உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 7/22 பக். 21-24
  • என்னை உண்மையில் நேசித்த குடும்பம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • என்னை உண்மையில் நேசித்த குடும்பம்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • என் குடும்பம் என்னை ஒதுக்கித்தள்ளுகிறது
  • இரண்டாவது முறையும் வெளியே எறியப்படுதல்
  • கவர்ச்சிகரமான ஒரு வாய்ப்பு
  • மற்றொரு குடும்பத்தைக் கண்டடைதல்
  • என்னை ஒதுக்கித்தள்ளிய குடும்பத்திற்கு உதவுதல்
  • நானொரு ‘மனந்திருந்திய மைந்தன்’
    விழித்தெழு!—2006
  • பெற்ற தந்தை ஒரு பக்கம், பரம தந்தை மறுபக்கம், நான் யார் பக்கம்
    விழித்தெழு!—1998
  • கடவுளுடைய கவனிப்பினால் நான் எப்படி நன்மையடைந்தேன்
    விழித்தெழு!—1995
  • கடவுளிடம் நெருங்கிவருவது சமாளிக்க எனக்கு உதவிற்று
    விழித்தெழு!—1993
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 7/22 பக். 21-24

என்னை உண்மையில் நேசித்த குடும்பம்

ஒரு குழந்தைக்கு, எந்தக் குழந்தைக்கும் குடும்பம் மிகவும் முக்கியமானது. அனலான, அன்பான ஒரு குடும்பம் குழந்தையின் சரீர மற்றும் உணர்ச்சி சம்பந்தமான தேவைகளை அடைய உதவுகிறது. அது பயிற்றுவிப்பதிலும், கல்விபயிலுவதிலும், வளர்ச்சியிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. அது குழந்தையை பாதுகாப்பாக உணரச்செய்கிறது. என்னைப்போல் உங்கள் குடும்பத்தால் ஒதுக்கித்தள்ளப்படுவது எத்தனை விசனகரமானது!

கிழக்கு நைஜீரியாவில் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தேன். என் தகப்பன் கோத்திரத் தலைவராக இருந்தார், ஏழு மனைவிகளை வைத்திருந்தார். அவர் 30 பிள்ளைகளுக்கு தந்தையானார், அதில் நான் 29-வது.

எனக்குப் பத்து வயதிருக்கும்போது, 1965-ல் ஒருநாள், பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு வந்தேன், தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த என் தந்தையைச் சந்தித்தேன். இரண்டு ஆண்கள், பிரீஃப்கேஸ் தூக்கிக்கொண்டு, வளாகத்தினுள் வந்தார்கள், மகிழ்ச்சியாக வாழ்த்துதல்களைக் கூறியப் பின்னர், தங்களை யெகோவாவின் சாட்சிகள் என்று அடையாளம் காட்டிக்கொண்டார்கள். அவர்கள் கூறியதை என் தகப்பனார் கூர்ந்து கவனித்தார். அவர்கள் இரண்டு பத்திரிகைகளை வழங்கியபோது, அப்பா என்னைப் பார்த்து, எனக்கு வேண்டுமா என்று கேட்டார். நான் தலையை ஆட்டினேன், ஆகவே எனக்கு வாங்கிக் கொடுத்தார்.

சாட்சிகள் மீண்டும் வருவதாக வாக்களித்தார்கள், அவ்விதமே வந்தார்கள். அடுத்த இரண்டு வருடங்கள், என்னோடு பைபிளைக் கலந்தாலோசிக்க வந்தார்கள். ஆயினும், அவர்களுடைய வருகை விட்டுவிட்டு இருந்தது, ஏனென்றால், என் கிராமத்திலிருந்து அவர்கள் வாழும் இடம் பத்து கிலோமீட்டர் தூரத்திலிருந்தது.

