இளைஞர் கேட்கின்றனர்
எய்ட்ஸ் வருவதை நான் எவ்வாறு தவிர்க்கலாம்?
“நான் இதை நடக்கும்படி அனுமதித்துவிட்டேனே என்று எனக்குக் கோபம் கோபமாக வருகிறது,” என்கிறாள் கே. “நான் செய்துகொண்ட தெரிவுகள், எதிர்காலத்தில் செய்ய எனக்கு உண்டாயிருந்த தெரிவுகளைக் கொள்ளையடித்துவிட்டன.” (நியூஸ்வீக் பத்திரிகை, ஆகஸ்ட் 3, 1992) கே, 18 வயதில் எய்ட்ஸ் வைரஸ் தொற்றியது.
ஐக்கிய மாகாணங்களில் சாவுக்கேதுவான HIV (Human Immunodeficiency Virus) வைரஸால் தாக்கப்பட்ட பத்து லட்சத்துக்கும் அதிகமான ஜனங்களில் கே ஒருத்தி மட்டுமே. இந்த வைரஸ் பேரச்சத்தை ஏற்படுத்தும் எய்ட்ஸ் நோயை உண்டாக்குவதாக மருத்துவர்கள் சொல்கின்றனர்.a எத்தனை இளைஞர் தொற்றப்பட்டிருக்கின்றனர் என்று உண்மையில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இளைஞர் தெளிவாகவே கவலையுள்ளவர்களாய் இருக்கின்றனர். பிரிட்டிஷ் இளைஞர் மத்தியில், எய்ட்ஸ்தான் அவர்களுடைய மிகப் பெரிய கவலையாக இருக்கிறது என்று ஒரு சுற்றாய்வு காண்பித்தது. அத்தகைய கவலை நிலவியிருந்தபோதிலும், “வளரிளமைப் பருவத்தினர் அநேகர் HIV-அபாயம் நிறைந்த நடத்தைகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து தெரிவிக்கின்றனர்,” என்று ஐ.மா. நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் என்ற அமைப்பு சொல்கிறது.
எய்ட்ஸ் எப்போதுமே சாவுக்கேதுவானதுதான், அது கொள்ளைநோய் வீதங்களில் உலகமுழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. நீங்கள் எவ்வாறு உங்களையே பாதுகாத்துக்கொள்ளலாம்?
எய்ட்ஸ்—உண்மையிலிருந்து கட்டுக்கதையைப் பிரித்தறிதல்
ஐ.மா. நோய்க் கட்டுப்பாட்டு மையங்களால் தயாரிக்கப்பட்ட சிறு புத்தகம் ஒன்று விவரிக்கிறது: “HIV தாக்குதல் ‘தானாகவே ஏற்படுவதில்லை.’ சளி அல்லது ஃப்ளூவைப்போல அதை நீங்கள் ‘பெற’ முடியாது.” ஆதலால், எய்ட்ஸ் பலியாட்களோடு நீங்கள் கொண்டிருக்கும் சாதாரண அனுதின தொடர்பு அபாயகரமானதாகத் தோன்றுகிறதில்லை. எய்ட்ஸ் தொற்றப்பட்ட வகுப்புத் தோழனுக்கு அல்லது தோழிக்கு அருகில் ஏதோ உட்காருகிறீர்கள் என்பதனால் எய்ட்ஸ் நோய் வந்துவிடுமோ என்று நீங்கள் கவலைப்படவேண்டாம். HIV காற்றின் மூலம் பரவும் ஒரு வைரஸ் அல்ல. எனவே, எய்ட்ஸ் பலியாள் ஒருவர் இருமிவிட்டால் அல்லது தும்மிவிட்டால் என்றெல்லாம் நீங்கள் கவலைப்படவேண்டாம். உண்மையில், எய்ட்ஸால் துன்பப்படுபவர்களின் குடும்ப அங்கத்தினர், அந்த வைரஸைப் பரப்பாமலேயே துவாலைகள், சாப்பிடும் பாத்திரங்கள் போன்றவற்றையும், பல்துலக்கிகளையும்கூட பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.b
இது ஏனென்றால் மரணத்தை விளைவிக்கும் அந்த வைரஸ் ஒரு நபரின் இரத்தத்திலும், விந்துவிலும், அல்லது புணர்புழை சுரப்புகளிலும் காணப்படுகிறது. அப்படியானால், பெரும்பாலான நோயாளிகளின் விஷயத்தில், பாலுறவு—ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி அல்லது வேற்றினப் புணர்ச்சிc—மூலமே எய்ட்ஸ் கடத்தப்படுகிறது. அடிக்கடி போதை மருந்து துர்ப்பிரயோகத்தில், HIV தொற்றப்பட்ட யாரோ ஒருவரோடு ஊசிகள் அல்லது ஊசிக்குழல்கள் போன்றவற்றைப் பகிர்ந்துகொண்டதால்கூட அநேக பலியாட்கள் தொற்றப்பட்டிருக்கின்றனர்.d மேலும், தீவிர தடுப்புமுறையால் அந்த அபாயம் “கிட்டத்தட்ட நீக்கப்பட்டிருக்கிறது,” என்று மருத்துவர்கள் வலியுறுத்திக் கூறுகின்றனர். இருப்பினும், இரத்தமேற்றுதல்கள் வழியாகவும் எய்ட்ஸ் கடத்தப்படலாம்.
