உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g01 6/8 பக். 24-27
  • கானாவுக்கு ஒரு சிற்றுலா

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கானாவுக்கு ஒரு சிற்றுலா
  • விழித்தெழு!—2001
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மோலி தேசிய பூங்காவில்
  • சந்தை வெளியில்
  • பிரியாவிடைப் பெறுவதற்கு நேரமாகிவிட்டதா?
    விழித்தெழு!—1990
  • அமைதியான திண்தோல் விலங்கை பாதுகாத்தல்
    விழித்தெழு!—1993
  • தந்தம்—எந்தளவு மதிப்புமிக்கது?
    விழித்தெழு!—1998
  • ஷோப் நதியில் எங்கள் படகுச்சுற்றுலாவில் எங்களைச் சேர்ந்துகொள்ளுங்கள்
    விழித்தெழு!—1992
மேலும் பார்க்க
விழித்தெழு!—2001
g01 6/8 பக். 24-27

கானாவுக்கு ஒரு சிற்றுலா

கானாவிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்

காரிருளும் பனியும் கதிரவனுடைய வரவுக்கு பயந்து வழிவிடும் நேரம், நாங்கள் கானாவின் தென்பகுதியிலுள்ள மோலி தேசிய பூங்காவிற்குச் செல்லும் மண்சாலையில் 80 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் மெதுவாக பயணிக்கிறோம். எங்களை சுற்றிலும் இயற்கையின் எழில்​—⁠கண்ணுக்கு குளுமையூட்டும் பசும் புல்கள், புதர்கள், குறுமரங்கள். எங்களை வரவேற்க, வைக்கோலால் கூரை வேயப்பட்ட களிமண் குடில்கள் நிறைந்த குக்கிராமங்கள் ஆங்காங்கே.

நாங்கள் டாமாங்கோ என்ற இடத்தை அடையும்போது ஆ, எவ்வளவு வித்தியாசம்​—⁠கடைகண்ணிகளும் தார் பூசிய சாலைகளும் போக்குவரத்து நெரிசலும் சந்தடியுமிக்க ஓர் சிற்றூர் அது! சாயத்தை சீண்டாத கம்பளித் துணியும் காப்பி கலரில் சீருடையும் அணிந்துகொண்டு சிட்டாக பள்ளிக்குச் செல்லும் சிறுவர் சிறுமியர். வானவில்லை உடுத்திய மங்கையர் தங்களுடைய தலையில் விறகுகளையோ உணவுப் பண்டங்களையோ தண்ணீர் ததும்ப குடங்களையோ தூக்கிச் செல்லும் காட்சி. மிதிவண்டிகளும், பாம்ப் . . . பாம்ப் . . . என ஓசை எழுப்பிக்கொண்டு செல்லும் கார்களும் டிராக்டர்களும் எங்கள் கண்ணில் பட்டு மறைகின்றன. நாங்கள் இன்னும் 20 கிலோமீட்டர் செல்ல வேண்டும்.

மோலி தேசிய பூங்காவில்

கடைசியில், நாங்கள் பூங்காவை அடைகிறோம்! மோலி சரணாலயம் 1971-⁠ல் பிறந்தது, 4,840 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறது என்று அதன் சரித்திரத்தை கொஞ்சம் அள்ளிவிடுகிறார் சகரியா​—⁠இவர்தான் எங்களுடைய வழிகாட்டி. இந்தப் பூங்காவில் 93 வகை பாலூட்டிகளும், 9 வகை நில நீர்வாழ் உயிரினங்களும், 33 வகை ஊர்வனவும் இருக்கின்றன. சிங்கங்கள், சிறுத்தைகள், புள்ளியிட்ட கழுதைப்புலிகள், புனுகுப் பூனைகள், யானைகள், ஒருவகை மறிமான்கள், குட்டையான காட்டெருதுகள், காட்டுப் பன்றிகள், நீர்நிலை மான்கள், டியூக்கர்ஸ் மான்கள், காட்டுப் பூனைகள், தென் ஆப்பிரிக்க மான்கள், கீரிப்பிள்ளைகள், பபூன் குரங்குகள், இன்னும் பல குரங்குகள், செந்நிற மறிமான்கள், முள்ளம் பன்றிகள், முதலைகள், பாம்புகள், மலைப்பாம்புகள் ஆகியவையும் இங்கே குடித்தனம் நடத்துகின்றன. இவற்றை தவிர, 300-⁠க்கும் அதிகமான பறவை இனங்களும் இங்கு வந்து போவதுண்டு.

