எய்ட்ஸ் வளரிளமைப் பருவத்தினருக்கு ஒரு பேராபத்து
எய்ட்ஸ் தொற்றுநோய் வயது அல்லது சந்ததி பிளவு அறியாது. நியூ யார்க் டைம்ஸ் கட்டுரை ஒன்றின் தலைப்பில் அறிவித்த விதமாக, “எய்ட்ஸ் வளரிளமைப் பருவத்தினரிடையே பரவிக்கொண்டிருக்கிறது, நிபுணர்களுக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு புதிய போக்கு” என்பதற்கு உலகளாவிய அறிக்கைகள் துயரமூட்டும் நிரூபணத்தை அளிக்கின்றன. வளரிளமைப் பருவத்தினரிடையே காணப்படும் எய்ட்ஸ் நோய் தொற்றலின் பரப்பெல்லை “அடுத்த பேராபத்தாக இருக்கப்போகிறது” என்பதாக சிகாகோவின் ஒரு பிரபலமான மருத்துவ மையத்தின் இளவயதினர் மருந்து இயக்குநரான டாக்டர் காரி R. ஸ்ட்ரோகாஷ் சொன்னார். “இது பயங்கரமானது மற்றும் நாசகரமானது” என்று அவர் சொன்னார். “ஒரு சந்தேகமும் இல்லை,” என்று டாக்டர் சார்ல்ஸ் விப்பெல்ஸ்மன், சான் ஃபிரான்சிஸ்கோவின் கெய்சர் பெர்மனென்டே மருத்துவ மையத்தின் இளவயதினர் மருத்துவச்சாலையின் தலைவர் புலம்பினார். “1990-களின் எய்ட்ஸ் தொற்றுநோய், ஒரு மருந்து இல்லையென்றால், . . . வளரிளமைப் பருவத்தினரிடையே காணப்படும்.” எய்ட்ஸ் தொற்றிய வளரிளமைப் பருவத்தினரைப் பற்றி பேசும்போது, நியூ யார்க் நகரில் பிரபலமான எய்ட்ஸ் கல்விபுகட்டுபவர் சொன்ன குறிப்பாவது: “இது ஒரு பேராபத்தான அவசர நிலைமை என்று நாங்கள் நினைக்கிறோம்.”
எய்ட்ஸ் வளரிளமைப் பருவத்தினரிடையே பரவுகையில் இதை தடுப்பதற்கான எதிர்பார்ப்பைப் பற்றி தலைப்புவரிகளில் கானடாவின் தி டொரென்டோ ஸ்டார் எழுதியது. “இந்தத் தருணத்தில், எவரும் உணர்வதற்கும் அதிகமாக மோசமானதாயிருக்கிறது” என்பதாக ஒரு மருத்துவர் சொன்னார். “இது ஒரு பயங்கரமான பிரச்னையென்று நினைக்கிறேன். நாம் இதை சமாளிக்க அதிகமாக ஒன்றும் இல்லை. முடிவில் இது எவ்வளவு மோசமானதாக இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கப்போகிறோம்.” எய்ட்ஸ் கொள்ளைநோய் அதிகரித்துக்கொண்டு போகயில் அந்த மருத்துவரின் சாதாரண வார்த்தை உலகம் முழுவதிலுமுள்ள உடல்நல அதிகாரிகள் மற்றும் அரசாங்க தலைவர்களின் ஏகமனதான கருத்தாக மாறிவருகிறது.
சமீப காலம் வரையாக, எய்ட்ஸ் நோயைக் கொண்டு HIV (மானிட எதிர்ப்புசக்தி குறைப்புக் கிருமி) தொற்றும் அதிக ஆபத்தான நிலையில் இளம் வயதினர் இருப்பதைக் குறித்து அதிகமாக எய்ட்ஸ் வல்லுநர்கள் மனதை ஒருமுகப்படுத்தவில்லை. “ஓர் ஆண்டுக்கு முன்புதானே வெறும் கோட்பாட்டளவில் மட்டும்தான் சாத்தியமாயிருந்த ஒன்றைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்பதாக ஒரு நியூ யார்க் மருத்துவர் சொன்னார். இருந்தபோதிலும், “ஓர் ஆண்டிற்கு முன்புதானே தொற்றிய ஒரு வளரிளமைப்பருவ நோயாளியைக் கொண்டிராத மருத்துவர்கள் இப்பொழுது பன்னிரண்டும் அல்லது அதற்கு அதிகமானவர்களைக் கொண்டிருக்கின்றனர்,” என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்தது.
