பிரியாவிடைப் பெறுவதற்கு நேரமாகிவிட்டதா?
ஆப்பிரிக்காவில் அரியதொரு போர் வேகம் கொள்கிறது. அது பிராந்தியப் பிரச்னையுமல்ல, அரசியல் கருத்துப் போரும் அல்ல, அல்லது மத நம்பிக்கைகளின் பேதமும் அல்ல. அது மனித உயிர்களைப் பலிவாங்கும் ஒன்று. அது பெரும் வருத்தத்துக்குரிய ஒன்றாயிருப்பினும், அநேக போர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியதே. என்றபோதிலும் இந்தப் போர் உலக நாடுகளின் கவனத்தைத் தன்னிடமாகத் திருப்பியிருக்கிறது. அது யானைகளின் பேரிலான ஒரு போர்.
அந்தப்போர் வனத்துறைப் பூங்காக்களின் காவலாளிகளுக்கும் யானைகளை அனுமதியின்றி வேட்டையாடுகிறவர்களுக்கும் எதிரான போர். வனப்பாதுகாவலருக்கு நாட்டுச் சட்டமும், அவர்களுடைய அரசாங்கங்களும், வனவிலங்குக் காப்பாளர்களும் ஆதரவை அளிக்கின்றனர். அனுமதியின்றி அவற்றை வேட்டையாடுகிறவர்களுக்கு ஆயுதங்கள் ஆதரவளிக்கின்றன. அவர்கள் தேவையாலும் பேராசையாலும் ஊக்குவிக்கப்படுகின்றனர்—யானைகளின் தந்தம் என்றாலே பணம், பெரும்பாலும் ஏழை நாடுகளில் கனவிலும் காணாத செல்வத்தைக் குறிக்கிறது. இரு சாராருமே கொல்லுவதற்காகச் சுடுகிறார்கள். ஏன் யானைகளின் பேரில் இந்தளவு கரிசனை? அவற்றுக்கெதிரான ஆபத்து அந்தளவுக்குக் கவலைப்படுவதற்குரியதா?
அனுமதியின்றி வேட்டையாடுதல் அளவுக்கதிகமாகிவிட்டது கவனியுங்கள்: 1930-களில் ஆப்பிரிக்காவில் ஏறக்குறைய ஒரு கோடி யானைகள் இருந்தன. 1979-ல் 13 இலட்சம் இருந்தன. இப்பொழுது, பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த எண்ணிக்கை பாதியாகிவிட்டது. உயிரோடிருக்கும் ஆப்பிரிக்க யானைகள் கணக்குப்படி இன்று 6,25,000 இருக்கின்றன. இந்தக் கடுமையான சரிவுக்குக் காரணம் என்ன? அனுமதியற்றவர்கள் யானைகளை வேட்டையாடுவதே பேரளவில் காரணம் காட்டப்படுகிறது. அது நவீன நாளில் காளான்களாக வளரும் பூர்வீகக் குற்றச்செயல், தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துக்கு நன்றி.
கடந்த காலத்தில், ஆப்பிரிக்காவில் உரிமையின்றி வனவிலங்குகளை வேட்டையாடியவர்கள் வில்லும் அம்பும் ஈட்டியும் கொண்டு, ஆயுதமற்ற காவலாளியைக் கண்டவுடன் ஓடிவிடக்கூடியவர்களாயிருந்தனர். இன்று வனக் காப்பாளரும் சரி, சட்டவிரோதமாக வேட்டையாடுகிறவர்களும் சரி, இருசாராருமே ஆயுதந்தரித்தவர்களாயிருக்கின்றனர். வேட்டையாடுபவர்கள் கூடுதல் ஆயுதங்களை ஏந்தியவர்களாயிருக்கின்றனர். ஆப்பிரிக்காவில் நடந்துவரும் பல்லாண்டு உள்நாட்டுப் போர்கள் ஏராளமான துப்பாக்கிகளை விட்டுச்சென்றிருக்கின்றன, இவை குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்குத் தாராளமாகக் கிடைக்கின்றன. இன்றைய வேட்டையாளர்கள் கூட்டமாகப் பயணம் செய்து, உயர் சக்தி வாய்ந்த தானியங்கித் துப்பாக்கிகளைக் கொண்டு யானைகளைத் சுட்டுத்தள்ளுகின்றனர். ஒரு சில நிமிடங்களுக்குள் அவர்கள் ஏராளமான யானைகளைச் சுட்டு வீழ்த்தி, அவற்றின் தந்தங்களை எடுத்துக்கொள்ள சங்கிலி ரம்பத்தைக் கொண்டு தலையின் முன்பாகத்தை வெட்டியெடுத்து, வேட்டையைத் தொடருகின்றனர். உலக முழுவதுமே தந்தத்தின் விலைகள் உயர்ந்துகொண்டிருப்பதால், இந்த அத்துமீறும் வேட்டையாளர்கள் ஒரே நாளில் பணத்தை ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். அவர்களுடைய பணியாட்களுங்கூட நூறு நூறாய்ச் சம்பாதிக்கின்றனர். யு. எஸ். நியுஸ் அண்டு உவர்ல்டு ரிப்போர்ட் (U.S.News & World Report) இப்படியாகக் குறிப்பிட்டது: “உள்ளூர் பழங்குடியினர் ஒருவரும் இல்லை, ஆனால் உயர்ந்த வியாபாரத்தை நடத்தும் இரக்கமற்ற வேட்டைத் தொழில் நிபுணர்களே இதை நடத்துகின்றனர்.”