ஆகவே திருமணத்திற்கு முன் பாலுறவிலோ அல்லது ஊசியால் ஏற்றப்படும் சட்டவிரோதமான போதை மருந்துகளோடு சோதனைகளிலோ ஈடுபடும் எவரும் எய்ட்ஸ் தொற்றப்படும் அதிக அபாயத்தில் இருக்கிறார். இதைப் பரப்பக்கூடிய ஒரு பாலுறவு துணை பார்ப்பதற்கு நோயாளியைப் போல் தோன்றாமலிருக்கலாம் என்பது உண்மையே. ஆனால் வாலண்டரி HIV ஆலோசனை வழங்குதலும் சோதனை நடத்துதலும்: உண்மைகள், பிரச்னைகள், பதில்கள் (Voluntary HIV Counseling and Testing: Facts, issues, and Answers) என்ற சிறுபுத்தகம் நினைவுபடுத்துகிறது: “அவனோ அவளோ HIV-யால் தொற்றப்பட்டிருக்கிறார்களா என்று யாரோ ஒருவரைப் பார்த்து உங்களால் கூறமுடியாது. யாரோ ஒருவர் பூரண ஆரோக்கியத்துடன் தோன்றலாம் மற்றும் உணரலாம். ஆனாலும் தொற்றப்பட்டிருக்கலாம். இதன் காரணமாகவே, HIV-யால் தொற்றப்பட்ட பெரும்பாலான ஜனங்கள் அதைப்பற்றி அறிந்திருப்பதில்லை.”
“அபாயமற்ற பாலுறவா”?
ஆகவே அநேக சுகாதார ஊழியர்களும் கல்வியாளர்களும் கருத்தடை உறைகளின் பயன்பாட்டை ஆதரிக்கின்றனர்.e டிவி விளம்பரங்கள், விளம்பரப் பலகைகள் (billboards) பள்ளி போதனைகள் போன்றவை, இக்கருத்தடை சாதனங்களை உபயோகிப்பது பாலுறவை “அபாயமற்றதாக”—அல்லது ஒப்பிடுகையிலாவது “அபாயமற்றதாக” ஆக்குகிறது என்ற செய்தியைப் பரப்பியிருக்கின்றன. சில பள்ளிகள் மாணாக்கர்களுக்குக் கருத்தடை உறைகளை விநியோகித்தும்கூட இருக்கின்றன. இத்தகைய பரப்புதலால் தூண்டப்பட்டு, முன்பு ஒருபோதும் இருந்ததைவிட அதிக எண்ணிக்கையில் இளைஞர், அவற்றை உபயோகித்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்படியே இருந்தாலும், “அபாயமற்ற பாலுறவு” எவ்வளவு பாதுகாப்பானதாக இருக்கிறது? அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு சிற்றேடு சொல்கிறது: “கருத்தடை உறைகள் தொற்றுதலைத் தவிர்ப்பதற்கான உங்களுடைய வாய்ப்புகளை மேம்படுத்தக்கூடும்.” எப்போதுமே சாவுக்கேதுவானதாக நிரூபிக்கும் ஒரு நோயைத் தவிர்க்கும் ‘வாய்ப்புகளை’ வெறுமனே ‘மேம்படுத்துவதால்’ மட்டும் நீங்கள் பாதுகாப்பாக உணருவீர்களா? ஐ.மா. நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் ஒப்புக்கொள்வதாவது: “மரப்பாலால் செய்யப்பட்ட கருத்தடை உறைகள் HIV தொற்றிக்கொள்வதையும் பாலுறவினால் கடத்தப்படும் மற்ற நோய்களையும் தவிர்க்க உதவுவதாகக் காண்பிக்கப்பட்டிருக்கின்றன . . . ஆனால் அவை முற்றிலும் நம்பகரமானவை அல்ல.” உண்மையில், அவை உடலுறவு கொள்ளும்போது பிய்ந்துபோகவோ, கிழியவோ, அல்லது கழன்று வரவோ கூடும். டைம் கூறுகிறதுபோல, கருத்தடை உறைகள் “10% முதல் 15% வரை தவறும் வீதத்தைக் கொண்டிருக்கக்கூடும்”! இவ்வளவதிக தவறுதல் வீதத்தில் உங்கள் உயிரை ஆபத்துக்குள்ளாக்குவீர்களா? காரியங்களை இன்னும் மோசமாக்க, ஐக்கிய மாகாணங்களில் பாலுறவில் மும்முரமாக இருக்கும் இளைஞரில் பாதிக்குக் குறைவானவர்களே கருத்தடை உறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
