ஷோப் நதியில் எங்கள் படகுச்சுற்றுலாவில் எங்களைச் சேர்ந்துகொள்ளுங்கள்
தென் ஆப்பிரிக்காவிலுள்ள விழித்தெழு! நிருபர்
தெற்கு ஆப்பிரிக்காவின் முக்கிய பாகத்திலுள்ள ஷோப் நதியின் மீது ஒரு படகில் நாங்கள் அமர்ந்திருக்கிறோம். எங்கள் விடுமுறையின் உச்சக்கட்டம் வந்துவிட்டது. மற்ற பயணிகள் படகிலேறும் போது, தண்ணீர் மெதுவாக படகின் மீது மோதுவதை நாங்கள் கேட்கிறோம். கரையில், வரவேற்கும் தென்றல் காற்றில், நாணல்கள் ஆடுகின்றன. வெப்பமான ஆப்பிரிக்க சூரியனிலிருந்து எங்களைப் பாதுகாக்கின்ற மேகங்களுக்கு நாங்கள் நன்றியுடனிருக்கிறோம்.
இந்தப் படகுச்சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்கின்ற விடுதியின் மக்கள் தொடர்பு மேலாளர் ஜில் “யானைகள் தங்களுடைய வழக்கமான மதிய நீருக்காக வருமென நான் நம்புகிறேன்,” என்று கூறுகிறார். நாங்களும் அவ்விதம் நம்புகிறோம். ஷோப் நதி அதன் யானைகளுக்காகப் பிரசித்திப் பெற்றது. ஷோப் நதியின் கரையுடன் அமைந்துள்ள வட பாட்ஸ்வானா 45,000 யானைகளைக்—தென் ஆப்பிரிக்காவிலேயே மிக அதிகமானவை—கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. “ஆனால், சமீப மழையின் காரணமாகக் கடந்த மூன்று நாட்களாக நாங்கள் யானைகளைக் காணவில்லை,” என்று ஜில் எச்சரிக்கிறார்.
எனினும், ஷோப் நதி, அதிகமான மற்றக் கவர்ச்சிகளைக் கொண்டுள்ளது. படகிலுள்ள ஒரு தட்டில் நான்கு இறந்த மீன்களை நாங்கள் கண்டோம். “மீன்கள் நீரில் எறியப்படுவதற்காகக் காத்திருக்கும், மீன்கழுகுகளை நாங்கள் எப்பொழுதும் காண்கிறோம்,” என்றார் எங்கள் பாட்ஸ்வானா படகுத் தலைவரான ரெயின்ஃபோர்டு. இந்தப் பறவைகளிலொன்று உணவை எடுப்பதற்காக கீழ்நோக்கிப் பாய்ந்து வருவதைப் புகைப்படம் எடுப்பதில் நாங்கள் வெற்றிபெறுவோமா? மீன்கழுகு என்று பெயரிடப்பட்ட வேறு ஒரு சுற்றுலாப் படகு எங்களைத் தாண்டிச் செல்ல, எங்களுடைய பரபரப்பு அதிகரிக்கிறது. எங்களுடைய படகின் பெயர் மோசி-ஓஆ-டூன்யா. இது விக்டோரியா நீர்வீழ்ச்சி என்பதின் ஆப்பிரிக்கப் பெயராகும். இங்கிருந்து ஒருமணிநேரப் பிரயாண தூரத்திலுள்ள அந்தப் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியில் கலந்துகொள்ள, ஷோப் நதி, பெரிய சாம்பசி நதியுடன் சேருகிறது.
மோசி நகரத் தொடங்கியவுடனேயே, இரட்டைத் தொலைநோக்கியின் மூலமாக எங்களால் யானைகளைக் காணமுடிந்தது. ஆனால், நாங்கள் தொலைவிலிருக்கும் போதே அவைகள் காட்டிற்குள் திரும்பிவிட்டன. எங்களுடைய சுற்றுலா வழிகாட்டியான சாண்டி, “மூன்று வாரங்களுக்கு முன்பு வரை நாங்கள் நூறுக்கும் மேல் எண்ணிக்கை அடங்கிய கூட்டங்களைக் கண்டோம்,” என்று நினைவு கூர்ந்தார். அடுத்து, எங்கள் கவனம், கரையிலிருந்து எங்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்ற ஆறு ஆப்பிரிக்க மறிமான்களிடமாக ஈர்க்கப்படுகின்றது. பொதுவாக, இந்த மறிமான்கள் மோட்டார் வாகனங்களால் அணுகப்படும் போது பாய்ந்தோடிவிடுகின்றன. “நதியின் மீது வரும் படகிற்கு இவைகள் குறைவாக பயப்படுவது போன்று தோன்றுகிறது,” என்றார் சாண்டி.
