யானையின் தொலைதூர அழைப்பொலிகள்
பல மைல்களுக்கப்பால் பிரிந்திருந்தும், யானைகள், ஒன்றையொன்று விரைவாகக் கண்டுபிடித்துவிடும் அவற்றின் திறமை விஞ்ஞானிகளுக்குப் பல ஆண்டுகளாகப் பெரும் புதிராக இருந்து வந்திருக்கிறது. இப்பொழுதோ தரையில் நடமாடும் மிகப் பெரிய விலங்கினங்களின் இந்த இரகசியம் வெளிப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது—இவை தாழ்ந்த அலை அதிர்வெண் ஒலியை [infra sound] பயன்படுத்துகின்றன! அதாவது மனிதரின் செவிகளுக்கு கேட்காத அளவில் அமையும் தாழ்ந்த அலை அதிர்வெண் ஒலியாகும்.
தாழ்ந்த அலை அதிர்வெண் ஒலியின் மூலம் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும் தரைவாழ் பாலூட்டிகளில் யானைகள்தான் முதலாவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன, என்று உலக வனவாழ்வு நிதித் துறையின் செய்திக் கடிதமாகிய ஃபோக்கஸ் கூறுகிறது. ஐக்கிய மாகாணங்களின் கார்னல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிபுணர் கேத்தரின் பேய்ன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மிருகக் காட்சி சாலையில் ஆசிய யானைகளைக் கவனித்தபோது அவற்றின் “இரகசிய” பேச்சைக் கண்டுபிடித்தார். தன்னைச் சுற்றி “ஒரு ஆர்கன் இசைப்பெட்டியின் மிகத் தாழ்ந்த சுரம் ஏற்படுத்தும் ஒலியலைகளைத் தன்னை சூழ கவனித்தார். பின்பு, விசேஷமான ஒலிப் பதிவுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டது. அவை ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகள் பேரளவில் தாழ்ந்த அலை அதிர்வெண் அழைப்பொலிகளையே பேரளவில் பயன்படுத்துகின்றன என்று காண்பித்தன. தாழ்ந்த அலை அதிர்வெண் ஒலிகள் உயர்ந்த அலை அதிர்வெண் ஒலிகளைவிட தூரம் செல்லும் இயல்புடையதால், யானைகள் எப்படி ஒன்றோடொன்று தொடர்புகொள்ள முடிகிறது என்பதையும் மிக நெருங்கிய குடும்பத் தொகுதிகளாக இருந்து செயல்பட முடிகிறது என்பதையும் அந்தக் கண்டுபிடிப்பு விளக்கக்கூடும்.
அப்படிப்பட்ட ஒரு தொகுதியில் வயதுசென்ற ஒரு பெண் யானை உத்தரவுகள் பிறப்பிக்கிறது. அந்தத் தலைவிக்கு அவளுடைய சகோதரிகளும் பெண் பிள்ளைகளும் மரியாதை மதிப்போடு செவிகொடுக்கின்றன. ஆனால் குட்டி யானைகள் தாழ்ந்த அலை அதிர்வெண் ஒலியாக இருந்தாலும் வேறு ஒலியாக இருந்தாலும் எந்த ஒரு அழைப்பொலிக்கும் செவிசாய்ப்பதில்லை. “யானைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதுங்கூட, ஒரு யானைக் குட்டி சற்று தூங்க விரும்பினால், அந்த முழு குடும்பமும் நின்று, குட்டி யானை தூக்கத்திலிருந்து விழிக்கும் வரையாகக் காத்திருந்து, பின்பு புறப்படுகின்றன.” 200 பவுண்டு (90 கிலோ) எடையுள்ள குட்டிகளுக்குப் பொதுவாகக் காண்பிக்கப்படும் இந்தக் கரிசனையை ஆண் யானைகள் பகிர்ந்துகொள்வதில்லை. அவை தங்களுடைய சொந்த வாழ்க்கையை வாழ்கின்றன. ஆனால் “உடலுறவுக்கு ஆயத்தமாக இருக்கையில் பல மைல்களுக்கு அப்பாலிருக்கும் பெண் யானைகளைக் கண்டுபிடிக்கக்கூடிய ஓர் விசித்திர திறமையை” இந்த தாழ்ந்த அலை அதிர்வெண் ஒலி அளிப்பதாகத் தெரிகிறது என்று ஃபோக்கஸ் கூறுகிறது.
ஆம், விலங்கு உலகில் காணப்படும் இந்தத் தாழ்ந்த அலை அதிர்வெண் ஒலித்தொடர்பு முறை சிருஷ்டிகரின் ஞானத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.—சங்கீதம் 104:24. (g87 6⁄8)