ஸ் தலைப்புச்செய்திகளில் இடம்பெற்றுள்ளது. எனினும், தி மெடிகல் போஸ்ட் இவ்வாறு எச்சரிக்கிறது: ‘கனடா வளரிளமைப் பருவ STD கொள்ளைநோயின் [பாலுறவு கொள்வதால் கடத்தப்படும் நோய்] மத்தியில் இருக்கிறது.’ கனடா மட்டுமல்ல. “ஒவ்வொரு ஆண்டும் 2.5 மில்லியன் ஐ.மா. பருவ வயதினர் STD நோயால் தொற்றப்படுகின்றனர்,” என்று ஐ.மா.-வைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள சென்டர் ஃபார் பாபுலேஷன் ஆப்ஷன்ஸ் கூறுகிறது. “இந்த எண்ணிக்கை பாலுறவுகொள்வதில் மும்முரமாக இருக்கும் பருவ வயதினரில் தோராயமாக ஆறிலொருவரையும் தேசீய STD நோயாளிகளில் ஐந்திலொருவரையும் குறிக்கிறது.”
உதாரணமாக, அடியோடு அழியப்போகிறது என்று ஒரு காலத்தில் கருதப்பட்ட, மேகநோய் (syphilis) சமீப வருடங்களில் மறுவிஜயம் செய்து, பதிவுகள் ஏற்படுத்தக்கூடிய எண்ணிக்கைகளில் இளைஞரைப் பலியாக்கிற்று. மேகவெட்டைநோயும் (gonorrhea) க்ளேமீடியா என்ற நோயும் (ஐக்கிய மாகாணங்களில் மிகவும் பரவலாகக் காணப்படும் STD நோய்கள்) அதேபோல் அவற்றை ஒழிப்பதற்கான முயற்சிகளையெல்லாம் குறிப்பிடத்தக்க வகையில் எதிர்ப்பனவாக நிரூபித்தன. நோய்த் தொற்றுதலின் மிக அதிக வீதங்கள் வளரிளமைப் பருவத்தினர் மத்தியில் காணப்படுகிறது. அதைப்போன்றே தி நியூ யார்க் டைம்ஸ் முண்டுப்புற்றால் (genital warts) பாதிக்கப்பட்ட பருவ வயதினரின் எண்ணிக்கையில் “ஒரு திடீர் அதிகரிப்பை” அறிக்கை செய்கிறது. இளைஞரில் ஆயிரக்கணக்கானோர் அக்கி வைரஸைக் கொண்டிருக்கின்றனர். சயன்ஸ் நியூஸ் சொல்கிறபடி, “இனப்பெருக்க உறுப்புகளில் அக்கி வைரஸைக் கொண்டிருப்பவர்கள், எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் [HIV] வைரஸால் தாக்கப்படக்கூடிய அதிக வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றனர்.”
சென்டர் ஃபார் பாபுலேஷன் ஆப்ஷன்ஸ் கூறுகிறது: “மற்றெல்லா வயது தொகுதியினரையும்விட வளரிளமைப் பருவத்தினர் STD நோய்களால் அதிக வீதங்களில் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் மருத்துவ கவனத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவே. STD நோய்களைக் கண்டுபிடித்து சிகிச்சையளிக்காமல் விட்டுவிட்டால், இடுப்பறை வீக்க நோய் (pelvic inflammatory disease) கருவுறாமை (infertility) இடம் மாறி கருவுறுதல் (ectopic pregnancy) கருப்பையின் கழுத்துப் புற்றுநோய் போன்ற நோய்கள் மூலம் அதிகமானோரைப் பலியாக்குகிறது.”
[பக்கம் 12, 13-ன் படங்கள்]
சட்டவிரோதமான போதை மருந்துகளை ஏற்றிக்கொள்ளும் அல்லது வரைமுறையற்ற பாலுறவில் ஈடுபடும் ஒருவர், எய்ட்ஸைப் பெற்றுக்கொள்ளும் வினைமையான அபாயத்தில் இருக்கிறார்