புறாக்களின் மெதுவான கூவுதல், விரைவில், ஊடுருவிப்பாயும் ஒரு சத்தத்தினால், தடுக்கப்பட்டது. அது எந்தப் பறவை? ஆப்பிரிக்க யானைகள் என்ற புத்தகத்தில் “ஆப்பிரிக்க மீன் கழுகின் இந்தத் தனித்தன்மை வாய்ந்த அழைப்போசை, ஷோப் நதியில் எப்பொழுதுமுள்ள ஒரு சிறப்பம்சம்,” என்கிறார் டாக்டர் அந்தோணி ஹால்-மார்டின். நதிக்கரையோரமுள்ள மரங்களிலிருந்து சிறப்புவாய்ந்த இந்தப் பறவைகளில் நான்கு எங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. சாண்டி ஒரு மீனை எறியும் போது நாங்கள் எங்கள் புகைப்படக் கருவிகளைச் சரிசெய்து கொள்கிறோம். குறிப்பைப் புரிந்து கொண்டு, முதல் பறவை அமர்ந்திருப்பதை விட்டு, எங்களை நோக்கி மிதந்து வருகிறது. அடுத்து, பறவையின் கூர்நகங்களில் மீன் உறுதியாகப் பிடிக்கப்படும் போது ஏற்படும் சத்தத்தை நாங்கள் கேட்கிறோம். பின்பு, தன் கம்பீரமான இறக்கைகளை அடித்து, நீரிலிருந்து எழும்பி, ஹீவ்-கயோவ்-கோவ் என்ற வெற்றிக் கூச்சலிட்டு செல்கிறது. கழுகின் சிறு மூளையால் இயக்கப்பட்ட கண்கள், கூர்நகங்கள், குரல் மற்றும் இறக்கைகளின் ஒத்திசைவினால் நாங்கள் பிரமித்து, அசந்து நிற்கிறோம். மனதில் பதியும் இந்தச் செயல், மீண்டும் மூன்று முறை செய்யப்பட்ட போது, புகைப்படமெடுக்கும்போது ஏற்படும் காமராக்களின் சத்தம் தவிர, வேறு சத்தமின்றி, படகுத்தளத்தில் சந்தடியில்லாத அமைதி இருந்தது.
படகு மேலும் நகர, நாங்கள் குட்டிகள் உட்பட, 26 யானைகள் அடங்கிய கூட்டமொன்று நீரில் விளையாடுவதைக் காண்கிறோம். அவைகளை கவனிப்பது, புரூஸ் ஐகென் தன் புத்தகமான ஷோபின் சிங்கங்கள் மற்றும் யானைகள்-ல் குறிப்பிட்ட வார்த்தைகளை மனதுக்கு கொண்டு வருகிறது: “உடனடியான தாகம் தணிக்கப்பட்ட பின்பு, வயது வந்த யானைகள் தங்கள் மீது குளிர்ந்த நீரை சாவகாசமாகத் தெளித்துக் கொள்ள தங்கள் தும்பிக்கைகளை உபயோகப்படுத்தும். சில, முக்கியமாக வயது வராத மற்றும் ஆண் யானைகள், நதியின் உள்ளே சென்று விளையாடவும், துரத்திப் பிடித்து சுற்றி வரவும் செய்யும். அநேக சமயங்களில் மூச்சுவிடுவதற்காகக் குழாய் போன்று, தங்கள் தும்பிக்கைகளின் நுனி மட்டும் வெளியே தெரியும்படி விளையாடும். எனினும், குட்டிகள் களைத்து விளையாடும் அளவிற்கு மற்ற எவையும் செய்வதில்லை. இது விளையாட்டு நேரத்தின் தொடக்கமே. அவைகள் முடிவேயின்றி துள்ளி ஒன்றையொன்று துரத்தும் . . . தாகம் தணிக்கப்பட்டப்பின்பு, அடுத்து, சந்தேகமின்றி பிடித்தமான செயலான, சேற்றுக்குளியலுக்கான நேரம் இப்போது. . . . வெகு சீக்கிரம், விளையாட்டைக் கெடுக்கும் வயதான பெண் யானைகள் மேற்கொண்டு நகர நேரமென்று முடிவு செய்கின்றன. அவைகளின் வார்த்தையே சட்டம்.”