இதன் காரணமாக, நீதிமொழிகள் 22:3-ன் அறிவுரை பொருத்தமாகவே இருக்கிறது: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.” எய்ட்ஸ் வருவதைத் தவிர்க்கும் மிகச் சிறந்த வழிகளில் ஒன்று போதை மருந்து துர்ப்பிரயோகத்திலிருந்தும், ஒழுக்கக்கேடான பாலுறவிலிருந்தும் முழுவதுமாக விலகியிருத்தலாகும். செய்வதைவிட சொல்வது எளிதுதான் என்பதாக உணருகிறீர்களா? அநேகர், முக்கியமாக இளைஞர் எதிர்ப்படும் பேரழுத்தங்களைக் கவனிக்கையில், அவ்விதம் உணருகின்றனர்.
அந்த அழுத்தங்கள்
‘இளமையின் மலரும் பருவத்தின்’போது, பாலுறவு ஆசைகள் தீவிரமாக எழுகின்றன. (1 கொரிந்தியர் 7:36) இப்போது, தொலைக்காட்சி, திரைப்படங்கள் போன்றவற்றின் செல்வாக்கையும் சேர்த்துக்கொள்ளுங்கள். சில ஆராய்ச்சிகளின்படி, பருவ வயதினர் நாளொன்றுக்கு ஐந்து மணிநேரத்திற்கும் கூடுதலாக டிவி பார்க்கின்றனர்—அதன் பெரும்பகுதி பாலுறவைப்பற்றி விளக்க நிகழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் டிவியின் கனவுலகில், பாலுறவுக்குப் பின்விளைவுகளே கிடையாது. ஐ.மா. தொலைக்காட்சியில் “திருமணமாகாத வேற்றினப் புணர்ச்சி ஜோடிகள் திருமணமான ஆண்களையும் பெண்களையும்விட நான்கிலிருந்து எட்டு தடவைகள் அதிகமாக உடலுறவு கொள்கின்றனர். கருத்தடை சாதனங்கள் பெரும்பாலும் ஒருபோதும் குறிப்பிடப்படுவதில்லை அல்லது உபயோகிக்கப்படுவதில்லை; ஆனால் பெண்கள் அரிதாகவே கருத்தரிக்கிறார்கள். ஆண்களும் பெண்களும், அவர்கள் வேசிகளாகவோ ஒத்த பாலினப் புணர்ச்சிக்காரர்களாகவோ இருந்தாலொழிய, பாலுறவால் கடத்தப்படும் நோய்களினால் பாதிக்கப்படுவதில்லை,” என்பதாக ஓர் ஆராய்ச்சி வெளிப்படுத்திற்று.—சென்டர் ஃபார் பாப்புலேஷன் ஆப்ஷன்ஸ்.
அதிகளவான அத்தகைய ஒளிப்பரப்புகள் உங்களுடைய நடத்தையை உண்மையில் பாதிக்கக்கூடுமா? ஆம், கலாத்தியர் 6:7, 8-ல் உள்ள பைபிள் நியமத்தின்படி: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்.” 400 இளைஞரைக்கொண்டு நடத்திய ஆராய்ச்சி ஒன்று “பாலுறவில் மும்முரமாக இருப்பதற்கு ‘பாலுறவு’ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகளவில் பார்த்தவர்கள் குறைவாக பார்த்தவர்களைவிட அதிக வாய்ப்புக்களைக் கொண்டிருந்தனர்,” என்று கண்டுபிடித்தது.
