நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா?
உலகில் இன்று நூற்றுக்கணக்கான மதங்களும், பிரிவுகளும், மதவேறுபாட்டுக் குழுக்களும் இருந்து வருவதால், கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட மதத்தை உங்களால் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ள முடியும்? இது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதுபோல் தோன்றலாம். ஆனால் அதற்காக நீங்கள் ஒவ்வொரு வைக்கோலாக புரட்டிப்புரட்டிப் பார்க்கவேண்டுமா? வேண்டாம். நீக்குதல் முறையை (process of elimination) நீங்கள் பயன்படுத்தலாம். அந்த ‘ஒரே விசுவாசத்தை’ கண்டுபிடிக்க உங்களுக்கு உதவும் காந்தமாக செயல்படுகிறது கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள்.—எபேசியர் 4:5.
இந்தப் பத்திரிகையின் இதற்கு முந்தின ஒரு இதழில் (ஜனவரி 8, 1994, பக்கம் 13, ஆங்கிலம்) “நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா?” என்ற தலைப்பின்கீழ் சாவாமையுள்ள ஆத்துமாவைப் பற்றிய கேள்விகளை சிந்தித்தோம். சாவுக்குப் பிறகு ஆசீர்வதிக்கப்படும் அல்லது துன்பப்படும் சாவாமையுள்ள ஆத்துமா என்ற ஒன்று மனிதனுக்கு இல்லை என பைபிளிலிருந்து நியாயங்காட்டி நிரூபித்தோம். (பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4) இந்த எளிமையான சத்தியத்தை வைத்து, மனிதனுக்குச் சாவாமையுள்ள ஒரு ஆத்துமா உண்டென்று போதிக்கும் எந்த மதத்தையும் நீக்கிவிடலாம். இவ்வாறு நீக்கியபின் கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட மதத்தைத் தேடுவதற்கு வெகு சில மதங்களே மீதியிருக்கும். எனவே பட்டியலை இன்னும்கூட குறைப்பதற்கு உதவும் இன்னும் சில கேள்விகளை நாம் ஆராயலாம். வெறுமனே கீழே இடக்குறிப்பு காட்டப்பட்டிருக்கும் வேதவசனங்களை எடுத்து வாசித்து நியாயங்காட்டுவதன் மூலம் இக்கேள்விகளை ஆராயலாம்.
1.உண்மை வணக்கம் மனித மதத் தலைவர்களை உயர்த்தி, மகிமைப்படுத்தி, அளவுக்குமீறி கனப்படுத்தி, வேதப்பூர்வமற்ற பட்டப்பெயர்களைக்கூட அவர்களுக்குக் கொடுக்குமா?—சங்கீதம் 96:5-7; மத்தேயு 23:6-12; 1 கொரிந்தியர் 3:5-9.
2.தனது தலைவர்கள் சுகபோகமாக வாழவேண்டும் என்பதற்காக, உண்மை மதம் லாபம் சம்பாதிப்பதிலேயே நாட்டமாயிருக்கும் ஒரு வியாபார நிறுவனமாக இருக்கவேண்டுமா?—மத்தேயு 6:19-21; யாக்கோபு 2:1-4; 5:1-3.
3.உண்மை மதத்திற்கு, ஒரேவொரு போதகத்தைமட்டும் வைத்து (பேப்டிஸ்ட், பெந்தெகொஸ்தே என்றும்), தோன்றிய இடங்களை வைத்து (ரோமன், சதர்ன், சர்ச் ஆஃப் இங்லண்ட் என்றும்), தோற்றுவித்த அபூரணரின் பெயராலே (லூத்தர், கால்வின், வெஸ்லி என்றும்) அல்லது அதன் ஆட்சிமுறையை வைத்து (பிரிஸ்பிட்டேரியன், இப்பிஸ்கபல், காங்கிரிகேஷனல் என்றெல்லாம்) பெயர் வைக்கவேண்டுமா?—ஏசாயா 43:10, 12; அப்போஸ்தலர் 11:26.
4.உண்மை மதம், வெளிப்படுத்தப்பட்ட கடவுளுடைய பெயரை மறைக்கவோ மாற்றீடு செய்யவோ முயற்சிக்குமா?—ஏசாயா 12:4, 5, NW; மத்தேயு 6:9; யோவான் 17:26.