வருந்தத்தக்க விதத்தில், எங்களுடைய பெரிய இரண்டு மாடிப் படகு அணுகுவது, “விளையாட்டைக் கெடுக்கும் பெண் யானைகளை” வித்தியாசமாக உணரச் செய்ய, அவைகள் கூட்டத்தை தூரமாக வழிநடத்திச் செல்கின்றன. ஆனால் அதற்குள் நாங்கள் சில புகைப்படங்களை எடுத்துவிட்டோம்.
அந்த நாள் முடியவில்லை. மேலும் ஷோப் நதி மற்ற ஆச்சரியங்களைக் கொண்டுள்ளது. சுற்றியுள்ள கலஹாரி பாலைவனத்திலிருந்து வரும் தூசியின் காரணமாக நதிக்குக் குறுக்கே சூரிய அஸ்தமனங்கள் கண்கவருவதாக அமைந்துள்ளன. மாலை நேரம், சோம்பேறித்தனமான நீர்யானைகள், தங்கள் இரவு உணவு உண்ணும் களிப்பிற்காக நீரைவிட்டுச் செல்ல தயாராகி அசையும் நேரமாகும். இங்கு எங்களுடைய படகின் பாதுகாப்பு ஒரு முடிவான வசதியாகும். “நீங்கள் பயமின்றி நீர்யானையின் அருகே செல்லலாம்,” என்கிறார் ரெயின்ஃபோர்டு.
ஒரு முழக்கமான, ஆழமான கீச்சொலி, நதியிலுள்ள ஒரு தீவின் அருகே உள்ள நீர்யானைக் குளத்திற்கு எங்கள் வருகையை அடையாளம் காட்டியது. ஒன்றன் பின் ஒன்றாக, மூழ்கியிருக்கும் நீர்யானைகளின் பெரிய தலைகள் எங்கள் இருபுறமும் தோன்றத் தொடங்கின. திடீரென்று இரண்டு நீர்யானைகள் ஒரு மனிதன் உள்ளே உட்காருமளவிற்கு பெரிதான—விரியத் திறந்த வாய்களுடன் ஒன்றன் மீது ஒன்று பாய்ந்தன. பின், தீவிற்கு அருகே உள்ள ஆழமற்ற நீரிலிருந்து வேறொரு நீர்யானை எங்களை நோக்கி நேராக நடந்து வந்தது—அதனுடைய பெரிய உடல் எங்கள் புகைப்படக்கருவியின் ஆடியை நிரப்பும் அளவு நெருங்கி வந்தது. தண்ணீர் ஆழமாக ஆக, காற்றில் அதன் பெரிய பின்பாகம் மட்டும் தூக்கிக்கொண்டிருக்க அதன் தலை உள்ளே மூழ்கியது. பின்னர், தன் நுரையீரல்களிலுள்ள காற்றை வெளியே விட்டுவிட்டு, அந்த மிகப் பெரிய உடல் கீழே செல்கின்றது.
