நீர் எருமை—உண்மையுள்ளதும் பயனுள்ளதும்
பிரேஸிலிலுள்ள விழித்தெழு! நிருபர்
‘தப்பியோடுங்க, தப்பியோடுங்க! புலி!’ என்று பையன்கள் சத்தமிடுகிறார்கள். அவர்கள் தங்கள் எருமைகளிடம் ஓடி, அவற்றின் முதுகுகளில் ஏறியமர்ந்து, விரைந்து செல்கிறார்கள். திடீரென்று, அந்தப் பையன்களில் ஒருவனான ஸைட்ஜா, நிலை தடுமாறி நெற்பயிர் வயலுக்குள் விழுந்துவிடுகிறான்—வந்துகொண்டிருக்கும் புலிக்கு இரையாகிவிடுவானென தோன்றுகிறது. என்றாலும், என்ன நடந்தது என்பதை ஸைட்ஜாவின் எருமை உணர்ந்து கொள்கிறது. அது திரும்பிவந்து, தன் அகன்ற உடலைத் தன் சிறிய நண்பன்மீது கூரைபோல் வைத்துக்கொண்டு, அந்தப் புலியை எதிர்ப்படுகிறது. அந்தப் புலி தாக்குகிறது, ஆனால் அந்த எருமை உறுதியாக நின்று ஸைட்ஜாவின் உயிரைக் காப்பாற்றுகிறது.
ஆசியாவில் வாழ்ந்த 19-ம் நூற்றாண்டு எழுத்தாளராகிய ஏடுயார்ட் டாவிஸ் டெக்கரால் விவரிக்கப்பட்ட இந்தச் சம்பவம், நீர் எருமையின் விரும்பத்தக்க பண்பு ஒன்றைக் காண்பிக்கிறது: உண்மைத்தன்மை. இன்றும், உண்மைத்தன்மை அதன் அடையாளக்குறியாக இருக்கிறது. “நீர் எருமையானது வீட்டில் வளர்க்கும் ஒரு நாயைப்போல இருக்கிறது,” என்று ஒரு நிபுணர் கூறுகிறார். “அதை நீங்கள் நன்றாக வைத்திருக்கும் வரையாக, தன் வாழ்நாட்காலம் முழுவதும் உங்கள்பேரில் பாசம் காட்டுகிறது.”
ஆசியாவிலுள்ள பிள்ளைகள், நான்கு வயதாக இருக்கும்போதே, அதை எப்படி வைத்திருப்பது என்று அறிந்திருக்கின்றனர். ஒவ்வொரு நாளும், தங்கள் பெருத்த நண்பர்களை ஆற்றுக்குக் கொண்டுசென்று, அவற்றைக் கழுவிவிடுகின்றனர்; தங்கள் சிறிய கைகளால், அந்த மிருகத்தின் காதுகள், கண்கள், மற்றும் மூக்குத்துவாரங்களைச் சுத்தம் செய்கின்றனர். அதற்குப் பிரதிபலிப்பதாக, எருமையும் திருப்திகரமான பெருமூச்சைவிடுகிறது. அதன் கரிய தோல் அதிக வெப்பத்தை உறிஞ்சுகிறது; மேலும், மற்ற கால்நடைகளுடன் ஒப்பிடுகையில் எருமைக்கு மிகக் குறைவான வியர்வைச் சுரப்பிகள் இருப்பதால், வெப்பத்தைத் தணித்துக்கொள்வது ஒரு பிரச்சினையாக இருக்கிறது. ஆகவே இந்தத் தினசரி குளியல்களை அது விரும்புவதில் ஆச்சரியமேதுமில்லை! “தண்ணீரில் அல்லது சேற்றில் மூழ்கிக்கொண்டு, பாதி மூடிய கண்களுடன் அசைபோட்டுக் கொண்டிருக்கையில்,” எருமைகள் “நிம்மதியின் உருவமாக காட்சி அளிக்கின்றன,” என்று ஒரு ஆதாரமூலம் குறிப்பிடுகிறது.