வியாபாரம் செழிப்பாக இருந்திருக்கிறது. 1973 முதல் யானைகள் எண்ணிக்கை கென்யாவில் 85 சதவீதமும், டான்ஸானியாவில் 53 சதவீதமும், உகாண்டாவில் 89 சதவீதமும் குறைந்திருக்கிறது. உண்மை என்னவெனில், ஆண்டுதோறும் ஏறக்குறைய 70,000 ஆப்பிரிக்க யானைகள் அவற்றின் தந்தத்திற்காகக் கொல்லப்படுகின்றன. ஜிம்பாப்வேயும் கென்யாவும் இப்பொழுது அந்த உரிமையற்ற வேட்டையாளர்களைக் கண்டமாத்திரத்தில் சுட்டுக் கொல்லும்படி அவர்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது. பிரச்னை என்னவென்றால், அந்த வேட்டைக்காரர்கள் திரும்பி சுடுகிறார்கள், அதுவும் கூடுதல் சக்தியோடு. அவர்கள் வனக் காப்பாளர்களையும் பொதுமக்களையும் மனமுவந்து கொன்றிருக்கிறார்கள். 1988-ன் முடிவில் வேட்டையாளர்கள் ஒரு கும்பலாக ஒரு வனக் காப்பாளரின் வீட்டைத் தாக்கினார்கள். அந்தக் காப்பாளர்களைக் கட்டி அவர்களை அடித்தார்கள். தொடர்ந்து ஐந்து வெள்ளைக் காண்டாமிருகத்தைக் சுட்டுக்கொன்றனர், கென்யாவின் வனங்களிலேயே இவை கடைசி இனமாக இருந்தன. உண்மைதான், அந்த வேட்டையாளர்கள் கொம்புகளை மட்டுமே எடுத்துக்கொண்டனர். அந்த அரிய விலங்கினங்களின் செத்த உடலை அப்படியே அழுகிட விட்டுவிட்டனர்.
யானைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? யானைகளைத் தற்காக்கும் தங்களுடைய முயற்சிகளில் அந்த வனக் காப்பாளர்கள் இறந்துபோகிறார்கள். இதற்கிடையில், இந்த நூற்றாண்டின் முடிவுக்குள் யானைகள் முழுவதும் இல்லாமற்போவதைத் தடுப்பதற்கு சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு முயற்சி ஒன்று செயற்போக்கில் இருக்கிறது. ஆனால் “யானைகளைக் குறித்து ஏன் இவ்வளவு கவனிப்பு?” என்று பலர் யோசிக்கக்கூடும். இன அழிவு என்பது இந்தப் பூமிக்குப் புதியதோர் காரியமல்ல. இந்த விஷயத்தில் டினாசார்ஸ் என்ற மறைந்துபோன விலங்கினமும் ஒரு பிரதான இடத்தைப் பெறுகிறது. எனவே யானைகள் இனம் மறைந்தால், அதைப்பற்றி ஏன் கவலைப்படவேண்டும்?
அநேகருக்கு அதன் விடை விலங்கின் கம்பீரமான தோற்றத்தில் அடங்கியிருக்கிறது. அது வடிவமைப்பில் சிறந்ததோர் படைப்பு. காட்டில் ஒரு யானைக் கூட்டத்தைப் பார்த்த எவருமே அந்த இனத்தின் மறைவு குறித்து யோசிப்பதே அவர்களுக்கு ஒரு பெரிய இழப்பின் வேதனையை உண்டுபண்ணும். அவை தங்களுடைய குட்டிகளைப் பயிற்றுவித்துப் பாதுகாக்கும் விதம், அவற்றின் தும்பிக்கைகளின் ஆச்சரியமான அமைப்பு, அவற்றின் பிரமாண்டமான உருவம்—இந்த எல்லாமே ஞானத்தில் ஈடு இணையற்ற ஒரு வடிவமைப்பாளர் இருப்பதற்கு மிக உயர்ந்த அத்தாட்சியாக அமைகின்றன.