நான்கு டன்கள் எடையுடனிருந்தும் நீர்யானை தண்ணீரில் விரைவான இயக்கத்தைக் கொண்டுள்ளது என்றறிய நாங்கள் வியப்படைந்தோம். “தன்னுடைய உதவாத உடலிருப்பினும், அது அநேக மீன்களைக் காட்டிலும் வேகமாக நீந்தக்கூடும். மேலும் அநேக சமயங்களில் தெளிவான தண்ணீராக இருப்பின் தண்ணீருக்கு அடியில் வேகமாக நீந்துவதைக் காணமுடியும்,” என்று சொல்கிறார் ப்ராட்லி ஸ்மித், நீர்யானையின் வாழ்க்கை என்ற தன் புத்தகத்தில். அல்லது ஆசைப்பட்டால் நீர்யானைகள் ஆழமான நதியின் தரைமீது நடனமாட தங்கள் வலுவான கால்களை உபயோகிக்கின்றன. இது மனிதனின் சிருஷ்டிகர் சொன்னது போன்றுள்ளது:
“இப்போதும் பிகெமோத்தை [நீர்யானையை] நீ கவனித்துப் பார்; உன்னை உண்டாக்கினது போல் அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப் போல் புல்லைத் தின்னும். இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது. இதோ நதி புரண்டு வந்தாலும் அது பாய்ந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.” (யோபு 40:15, 16, 23, துணைக்குறிப்புகளுள்ள பைபிள், அடிக்குறிப்பு) ‘வீரியமுள்ளவைகளின்’ திகிலூட்டும் உதாரணங்களாகிய இவைகளால் சூழப்பட்ட நிலையில், நாங்கள் அவைகளை உண்டாக்கியவருக்கு காட்டப்பட வேண்டிய அதிகமான மரியாதைக்கான தேவையை உணர்ந்தோம். “அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கக்கூடும்? மூக்கணாங்கயிறு போட அதின் மூக்கை யார் குத்தக்கூடும்?” மனிதராக, நம்முடைய கட்டுப்படுத்தும் எல்லைகளை நமக்கு நினைவுபடுத்திக் கூறுகிறார் யெகோவா தேவன்.—யோபு 40:24.
ஒரு மகிமையான சூரியஸ்தமனத்தையும், நீர்யானையை கவனிப்பதற்கிடையே ஆழ்ந்துபோக, எங்கள் படகு திரும்புவதற்கான நேரம் வர, நாங்கள் புறப்படத் தயங்கினோம். பின்பு, நதிக்கரையருகே வேயப்பட்ட எங்கள் குடிசையிலிருந்து வானம் இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணமாக மாறுவதையும், நிறங்கள் தண்ணீரில் அழகாகப் பிரதிபலிப்பதையும் நாங்கள் பிரமிப்புடன் கவனித்தோம். நாங்கள் பார்த்த மற்றும் கேட்ட கிளர்ச்சியூட்டும் காரியங்களைப் பற்றிய சிந்தனையில் எங்களை மறந்தோம். “நீங்கள் வனவாழ்க்கைக்கு வெகு அருகே செல்ல விரும்பினால் ஒரு சிறிய மோட்டார் படகை உபயோகிக்க வேண்டும்,” என்று எங்களுக்கு ஆலோசனை சொன்னார் சாண்டி. நாங்கள் அவர் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, அடுத்த மதியத்திற்காக ஒன்றை வாடகைக்கு எடுக்க முடிவுசெய்தோம்.
இந்த முறை நாங்கள் அபாயகரமான நீர்யானைத் தவிர, மற்ற வனவாழ் விலங்குகளையும், நாணல்களையும் நீர் லில்லிப்பூக்களையும் தொடுமளவிற்கு அருகே சென்று பார்த்தோம். சிறிய மீனைத் தேடுவதற்காக, பல வண்ண மீன்கொத்திகள் நீரின் மீது அசைவின்றி வட்டமிடுவதை நாங்கள் கண்டோம். மரத்தின் நிறமான தலையைக் கொண்ட மீன்கொத்திகள், வெள்ளை முன் பாகத்தைக் கொண்ட தேன் குடிப்பவைகள், குறைவாகக் கோடிடப்பட்டக் குருவிகள் போன்ற மற்ற பறவைகள் எங்களைச் சுற்றிப் பறந்தன. பின்பு, எகிப்திய வாத்து, ஜாகானாஸ், கார்மோராண்ட்ஸ், கொக்குகள் போன்ற தீவுகளின் பாதுகாப்பை அனுபவிக்கும் பெரிய பறவைகள் இருக்கின்றன. இந்தப் பறவைகள் சிலவற்றால் அலங்கரிக்கப்பட்ட பாதி மூழ்கியிருக்கின்ற ஒரு மரத்தை நாங்கள் கடந்து சென்றோம்.
முடிவாக, முதல் நாள் யானைகளின் கூட்டத்தை நாங்கள் கண்ட இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த முறை எங்களை அலட்சியம் செய்து, தொடர்ந்து குடிக்கவும், உண்ணவும் செய்து கொண்டிருந்த ஒரு தனியான ஆண் யானையைக் கண்டோம். பின்பு, நாங்கள் புறப்படத் தொடங்கிய போது, காட்டிலிருந்து குட்டிகளுடன் ஒரு தாய் வந்தது. அது எங்களைக் கண்டதும் தயங்கியது. நாங்கள் நம்பிக்கையுடன் மூச்சு விடாது நின்றோம். அது மேற்கொண்டு வருமா, வராதா? நன்றி சொல்லும் வண்ணம், தன்னுடைய குட்டிகளை எங்கள் முன்னிலையில் விடும் அபாயத்தை எதிர்நோக்க அது முடிவெடுத்தது. தாய், இளம் யானை மற்றும் குட்டி எங்களை நோக்கி ஓடிவருவதைக் காண்பது, என்னே ஒரு காட்சி!
சிங்கம் மற்றும் யானைகள் பற்றிய தன் புத்தகத்தில் ஐகென் மேலுமொரு குறிப்பைக் கொடுக்கிறார்: “நதியை நோக்கி தங்களுடைய நீண்ட வெப்பமான பயணத்தை முடிக்கும் போது . . . தினமும் இந்தப் பெரிய விலங்குகள் உணரும் தாகத்தை கற்பனைச் செய்து பார்ப்பது சுலபம். ஆர்வத்துடனும், முடிந்த அளவு வேகத்துடனும் நடந்து வந்து, ஒரு கூட்டம் காட்டிலிருந்து வெளியேறி, நேராக நீர்குடிக்கும் இடத்திற்குச் செல்லும்; அநேக சமயங்களில், உயிர்தரும் நீரின் மணத்தை முகர்ந்தவுடன், கடைசி ஐம்பது அல்லது நூறு மீட்டரைக் கட்டுப்பாடற்ற ஓட்டத்தில் கடக்கும்.” உண்மையில், குட்டியை பாதுகாப்பாக நடுவே விட்டு அவைகள் வரிசையாக நின்று தண்ணீர் குடிப்பதை நாங்கள் வியந்து பார்த்தோம். ஆனால் நேரமாகிவிட்டது, நாங்கள் இருட்டுமுன் திரும்ப வேண்டும்.
யானைகள் தவிர, நாங்கள், எருமைகள், முதலைகள், புக்குஸ்கள், மறிமான்கள், வாட்டர்பக், இம்பாலாஸ், பபூன்கள் மற்றும் வார்த்தாக்ஸ் இவைகளையும் நாங்கள் பார்த்தோம். இவ்வளவு அழகான சூழலில் இருக்கும்படி இத்தனை பிரமிப்பூட்டும் வகையான வனவிலங்குகளைப் படைத்தவருக்கு ஆழமான வியந்த போற்றுதலை உணராமலிருக்க எங்களால் முடியவில்லை. வெப்ப காலத்தில், பறவைகளும், விலங்குகளும் அதிகமாக நதியினிடமாக வருகின்றன, சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் காண்டாமிருகங்களைக்கூட காண முடிகின்றது.
ஆப்பிரிக்காவில் ஒருபுறமாக ஒதுங்கியுள்ள இந்தப் பாகத்திலிருந்து வெகு தொலைவில் நீங்கள் வாழலாம். எனினும், எங்கள் படகுச்சுற்றுலாவில் எங்களுடன் சேர்ந்துகொண்டதன் மூலம், இந்த ஷோப் நதியில் பயணம் செய்பவர்களுக்குக் காத்திருக்கும் பிரமிப்பூட்டும் காட்சிகளைப் பற்றி இப்பொழுது உங்களுக்கு ஒரு நல்ல கருத்து இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். (g90 7/22)