இதுவும் ஒரு பாரடைஸ்
கனடாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
உயரமான குன்றில் நின்றுகொண்டு, சுற்றி பார்வையை கொஞ்சம் கீழே பாய்ச்சினால், அடேங்கப்பா! சங்கலித் தொடர் போன்ற குன்றுகளும், ஆழமான கிடுகிடு பள்ளத்தாக்குகளும் நிறைந்த இயற்கை காட்சிகள் மனதை அப்படியே கொள்ளைகொள்கின்றன. வானம் கை நீட்டும் தூரம் எங்கெங்கும், பரந்து விரிந்த பசும் புல்வெளி. உங்கள் முன், காற்று சுழன்று சுழன்று வீசி, கடந்துபோகிறது. அந்தக் காற்றில் கலந்து வந்த துளசியின் மணமும் புல்லின் மணமும் மூக்கை முத்தமிட்டு செல்கின்றன.
கற்பனைக்கா பஞ்சம்! சும்மா இருநூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததாக கற்பனை செய்துகொள்ளுங்கள். கனடாவின் கடலென பரந்துகிடக்கும் புல்வெளி எங்கும் மந்தை மந்தையாக மேய்ந்துகொண்டிருக்கும் காட்டெருமைகளை பார்த்துக்கொண்டே, பல நாட்களுக்கு ஜாலியாக பிரயாணம் செய்யலாம். இலட்சக்கணக்கில் காட்டெருமைகள் மேய்வதால், அவற்றின் குளம்பொலிகளால் பூமியே அதிர்வதுபோல் இருக்கிறதா? கடல்போல் விரிந்து கிடந்த இந்தப் புல்வெளியில் மேய்ந்து திரிந்த காட்டெருமைகளுக்கு முன், ஆப்பிரிக்காவில் மந்தை மந்தையாக இடம்பெயர்ந்து செல்லும் விலங்குகள் எம்மாத்திரம்!
இப்போதோ, காட்டெருமைகள் இங்கே இருந்தன என்பதற்கு அடையாங்களாக அவை முதுகை தேய்த்துக்கொண்ட பாறைகளே சாட்சிகள். ஆயிரக்கணக்கான காட்டெருமைகளுக்கு நமைச்சல் எடுத்தபோது, தங்கள் தோல்களை இந்தப் பாறைகளில் வைத்து தேய்த்திருக்கின்றன. அதனால்தான் இந்தப் பாறைகளின் விளிம்புகள் நல்லா மழுமழுவென்று உள்ளன. வேண்டுமென்றால் தொட்டுப்பாருங்கள்! இதோ, பள்ளங்கள்கூட விழுந்திருக்கின்றன, தெரிகிறதா? ஐயோ ஏன் உங்கள் கண்கள் கலங்குகின்றன. மேற்கே இருந்து வீசுகிற பலமான காற்றாலா? இல்லை, இல்லை! உங்களை சுற்றியிருக்கும் இந்த இயற்கை அதிசயங்கள், உங்களை சொக்கவைத்து, மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைப்பதால் கண்ணீர் வடிக்கிறீர்கள். அப்படித்தானே? ஆமாம், இப்போது நீங்கள் வந்திருக்கும் இடம் எதுவென்று உங்களுக்கு தெரியுமா? இது ஒருவகை பாரடைஸ். அதாவது பூங்கா.
இது ஒரு விசித்திர பூங்கா
கனடாவில் சஸ்காட்செவானுக்கு தென்மேற்கே அமைந்துள்ள, கிராஸ்லாண்ட்ஸ் தேசிய பூங்காவுக்கு வருக! வருக! என்று வரவேற்கிறோம். வட அமெரிக்காவில், அழியாமல் பாதுகாக்கப்படுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒரே பூங்கா இது மட்டும்தான். கிழக்குப் பகுதியும் மேற்குப் பகுதியும் சேர்ந்தே உருவானது இந்தப் பூங்கா. இந்த இரு பகுதிகளுக்கும் இடையே 22.5 கிலோமீட்டர் இடைவெளி உள்ளது. இப்படியாக இதன் மொத்த பரப்பளவு 900 சதுர கிலோமீட்டர்.