என் குடும்பம் என்னை ஒதுக்கித்தள்ளுகிறது

12-வயதுள்ளவனாக இருந்தபோது, அப்பா வியாதியுற்று, மரித்தார். அவருடைய சவ அடக்கத்திற்கு எட்டு நாட்களுக்குப் பின்னர், குடும்பத்தினரை என்னுடைய முதல் அண்ணன் கூடிவர அழைப்பு விடுத்தார். சுமார் 20 பேர் கூடியிருந்தனர். அவர் சவ அடக்கச் செலவைப்பற்றி பேசப்போகிறார் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆயினும், நான் ஆச்சரியம் கொள்ளும் விதத்தில், தன்னுடைய இளைய சகோதரனாகிய என்னைப்பற்றி கலந்தாலோசிக்கத்தான் கூட்டத்தைக் கூட்டியதாக கூறினார்! குடும்பத்தால் எனக்கு சோறுபோட முடியாததைப்போல், நான்கு பென்னிக்கு “பிச்சை” எடுக்கச் செல்வதில் எனக்கு ஆர்வம் உள்ளதாக கூறினார். நான்கு பென்னிக்கு பத்திரிகைகளை விற்க செல்வது, குடும்பத்தின் பெயரை தரையில் போட்டு மாசுபடுத்துவதாகும் என்றும் கூறினார். குடும்பத்துக்குச் சொந்தமாக இருக்க விரும்புகிறேனா அல்லது சாட்சிகளுக்கா என்பதைத் தேர்ந்தெடுக்குமாறு கூறினார்.

என் அம்மா ஏற்கெனவே மரித்துவிட்டார். ஆனால், எனக்காக மாற்றாம் தாய்மார்களுள் ஒருவர் அழுது மன்றாடினார். சொத்தில் என் பங்கு கிடைக்காதிருக்கச் செய்ய, இதை ஒரு சாக்காக அவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று மன்றாடினார். ஆனால் ஒரு பெண்ணின் கருத்து அவர்களுக்கு முக்கியமே அல்ல. குடும்பத்தினர் அண்ணாவின் பக்கம் ஆதரித்தார்கள், என்னிடத்திலிருந்து தீர்மானத்தைக் கோரினார்கள்.

அதைப்பற்றி யோசிக்க அவகாசம் கொடுக்கும்படி கேட்டேன். மறுநாள் மாலைவரைக்கும் அவகாசம் கொடுக்கச் சம்மதித்தார்கள். என்னுடைய அறையில் தனியாக, நான் அழத் துவங்கினேன். பலவீனமாகவும், ஒதுக்கித்தள்ளப்பட்டதாகவும், பயமாகவும் உணர்ந்தேன். எனக்கு என்ன நேரிடும் என்று வியந்தேன்.

அதுவரைக்கும் நான் இராஜ்ய மன்றத்திற்குப் போனதில்லை, சாட்சிகளுடன் பிரசங்கிப்பதிலும் பங்கெடுத்ததில்லை. பைபிள் போதனைகளைப்பற்றி மேலோட்டமான அறிவே இருந்தது, நான் பேசுவதற்குக்கூட என்னுடைய கிராமத்தில் சாட்சிகள் கிடையாது.

நான் யெகோவாவிடம் ஜெபித்தேன், என் வாழ்நாளில் முதல் முறை அவருடைய பெயரைக்கொண்டு அழைத்தேன். அவர் உண்மையுள்ள கடவுள் என்று கற்றுவந்ததாக அவரிடத்தில் கூறினேன். எனக்குப் பக்கத்துணையாக இருக்கும்படிக்கும், அவரை சினமூட்டாத, சரியான முடிவை எடுக்க உதவும்படிக்கும் கெஞ்சினேன்.