5.(அ) உண்மை மதம் பைபிளை எவ்வாறு கருதவேண்டும்? (சங்கீதம் 119:105; லூக்கா 24:44, 45; ரோமர் 15:4; 2 தீமோத்தேயு 3:14-16) (ஆ) பைபிளுக்குப்பின் வெளிப்படுத்தப்பட்டவை என்று அழைக்கப்படுவனவற்றை அது எவ்வாறு கருதவேண்டும்?—கலாத்தியர் 1:8, 9.
6.உண்மை வணக்கத்தார் ரட்சிப்புக்காக எதை மற்றும் யாரை நோக்கியிருக்கிறார்கள்?—சங்கீதம் 27:1, NW; மத்தேயு 6:33; ரோமர் 16:25-27; 1 கொரிந்தியர் 15:27, 28; வெளிப்படுத்துதல் 11:15.
7.உண்மை மதம் அதன் போதனைகளின் விளைவாக எப்படிப்பட்ட நடத்தையைக் காண்பிக்கவேண்டும்?—மத்தேயு 22:37-40; எபேசியர் 4:23-29; கலாத்தியர் 5:19-21-ஐ 5:22, 23-வுடன் ஒப்பிடுக.
8.கடவுளுடைய உண்மை வணக்கத்தாரின் உலகளாவிய சகோதரத்துவம், பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல் மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றில் ஈடுபட்டிருக்குமா?—தானியேல் 2:44; 7:14; யோவான் 18:36; ரோமர் 16:17; 1 கொரிந்தியர் 1:10.
9.கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட வணக்கம், போர்களிலும் இனத்துக்காக அல்லது குலத்துக்காக கொலை செய்வதிலும் ஈடுபடுவதை அனுமதிக்குமா?—யாத்திராகமம் 20:13; ஏசாயா 2:2-4; யோவான் 13:34, 35.
10.உலகமுழுவதிலும் இன்று உண்மைக் கிறிஸ்தவ அன்பைக் காண்பிப்பது யார்? அரசியல், ஜாதி, அல்லது தேசப்பற்றினால் பிரிக்கப்படாதிருப்பது யார்? மனித தலைவர்களை மகிமைப்படுத்தாதிருப்பது யார்? செல்வத்துக்காகவும் பதவிக்காகவும் மக்களைத் தவறாக பயன்படுத்தாதிருப்பது யார்? யுத்தங்களில் பங்கெடுக்காதிருப்பது யார்? பைபிள்பூர்வமான பெயரைத் தாங்கியிருப்பது யார்? மனிதவர்க்கத்தின் பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் நிரந்தர பரிகாரமாக கடவுளுடைய ராஜ்ய ஆட்சியை ஆதரிப்பது யார்?—ஏசாயா 43:10, 12.
நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா? பைபிளின் பதில்கள்
கீழ்க்கண்டவை பக்கம் 20-ல் உள்ள கேள்விகளோடு சேர்த்து எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் வேதவசனங்களில் சில:
1.“விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”—மத்தேயு 23:6-12.
2.“பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்; பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.” (மத்தேயு 6:19-21) “ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள். உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும்.”—யாக்கோபு 5:1-3.
3.“நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார்.” (ஏசாயா 43:10) “முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்கள் தெய்வீக சித்தத்தால் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.”—அப்போஸ்தலர் 11:26, NW.
4.“யெகோவாவைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் பண்ணுங்கள். . . . இது பூமியெங்கும் அறியப்படக்கடவது.” (ஏசாயா 12:4, 5) “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.”—மத்தேயு 6:9.
5.(அ) “கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:15-17) (ஆ) “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.”—கலாத்தியர் 1:8.
6.“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:33) “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்.”—வெளிப்படுத்துதல் 11:15.
7.“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. . . . உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக . . . இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது.” (மத்தேயு 22:37-40) “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.”—கலாத்தியர் 5:22, 23.
8.“இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல.”—யோவான் 18:36.
9.“கொலை செய்யாதிருப்பாயாக.” (யாத்திராகமம் 20:13) “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:34, 35.
10.“நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார்; . . . நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார்.”—ஏசாயா 43:10, 12.