அமைதியான திண்தோல் விலங்கை பாதுகாத்தல்
“அந்த அழகான குட்டிகளைச் சற்றுப் பாருங்கள்! பார்ப்பதற்கு எவ்வளவு அழகாயுள்ளன! நம்மை நோக்கி வருகிற ஏழு வயதுள்ள லன்கா என்ற பெயர்கொண்ட அவனைப் பார்த்தா அவ்வாறு நீங்கள் சொல்லுகிறீர்கள்? அங்குள்ள எட்டு வயதுடைய காஞ்சனாவையுமா அவ்வாறு நீங்கள் சொல்லுகிறீர்கள்? இந்த அனைத்து குட்டி யானைகளும் அவற்றின் மேலெங்கும் குட்டியின் விறைப்பான ரோமத்தையுடையதாய், காட்டிலிருந்து கடகடவென்று ஓடிவந்து என்ன செய்யவிருக்கின்றன? ஆ, பால் குடிக்கும் நேரம் என்பதில் ஆச்சரியமேதுமில்லை! அந்தக் குட்டி யானைகளை ஒவ்வொரு நாளும் ஐந்து முறை போஷித்து, ஒவ்வொரு புட்டியும் ஒரு முழு லிட்டர் பாலைகொண்டதாய், ஒவ்வொரு முறையும் ஏழு புட்டி பாலை அவற்றிற்கு நீங்கள் கொடுக்கிறீர்களா? ஏன், அப்படியென்றால் 35 லிட்டர்! பிறந்து ஒருசில மாதங்களேயென்றாலும் ஒவ்வொரு யானையும் 90 கிலோகிராம் எடையுள்ளதாக இருப்பது ஆச்சரியப்படுவதற்கு இல்லை!”
இலங்கையில் உள்ள பிரதான நகரம், கொலம்போவிலிருந்து சுமார் 85 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிற பினாவாலே யானை அநாதை இல்லத்தில் நாங்கள் இருக்கிறோம். குட்டி யானைகள் கைவிடப்பட்ட நிலையிலோ காயப்படுத்தப்பட்ட நிலையிலோ காட்டில் காணப்பட்டால், அவை இந்த அநாதை இல்லத்திற்கு கொண்டுவந்து வளர்க்கப்படுகின்றன. நாங்கள் விஜயம்செய்தபோது, சுமார் 15 குட்டி யானைகள் இருந்தன. சாதாரணமாக, அவை பெரிய யானைகளோடு சேர்ந்து இருக்கின்றன, திறந்த கானகக் பகுதியின் விரிவான பிராந்தியத்தில் அவை பரவலாக வாழ்கின்றன, ஆனால், பால் கொடுக்கும் நேரத்தில் அந்தக் குட்டிகள் பால் குடிக்க அழைக்கப்படுகின்றன. இந்த அநாதை யானைகள் பால் புட்டிகளோடுக் காத்திருக்கும் மூன்று நான்கு பணியாளர்களைக் கண்டுபிடித்து உடனடியாக அங்கு செல்கின்றன.
அந்தப் பணியாளர் புட்டியைச் சாய்த்துப் பிடித்து ஊற்றுகையில், அவை அதன் துதிக்கையை உயரமாக சுருட்டி, வாயை நன்றாக திறந்து வைத்து முடிந்தளவுக்கு வேகமாய் குடித்துவிடுகின்றன. இந்தப் புட்டிகளில் ரப்பர் சூப்பான்கள் போட்டு குடிக்கக்கொடுத்தால் அதில் குடிக்க அவற்றிற்கு நேரமில்லை! சிலசமயங்களில் வாயிலிருந்து பால் ஒழுகி, வாயின் பக்கங்களிலெல்லாம் வழியும். குட்டி யானைகள் குடிக்கவேண்டி, இந்தக் குட்டிகளில் பெரிதாக இருந்த ஒரு யானை கம்பத்தில் கட்டிப்போடப்பட்டது. அது இந்தப் “பாகுபாட்டைக்” கண்டு மிகவும் கலக்கமுற்றதாய், அங்குமிங்கும் அசைந்தாடி, அதன் துதிக்கையை உயரமாக தூக்கிச், சம்மதிக்காமல் சுற்றியுள்ள இடங்களில் அதன் சத்தம் கேட்குமாறு உரத்த சத்தமிட்டது. இந்தக் குட்டிகள் போதுமானதைக் குடித்தப்பிறகு, உங்களை சுற்றி வந்து, உங்கள்மீது சாய்ந்து, உங்கள் கவனத்தைத் திருப்ப உங்கள் காலை அவற்றின் துதிக்கையால் வளைத்துக்கொள்ளவுங்கூடும்.