அடுத்த நாள் மாலையில், குடும்பத்தினர் குழுமியிருந்தார்கள், என்னுடைய முடிவைக்குறித்து கேட்டார்கள். எனக்கு உயிரைக்கொடுத்த அப்பாதான், நான் சாட்சிகளுடன் படிப்பதை ஆரம்பித்து வைத்தவர். அவர்தாமே, என்னுடைய பத்திரிகைகளுக்கும் பைபிளுக்கும் பணம் கட்டினார். நான் சாட்சிகளுடன் படித்தது, அவரைப் புண்படுத்தவில்லை, இதை ஏன் எனக்கு விரோதமாக அண்ணன் பயன்படுத்துகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று விளக்கினேன். அவர்கள் என்ன செய்தாலும் நான் கவலைப்படவில்லை, நான் யெகோவாவை சேவிக்கவேண்டும் என்று பின்னர் கூறினேன்.

இந்தப் பேச்சைக்குறித்து அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. அவர்களில் ஒருவர் கூறினார்: “நம்மிடத்தில் இப்படி பேசுவதற்கு, யார் இந்தச் சுண்டெலி?” உடனே, என்னுடைய அண்ணன், தடதடவென்று என் அறைக்கு ஓடி, என்னுடைய துணிகளையும், புத்தகங்களையும், அட்டைப்பலகையால் ஆன கைப்பெட்டியையும் வாரியெடுத்து, வெளியே தரையில் எறிந்தார்.

என் கிராமத்தில் வாழ்ந்து வந்த சகமாணவனிடத்தில் தங்க இடம் கிடைத்தது, அவனுடைய குடும்பத்துடன் சுமார் நான்கு மாதங்கள் தங்கினேன். இதற்கிடையே, லாகோஸிலிருந்த என் மாமாவிற்கு எழுதினேன், தன்னுடன் வந்து தங்கும்படி அழைத்தார்.

பல மாதங்களாக, பனைவகை மரத்தின் விதைகளை விற்று, பணம் சேமித்தேன். என் சார்பில் பரிந்து பேசிய மாற்றாந்தாயாரும் எனக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தார். எனக்குப் போதுமானது கிடைத்தவுடன் லாகோஸிற்குப் புறப்பட்டேன். வழியில் கொஞ்ச தூரம், மணலை ஏற்றிச்சென்ற வண்டியில் பயணம் செய்தேன்.

இரண்டாவது முறையும் வெளியே எறியப்படுதல்

நான் லாகோஸ் வந்தபோது, என்னுடைய மாமா சாட்சிகளுடன் படிக்கிறார்கள் என்பதை அறிந்தபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உடனே, ராஜ்ய மன்றத்தில் சபை கூட்டங்களுக்கு ஆஜரானேன். ஆயினும், யெகோவாவைச் சேவிக்கவேண்டும் என்னும் என்னுடைய மாமாவின் அக்கறை, என் மூத்த அண்ணன் பார்க்க வந்தபோது, வேகமாக மறைந்துவிட்டது. நான் தொடர்ந்து சாட்சிகளுடன் தொடர்புகொண்டிருப்பதால், என்னை ஆதரிக்காமல் இருப்பதும், பள்ளிக்குச் செல்ல அனுமதிக்காமல் இருப்பதும் குடும்பத்தினுடைய தீர்மானம் என்று மாமாவிடம் அவர் கூறினார். மாமாவை பயங்காட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

அண்ணன் போய், ஒரு வாரம் கடந்தப் பின்னர், ஒரு நள்ளிரவில், மாமா என்னை எழுப்பி, எழுதப்பட்டிருந்த காகிதம் ஒன்றை என் கையில் திணித்தார். பேனா ஒன்றைக் கையில் கொடுத்து, கையெழுத்து போடும்படி கோரினார். அவருடைய கடுகடுத்த முகத்தைப் பார்த்தப்போது, ஏதோ விபரீதமானது என்பதைத் தெரிந்துகொண்டேன். நான் கூறினேன்: “காலையில் இதற்கு கையெழுத்துப்போட என்னை ஏன் அனுமதிக்கக்கூடாது, மாமா?”