எய்ட்ஸ் கிருமியால் தொற்றப்பட்ட வளரிளமைப்பருவத்தினர் பற்றிய கிடைக்கக்கூடிய தகவல் திகிலூட்டுவதாக இருந்தாலும் தெரிய வந்திருப்பது இன்னும் அதிகம் இருக்கிறது, ஆனால் அவை மறைந்திருக்கிறது என்ற அத்தாட்சிக்கான மங்கலான எல்லைக் கோடுதான், ஏனென்றால், தொற்றப்பட்ட பிறகு அநேகமாக சராசரியாக ஏழு அல்லது பத்து ஆண்டுகள் வரையிலுமாக அறிகுறிகள் தென்படுவதில்லை. ஆகவே, HIV-யால் தொற்றப்பட்ட வளரிளமைப் பருவத்தாரில் முழுவளர்ச்சியான எய்ட்ஸ் அறிகுறிகள் அவர்களுடைய இளவயதின் பிற்பட்ட ஆண்டுகள் அல்லது 20-களின் ஆரம்ப ஆண்டுகள் வரையாக வளர்ச்சியுறுவதில்லை.
உதாரணமாக, 1987-லிருந்து இந்நகரத்தில் நிகழ்ந்த எல்லா பிறப்புகளையும் பற்றிய ஆய்வில் 15-வயது நிரம்பியவர்களுக்குப் பிறந்த குழந்தைகளில் 1000-த்துக்கு 1-ல் எய்ட்ஸ் கிருமியின் எதிர்ப்புப் பொருட்கள் இருந்ததாக நியூ யார்க் நகர உடல்நல இலாகா கண்டுபிடித்ததானது, குழந்தையின் தாய் இந்நோயால் தொற்றப்பட்டிருந்தாள் என்பதைச் சுட்டிக்காண்பித்தது. திகிலூட்டும் விதமாக, அதே ஆய்வு, 19-வயது நிரம்பியவர்களுக்குப் பிறந்த குழந்தைகளில் 100-க்கு 1-ல் எய்ட்ஸ் கிருமியின் எதிர்ப்புப் பொருட்கள் இருந்ததாக வெளிக்காட்டியது. CDC-யால் (வியாதிக் கட்டுப்பாட்டிற்கான ஐ.மா. மையங்கள்) செய்யப்பட்ட மேலுமான ஆய்வு, எய்ட்ஸ் நோய் நிர்ணயம் செய்யப்பட்ட 20 விழுக்காடு அமெரிக்க ஆண்களும் 25 விழுக்காடு பெண்களும் தங்கள் 20-களில் இருக்கின்றனர் என்பதாக வெளிக்காட்டியது. அநேகருடைய விஷயத்தில் இந்த நோய் வளரிளமைப்பருவத்தில் தொற்றப்பட்டதாக CDC-யின் ஆய்வு அறிக்கை செய்கிறது.
ஆனால், எய்ட்ஸ் கிருமியைத் தங்களில் கொண்டிருக்கும் பிள்ளைகள் மிகவும் அபூர்வமாகவே வளரிளமைப்பருவம் வரையில் உயிருடன் இருப்பதால், இது எவ்வாறு கூடியதாகும்? காரணங்கள் நாசகரமானவையாக இருக்கின்றன!
இன்றைய வளரிளமைப்பருவத்தினர் “அவர்களில் உள்ள பாலுறவினால் கடத்தப்படும் நோய்களின் விகிதங்கள் சுட்டிக் காண்பிப்பதுபோல், தீவிரமாக பாலுறவு ஈடுபாடு கொண்டிருக்கின்றனர்” என்று ஆய்வாளர்களும், மருத்துவர்களும் தயங்காமல் சாட்சிக் கொடுக்கின்றனர் என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்தது. ஒவ்வொரு ஆண்டும் 6 வளரிளமைப் பருவத்தினரில் ஒருவர் பாலுறவினால் கடத்தப்படும் நோயினால் தொற்றப்படுகிறார் என்றும் பாலுறவு ஈடுபாடு உள்ள உயர்நிலைப்பள்ளி மாணவிகளில் 6 பேருக்கு ஒருவர் குறைந்தபட்சம் நான்கு வித்தியாசப்பட்ட கூட்டாளிகளை கொண்டிருந்தனர் என்றும் மக்கள் தொக மாற்று பரிகாரங்கள் மையம் அறிக்கையிடுகிறது.