முழங்கால் வரை உயர்ந்திருந்த புல்வெளிகளில் நாங்கள் செல்கையில் பசிகொண்ட கருமைநிற பூச்சிகளை அடித்துக்கொண்டே செல்கிறோம், இப்பொழுது நாங்கள் மான்கள் நடத்தும் மாநாட்டிற்கு அருகில் வருகிறோம். அவற்றின் வண்ணங்கள் இயற்கையோடு இழைந்திருப்பதால், முதலில் அவை கண்ணில் படுவதே கடினமாக இருக்கிறது. நாங்கள் அவற்றை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறபோது, அவையும் எங்களையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு அந்த மான்கள் கவர்ச்சியாக இருக்கிறது போல நாங்களும் அந்த மான்களுக்கு கவர்ச்சியாக இருக்கிறோமோ? நாங்கள் ‘கிளிக்’ செய்கையில், எங்களுக்கு வலப்பக்கத்திலிருந்து வந்த பெரும் உறுமலை கேட்டு திடுக்கிடுகிறோம். ஒரு பெரிய ஆண் மான்​—⁠அதன் தனிமையை கெடுக்க நாங்கள் அத்துமீறி நுழைந்ததை ஆட்சேபித்து​—⁠புதருக்குள் ஓடி மறைகிறது.

ஒரு பெரிய மரத்திற்குக் கீழே நான்கு பெரிய யானைகளைப் பார்க்கிறோம். தும்பிக்கையால் கிளைகளை ஒடித்து, இளந்தளிர்களை வயிற்று பையிற்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றன. நாங்கள் இன்னும் பக்கத்தில் நெருங்குகிறோம், 10 மீட்டர் தூரத்தில் இருக்கும்போது, ‘ஷூட்’ பண்ணும்படி சகரியா எங்களை உற்சாகப்படுத்துகிறார்​—⁠கேமராவில். அவர் தன்னுடைய துப்பாக்கியின் அடிப்பாகத்தை தட்டுகையில் எழும்பும் உலோக சப்தத்தைக் கேட்டு அந்த யானைகள் மரத்தின் கீழிருந்து சற்று விலகிச் செல்கின்றன. இதனால் இன்னும் நல்ல படங்களை நாங்கள் எடுக்க முடிகிறது. அருகிலிருந்த சேறும் சகதியுமான “நீச்சல் குளத்தைப்” பார்த்து, யானைகள் அங்கே குளிக்க செல்கின்றன. இப்பொழுது, யானைகள் நீராடும் சேற்றின் நிறத்தைப் பொறுத்து அவற்றின் நிறம்​—⁠இயற்கையான கருமை நிறத்திலிருந்து சிகப்பு அல்லது பிரௌன் நிறத்திற்கு⁠—⁠மாறும் என சகரியா சொல்கிறார்.

நாங்கள் இன்னும் சற்றுதூரம் சென்று அந்தப் பூங்காவின் முழு காட்சியையும் கண்டு ரசிக்கிறோம். அங்கே கருவேல மரங்களும் ஷீ மரங்களும் காணப்படுகின்றன. நாங்கள் திரும்புகையில், யானைகள் நடந்துசென்ற அதே பாதையிலேயே வருகிறோம். அவை இன்னும் பல அடி தூரத்தில் இருக்கின்றன, ஆனால் அந்தக் கூட்டத்திலுள்ள மிகப் பெரிய யானை ஒன்று அதன் காதுகளை விறைப்பாக வைத்துக்கொண்டு சண்டைக்கு வருவது போல எங்களை நோக்கி வருகிறது. அது எங்களைத் தாக்கப் போகிறதா?

பயப்பட வேண்டாம் என சகரியா எங்களிடம் சொல்கிறார். அதேசமயத்தில், அவர் தன்னுடைய துப்பாக்கியை தோளிலிருந்து எடுத்துக்கொண்டு யானைகளுடைய பாதையிலிருந்து சற்று தள்ளி எங்களை அழைத்துச் செல்கிறார். நாங்கள் தொடர்ந்து நடந்து செல்கிறோம், வழிகாட்டி தன்னுடைய துப்பாக்கியை​—⁠நாங்கள் எங்களுடைய கேமராக்களை​—⁠தயாராக வைத்துக்கொள்கிறோம். சீக்கிரத்திலேயே நாங்கள் யானைகளின் பார்வையில் படாமல் தப்பிவிடுகிறோம்.

இந்தப் பூங்காவிலுள்ள யானைகள் மனிதரோடு பழக்கப்பட்டிருக்கின்றன, சில யானைகள் பக்கத்தில்கூட வருகின்றன என சகரியா சொல்கிறார். யானைகளை அடிக்கடி பார்ப்பதால், அந்த வழிகாட்டிகள் அவற்றிற்கு பெயர் சூட்டி அழைக்கின்றனர். ஒரு யானையின் தோலில் பெரிய கட்டி இருந்ததால் அதற்கு ‘கட்டி அழகன்’ என்று பெயர். மற்றொரு யானை எப்பொழுதும் சுற்றுலா பயணிகளை பயமுறுத்துவதால் அதற்கு ‘குறும்புக்காரன்’ என பெயரிட்டிருக்கின்றனர்.

அடுத்ததாக, பல பபூன் குரங்குகளை நாங்கள் சந்திக்கிறோம். அவை மரங்களில் “சர்க்கஸ்” செய்வதையும் தரையில் ஓடுவதையும் கவனிக்கிறோம். இரண்டு குட்டிகளை​—⁠ஒன்றை முதுகிலும் மற்றொன்றை மார்பிலும்​—⁠சுமந்துசெல்லும் தாய் பபூனை வழிகாட்டி எங்களுக்கு சுட்டிக் காட்டுகிறார். அவை இரட்டையர்கள் என சொல்கிறார்.

உண்மையிலேயே, நாங்கள் நிறைய வனவிலங்குகளை இன்று பார்த்துவிட்டோம். வறட்சி காலத்தில்​—⁠ஏப்ரல் மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடையே​—⁠வனவிலங்குகளைப் பார்க்க வேண்டுமென்றால் நீர் நிலைகளுக்கு அருகில் ஒருவர் காத்திருக்க வேண்டும், ஏனென்றால் தண்ணீர் குடிப்பதற்கு விலங்குகள் கூட்டம் கூட்டமாக அங்கே வரும் என சகரியா சொல்கிறார். பூங்காவிற்குள் ஃபோர்-வீல்-டிரைவ் வாகனத்தில் சென்றால், வேறு பல விலங்குகளையும்​—⁠எருதுகளையும் சிங்கங்களையும்⁠—⁠பார்க்கலாம் என்றும் அவர் சொல்கிறார்.

இப்பொழுது, மதிய சாப்பாட்டிற்கான நேரம். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, எங்களுடைய காருக்கு பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த திறந்தவெளி காரில் ஒரு பெரிய பபூன் வீறாப்புடன் நின்றுகொண்டு, என்னுடைய சாப்பாட்டையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது. மற்ற பபூன்களும் அதோடு சில மான்களும் காட்டுப்பன்றிகளும் கடந்துசெல்ல, கடைசியில் நான்கு யானைகள் பக்கத்திலுள்ள ஒரு குன்றின் மேல் நிற்பதை பார்க்கிறோம். இந்த விலங்குகளை போட்டோ எடுப்பதற்கு ‘போஸ்’ கொடுக்கும்படி கேட்க இதுவே சிறந்த வழி என நினைக்கிறேன்!

சந்தை வெளியில்

நாங்கள் மோலி தேசிய பூங்காவில் செலவிடும் நேரம் மிக மிகக் குறைவு, ஆனால் நாங்கள் இப்பொழுது மண்சாலை வழியாக இரண்டு மணிநேர பயண தொலைவில் லோபி என்ற விவசாய பழங்குடியினர் வாழும் சோலா என்ற கிராமப்புற நகரத்திற்குச் செல்கிறோம். இந்தப் பழங்குடி பெண்கள் தங்களுடைய உதடுகளை செயற்கையாக பெரிதாக்கும் வினோதமான ஒரு பழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். இளம் பெண்களை நவீன கலாச்சாரம் கவர்ந்திழுப்பதால் இப்பொழுது இந்தப் பாரம்பரியம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது, ஆனாலும் பெரும்பாலான பெண்களுக்கு தங்களுடைய பெரிய உதடுகளைக் குறித்து ஒரே பெருமிதம். ஓர் ஆணைப் போல சிறிய உதடுகள்தான் இருக்கின்றன என்று ஒரு லோபி பெண்ணை பார்த்து சொன்னால் அது அவமானமாக கருதப்படுகிறது.

நாங்கள் ஒரு கிராமத்திலுள்ள சந்தைக்குள் நுழைகிறோம். அங்குள்ள குடிசைகள் மரக் கிளைகள் ஊன்றப்பட்டு ஓலைகளால் வேயப்பட்டிருக்கின்றன. அந்தச் சந்தையிலுள்ள கருப்பு நிற ஆப்பிரிக்கர் அனைவர் மத்தியில் வெள்ளைக்காரர் ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார். நாங்கள் அவரிடம் சென்று பேசும்போது, அவர் லோபி மொழியில் பைபிளை மொழிபெயர்ப்பதற்கு சமீபத்தில் இங்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்கிறோம். அவர்களுடைய மொழியை சரளமாக பேச கற்றுக்கொள்வதற்கு லோபி பழங்குடியினர் வாழும் பக்கத்து கிராமத்திலேயே இவரும் வசிக்கிறார். 19-⁠ம் நூற்றாண்டில், ஸ்வானா மொழி பேசும் தென் ஆப்பிரிக்க மக்கள் வாழும் பகுதியில் ஒரு மத ஸ்தாபனத்தை ஏற்படுத்தி அவர்களுடைய மொழியில் பைபிளை மொழிபெயர்த்த ராபர்ட் மஃபெட் என்பவர் என்னுடைய நினைவுக்கு வந்தார்.

பெரிய உதடுகளைக் கொண்ட ஒரு லோபி மூதாட்டி அந்த சந்தைவெளி குடில்கள் ஒன்றில் பெஞ்சில் அமர்ந்திருக்கிறாள். பெருவிரல் நகத்தின் அளவுள்ள இரண்டு வெண்மையான மர தட்டுகள் அவளுடைய உதடுகளில் போடப்பட்டுள்ள ஓட்டைகளில் செருகப்பட்டிருக்கின்றன. நான் அவளை படம்பிடிக்க விரும்பி என்னுடைய கேமிராவை தூக்கியவுடனே வேறு பக்கம் திரும்பிக் கொள்கிறாள். யாராவது படம்பிடித்தால் அவர்களுடைய ஆத்துமாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை வயதான லோபிகளுக்கு இருப்பதாக என்னுடைய நண்பர்களில் ஒருவர் சொல்கிறார்.

நாங்கள் சோலாவுக்கு திரும்பி வருகையில்​—⁠அங்குதான் நாங்கள் இரவை கழிக்கப்போகிறோம்​—⁠கடவுளுடைய படைப்பில் காணப்படும் ஞானத்தையும் பற்பல உயிரினங்களையும் பற்றி சிந்திக்கிறேன். விலங்குகள், மனிதர்கள் என உயிருள்ள சிலைகளை வடித்த கைதேர்ந்த சிற்பி என்று அவரை சொல்லலாம். “‘[யெகோவாவே], உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது” என்று சங்கீதக்காரன் வியந்து கூறியதைப் போலவே அது இருக்கிறது.​—⁠சங்கீதம் 104:⁠24, பொ.மொ.(g01 5/8)

[பக்கம் 24, 25-ன் தேசப்படம்]

(For fully formatted text, see publication)

கானா

[பக்கம் 24-ன் படம்]

காட்டுப்பன்றி

[பக்கம் 24-ன் படம்]

புள்ளியிட்ட கழுதைப்புலி

[பக்கம் 25-ன் படம்]

யானை

[பக்கம் 25-ன் படம்]

நீர்யானைகள்

[பக்கம் 25-ன் படம்]

மறிமான்களின் மந்தை

[பக்கம் 26-ன் படம்]

இரண்டு குட்டிகளை சுமக்கும் தாய் பபூன்

[பக்கம் 27-ன் படம்]

தென் ஆப்பிரிக்க மான்

[பக்கம் 27-ன் படம்]

சந்தை

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்