தன்னை “மாமா” என்று அழைக்கவேண்டாம் என்றும், ஆனால் உடனே காகிதத்தில் கையெழுத்துப் போடவேண்டும் என்றும் கூறினார். கொலைகாரனுக்குக்கூட, அவனுக்கெதிராக இருக்கும் குற்றங்களை அறிந்துகொள்ளும் உரிமை உண்டு என்று பதிலளித்தேன். நிச்சயமாகவே, காகிதத்தில் கையெழுத்துப் போடுவதற்குமுன் படிப்பதற்கு எனக்கு உரிமையிருக்கிறது.

பிறகு, வெறுப்புடன் படிப்பதற்கு என்னை அனுமதித்தார். இப்படியாக அது தொடங்கியது: “நான். யூ. யூ. யூடோ, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். என்னுடைய புத்தகப் பைகளையும், புத்தகங்களையும் கொளுத்திவிட ஒப்புக்கொள்கிறேன், யெகோவாவின் சாட்சிகளுடன் எந்தவிதத் தொடர்பையும் என்றுமே வைக்காமலிருக்க வாக்களிக்கிறேன். . . .” சில வரிகளைப் படித்துவிட்டப்பின்னர், நான் சிரிக்கத் துவங்கினேன். உடனே மாமாவிடம், அவரை அவமதிக்க அவ்வாறு செய்யவில்லை என்றும், அத்தகைய ஒரு பத்திரத்தில் கையெழுத்து போட முடியவே முடியாது என்றும் விளக்கினேன்.

மாமா அதிக கோபமாக இருந்தார், வீட்டைவிட்டு வெளியேறும்படி கூறினார். உடனே என் துணிகளையும், புத்தகங்களையும் கைப்பெட்டியில் அடுக்கிவைத்து, அவருடைய அப்பார்ட்மெண்டிற்கு வெளியே நடைபாதையில், தரையில் தூங்குவதற்காகப் படுத்தேன். என்னை அங்கு மாமா பார்த்தபோது, தான் கொடுக்கும் வாடகை, நடைபாதைக்கும் சேர்த்துத்தான் என்று கூறி, கட்டடத்தை விட்டு செல்லும்படி கூறினார்.

கவர்ச்சிகரமான ஒரு வாய்ப்பு

லாகோஸிற்கு நான் வந்து இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியிருந்தது, எங்குச் செல்வதென்றே புரியவில்லை. என்னை ராஜ்ய மன்றத்திற்கு கூட்டிச்செல்லும் சகோதரர் எங்குக் குடியிருக்கிறார் என்றும் தெரியாது. பொழுது விடிந்தவுடன், நடக்க ஆரம்பித்தேன், அலைந்து திரிந்தேன், உதவி செய்யும்படிக்கு யெகோவாவிடம் ஜெபித்தேன்.

அந்த நாளின் கடைசியில், ஒரு பெட்ரோல் பங்க்கில் போய் சேர்ந்தேன். முதலாளியை நான் அணுகி, என்னிடமிருந்து திருடர்கள் திருடாமல் இருக்க, என் கைப்பெட்டியை இரவில் வைத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டேன். இந்தக் கோரிக்கை, நான் ஏன் வீட்டுற்குச் செல்லவில்லை என்பதைக் கேட்பதற்கு ஆவலைத்தூண்ட போதுமானதாக இருந்தது. நான் என்னுடைய கதையைக் கூறினேன்.