“‘இல்லை என்று சொல்லுங்கள்’ என்ற புத்திமதிகளின் மத்தியிலும் ஒரு நடுத்தர அமெரிக்க இளைஞர் 16-வது வயதில் கற்பிழக்கிறார்” என்பதாக ஐ.மா. செய்தியும் உலக அறிக்கையும் அறிக்கையிட்டது. “சொற்ப எண்ணிக்கையான வளரிளமைப்பருவத்தினரே சோதிக்கப்பட்டதால், தொற்றப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் தாங்கள் HIV கிருமியை உடையவராயிருக்கின்றனர் என்பதை அறியாதிருக்கின்றனர்,” என்று அந்தப் பத்திரிகை சொன்னது. கோகய்ன் போதமருந்துடன் சம்பந்தப்பட்ட கலப்பு பாலுறவு பழக்கம் உடையவர்களாக இருந்தாலும், இல்லாவிடினும், வீட்டிலிருந்து ஓடிப்போனவர்களானாலும், இல்லையென்றாலும், “அமெரிக்காவின் வளரிளமைப்பருவத்தினர் எய்ட்ஸ் நோய்க்கு எளிதில் ஆளாகின்றனர்” என்று ஓர் எய்ட்ஸ் நிபுணர் எழுதினார். “அவர்கள் ஏற்கெனவே ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சம் பாலுறவினால் கடத்தப்படும் நோயை அனுபவிக்கின்றனர்.” CDC-யின் டாக்டர் காரி நோபில் இந்தக் குறிப்பைச் சொன்னார்: “அவர்களுடைய பாலின நடத்தை குறிப்பிடத்தக்கத் தொற்றப்படும் ஆபத்தில் விளைவடைகிறது என்பது நமக்கு தெரியும்.”
எய்ட்ஸ் கிருமி கடத்தப்படுவதற்கான ஏற்கெனவே உள்ள பெருகிக்கொண்டுவரும் வழிகளுக்குக் கூட்டும் வகையில் வீதிகளில் திரியும் இளம் வயதினர், வளரிளமைப்பருவத்தையும்கூட இன்னும் எட்டாதவர்கள் இருக்கின்றனர், அவர்களில் அநேகர் பெற்றோரால் துர்ப்பிரயோகம் செய்யப்பட்டவர்கள். அவர்களில் கோகய்ன் போதமருந்து உபயோகத்திற்குத் திரும்பியவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்திருக்கிறது. அநேகர் தங்கள் பழக்கத்தை ஆதரிக்க அல்லது தூங்க ஓர் இடத்திற்காக விபசாரத் தொழிலுக்குத் திரும்பியிருக்கின்றனர். உதாரணமாக, தென் அமெரிக்காவில், “ஒன்பது மற்றும் 10 வயதே நிரம்பிய பெண்கள் அடிக்கடி விபசாரத்தில் ஈடுபடுகின்றனர், சில சமயங்களில் வெறுமென ஒரு தட்டு உணவிற்காக” என்பதாக பிரேசில் நாட்டு குழந்தைகள் ஆலோசகர் சொன்னார். “அநேகர் எய்ட்ஸ் அல்லது பாலுறவு பற்றி ஒன்றும் அறியாதவர்கள். கர்ப்பிணிகளாக இருந்த பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் தாங்கள் ஜலதோஷம் ‘பிடிப்பது’ போன்று அதையும் பெற்றதாக நினைத்தார்கள்” என்று அவர் சொன்னார்.
வீட்டைவிட்டு ஓடும் வளரிளமைப் பருவத்தினரில் HIV தொற்றும் விகிதம் எய்ட்ஸ் தொற்றுநோயின் தொல்லையைக் கூட்டுவதாக இருக்கும் என்று தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் எய்ட்ஸ் நிபுணரும் மருத்துவத்துறைத் தலைவருமான டாக்டர் பிலிப்பு பிஸ்ஸோ சொன்னார். “பாலுறவு மூலமாக தங்கள் வாழ்க்கையை நடத்தும் பத்து லட்சத்திற்கும் அதிகமான வீட்டைவிட்டோடுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் அநேகர் மறுபடியும் சமுதாயத்தில் ஒருங்கிணைக்கப்படுவர் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை.”