ஆனால் இன்னும் அதிகம் இருக்கிறது. நாம் வாழும் இந்த இயற்கைச் சூழலின் அமைப்பு முறைகளிலும் யானைகள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. மனிதனைத் தவிர வேறு எந்த விலங்குகளிலும் யானைதானே தன்னுடைய சூழலை மாற்றி அமைத்துக்கொள்கிறது. என்றபோதிலும், தன்னுடைய சுற்றுப்புறச் சூழலை தன்னுடைய உடன் இனத்தாரும் வாழ்வதற்கு ஏற்ப அமைத்துக்கொள்கிறது, இதில் அவை மனிதனிலிருந்து வித்தியாசப்படுகிறது. எப்படி? அவற்றின் கொடிய பசிதான் அதற்குக் காரணம். ஒரு யானை நாளொன்றுக்கு 300 பவுண்டு எடை தாவரங்களைச் சாப்பிடுகின்றன!
அடர்த்தியான காடுகளில், யானைகள் மரக் கிளைகளையும் சிறிய மரங்களையும் முறித்துப்போடுவதன் மூலம், அந்த இருண்ட காடுகளில் கூடுதல் வெளிச்சம் ஊடுருவிடச் செய்கின்றன. அந்த வெளிச்சம்தானே, தரையிலிருக்கும் தாவரங்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது, இப்படியாகச் சிறிய விலங்கினங்களுக்கு உணவளிக்கப்படுகிறது, காட்டு எருமைகள், கொரில்லாக்கள் முதல் புதர்ப் பன்றிகள் வரை பயனடைகின்றன. அகன்ற சவானாக்கள் அல்லது ஆப்பிரிக்க சமவெளிகளிலுங்கூட யானைகள் இதுபோன்ற பணியை நிறைவேற்றுகின்றன: அவற்றின் தீவனம் காட்டுத் தாவரங்கள் மற்றும் புல்வெளிகளின் ஒரு கலவையாகும், இது தாவரங்களை உண்ணும் ஏராளமான இனத்தைக் காக்கின்றன, ஒட்டச்சிவிங்கி முதல் மான் இனங்கள் மற்றும் காட்டு விலங்குகள் வரை.
என்றபோதிலும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் இந்தச் சிக்கலான சங்கிலி அதிக வலுவற்றது. ஒரு குறிப்பிட்ட பகுதி ஏராளமான யானைகளை இழக்கும்போதும், அல்லது ஏராளமான யானைகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குடியேறும்போதும் இந்தச் சங்கிலி முறியக்கூடும். மனிதவர்க்கம் இரண்டையுமே செய்கிறது—வனப் பூங்காக்களுக்கு வெளியே யானைகளைக் கட்டுப்படுத்துகிறது, உள்ளே அளவுக்குமிஞ்சி இருப்பதை ஊக்குவிக்கிறது. எனவே, மனிதன் ஏற்படுத்தும் இன அழிவைக் குறித்து வித்தியாசமான காரியத்தை இந்த யானைகளின் நிலை விளக்கிக்காட்டுகின்றன: அவை ஒரு பெரிய நோக்கத்தின் அல்லது வடிவமைப்பின் பாகமல்ல. மாறாக, அவை தன்னலத்தாலும், அவற்றின் விளைவுகளைக் குறித்து சற்றும் அக்கறையற்றிருப்பதாலும் ஏற்படுத்தப்படுகின்றன. அபூரணனும் சுயநலத்துவனுமாகிய மனிதன் இந்தக் கோளத்தை நடத்த தகுதியற்றவன் என்பதையும் அவை விளக்கிக்காட்டுகின்றன.
அவற்றைப் பாதுகாப்பதற்கான போரட்டம் அந்தப் படுகொலையின் அலையை மட்டுப்படுத்திட போரடுகிறவர்களும் உண்டு. யானைகளைப் பாதுகாப்பதற்கென வனத்துறை பாதுகாப்பு அமைப்புகளும் ஒரு டஜன் அரசாங்கங்களும் கடைசி நேர மீட்புத் திட்டங்களை வகுத்துள்ளன. ஆனால் அதை எப்படி நிறைவேற்றுவது என்ற காரியத்தில் அவர்கள் எல்லாருமே ஒத்துப்போவதில்லை. சர்வதேச தந்த வியாபாரத்தின் மீது தடையுத்தரவு போட வேண்டாம் என்று ஒரு தொகுதி தீர்மானித்துள்ளது, ஏனென்றால் அப்படிச் செய்வது இந்தக் கடத்தலை மறைவாய்ச் செய்வதற்கு வழிநடத்தி, இந்தத் தொழிலைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும். ஏன், காண்டாமிருகத்தின் கொம்புகளை விற்பனை செய்வதன்பேரில் தடை விதிக்கப்பட்ட போதிலும், காண்டாமிருகம் இனமாக மறைவதை எவ்விதத்திலும் குறைத்திடவில்லை. இருந்தாலும் ஜூன் 1989-ல் பல வனக்காப்புத் துறைகள் ஒன்றுசேர்ந்து தந்தத்தின் விற்பனை மீது தடையுத்தரவைக் கொண்டுவந்தன. மூன்று நாட்களுக்குப் பின்னர், ஐ.மா. அதிபர் ஜார்ஜ் புஷ் தந்தத்தின் இறக்குமதியைத் தடை செய்தார். தந்தத்தின் வியாபாரம் உலகரீதியில் தடை செய்யப்படும் காரியம் அண்மையிலிருப்பதாய்த் தெரிகிறது.