அந்த மனிதர் என் மீது இரக்கப்பட்டு, தன் வீட்டு வேலைக்கார பையனாக வேலைகொடுக்க சம்மதித்தார். அவருடைய வீட்டில் உதவி செய்தால், என்னை பள்ளிக்குக்கூட அனுப்புவதாக கூறினார். உண்மையில் அது ஒரு கவர்ச்சிகரமான அளிப்பாக இருந்தது. ஆனால் வீட்டுவேலைக்கார பையனாக இருப்பதென்றால், ஒவ்வொரு நாளும் அதிகாலையிலிருந்து இரவில் வெகுநேரம்வரைக்கும் வேலையை உட்படுத்தும் என்பதை அறிந்திருந்தேன். மேலும் திருடர்களுடன் சேர்ந்துகொண்டு வீட்டைக் கொள்ளையாடி விடுவர் என்ற பயத்தின் காரணமாக, வீட்டு வேலைக்காரப் பையன்கள், வீட்டிற்கு வெளியே உள்ள ஆட்களுடன் கூட்டுறவுகொள்வது தடை செய்யப்பட்டிருந்தது. மிகச் சிறந்த சூழ்நிலையின் கீழும், மாதத்தில் ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமைதான் எனக்கு விடுமுறை. அவர் என்பால் காட்டிய அக்கறைக்கு நன்றி கூறிவிட்டு, அவருடைய அழைப்பைத் தள்ளிவிட்டேன். நான் வீட்டு வேலைக்காரப் பையனாக வேலை பார்த்தால், கூட்டங்களுக்காக ராஜ்ய மன்றம் செல்வது கடினமாக இருக்கும் என்று கூறினேன்.

அவர் கூறினார்: “தங்குவதற்குக்கூட இடமில்லை, எப்படி கூட்டங்களைப்பற்றி உன்னால் பேச முடிகிறது?” நான் கூட்டங்களுக்குச் செல்ல விரும்பாதிருந்தால், என் அப்பா வீட்டிலேயே இருந்திருக்க முடியும். என் மதத்தின் காரணமாகவே, வீட்டிலிருந்து துரத்தப்பட்டேன். அவரிடத்தில் எனக்கு வேண்டியதெல்லாம், கைப்பெட்டியை வைப்பதற்கு ஒரு இடம். அதன்பின், அதைப் பத்திரமாக வைத்திருக்க ஒத்துக்கொண்டார்.

மற்றொரு குடும்பத்தைக் கண்டடைதல்

பெட்ரோல் பங்க்கிற்கு வெளியே மூன்று நாட்கள் தூங்கினேன். உணவு வாங்க என்னிடத்தில் பணமில்லை, ஆகவே அந்தச் சமயத்தில் சாப்பிடுவதற்கு ஒன்றுமே இருக்கவில்லை. நான்காம் நாளில், நான் சுற்றி அலைந்து கொண்டிருந்தபோது, ஒரு இளம் மனிதர் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை தெருவில் ஜனங்களுக்கு அளித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். நான் சந்தோஷமாக அவரிடத்திற்கு ஓடி, சகோதரர் காட்வன் ஈடேவைத் தெரியுமா என்று கேட்டேன். நான் எதற்கு கேட்கிறேன் என்று கேட்டார், ஆகவே எனக்கு நேரிட்ட அனைத்தையும் கூறினேன்.

நான் சொல்லி முடித்தவுடன், உடனே தன்னுடைய பத்திரிகைகளை பையினுள் போட்டுவிட்டு கூறினார்: “ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள், இங்கு லாகோஸில் இருக்கையில் நீங்கள் ஏன் துன்பப்படவேண்டும்?” ஒரு டாக்ஸியைக் கைகாட்டி நிறுத்தி, என்னை ஏற்றிக்கொண்டு, பெட்ரோல் பங்க்கில் என் பெட்டியை எடுக்க கூட்டிச் சென்றார். அடுத்ததாக, தன்னுடைய அப்பார்ட்மெண்டிற்கு கூட்டிச் சென்று, எனக்கு சாப்பாட்டை தருவித்தார். பிறகு சகோதரர் ஈடேவிற்கு ஆள் அனுப்பினார், அவர் அருகில்தான் குடியிருந்தார்.

சகோதரர் ஈடே வந்தவுடன், நான் யாருடன் தங்கவேண்டும் என்று விவாதித்தனர். இருவரும் என்னை வைத்துக்கொள்ள விரும்பினர்! கடைசியாக இருவரும் பங்கிட்டுக்கொள்ள ஒத்துக்கொண்டனர்—பகுதி நேரம் ஒருவருடன் நான் தங்கியிருப்பதற்கும் பகுதி நேரம் மற்றவரிடத்தில் இருப்பதற்கும் ஒப்புக்கொண்டார்கள்.

விரைவிலேயே, தகவலாளராக வேலை கிடைத்தது. முதல் சம்பளத்தை வாங்கியவுடன், இரண்டு சகோதரர்களிடத்திலும் பேசி, உணவுக்கும் வாடகைக்கும் எவ்வளவு கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று கேட்டேன். அவர்கள் சிரித்தார்கள், நான் ஒன்றுமே கொடுக்கத் தேவையில்லை என்றார்கள்.

விரைவில், நான் மாலை வகுப்புக்காகவும் தனிப்பாடங்களுக்காகவும் என் பெயரை பதிவு செய்தேன். இறுதியாக, என்னுடைய அடிப்படைக் கல்வியை முடித்தேன். என் பொருளாதார நிலையும் முன்னேற்றமடைந்தது. செயலாளராக நல்ல வேலை ஒன்று கிடைத்தது, இதற்குள்ளாக எனக்கென இருக்க இருப்பிடத்தைக் கொண்டிருந்தேன்.

ஏப்ரல் 1972-ல் நான் முழுக்காட்டப்பட்டேன். எனக்கு வயது 17. யெகோவா எனக்கு செய்த அனைத்திற்கும் விசேஷமாக அந்த இக்கட்டான சமயத்தில் செய்ததற்காக, என் மதித்துணருதலைக் காட்ட வேண்டி, பயனியர் சேவையில் நுழைய விரும்பினேன். எப்போதெல்லாம் முடிந்ததோ, அப்போதெல்லாம் தற்காலிக பயனியராக சேர்ந்துகொண்டேன். ஆனால் நல்ல நிலைக்கு வர சில ஆண்டுகள் எடுத்தன. இறுதியாக, 1983-ல், ஒரு ஒழுங்கான பயனியராக சேர்ந்தேன்.

அதற்குள்ளாக என்னுடைய ஆவிக்குரிய குடும்பத்தை முழுமையாகப் போற்றினேன். இயேசுவின் வார்த்தைகள் நிச்சயமாக, உண்மையென என்னில் நிரூபணமானது: “தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும், இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”—லூக்கா 18:29, 30.

சாட்சிகள் ஏற்கெனவே என்னிடத்தில் அன்பைக் காட்டி கவனித்துக்கொண்டனர். என்னிடத்தில் சல்லிக்காசுகூட இல்லாதபோது, ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய உதவியாலும், என் பரலோகத் தந்தையின் உதவியாலும், ஆவிக்குரியபிரகாரம் வளம்பெற்றேன். உலகப்பிரகாரமான கல்வியைப் பெற்றுக்கொண்டதுமட்டுமல்ல, யெகோவாவின் வழிகளையும் கற்றுக்கொண்டேன்.

இந்த ஜனங்களைத்தான் ஒதுக்கித்தள்ளும்படி என்னுடைய சொந்தக் குடும்பத்தினர் என்மீது அழுத்தத்தைக் கொடுத்தார்கள். அதை நான் மறுத்துவிடுகையில், என் குடும்பம் என்னை நிராகரித்தது. என் ஆவிக்குரிய சகோதர சகோதரிகள், என் சொந்தக் குடும்பத்தை நிராகரிக்கும்படி இப்போது என்னை உற்சாகப்படுத்தினார்களா? இல்லவே இல்லை. பைபிள் போதிக்கிறது: “மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”—லூக்கா 6:31.

என்னை ஒதுக்கித்தள்ளிய குடும்பத்திற்கு உதவுதல்

நான் வீட்டைவிட்டு வெளியேறியவுடன், நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் மூண்டது. என் கிராமம் பாழாக்கப்பட்டது. என்னுடைய நண்பர்களும் உறவினர்களும் எனக்காக மன்றாடிய மாற்றாந்தாயும் உட்பட பலர் தங்கள் உயிர்களை இழந்தார்கள். பொருளாதாரம் நலிவுற்றிருந்தது.

போர் முடிந்தவுடன், வீட்டிற்கு பயணம்செய்து, நான் சிறுவனாக இருந்தபோது, என்னை வீட்டைவிட்டு வெளியேற்றியதில் பங்குபெற்ற சகோதரரில் மூத்தவர் ஒருவரைச் சந்தித்தேன். அவருடைய மனைவியும் இரண்டு மகள்களும் வியாதிப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவரைக்குறித்து பரிதாபப்பட்டேன், நான் அவருக்கு உதவ என்ன செய்யட்டும் என்று கேட்டேன்.

ஒருவேளை குற்றவுணர்வின் காரணமாகவோ என்னவோ தனக்கு ஒன்றும் தேவையில்லை என்று கூறிவிட்டார். குடும்பம் எனக்கு செய்த காரியத்திற்கு பழிவாங்க வகைதேடுகிறேன் என்று அவர் நினைக்கவேண்டாம் என்று விளக்கினேன். அவர்கள் அறியாமையால் அவ்வாறு நடந்துகொண்டார்கள், நான் உண்மையில் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன் என்று கூறினேன்.

பிறகு அவர் அழத் துவங்கினார், தன்னிடத்தில் பணம் இல்லையென்றும், தன் பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்கள் என்றும் வெளிப்படையாகக் கூறினார். அவருக்கு $300 (ஐ.மா)-க்கு சமமான தொகையைக் கொடுத்து, அவருக்கு லாகோஸில் வேலைபார்க்க விருப்பமா என்று கேட்டேன். நான் லாகோஸ் வந்தவுடன், அவருக்கு வேலையைக் கண்டுபிடித்தவுடன், என்னுடன் வந்து இருக்கும்படி அழைத்தேன். அவர் என்னுடன் இரண்டு வருடங்கள் தங்கி, பணம் சம்பாதித்து, வீட்டில் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அனுப்பினார். அந்தச் சமயத்தில் அவருடைய அறைக்கும் உணவுக்கும் ஆன செலவை மகிழ்ச்சியாகக் கட்டினேன்.

யெகோவாவின் சாட்சிகள் உண்மை மதத்தை அப்பியாசிக்கிறார்கள் என்று தனக்குத்தெரியும் என்று கூறினார். உலகப்பிரகாரமாக அவ்வளவு தூரம் செல்லாதிருந்தால், தானும் ஒரு சாட்சியாக ஆகியிருப்பதாகக் கூறினார். ஆனால், அவருடைய மனைவியும் பிள்ளைகளும் பைபிள் படிப்பைக் கொண்டிருக்க தான் ஏற்பாடு செய்யப்போவதாக வாக்களித்தார்.

1987-ல், வட்டார ஊழியத்தை எடுத்துக்கொள்ளுமாறு அழைக்கப்பட்டேன். ஏப்ரல், 1, 1991-ல் சாரா யூக்பாங்கைத் திருமணம் செய்தேன். 1993-ல் வட்டார ஊழியத்தை விட்டுவிட்டு, நைஜீரியாவின் கிளைக் காரியாலயத்தில் சேவிக்கும்படி நாங்கள் அழைக்கப்பட்டோம். அந்த அழைப்பை ஏற்று, எனது மனைவி கருத்தரிக்கும் வரை அங்குச் சேவை செய்தோம்.

என் குடும்பத்தினர், இளம் பிராயத்தில் என்னைத் தூக்கி எறிந்தாலும், பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள், பிள்ளைகள் அடங்கிய ஆவிக்குரிய குடும்பத்தினரால் அரவணைக்கப்பட்டேன். நான் நேசிக்கும், என்னை நேசிக்கும் பிரத்தியேகமான உலகளாவிய குடும்பத்திற்குச் சொந்தமாக இருப்பது என்னே ஒரு மகிழ்ச்சி!—யூடோம் யூடோ சொன்னபடி.

[பக்கம் 23-ன் படம்]

யூடோமும் சாரா யூடோவும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்