வளரிளமைப் பருவத்தினரிடையே உலகமுழுவதிலும் இந்த எய்ட்ஸ் தொற்றுநோய் பெருமளவில் அதிகரித்துக் கொண்டிருப்பது ஏதாவது வியப்பூட்டுகிறதா? அது ஒரு தடுத்து நிறுத்தமுடியாத போக்கில் சென்றுகொண்டிருக்கிறதா? எய்ட்ஸ் கிருமியால் தொற்றப்பட்டவர்களும் விவாகத்துக்கு முன்னான பாலுறவுக்கு இல்லை என்று சொல்ல முடியாதவர்களும் அசட்டை மனப்பான்மையையும் மெத்தனத்தையும் தொடர்ந்து வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் வரை அது நிலைத்திருக்கும். உதாரணமாக, தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜொஹேனஸ்பர்க்கிலிருந்து வெளிவரும் தி சன்டே ஸ்டார் பத்திரிகையின் இந்த அறிக்கையைக் கவனியுங்கள். பாலுறவினால் கடத்தப்பட்ட நோய்களைக் கொண்ட 1,142 மருத்துவச்சாலை நோயாளிகளிடையே நடத்தப்பட்ட புள்ளி விவர அறிக்கையின் பிரகாரம், 70 விழுக்காட்டினர் ஒரு மாதத்தில் 3 முதல் 80 பாலுறவு கூட்டாளிகளைக் கொண்டிருந்ததாக ஒப்புக்கொண்டனர். சிலர் தொடர்ந்து ஈடுபடுபவர்களாக இருந்து மற்றவர்களுக்குத் தொற்றச் செய்தனர்.
துரதிர்ஷ்டவசமாக, அநேக வளரிளமைப்பருவத்தினர் எய்ட்ஸ் நோயால் தொற்றப்படுவதைக் குறித்து அதிகக் கவலையுள்ளவர்களாக இல்லை. அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் உயிர்வாழ்வது போரட்டமாக இருக்கிறது—வீதியிலே மாண்டுபோக வழிகளோ அநேகம்—இப்போதிருந்து அநேக ஆண்டுகளுக்குப் பின் ஒருவேளை தங்களைக் கொல்லக்கூடியதான ஒன்றில் மனதை ஊன்ற வைக்க அவர்களால் முடிவதில்லை. இடைப்பட்ட காலத்தில், அவர்களைக் காப்பாற்ற, ஒரு பரிகாரம் நிச்சயமாக கண்டுபிடிக்கப்படும் என்று அவர்கள் உணருகின்றனர். “இளம்வயதினர், 10 ஆண்டுகள் முன்னோக்கி பார்க்காத ஒரு தொகுதியின் பிரதான உதாரணம்” என்பதாக ஓர் எய்ட்ஸ் நிபுணர் கூறினார்.
மேலும், தங்கள் பாலுறவு கூட்டாளிகள் தாங்கள் எய்ட்ஸ் கிருமியைக் கொண்டில்லை என்று சொல்லும்போது அவர்கள் பொய் சொல்வதில்லை என்ற வஞ்சிக்கும் தவறான கருத்து அநேகரிடத்தில் இருக்கிறது. காரியம் எப்போதும் அப்படி இருப்பதில்லை. நோயின் முற்றிய நிலைகளிலும் கூட, அநேக பலியாட்கள் கோபம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தினால் மற்றவர்களுக்கு வேண்டுமென்றே தொற்றச் செய்கின்றனர்.
இரத்தக் குழாய் மூலமாக செலுத்தப்படும் மருந்துகளுக்கு உபயோகிக்கப்படும் நோய் தொற்றிய ஊசிகள் மூலமாக கிருமியால் தொற்றப்பட்டவர்களை கவனியாது விடமுடியாது—இந்த வழியில் பலியானவர்கள் ஏற்கெனவே இருக்கின்றனர். கடைசியாக, இரத்தமேற்றுதல்கள் மூலமாக எய்ட்ஸ் தொற்றப்படும் பயம் எப்பொழுதும் இருக்கிறது. அநேக ஒன்றுமறியா பலியாட்கள் இந்த நோயினால் ஏற்கெனவே மரித்திருக்கின்றனர், இன்னும் மற்றவர்கள் HIV அசுத்த இரத்தம் மூலம் மரிக்கவிருக்கின்றனர். அநேக மருத்துவர்களும் தாதிகளும் தங்கள் வாழ்க்கையையே நிரந்தரமாக மாற்றக்கூடியதாக இருக்கிற எய்ட்ஸ் தொற்றிய ஊசிகளால் தங்களைத் தாங்களே குத்திக்கொள்ளும் அபாயத்தைக் குறித்து பயப்படுகின்றனர். 90-களின் மற்றும் அதற்கு அப்பாலும் பேராபத்து எய்ட்ஸ்தான் என்று சொல்லப்படுவதில் ஏதேனும் வியப்பிருக்கிறதா? (g91 7/22)