யானைகளின் குளியற்தொட்டி
நாளின் முடிவில், குளிக்கும் நேரம். பெரிய, சிறிய யானைகள் யாவுமே சாலையிலிருந்து அரை மைல் தூரம் இருக்கிற மிய ஆய நதியின் ஆற்றங்கரைக்கு கூட்டமாக கொண்டுச்செல்லப்படுகின்றன. இந்த நதி ஆழமில்லாமலும் மிகவும் விஸ்தாரமாகவும் இருக்கிறது, பெரிய, தட்டையான பாறைகள் நீர் மட்டத்திற்கு மேலே தெரிகின்றன. அங்கு மூன்று, நான்கு பெண்கள் தங்கள் துணிகளை அழுக்கு நீங்க பாறைகளில் அடித்து துவைத்து, விரித்து காய வைத்துக்கொண்டிருக்கிறார்கள். தூரத்திலிருந்து பார்க்கையில் அழகான வண்ண வண்ண மெத்தைகள் பாறைகளில் விரித்து போடப்பட்டிருப்பதைப்போல தோன்றுகிறது. அடர்த்தியுள்ள வளமான காடு மிய ஆய ஆற்றங்கரையின் கோடியிலுள்ள எல்லையாக அமைகிறது. அது கண்ணுக்கினிய காட்சியை உண்டாக்குகிறது, யானைகளுடைய பெரிய குளியற்தொட்டியாகவும் இருக்கிறது.
குட்டிகள் முதல் செல்பவையாக, நேரத்தை வீணாக்காமல், நேரடியாக நீரில் நடந்துசெல்கின்றன. ஆனால், நீரில் படுத்துக்கொள்ள அவை அனைத்திற்குமே விருப்பமில்லை. இதனால், பணியாளர்கள் தண்ணீரை எடுத்து அவற்றின்மீது தெளித்து, பெரிய கோல்களால் அவற்றை குத்துவர். இவ்வாறு செய்வதன் மூலம் ஆர்வங்கொண்டு, யானைகள் நீரில் மூழ்கி முழுவதும் தங்களை குளிர்ந்த நீரில் நனைத்துக்கொள்கின்றன. ஒருசில பெரிய யானைகள் அதன் துதிக்கைகளை மூச்சுவிடும் குழாய்களாக உபயோகிக்க அவற்றை நீர் மட்டத்திற்கு மேலே வைத்துத் தலைகளை நீரில் மூழ்கச்செய்கின்றன. வெயிலாக இருப்பதால், அதன் தடித்த தோல்களுக்கு தண்ணீர் சூடுதணிவிக்கக்கூடியதாயிருக்கும்—திண்தோல் விலங்கு என்ற அவற்றின் பெயரின் பொருள் “தடி-தோலுடைய,” என்பதே.
தேசீய மிருக காட்சிச்சாலையின் இயக்குநர், திரு. பிராட்லே பெர்னான்டோ என்பவர் அந்த அநாதை இல்லத்தின் மேற்பார்வையாளராக இருக்கிறார். இந்த மிருகக் காட்சிச்சாலையின் நோக்கத்தைக் குறித்து அவர் விழித்தெழு!-விடம் சொல்லுகிறார்: “முதன்முதலில், இந்தக் குட்டி யானைகளை உயிரோடு வைத்திருக்கவேண்டும் என்று மட்டும் நாங்கள் விரும்பினோம். பின்னர் நீண்ட காலம் வைத்திருப்பதற்கு வளர்ப்புத் தொழுவம் ஒன்றை கட்ட நாங்கள் உத்தேசித்திருக்கிறோம்.”