பலமான மற்றொரு செல்வாக்கு, சகாக்களின் அழுத்தமாகும். “நான் பொருந்துவதற்கேற்ற ஒரு கூட்டத்தைத் தேடிக்கொண்டிருந்தேன், கிடைப்பது கடினமாக இருக்கிறது,” என்று டேவிட் என்ற பெயருடைய ஒரு பருவ வயது இளைஞன் ஒப்புக்கொள்கிறான். “நான் பலமுறை உண்மையிலேயே ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் என்னையே வைத்துக்கொண்டேன். . . . நான் எய்ட்ஸ் உள்ளவனாகக் கண்டுபிடிக்கப்பட்டேன்.” அதைப்போலவே, பைபிள் காலங்களில் வாழ்ந்த இளைஞர் சகாக்களின் அழுத்தங்களுக்கு அடிக்கடி உட்படுத்தப்பட்டனர். பைபிளின் அறிவுரை? “என் மகனே,” நீதிமொழிகளை எழுதியவர் சொன்னார், “பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.”—நீதிமொழிகள் 1:10.
மறுப்புத் தெரிவித்தல்
விலகியிருத்தல் நடைமுறையற்றது என்பதாக ‘அபாயமற்ற பாலுறவின்’ ஆதரவாளர்கள் வாதாடுகின்றனர். ஆனால் இறுதியில், ஒழுக்கக்கேட்டை அசட்டைசெய்ய உண்மையிலேயே அது உதவுகிறதா? “பாலுறவுக்கு வெறுமனே மறுப்புத் தெரிவித்துவிடு; முழுமையானவனாக மற்றும் சுத்தமானவனாக இருப்பதற்கு அது போதும் என்று எங்களிடம் சொல்கின்றனர் ஜனங்கள். அதே நேரத்தில், [கருத்தடை உறைகளை] விநியோகித்துவிட்டுப் பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லாமல் பாலுறவு கொள்வது எப்படி என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றனர்,” என்று கூறுவதன் மூலம், இது இளைஞரைக் குழப்பத்திற்குத்தான் ஆளாக்குகிறது என்று ஒரு பருவ வயதினன் ஒப்புக்கொள்கிறான்.
அத்தகைய ஒழுக்க சம்பந்தமான குழப்பத்திற்கு ஒரு பலியாளாகிவிடாதீர்கள். பைபிள்—பழைய-பாணி என்று தோன்றினாலும்—உங்களை எய்ட்ஸ் தொற்றும் ஆபத்துக்கு உள்ளாக்கும் நடத்தையைத் தவிர்க்கும்படி உங்களைத் துரிதப்படுத்துகிறது. ‘இரத்தத்திலிருந்து விலகியிருப்பதற்கான’ பைபிள் கட்டளைக்குக் கீழ்ப்படிவீர்களேயானால், இரத்தமேற்றுதல் வழியாக உங்களுக்கு எய்ட்ஸ் வராது. (அப்போஸ்தலர் 15:29) ‘போதை மருந்து துர்ப்பிரயோகத்திற்கு’ எதிரான பைபிளின் கட்டுப்பாட்டுக்குச் செவிகொடுங்கள், தோல்வழியாக ஏற்ற பயன்படுத்தும் மாசுபடுத்தப்பட்ட ஊசி ஒன்றின் மூலம் தொற்றிவிடுவதைப்பற்றி நீங்கள் பயப்படவேண்டாம். (கலாத்தியர் 5:20; வெளிப்படுத்துதல் 21:8; தி கிங்டம் இண்டர்லீனியர்) முக்கியமாக பாலின ஒழுக்கத்தைப் பற்றிய பைபிள் நியமங்கள் உங்களைப் பாதுகாக்கும். “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்,” என்று பைபிள் கட்டளையிடுகிறது. “மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.” (1 கொரிந்தியர் 6:18) இந்த எய்ட்ஸ் நெருக்கடி அவ்வார்த்தைகளின் ஞானத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இளைஞன் ஒருவன் ஒழுக்கக்கேட்டிலிருந்து எவ்வாறு “விலகியோட” முடியும்? பல வருடங்களாக “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரைகள் நடைமுறையான அநேக ஆலோசனைகளைக் கொடுத்து வந்திருக்கின்றன. எதிர்பாலர் பழகுவதற்காக தொகுதிகளாக இருக்கும்போது சந்தித்தல், (எதிர்பாலர் ஒருவரோடு ஒதுக்கமான இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு காரிலோ அல்லது ஓர் அறையிலோ அல்லது ஒரு வீட்டிலோ தனிமையிலிருப்பதைப் போன்ற) இணங்கவைக்கும் சூழ்நிலைமைகளைத் தவிர்த்தல், பாச உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதற்கு வரம்பை நிர்ணயித்தல், (அடிக்கடி நல்ல நிதானத்தை இழக்கச் செய்யும்) மதுவிலிருந்து விலகியிருத்தல், காதலுணர்ச்சி தூண்டிவிடப்பட்ட சந்தர்ப்பங்களில் உறுதியாக மறுப்புத் தெரிவித்தல் போன்றவை இவ்வாலோசனைகளில் சில.f என்னவானாலும்சரி சரீரப்பிரகாரமான ஆபத்தை மட்டுமல்ல ஆவிக்குரிய அழிவையும் விளைவிக்கக்கூடிய நடத்தையில் உங்களை வற்புறுத்தும்படி யாருக்கும் இடம் கொடுத்துவிடாதீர்கள். (நீதிமொழிகள் 5:9-14) “உங்களுடைய வாழ்க்கையை மற்றவருடைய கைகளில் ஒப்படைக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்கிறாள் நியூஸ்வீக் கட்டுரை ஒன்றில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த ஏமி என்ற பெயருடைய ஓர் இளம்பெண். உயர்நிலைப் பள்ளி படிப்பை முடிப்பதற்கு முன்பே ஓர் ஆண் தோழனிடமிருந்து HIV-யைப் பெற்றுக்கொண்டாள். அவள் குறிப்பாக கேட்கிறாள்: “அந்தப் பையனோ பெண்ணோ நாம் அவர்களுக்காக மரிக்குமளவுக்குத் தகுதிவாய்ந்தவர்களா? எனக்கு அது சந்தேகம்தான்.” (g93 9/8)
[அடிக்குறிப்புகள்]
a உதாரணமாக, ஆங்கில விழித்தெழு!-வின் ஏப்ரல் 22, 1986; ஏப்ரல் 22, 1989; மற்றும் ஏப்ரல் 22, 1992, இதழ்களில் உள்ள “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரைகளைப் பார்க்கவும்.
b டிசம்பர் 8, 1993 விழித்தெழு! இதழில் தோன்றும் “இளைஞர் கேட்கின்றனர் . . . எய்ட்ஸ்—நான் ஆபத்திலிருக்கிறேனா?” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
c ஐக்கிய மாகாணங்களின் முன்னாள் தலைமை மருத்துவர் டாக்டர் C. எவ்ரட் கூப் இவ்வாறு சொல்வதன் மூலம் சந்தேகப் பேர்வழிகளுக்குப் பதிலளித்தார்: “இந்த நாட்டில் முதல் எய்ட்ஸ் நோயாளிகள் 1981-ல் தெரிவிக்கப்பட்டனர். சாதாரண, பாலுறவற்ற தொடர்பினால் எய்ட்ஸ் கடத்தப்பட்டிருந்தால், இதற்குள் நமக்குத் தெரிந்திருக்கும்.”
d வாய்வழி மற்றும் குதவழி புணர்ச்சியையும் இது உட்படுத்துகிறது.
e ஐ.மா. நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் மேலும் இவ்வாறு எச்சரிக்கிறது: “நீங்கள் காது குத்திக்கொள்ள திட்டமிடுவீர்களானால் . . . , புத்தம்புதிய அல்லது நுண்ணுயிர்கள் நீக்கப்பட்ட உபகரணத்தை உபயோகப்படுத்தும் தகுதிவாய்ந்த ஒரு நபரிடம் செல்வதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். கேள்விகள் கேட்பதற்கு வெட்கப்படாதீர்கள்.”
f FDA கன்ஸ்யூமர் என்ற பத்திரிகை விவரிக்கிறது: “கருத்தடை உறை என்பது முழு ஆண் உறுப்பையும் உள்ளடக்கக்கூடிய ஓர் உறையாகும். இது இரத்தத்தையும், விந்துவையும், அல்லது புணர்புழைத் திரவங்களையும் ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்குக் கடந்துசெல்வதைத் தடைசெய்யும் தடையாக அல்லது சுவராக செயல்படுகிறது. இதன் மூலம் STD-க்கு [பாலுறவினால் கடத்தப்படும் நோய்கள்] எதிராக பாதுகாப்பளிக்கிறது.”
[பக்கம் 17-ன் படம்]
பாலுறவுக்கான வற்புறுத்தலுக்கு இணங்குதல் எய்ட்ஸுக்கு வழிநடத்தலாம்