என்றாலும், தண்ணீருக்கான அவற்றின் விருப்பம், அவற்றின் ஒரு பண்பு மட்டுமே. அவை வேறு என்ன பண்புகளைக் கொண்டிருக்கின்றன? அவை ஏன் உபயோகமுள்ளவையாக இருக்கின்றன? முதலாவதாக, அவற்றின் தோற்றம் எப்படி இருக்கிறது?
உலகெங்கும் காணப்படும் தசைப்பற்றுவாய்ந்த விலங்கு
நீர் எருமை (புபாலஸ் புபாலிஸ்), பெரிய எருதைப் போல காட்சியளிக்கிறது; 900 கிலோகிராம் அல்லது அதற்கு அதிகமான எடையுடையது. கிட்டத்தட்ட வழுக்கையான, கருவெண்மை நிற தோலைக் கொண்டிருக்கிறது. தோள்வரையாக 1.8 மீட்டர் உயரத்துடன், விரிவான கொம்புகளையும், நேரான முதுகையும், நீண்ட உடலையும், தளர்வுள்ள கழுத்தையும், தசைப்பற்றுடைய உடற்கட்டையும் கொண்டுநிற்கையில், அது பலத்தின் காட்சியாக இருக்கிறது. கட்டுறுதிவாய்ந்த கால்கள், சேற்றில் நடப்பதற்கு ஏற்ற காலணிகளை, மிகவும் வளைந்துகொடுக்கும் மூட்டுகளுடன் பொருத்தப்பட்டிருக்கும் பெரிய பெட்டிபோன்ற குளம்புகளைக் கொண்டிருக்கின்றன. அந்த நெகிழ்வுத்தன்மை, எருமை தன் குளம்புகளைப் பின்னால் வளைப்பதற்கும், தடைகளைத் தாண்டிச் செல்வதற்கும், கால்நடைகளால் ஸ்திரமாக கால்களைப் பதிக்க முடியாத சதசதப்பான வயல்களினூடே கால்கள் சேற்றின் ஆழத்திற்குள் புதையாமல் நடந்து செல்வதற்கும் உதவியாக இருக்கிறது.
உலகில் வளர்க்கப்படும் 15 கோடி நீர் எருமைகள் இரண்டு வகைகளைச் சேர்ந்தவை: சதுப்புநில வகையும் ஆற்றுப்பகுதி வகையுமாகும். பிலிப்பீன்ஸிலிருந்து இந்தியா வரையாக, 1.2-லிருந்து 1.8 மீட்டர் நீளமுள்ள, பின்னால் வளைந்திருக்கும் கொம்புகளுடன்கூடிய சதுப்புநில எருமை, பிரபலமான அஞ்சல் அட்டை படமாக இருக்கிறது. நிழற்படம் எடுப்பதற்கான தோரணையில் அது இல்லாதபோது, நெற்பயிரினூடே முட்டளவு ஆழமான சகதிக்குள் அல்லது ட்ரக் ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்ல கஷ்டப்படும் தடங்களில் வண்டிகளை இழுத்துக்கொண்டும் அது இருக்கிறது.
ஆற்றுப்பகுதி நீர் எருமை சதுப்புநில எருமையை ஒத்திருக்கிறது. அதன் உடல் சற்று சிறியதாகவும் அதன் கொம்புகள் ஒப்பிடுகையில் சிறியனவாகவும்—நன்கு சுருண்டு அல்லது நேராகக் குனிந்தவையாகவும்—இருக்கின்றன. ஆனால் அதுவும் 900 கிலோகிராம் எடையுள்ளதாக இருப்பதால், மனதில் பதியத்தக்க தோற்றத்தையும் அளிக்கிறது. பண்டைக் காலத்தில், அரபிய வணிகர்கள் இந்த வகையை ஆசியாவிலிருந்து மத்திய கிழக்கிற்குக் கொண்டுவந்தனர்; பின்னர் சிலுவைப்போர் வீரர்கள் சொந்தநாட்டுக்குத் திரும்பும்போது, அதை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார்கள்; அங்கு அது இன்றுவரையாக காணப்படுகிறது.
நீர் எருமை அதிவேகத்தில் செல்வதில்லை என்றாலும்—அவை நிலையாக ஒரு மணிநேரத்துக்கு மூன்று கிலோமீட்டர் வேகத்தில் மெல்ல நடைபோடுகின்றன—சதுப்புநில மற்றும் ஆற்றுப்பகுதி எருமைகள் உலகெங்கும் காணப்படுகின்றன. வடக்கு ஆஸ்திரேலிய கரையோரங்களில் அவை குடியேறி இருக்கின்றன; பசிபிக் தீவுகளின் கரைகளுக்குச் சென்றிருக்கின்றன; அமேசான் காடுகளுக்குள்ளாகக்கூட புகுந்திருக்கின்றன. அமேசானிலா?
குடியேறிய இடத்தில் செழித்தோங்குபவர்கள்
சூழியலைப்பற்றி கற்பதற்காக அமேசானில் பயணம் செய்கிறவர்கள், கண்ணுக்குப் புலப்படாமல் தப்பித்துக்கொள்ளும் ஜாகுவார்களுக்காக அல்லது பெரிய மலைப்பாம்புகளுக்காக ஆற்றங்கரைகளில் தேடும் முயற்சிகள் வீணாகவே போயிருக்கின்றன. என்றபோதிலும், காட்டில் புதிதாக ஆயிரக்கணக்கில் வந்திருக்கும் நீர் எருமைகளைக் காண அவர்களுக்கு பைனாகுலர்கள் அல்லது கண்ணாடிகள்கூட தேவைப்படுவதில்லை.
ஆசியாவிலிருந்து வந்து குடியேறி அமேசான் சேற்றில் புரண்டுகொண்டிருக்கும் இவை சூழியலை அச்சுறுத்துவதாக நீங்கள் நினைத்தால், ஆற்றின் கழிமுகப் பகுதியிலுள்ள மாராஜோ தீவிலுள்ள காவல் துறையினரிடம் சென்று ஆட்சேபணை தெரிவிக்க நினைக்கலாம். ஆனால் ஜாக்கிரதை! காவல் நிலையத்தைச் சென்றடைந்ததும் உங்களுக்குப் பட்சபாதமற்ற விசாரிப்பு கிடைக்காது; ஏனென்றால், அப்போது பணியிலிருக்கும் காவல் அதிகாரி, அச்சுறுத்தும் ஓர் அரசுப் பணியாளரின் முதுகிலமர்ந்து தெருவில் ரோந்துபணி செய்வதற்கு செல்ல தயாராகிக்கொண்டிருப்பார். நீங்கள் யோசித்தது சரியே, ஒரு நீர் எருமையின் மீது, அதுவும் சதுப்பு நில வகையைச் சேர்ந்த ஒன்றின்மீதே செல்கிறார்! யார்தான் முறையீடு செய்ய துணிவார்கள்?
உண்மையில், நீர் எருமையானது அமேசான் பகுதிக்கு மதிப்பு வாய்ந்த ஒரு ஆஸ்தியாக இருக்கிறது என்று பிரேஸிலிலுள்ள இரண்டு நீர்-எருமை ஆய்வு மையங்களில் பணிபுரியும் கால்நடை மருத்துவரான டாக்டர் பைட்ரோ பாரூசெலி கூறுகிறார். மற்ற கால்நடைகளை மெலிந்தவையாக விடும் புல்வெளிகளில் ஊட்டச்சத்தைப் பெறவைப்பதற்கேற்ற சிறந்த செரிப்பு மண்டலத்தை எருமைகள் கொண்டிருக்கின்றன என்று அவர் விழித்தெழு!-விடம் சொன்னார். கால்நடை மேய்ப்பவர்கள் புதிய புல்தரைகளை உருவாக்குவதற்காகத் தொடர்ந்து காடுகளை வெட்டித்திருத்தவேண்டியதாக இருக்கிறது; ஆனால் அங்கு ஏற்கெனவே இருக்கக்கூடிய புல்தரைகளில் எருமைகள் செழித்தோங்குகின்றன. நீர் எருமைகள், “மழைக்காடுகளைப் பேணிக்காப்பதற்கு உதவலாம்,” என்று டாக்டர் பாரூசெலி கூறுகிறார்.
என்றாலும், காடுகளில் பிழைப்பதற்கு, எருமை உடனுக்குடன் சூழ்நிலைக்கேற்றவாறு தன்னை மாற்றியமைத்துக்கொள்வது அவசியமாக இருக்கிறது—அது அவ்வாறே செய்கிறது. மழைக்காலத்தில் அமேசானின் புல்வெளிகள் வெள்ளத்தில் மூழ்கிக்கிடக்கையில், எருமை அதன் ஈரமான சூழலுக்குத் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது என்று நீர் எருமை: முழுமையாக பயன்படுத்தப்படாத ஒரு விலங்கிற்கு புதிய எதிர்நோக்குகள் என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது. உயர்ந்த மேட்டில் ஆங்காங்கே தனியாக கால்நடைகள் பொறாமையுள்ள கண்களுடனும் காலி வயிற்றுடனும் திரிந்து கொண்டிருக்கையில், அவற்றைச் சுற்றியுள்ள எருமைகள் தண்ணீரினுள் நடந்து, அங்கு மிதக்கும் தழைகளைத் தின்று நீரடியிலுள்ள புல்லைக்கூட மேய்கின்றன. மீண்டும் புல்வெளிகள் தோன்றும்போது, எருமைகள் பழையபடி பளபளப்புடன் காணப்படுகின்றன.
ராணித் தாய்
பிரேஸிலின் மற்ற பாகங்களிலுள்ள நீர் எருமைகளும் நன்கு செழித்தோங்குகின்றன. 1980-களின் ஆரம்பத்திலிருந்தே அந்நாட்டின் மந்தையில் அவற்றின் எண்ணிக்கை நான்கு லட்சத்திலிருந்து 30 லட்சத்திற்கும் மேலாகி முனைப்பாக அதிகரித்திருக்கின்றன. உண்மையில், மற்ற கால்நடைகளைவிட மிக உயர்ந்த வேகத்தில் எருமைகள் அதிகரித்து வருகின்றன. ஏன்?
எருமை இரண்டு வயதில் சினைக்கு வரத் தயாராக இருப்பதாக பிரேஸிலில் எருமை வளர்ப்பவரான வான்டர்லி பெர்னார்டெஸ் விவரிக்கிறார். பத்துமாத கருக்காலத்திற்குப்பின் அது தன் முதல் கன்றை ஈனுகிறது. சுமார் 14 மாதங்கள் கழித்து, இரண்டாம் கன்றை ஈனுகிறது. கன்றுகளின் குறைந்த இறப்பு விகிதம் மற்றும் உயரளவில் நோய் தாங்கும் ஆற்றல் ஆகியவற்றின் காரணமாக எருமைகள் நீண்டகால, சினைக்கு வரும் வாழ்வை அனுபவித்து மகிழ்கின்றன. எவ்வளவு நீண்டகாலம்? சராசரியாக 20-க்கும் மேலான ஆண்டுகள். எந்த அளவுக்கு சினை அடைகின்றன?
சாவோ பாலோவுக்கு சுமார் 160 கிலோமீட்டர் மேற்கிலுள்ள தன்னுடைய 750-ஏக்கர் பண்ணையில் மேடும்பள்ளமுமாக இருக்கிற புல்வெளிகளினூடே நடந்துசென்று, “நான் உங்களுக்குக் காட்டித் தருகிறேன்,” என்கிறார் திரு. பெர்னார்டெஸ். வயதான எருமை என்பதைக் காண்பிக்கும்விதத்தில் சுருங்கிய தோலையும் உடைந்த கொம்புகளையும் உடைய ஒரு விலங்கைச் சுட்டிக்காண்பித்து, பாசவுணர்வுடன், “இது ராயீனா (ராணி),” என்று சொல்லுகிறார். “இதற்கு 25 வயது; பல பேரப்பிள்ளைகளையுடைய பாட்டியாக இருக்கிறது; ஆனாலும், தன்னுடைய 20-வது கன்றை சற்றுமுன்னர்தான் ஈன்றது,” என்று சிரித்துக்கொண்டே மேலுமாகச் சொன்னார். ராயீனாவைப் போன்ற பாட்டிகளைக் கொண்டிருப்பதால், அடுத்த நூற்றாண்டில், உலகிலேயே மிகப் பெரிய எருமை மந்தை, பிரேஸிலில் மேய்ந்துகொண்டிருக்கக்கூடும் என்று சில நிபுணர்கள் முன்னறிவிப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
உயிருள்ள ட்ராக்டருக்கும் மேலான ஒன்று
இப்போதைக்கு இந்த உரிமைபாராட்டல், உலகிலுள்ள எருமைகளில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு உரியது. அங்கும் மற்ற ஆசிய நாடுகளிலும், எருமையின் காரணமாகவே, கோடிக்கணக்கான ஏழை விவசாயக் குடும்பங்கள் குறைந்த பயன்பாடுள்ள நிலத்தில் பிழைக்கின்றன. டீசல் எண்ணெய் மற்றும் உதிரி பாகங்களின் தேவையின்றி அவர்களுடைய “உயிருள்ள ட்ராக்டர்” இழுத்து, உழுது, மண்கட்டிகளை உடைத்து சமப்படுத்தி, ஏற்றிச்சென்று, 20-க்கும் மேலான வருடங்களுக்கு குடும்பத்தை ஆதரிக்கிறது. “என் குடும்பத்துக்கு என்னைவிட எருமை மிக முக்கியமானது,” என்று வயதான ஒரு ஆசிய பெண் சொன்னார். “நான் செத்தால், அவர்கள் எனக்காக அழுவார்கள்; ஆனால் எங்கள் எருமை செத்தால், அவர்கள் பட்டினியாய் இருக்கக்கூடும்.”
ஒரு பண்ணை வேலையாளாக இருப்பது மட்டுமல்லாமல், எருமையானது உணவு அளிப்பவராகவும் இருக்கிறது. இந்தியாவிலுள்ள முழு பால் உற்பத்தியில் சுமார் 70 சதவீதம் ஆற்றுப்பகுதி நீர் எருமையிலிருந்து கிடைக்கிறது; பசும்பால் விற்பனையைக் கடினமாக்கக்கூடிய அளவுக்கு எருமை பால் அதிகமாக விரும்பப்படுகிறது. ஏன் அநேகர் அதை விரும்புகின்றனர்? “எருமை பால், பசும்பாலைவிட குறைந்த தண்ணீரையும், அதிக திண்ம பொருட்களையும், அதிக கொழுப்பையும், சற்று அதிகமான சர்க்கரையையும், அதிகமான புரதப்பொருளையும் கொண்டிருக்கிறது,” என்று நீர் எருமை: முழுமையாகப் பயன்படுத்தப்படாத ஒரு விலங்கிற்கு புதிய எதிர்நோக்குகள் என்ற புத்தகம் விளக்குகிறது. அது அதிக சக்தியை அளிக்கிறது; நல்ல ருசியுள்ளது; மாட்ஸரெல்லா, ரிக்காட்டா, மற்றும் பிற சுவைமிக்க பால்கட்டிகளை உண்டாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
எருமை இறைச்சியைப் பற்றி என்ன? “அதற்கான தேவையை எங்களால் திருப்தி செய்ய முடியவில்லை,” என்று கால்நடை வளர்ப்புப் பண்ணை நடத்துபவரான பெர்னார்டெஸ் சொல்லுகிறார். ருசி தேர்ந்தெடுப்பு பரீட்சைகளில் ஆஸ்திரேலியா, வெனிசுவேலா, ஐக்கிய மாகாணங்கள், இன்னும் மற்ற நாடுகளில் மாட்டு இறைச்சியைவிட எருமை இறைச்சி விரும்பப்பட்டது. உண்மையில், உலகெங்கும் லட்சக்கணக்கான மக்கள், சுவையான மாட்டிறைச்சியைக் கடித்துத் தின்பதாக நினைத்துக்கொண்டிருக்கையில், அவர்கள் பெரும்பாலான சமயங்களில் எருமை இறைச்சியையே சுவைத்துக்கொண்டிருக்கிறார்கள். “அடிக்கடி மக்களுக்கு ஒரு தப்பெண்ணம் இருக்கிறது; ஆனால் பெரும்பாலும் எருமை இறைச்சி, மாட்டிறைச்சியைவிட ருசியாக இருக்கிறது,” என்று டாக்டர் பாரூசெலி குறிப்பிடுகிறார்.
எருமையின் எடையைக் குறைத்தல்
எருமைகள் எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டிருந்தாலும், அது தொந்தரவில் இருக்கிறது. “சினையூட்டும்படி பயன்படுத்த சிறந்தவையாக இருக்கும் பெரிய எருமை கடாக்கள் பெரும்பாலும் சுமை இழுப்பதற்கான மிருகங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்மை நீக்கம் செய்யப்படுகின்றன, அல்லது இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன,” என்று எர்த்ஸ்கான் புல்லட்டின் குறிப்பிடுகிறது. அதனால், பெரிய அளவைப் பெறுவதற்கான மரபணுக்கூறுகள் இழக்கப்பட்டு, எருமைகள் அளவில் குறைந்துவிடுகின்றன. “பத்து வருடங்களுக்கு முன்பு, தாய்லாந்தில் 1,000 கிலோ [2,200 பவுண்ட்] எடையுள்ள எருமையைக் காண்பது சாதாரணமாக இருந்தது; ஆனால் இப்போது 750 கிலோ [1,700 பவுண்ட்] எருமை வகைகளைக் காண்பதே அரிதாக இருக்கிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமா?
ஆம், என்பதாக விலங்கு சம்பந்தப்பட்ட 28 அறிவியலாளர்களால் தொகுக்கப்பட்ட அறிக்கை ஒன்று சொல்லுகிறது; ஆனால், “சிறந்த எருமை வகைகளைப் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைக்க . . . தீவிரமான நடவடிக்கை அவசியம்.” இதுவரையிலுமாக, எருமை அசட்டை செய்யப்பட்டிருக்கிறது, ஆனால், “வளர்ச்சியடைந்துவரும் அநேக நாடுகளுக்கு நீர் எருமையைப்பற்றிய புரிந்துகொள்ளுதல் அருமதிப்புள்ளதாக இருக்கலாம்,” என்று அவர்கள் ஒத்துக்கொள்கின்றனர். அதிகப்படியான ஆய்வு, அதன் “உண்மை குணங்களைத் தெரிந்துகொள்ள” உதவும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஆசிய விவசாயிகள் நூற்றாண்டுகளாக அறிந்திருந்ததை கடைசியாக, உலகெங்குமுள்ள அறிவியலாளர்கள் கண்டுபிடிக்கிறார்கள்: உண்மையும் பயனுமுள்ள நீர் எருமை மனிதனின் மிகச் சிறந்த நண்பர்களில் ஒன்றாகும்.
[பக்கம் 27-ன் பெட்டி]
தவறாக அடையாளங்காட்டப்பட்டிருத்தல்
“நீர் எருமை பகைமைவுணர்ச்சி உள்ளதும் கொடியதுமான விலங்கு என்று பொதுவாக நம்பப்படுகிறது. கலைக்களஞ்சியங்கள் இந்தக் கருத்தை உறுதிசெய்கின்றன,” என்று நீர் எருமை: முழுமையாக பயன்படுத்தப்படாத ஒரு விலங்கிற்கு புதிய எதிர்நோக்குகள் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. என்றாலும், வளர்ப்புக்காகப் பயிற்றுவிக்கப்பட்ட நீர் எருமை “பண்ணை விலங்குகள் அனைத்திலும் மிகச் சாதுவானவற்றில் ஒன்றாகும். அச்சுறுத்தும் தோற்றத்தைக் கொண்டிருக்கிறபோதிலும், வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியைப் போலவே அது பெரிதும் இருக்கிறது—கூடிப்பழகும் இயல்பும், சாந்தமும், அமைதியுமான இயல்புமுடையது.” அவ்வாறிருந்தும், ஏன் இந்தத் தகுதியற்ற பெயரைப் பெற்றது? ஆப்பிரிக்க கேப் எருமையுடன் (சின்சிராஸ் கேஃபர்) இதைக் குழப்பிக்கொள்வதால் இருக்கக்கூடும்; இது தூரத்து உறவாக இருந்தாலும், உண்மையில் சீறிவிழும் இயல்புடையது. இருந்தாலும், நீர் எருமை அவற்றோடு கலப்புறவு கொள்வதில்லை. அப்படிப்பட்ட பண்பில்லாத உறவினர்களை அவை தூரத்தில் வைப்பதையே தெரிந்துகொள்கின்றன.