என்றாலும் இந்த அமைதியான ஆசிய திண்தோல் விலங்கிற்கு சாத்தியமான எதிரியாக யார் இருக்கக்கூடும்? ஆப்பிரிக்க யானையைவிட உருவத்தில் ஓரளவு சிறியதாயிருந்தாலும், பெரிய இலங்கை யானை, எடையில் நான்கு டன் அல்லது அதற்கும் மேற்பட்டதாக, அதன் தோளோடு ஒப்பிடுகையில், பத்து அடி உயரமாகவும் இருக்கிறது. பிற பிராணிகளைக் கொன்றுத் தின்னுகிற விலங்குகளுக்கு, அவ்வாறு தின்னாமலிருக்க அப்படிப்பட்ட பிரம்மாண்டமான உருவ அளவே போதும். மற்ற நாடுகளிலிருக்கிற சிங்கங்களையும் புலிகளையும் போலிருக்கும் இலங்கை சிறுத்தை, பெரிய யானையைக் கண்டு தனக்குத் தீங்கு ஏற்படாத அளவுக்கு உண்மையில் ஓரளவு தூரமாகவே இருக்கிறது.
அப்படியிருக்க, அந்தச் சாத்தியமான எதிரி யார்? மனிதனே. யானைக்கு நிலம் தேவை; மனிதனுக்கு நிலம் தேவை; மனிதன் நிலத்தைப் பெற்றுக்கொள்கிறான். ஆகையால் இலங்கை யானை அழிக்கப்படுகிறது. ஏஷியாவீக் ஓரளவு அவ்வாறுதான் கருதுகிறது:
“காட்டு மிருகங்களை பாதுகாப்பதை பண்டைய இலங்கை அரசர்கள் பரிசுத்த கடமையாக கருதினர். அவர்கள் தாங்கள் கட்டிய விரிவான நீர்ப்பாசன தொட்டிகளைச் சுற்றிலும் மிருக காப்பிடங்களை உண்டாக்க ஆணைகளைப் பிறப்பித்தனர்—உலகத்தில் வந்த முதன்முதலான பாதுகாப்புச் சட்டங்களாக அவை இருந்திருக்கலாம். மற்றப் பகுதிகளில் வேட்டையாடுவது அனுமதிக்கப்பட்டது, அதை அவர்கள் செய்தும் வந்தனர். ஆனால் ஒருபோதும் ஆகாரத்திற்காகவும் விளையாட்டிற்காகவும் யானைகளைக் கொல்லவில்லை. மேலும் யானையைப் பிடிக்கவும் அதை அரசர், மத, ஊர்கோலங்களுக்கு பயிற்றுவிக்கவும் சுமைதாங்கிச் செல்லும் வீட்டு மிருகங்களாக வளர்க்கவும் அரசர்களுக்கே அதிகாரம் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது இதெல்லாமே மாறியது. யானைகளை வேட்டையாடி எடுத்துச்செல்வதும், அவற்றை விளையாட்டிற்குப் பயன்படுத்துவதும் மிகவும் உயர்வாக கருதப்பட்டது.”
நாகரிகம் பிரச்னையைக் கொண்டுவருகிறது
பூர்வ காலங்களில், யானை ஒருபோதும் போட்டிவிளையாட்டிற்குக் கொல்லப்படவில்லை, ஆனால் மேற்கத்திய நாகரிகமும்,—அதனோடேகூட விளையாட்டு வீரனும்—வந்தபோது எல்லாம் மாறின. யானை வேடனைப் பற்றியதிலென்ன? J. எமர்சன் டெனென்ட் என்பவர் எழுதிய சிலோனின் இயற்கை சரித்திர விவரங்கள் (Sketches of the Natural History of Ceylon) என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஓர் அதிகாரி, மேஜர் ராஜர்ஸ், 1,400-க்கும் மேற்பட்ட யானைகளைக் கொலைசெய்தார்; மற்றொரு நபர், காப்டன் கால்வா, அந்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்ட யானைகளைக் கொலைசெய்ததற்கு பேர்பெற்றிருந்தார்; சாலை ஆணையர், மேஜர் ஸ்கின்னரும் கிட்டத்தட்ட அவ்வளவு யானைகளைக் கொலைசெய்தார்; குறைந்த விருப்பமுடைய நபர்கள் குறைவான எண்ணிக்கையில் கொலைசெய்தனர்.”