கரடுமுரடான இவ்விடம், சவால்கள் நிறைந்த இடையூறுகளை உங்கள் முன் வைக்கும். ஆய்வுப்பயணம் போக விரும்பினால், நடராஜா சர்வீஸ் அல்லது குதிரை சவாரி சிறந்தது. நட்சத்திரங்களை விளக்குகளாக ஏந்திநிற்கும் வானத்தின்கீழ் கூடாரம் போட்டு, பல இரவுகளை கழிக்க வேண்டுமென்றால் சாதனை எண்ணமுள்ளவர்களுக்கு இது ஏற்ற இடம். ஆனால் போதுமான தண்ணீரையும், மற்ற அத்தியாவசிய பொருட்களையும் எடுத்துக்கொண்டு போகவேண்டும். (“பூங்காவுக்கு ஆய்வுப்பயணம்” என்ற பெட்டியைக் காண்க.) அப்படி போகும்போது, நவீன கட்டிடங்களை பார்க்க முடியாது. நன்றாக அமைக்கப்பட்ட பாதைகளோ அல்லது கருங்கல் ஜல்லி போட்ட பாதைகளோ இருக்காது. மின் இணைப்புகளும், குப்பைத்தொட்டிகளும், பார்க்கிங் ஏரியாவும் இருக்காது. இவ்வளவு ஏன்? ஒரு மனித ஜீவனைக்கூட பார்ப்பதும் அதிசயம்தான். ஆஹா! உண்மையில் இது விசித்திர பாரடைஸ்தான்! இந்தப் பூங்காவில் நுழைந்துவிட்டீர்கள் என்றால், அழகே உருவான ஓர் உலகில் நீங்கள் நுழைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
வட அமெரிக்காவின் கிரேட் பிளேன்ஸ் (The Great Plains) உலகிலேயே பெருமளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும் சூழியல் அமைப்பாகும் (ecosystems). சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்புவரை இந்த இடம் கைபடாத ரோஜாவாக இருந்தது. இன்றோ, கனடா புல்வெளி நிலத்தில் 25 சதவிகிதத்திற்கும் குறைவான இடமே இன்னும் நவீனமயம் ஆக்கப்படாமல் இருக்கிறது. இந்தப் புல்வெளியைப் பாதுகாத்து, ஒரு பூங்காவாக ஆக்கவேண்டும் என்ற எண்ணம் 1830-ல் உதயமானது. இந்த எண்ணம் உதித்து, நூறு வருடங்களுக்கு மேல் ஓடியபிறகே, 1957-ல் இதை பூங்காவனமாக மாற்றும் பணியை சஸ்காட்செவான் இயற்கை வரலாற்று சங்கம் (Saskatchewan Natural History Society) ஏற்றுக்கொண்டது.
ஆனாலும், 1988-ல், கூட்டாட்சி-மாகாண ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகே கிராஸ்லாண்ட்ஸ் தேசிய பூங்கா உருவானது. அழிந்துவிடும் அபாயத்தில் இருப்பதாக கனடா அரசு அறிவித்திருந்த 22 வகை மரம் செடி கொடிகளுக்கும், பாலூட்டிகளுக்கும், பறவைகளுக்கும் இந்தப் பூங்காவும், கனடாவிலுள்ள மற்ற புல்வெளிகளும் தஞ்சமளித்துள்ளன. மேலும் உலகில் வேறெங்கும் காணப்படாத சிலவகை தாவர இனங்களும், விலங்கினங்களும் இங்குப் பாதுகாக்கப்படுகின்றன.