விலங்கினங்களைப் பாதுகாக்கும் ஒரு தொகுதி ஏறக்குறைய 2,00,000 அல்லது 3,00,000 யானைகளை மட்டும் பாதுகாக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். இந்தப் பாதுகாப்பை அளிப்பதற்காக ஒரு சில டஜன் இடங்களை இலக்காகக் கொண்டிருக்கின்றனர். மனிதனுடைய தன்னல அக்கறைகளிடமாகக் கவனத்தைத் திருப்பி அவர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம், உரிமையின்றி யானைகளைக் கொல்லுவதைக் குறைப்பது ஒரு பகுதிக்கு ஏராளமான பணத்தைக் கொண்டுதரும் என்று அந்தப் பிராந்திய மக்களிடம் நம்பச்செய்யும்படிப் பேசுவதன் மூலம் தந்தத்தின் வியாபாரத்தைக் கட்டுப்படுத்தும் நம்பிக்கையை அது தெரிவிக்கிறது. அந்தத் திட்டம் வெற்றிக்குரிய சில அறிகுறிகளைக் காண்பித்திருக்கின்றன.
ஆனால் யானைகளின் இனம் தப்புவது மனிதனின் தன்னல அக்கறையைச் சார்ந்ததாயிருக்குமானால், அவைதாமே எந்தளவுக்குப் பாதுகாப்பாக இருக்கின்றன? முதலிடத்தில் மனித தன்னல அக்கறைதானே அவற்றின் உயிர்வாழ்வை அச்சுறுத்துவதாயிருக்கிறதல்லவா? ஏன், தந்த வியாபாரம் தொடர்ந்து செழிக்கிறது, இந்தப் பிரமாண்டமான விலங்குகள் அதற்குப் பலியாகி, உலகுக்கு அச்சுகளும், சிற்றணிகளும், சிங்காரப் பொருட்களும் வழங்கியிருக்கின்றன—இவற்றில் 80 சதவீதப் பொருட்கள் சட்டத்திற்கு முரணாகப் பெறப்பட்ட தந்தத்திலிருந்து செய்யப்பட்டவை. கென்யா அரசு ஏறக்குறைய 48 வனக்காப்பாளர்களை பதவிநீக்கம் செய்யவேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அவர்கள் அந்தப் பணத்திற்கெல்லாம் ஆசைப்பட்டு உரிமையின்றி வேட்டையாடும் அந்த வேட்டைக்காரருடன் ஒன்றுசேர்ந்து செயல்படுவதை எதிர்த்து நிற்கவில்லை. மனிதவர்க்கம் தன்னல அக்கறை வெளிப்படும் புதிய ஆழங்களை இந்தத் தலைமுறை கண்டிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியுமோ? மனிதவர்க்கம் எவ்வளவுக்கு அதிகமாகத் தன்னலப்போக்கில் போகிறதோ, அவ்வளவுக்கு அதிகமாக இந்த உலகம் பாதுகாப்பற்றதாகிவருகிறது.
நல்லவேளையாக, பைபிள் நம்முடைய கோளத்திற்கும் அதன் வனவிலங்குகளுக்கும் அதிக மேன்மையான ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. விரைவில் சிருஷ்டிகர் இந்தப் பூமியைத் தம்முடைய ஆதி நோக்கத்தின்படியான நிலைமைக்கு—சமாதானம் நிலவும் ஓர் உலகளாவிய பரதீஸான நிலைமைக்கு—திரும்ப நிலைநாட்டிடுவார் என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. கடைசியில் யானைகளுக்கும் சுற்றுப்புறச்சூழலின் அனைத்து அதிசயங்களுக்கும் எதிரான மனிதனின் போர் முடிவுக்கு வந்துவிடும்.—ஏசாயா 11:6–9. (g89 11/22)
[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]
Courtesy of Clive Kihn