ஆங்கிலேயருடைய அரசாங்கம், கொன்ற ஒவ்வொரு யானைக்கும் ஒருசில ஷில்லிங் பணத்தைப் பரிசாக வழங்கியது என்று டெனென்ட் மேலும் கூறினார்—அவற்றை அழிக்கப்படவேண்டிய உயிரினங்களாகக் கருதினர். ஒருசில வருடகாலப்பகுதியில், 5,500 நபர்கள் இப்பரிசைப் பெற்றனர். டெனென்ட் இப்படி சொல்லி முடிக்கிறார்: “சிலோனில் [இப்போது இலங்கை] இருக்கிற விளையாட்டு வீரர்கள் இவ்வாறு விடாது யானைகளைக் கொன்றது, வெறுமனே அழிக்கவேண்டும் என்ற மனப்பான்மையின் செல்வாக்கிற்குக் கீழ்ப்படிந்ததாலேயே என தோன்றுகிறது, ஏனெனில் அந்தப் பிணம் அழுகிப்போய் காட்டின் காற்றை அசுசிப்படுத்தியதே தவிர, எந்தவொரு உபயோகமான நோக்கத்திற்கும் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை.” இலங்கையில் யானைத்தந்தம் ஒரு பெரிய பொருளாக இருக்கவில்லை, ஏனெனில், “சிலோனில் உள்ள நூறு யானைகளில் ஒரு யானையுங்கூட தந்தங்களையுடையவையாயில்லை, தந்தங்களைக் கொண்டிருக்கிற ஒருசில யானைகள் வெறும் ஆண் யானைகளாகவே இருக்கின்றன.”
ஆங்கிலேயர் ஆட்சி காலங்களின்போதும் அது முதற்கொண்டும் யானைகளின் இனம் எவ்வாறு அழிந்தது என்பதைப் பற்றி பதிவுசெய்வதாய் ஏஷியாவீக் பதிலைத் தொடருகிறது: “இனிமேலும் அரசருடைய கட்டுப்பாட்டுக்குள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்படாமல், காட்டில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த அந்த இடங்கள் எல்லாமே தேயிலைத் தோட்ட இடங்களாக மாறுவதற்கு அழிக்கப்பட்டன. தீவில், 1800-ல் ஒருவேளை 50,000 யானைகளே இருந்தன. வருடம் 1900-ல் 12,000 யானைகளே இருந்தன. இன்று, கண்டிப்பான பாதுகாப்புச் சட்டங்கள் வந்து 50 வருடங்களுக்குப் பிறகுங்கூட, அவற்றின் தொகை 3,000-ம் உட்பட்டதாகவே இருக்கிறது.” ஏஷியாவீக், தந்தமுடைய யானைகளின் விகிதத்தை 100-ல் 1 என்று சொல்வதற்கு மாறாக 20-ல் 1 என்று சொன்னாலும், கொலைசெய்வதற்கு யானைத்தந்தமே ஒரு பெரிய பொருளாக இருந்தது என்ற ஒரு காரணத்தை கொடுக்கவில்லை. இலங்கையிலிருந்த யானைகள் ஆபத்திற்குள்ளான நிலைமைக்கு உண்மையான காரணத்தை பிறகு அது எடுத்துக்காட்டுகிறது: “அச்சுறுத்தலாக உண்மையில் இருந்தது என்னவெனில், மனிதன் இடைவிடாமல் நிலம் வேண்டி தேடியதாகும். அவை இருக்கும் இயற்கையான வாழ்விடத்தின் எல்லைகளையொட்டி இன்னுமதிகமான நிலம் படிப்படியாக பயிரிடும் நிலங்களாக மாறியபோது, இலங்கை யானைகள் அழிக்கப்படுகின்றன.”
யாலா தேசீய பூங்கா
இலங்கையிலுள்ள காட்டு மிருகங்கள் மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர், டாக்டர் ரஞ்சன் பெர்னான்டோ என்பவர் விழித்தெழு!-வுக்கு குறிப்புச் சொன்னார்: “எங்களுடைய சங்கத்தின் பெரும் முயற்சியின் காரணமாக, 1898-ல், சரணாலயமாக முதல் வனவிலங்கு பாதுகாப்பு இடம் யாலாவில் ஸ்தாபிக்கப்பட்டது. எங்களுடைய முதல் தேசீய பூங்காவாக 1938-ல் யாலா ஆனது, பின்னர் மற்றவை அவ்வாறாக ஆகத் தொடங்கின. நாங்கள் இத்தகைய பூங்காக்களை ஒரு நாட்டுச் சொத்தாக நினைக்கிறோம். நம்முடைய அருமையான அனைத்து வனவிலங்குகளுக்கும் ஒரு பாதுகாப்பான இடமாக அவை நீடித்திருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.”