கிராஸ்லாண்ட்ஸில் சீதோஷ்ணநிலை ஏறுக்குமாறாக இருக்கும். கண்டத்தின் மத்தியில் அமைந்திருப்பதால், வெப்பத்தை தணிக்கும் கடலின் பயன் இதற்கு கிடைப்பதில்லை. அதனால் இங்குக் குளிர்காலத்தில் -50 டிகிரி செல்சியஸ் வரை [-60°F.] குளிர் இருப்பதும், வெயில் காலத்தில் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் [100°F.] வெயில் கொளுத்துவதும் சர்வசாதாரணம். ரொம்ப கொஞ்ச மழை பெய்வதாலும், ஓயாமல் காற்று வீசுவதாலும் கடுமையான சீதோஷ்ணம் நிலவுகிறது.
முதலில் பார்த்தமாத்திரத்தில் காட்டு விலங்குகள் கண்ணுக்குத் தென்படாமல் இருக்கலாம். ஆனால் உள்ளே எக்கச்சக்கமாக வாழ்கின்றன. பொறுமையும், விடாமுயற்சியும் இருந்தால் போதும், உதயமாகும் நேரத்திலும் அந்திசாயும் நேரத்திலும் அவற்றை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். கனடாவிலுள்ள மான், சிறு ஓநாய்கள் (coyotes), காட்டுப்பூனைகள், நீண்ட காது முயல்கள், பெரிய காட்டுக்கோழிகள், சாரைப்பாம்புகள், மறைந்திருந்து பார்க்கும் ஆந்தைகள், அசுர பலத்தோடு பாயும் வல்லூறுகள், தங்க கழுகுகள், கவைக்கொம்பு மறிமான் எனப்படும் அரிய விலங்கு, (pronghorn antelope எனப்படும் இந்த மான், வட அமெரிக்காவிலேயே அதிக வேகமாக ஓடுகிற பெரிய விலங்கு என்று விவரிக்கப்படுகிறது), அல்லது எஞ்சியிருக்கும் கறுப்பு வால் புல்வெளி நாய் கூட்டம் (black-tailed prairie dogs) என இவற்றையெல்லாம் முடிந்தால் உங்கள் கேமராவில் ‘சுட்டுக்கொண்டு’ வரலாம். இந்த இடத்திற்கே உரிய பல பறவைகளையும், பூச்சியினங்களையும், மரம் செடி கொடிகளையும் நீங்கள் கண்டு ரசிக்கலம்.
இதன் விறுவிறுப்பான வரலாறு
இந்த விசித்திர பூங்காவனத்திற்கு வர நீங்கள் முடிவுசெய்திருந்தால், முதலில் இந்த இடத்தைப் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி செய்யும்படி உங்களுக்கு ஊக்கம் தருகிறோம். இந்த இடத்தைப் பற்றி ஏராளமான வரலாறுகள் உள்ளன. வரலாற்றில் இடம்பெற்ற வடமேற்கு சிகப்புக் கோட் குதிரைப்படை போலீஸ் சாலையில் (North West Mounted Police Red Coat Trail) இன்றும் அடையாளக் குறிகள் உள்ளன. 1874-ல் உள்நாட்டில் பழங்குடியினர் கலகத்தில் ஈடுபட்டிருப்பதாக புரளியைக் கேட்டு, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட, கனடா நாட்டு அரசு, முந்நூறு குதிரைப்படை போலீஸாரை மேற்குப் பகுதிக்கு அனுப்பிவைத்தது. இவ்வாறு போலீஸை அனுப்பிவைத்ததால், கனடாவின் மேற்குப்பகுதியை அமெரிக்கா பிடித்துக்கொள்ளப்போகிறது என்ற பலரது பயமும் நீங்கியது. பளிச்சென்ற இரத்த சிகப்பில் கோட்டுகளை அணிந்து, நல்லா மழுமழுவென்று வாரிய குதிரைகள் மேல் ஏறிவந்த போலீஸாரின் காட்சி, பார்த்தவரின் கண்களைப் பறிக்கும் வண்ணம் இருந்தது. அதனால்தான் இந்நாள்வரை அந்தச் சாலை, ரெட் கோட் ஹைவே என்று அழைக்கப்படுகிறது.
பகைவர்களை நடுநடுங்க வைத்த வட அமெரிக்க செவ்விந்திய வீரர்களில் சியோக்ஸ் பழங்குடியின் மாவீரன் சிட்டிங் புல்லும் ஒருவர். 1878-ல் இவ்விடத்தை தனது தாயகமாக ஆக்கிக்கொண்டார். ஜெனரல் கஸ்டர் தலைமையில் வந்த படைகளை சியோக்ஸ் பழங்குடியினர் தோற்கடித்தனர். பிறகு, அமெரிக்க குதிரைப் படையினரிடமிருந்து தப்புவதற்காக ஆயிரக்கணக்கான சியோக்ஸ் பழங்குடியினர் கனடாவின் இந்தப் பகுதிக்கு ஓடிவந்தார்கள்.
இந்தப் பூங்காவில் முக்கியத்துவம் வாய்ந்த பண்டைய இடங்கள் சுமார் 1,800 உள்ளன. இவை ரொம்ப பழமையானவை. மேடுகளிலும், குன்றுகள் மேலேயும், தட்டையான உச்சியுடைய செங்குத்தான தனிக்குன்றுகளிலும் (buttes) பெரிய பெரிய பாறைகளை வட்டமாக அடுக்கி வைத்திருப்பதை நிறைய பார்க்க முடியும். இவை அமெரிக்க இந்திய கூடாரம் (tepee, or tipi) என்றோ, வளையங்கள் (rings) என்றோ அழைக்கப்படுகின்றன. ஒருகாலத்தில், காட்டெருமைகளின் தோலால் ஆன கூடாரங்கள், காற்றில் பறந்துவிடாதபடி இப்பாறைகள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டன. அந்தக் காலத்தில் செவ்விந்தியர்கள் காட்டெருமைகளை வேட்டையாடுவதற்காகவே குறிப்பிட்ட சந்துகளில் துரத்துவார்கள். அத்தகைய சந்துகள் நிறைய இருக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன், குராவான், கிரீ, அசினிபாய்ன், பிளாக்ஃபுட், சியோக்ஸ் போன்ற செவ்விந்திய பழங்குடிகள் நன்கு வேட்டையாடி விளையாடிய பூமி இது.
காலம் என்னும் நதியினிலே இன்னும் பின்னோக்கிப் போனால், காய்ந்து தேய்ந்துபோன களிமண் குன்றுகளான கில்டீர் பாட்லாண்டுகளில் டினோசர்களின் எஞ்சிய பாகங்களை பார்த்திருக்கலாம்.
எங்கும் அழகுமயம்
இங்குக் காணப்படும் எத்தனையோ மரம் செடி கொடிகளும், விலங்கினங்களும், ஆர்வத்தை தூண்டும் வரலாறும் உங்கள் மனதை சுண்டி இழுக்கவில்லை என்றால், கண்ணுக்கு விருந்து படைக்கும் இந்தப் பிரதேசத்தின் அற்புத அழகு உங்களை அப்படியே அள்ளிக்கொண்டு போய்விடும். இங்கே ஆயிரக்கணக்கான பறவைகளின் பாடல்களையும் மூக்கைத் துளைக்கும் துளசியின் மணத்தையும், சூடான வெயிலின் கதகதப்பையும், தழுவிச்செல்லும் காற்றையும் அனுபவிக்கலாம். எங்குப் பார்த்தாலும் இயற்கைக் காட்சிகள் உங்கள் கண்ணுக்கு விருந்துபடைக்க, அதை ரசித்தவாறு, போர்ட்டபில் கியாஸ் ஸ்டவ்வில் சமைத்தால், அதன் ருசியே தனிதான். இவையெல்லாம் போதாதென்று, தொடுவானக் காட்சியை, 360 டிகிரியில் கொஞ்சம்கூட தடையே இன்றி பார்க்க முடியும். அதிலும் குறிப்பாக பூங்காவின் மேற்குப் பகுதியில் கைகாட்டி மரங்கள் நடப்பட்டிருக்கும் டூ டிரீஸ் (Two Trees) சாலை நெடுக இக்காட்சியைக் கண்டுரசிக்கலாம். பரந்து விரிந்து கிடக்கும் நீல வானத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக தொங்கிக்கொண்டிருக்கும் வெண்மேகம், பார்ப்பதற்கு ஊர்ந்து செல்லும் மலையோ என்று நினைக்கத்தோன்றும். கண்ணுக்கு இனிய இயற்கைக் காட்சியைப் பார்த்து, நீங்களும் ஒரு சுதந்தரப் பறவை என்ற எண்ணம் ஏற்படும். அதே நேரத்தில் அதனோடு ஒப்பிடுகையில் நீங்கள் வெறும் சுண்டைக்காய் என்று பிரமித்துப்போய் நிற்பீர்கள்.
இந்தப் புல்வெளியில் நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்பது மட்டும் முக்கியமல்ல, எவ்வாறு உணருகிறீர்கள் என்பதும் முக்கியம். இந்த உணர்வுதான் உங்களை மீண்டும் இந்தப் பூங்காவிற்கு, அதாவது வித்தியாசமான பாரடைஸுக்கு சுண்டி இழுக்கும். இந்த அனுபவத்தால் உங்கள் இதயம் நன்றிப்பெருக்கெடுத்து வழிந்தோடும். இவற்றையெல்லாம் இங்குப் படைத்த படைப்பாளர் யெகோவாவைப் புகழ உங்கள் சிந்தை நிறைந்திருக்கும். இந்த முழு பூமியும் பூங்காவனமாக மாறி, இயற்கை அழகு முழுமையாக பூத்துக்குலுங்கும் காலம் இதோ வந்துகொண்டிருக்கிறது!
[பக்கம் 26-ன் பெட்டி]
பூங்காவுக்கு ஆய்வுப்பயணம்
நினைவில் வைக்கவேண்டியவை
1. பூங்காவில் நுழையுமுன், அதன் பணியாளர்களிடத்தில் பெயர் பதிவுசெய்து, தேவையான தகவல் அடங்கிய பேக்கேஜை பெற்றுக்கொள்ளுங்கள்.
2. போதுமான குடிநீரை எடுத்துச்செல்லுங்கள். பூங்காவின் இன்ஃபர்மேஷன் சென்டரில் மட்டும்தான் குடிநீர் கிடைக்கும்.
3. வெயிலுக்கு தொப்பியைப் போட்டுக்கொள்ளுங்கள். கள்ளிச்செடியின் கூர்மையான முள்ளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நல்ல ஸ்ட்ராங்கான, வசதியான ஷூக்களை முழங்கால் வரை அணியவும்.
4. ஒரு கம்பையும் எடுத்துக்கொள்ளுங்கள். உயரே வளர்ந்திருக்கும் புல்லுக்கிடையேயும், புதர்களுக்கிடையேயும் செல்லும்போது, கம்பால் தட்டிக்கொண்டே நடக்கவும்.
5. உங்களிடம் கேமராவும் பைனாகுலர்களும் இருந்தால் உடன் எடுத்துச்செல்லுங்கள். விடியற்காலையும், அந்திசாயும் மாலையும் விலங்குகளைப் பார்க்க ஏற்ற நேரம்.
எச்சரிக்கை: முன்பின் தெரியாத இடத்தில் கைகாலை விடாதீர்கள். சாரைப்பாம்புகளுக்கு தப்பிக்கொள்ள வழியில்லையென்றால், அல்லது அவை திடீரென்று அதிர்ச்சியடைந்துவிட்டால் ஒருவேளை கடித்துவிடும். இந்தப் பூங்காவில் வனவிலங்குகளை துன்புறுத்துவதும், வேட்டையாடுவதும் சட்டவிரோதம்.
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
எல்லா படங்களும்: Parks Canada