நாங்கள் யாலா தேசீய பூங்கா செல்வதற்குத் திட்டமிட்டிருந்தோம், பெர்னான்டோ அதைக் குறித்து சொன்னது எங்களுடைய ஆர்வத்தைத் தூண்டியது. நாங்கள் பினாவாலே யானைகள் அநாதை இல்லத்திலிருந்த பணியாளர்கள் எங்களுக்குச் செய்த அன்புச்செயல்களுக்கும் உபசாரங்களுக்கும் நன்றி தெரிவித்து, மிய ஆய நதியில் தங்கள் குளியலை அனுபவித்து மகிழும் பெரிய, சிறிய யானைகளிடம் போய் வருகிறோம் என்று கைகளை அசைத்துக் காட்டி (அவை பார்க்கவில்லை என்று நான் நினைக்கிறேன்), யாலா தேசீய பூங்காவிற்கு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.
சமுத்திரத்தின் கரையோரப் பகுதியிலிருந்த ஒரு பெரிய பங்களா வீட்டில் நாங்கள் மூன்று நாட்கள் கழித்தோம். மிருகங்களைச் சுற்றிக்காட்டுவதற்கு வழிகாட்டி ஒருவர் எங்களை காரில் ஓட்டிச் சென்றார்—காரை விட்டு வெளியே வர உங்களுக்கு அனுமதியில்லை. மான், காட்டுப்பன்றிகள், அநேக பெரிய உடும்புகள், அநேக அழகான பறவைகளை நாங்கள் பார்த்துவந்தோம். மயில் ஒன்று தன்னுடைய அழகான தோகையை விரித்து துணையோடுகூட ஆடுவதுபோல ஒரு நடனத்தை ஆடிக்காட்டியது. தூக்கணாங்குருவியின் கூடுகள் மரங்களிலிருந்து தொங்கிக்கொண்டிருந்தன, வண்ண நாரைகள் இரம்மியமான தோற்றத்தையுடையதாய், பார்ப்பதற்கு மிக அழகாயிருந்தன. அங்கு சிறுத்தைகள் இருந்தபோதிலும் நாங்கள் அவற்றை பார்க்காமல் ஏமாற்றமடைந்தோம். ஆனால் ஆசிய யானைகளை, எங்கள் பழைய நண்பர்கள் கூட்டம் கூட்டமாக நிற்பதை நாங்கள் பார்த்தோம். அவை தங்களுடைய பாதுகாப்பான பூங்காவனத்தில் அமைதியாகவும் திருப்தியுள்ளவையாகவும் இருந்தன.
யானைக்கு நிறைய இடம் தேவையாயிருக்கிறது. மனித மக்கள்தொகை வெடிப்பின் காரணமாக, சாகுபடி நிலங்கள் கிடைக்காமலும், மிகவும் அரிதாகவும் இருக்கின்றன. யானை பிழைப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கிற பொறுப்பு எவ்வளவு காலத்திற்குத்தான் உறுதியாக நிற்குமோ என்று காப்பாளர்கள் அதிக கவலை தெரிவிக்கின்றனர். காலந்தான் சொல்லும்.—“விழித்தெழு!” எழுத்தாசிரியர்களில் ஒருவர். (g92 11/22)
[பக்கம் 17-ன் படங்கள்]
குளியற்நேரத்தின்போது யானைகள் தங்கள் துதிக்கைகளை மூச்சுக் குழாய்களாக உபயோகித்து, நீரில் கிடந்து குஷியாக இருக்கின்றன
[பக்கம் 18, 19-ன் படங்கள்]
காட்டில் அநாதைகளாக விடப்பட்ட குட்டி யானைகள் பினாவாலே இல்லத்தில் போஷிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன