எண்ணெய் நமக்கு ஏதாவது மாற்றுப் பொருட்கள் உண்டா?
எண்ணெய். அது சிந்தினால், கடலை ஒரு மெல்லிய படலத்தால் மூடி அதை நச்சுப்படுத்தி அது தொடும் அனைத்தையும் கொன்றுவிடுகிறது. அது எரிக்கப்படும்போது, நுரையீரலை நோய்க்குட்படுத்தி, மரங்களைப் பட்டுப்போகச் செய்து, நம்முடைய கோளத்திற்குக் கண்ணாடிக்கூட்டுப் பாதிப்பு என்று அழைக்கப்படும் ஒரு “ஜுரத்தையும்” கொடுக்க உதவும் ஒரு புகையை ஏற்படுத்துகிறது. என்றபோதிலும், இன்றைய உலகம் அதை வெகுவாகச் சார்ந்திருக்கிறது. அவற்றால் நம்மையே நச்சுப்படுத்திக் கொள்வதற்கு முன்பு அது இல்லாமற்போய்விடும் என்று சிலர் எண்ணுமளவுக்கு நாம் அவ்வளவு எண்ணெயைப் பயன்படுத்துகிறோம்.
எண்ணெய் ஏற்படுத்தும் இந்த எல்லாப் பிரச்னைகளையும் நோக்குமிடத்து, எண்ணெயைத்தவிர எரிபொருளுக்கு வேறு ஏதாவது பதில் பொருள் இருக்கிறதா என்று அதிகமதிகமான மக்கள் கேட்க ஆரம்பித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. இந்தக் கேள்விக்குக் கவனத்தின் மையமாக இருப்பது வாகனம். உலகில் அளவாக இருக்கும் எண்ணெயை மிக வேகமாகக் குடித்துத்தீர்க்கும் அந்த வாகனங்கள் சுற்றுப்புறத்தை நச்சுப்படுத்துவதிலும் வீரனாக இருக்கிறது. கார்கள் நம்முடைய காற்றுமண்டலத்தில் ஆண்டுதோறும் ஏறக்குறைய 40 கோடி டன் கார்பனை வெளியேற்றுகின்றன. ஆனால் காரை ஓடச்செய்வதற்கு எண்ணெயைச் சார்ந்த பெட்ரோல் அல்லது டீசல் மட்டுமே ஒரே வழியாக இருக்கிறதா?
இல்லை, வேறு எரிபொருள்களும் இருக்கின்றன. விஞ்ஞானிகள் சூரிய ஆற்றலில் அல்லது மின் ஆற்றலில் ஓடும் கார்களைப் பரிசோதனைக்குட்படுத்தி வருகிறார்கள். ஆனால் எதிர்பாராத ஒரு மாற்றம் ஏற்பட்டாலொழிய, அப்படிப்பட்ட வாகனங்கள் பெட்ரோல் அல்லது டீசலில் ஓட்டப்படும் வாகனங்களின் இடத்தை எடுக்க எதிர்பார்க்க முடியாது.
ஹைட்ரஜன் அல்லது நீரகம் வாகனத்துக்கு எரிபொருளாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஹைட்ரஜன் சுற்றுப்புறச் சூழலை பெட்ரோலைவிட குறைந்தவிதத்தில் நச்சுப்படுத்தும் வஸ்துவாக இருப்பதுமட்டுமல்ல, அது சீக்கிரத்தில் இல்லாமற்போகும் நிலையை அடையாது. அகிலாண்டத்திலே அதுதான் மிகவும் அதிகமாகக் கிடைக்கும் வாயு. ஆனால் இப்போதைக்கு, ஹைட்ரஜன் வாயுவில் ஓடும் ஒரு வாகனம் என்பது, நீண்ட எதிர்காலத்தில் கூடிய காரியமாக இருக்கும் ஒன்று. அந்தச் சமயத்தில் தொழில்நுட்பம் இந்த எண்ணத்தின்பேரில் செயல்பட்டிருக்கக்கூடும்.
சாராய எரிபொருள்
உடனடியான எதிர்காலத்தைப் பற்றியதென்ன? எண்ணெயைச் சாராத இரண்டு வகை எரிபொருட்கள் ஏற்கெனவே வாகனங்களில் பயன்படுத்தப்பட்டுவருகிறது: சாராயமும் இயற்கை வாயுவும். கரும்பிலிருந்து எத்தனால் என்ற சுத்தமான சாராயம் வடிக்கப்படுகிறது. 1987-ல் பிரேஸிலில் விற்பனையான புதிய கார்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவை எத்தனால் எரிபொருளால் இயக்கப்பட்டவை. என்றபோதிலும், அண்மை ஆண்டுகளில் எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டதால் அந்த எண்ணிக்கை 69 சதவீதத்துக்குக் குறைந்துவிட்டது. எத்தனால் பெட்ரோலைவிட சுத்தமானதும், குறைநிரப்பக்கூடிய ஓர் ஊற்றுமூலத்திலிருந்து கிடைப்பதுமாயிருக்கிறது. கூடுதல் எத்தனால் உற்பத்திக்காக நாம் எந்தச் சமயத்திலும் அதிகமான கரும்பு, அல்லது சர்க்கரைக் கிழங்குகள், அல்லது கூவைக் கிழங்குகள் அல்லது பயிர்களை விளைவிக்கலாம்.
என்றபோதிலும், எத்தனால் உற்பத்தி செய்யும் பயிர்களை விளைவிப்பதற்குத் தேவையான நிலம் ஒரு பிரச்னையாகும். ஐக்கிய மாகாணங்கள் தன்னுடைய வாகனத்துக்கான எரிபொருள் தேவையில் வெறுமென 10 சதவீதத்தை உற்பத்திசெய்ய அதன் வருடாந்தர தானிய விளைச்சலில் 40 சதவீதத்தை ஒதுக்கவேண்டியிருக்கும்.
செலவு இன்னொரு பிரச்னை. ஒரு கணக்கின்படி, எத்தனால் உற்பத்தி செய்யும் பயிர்கள் தங்களுடைய எரிசக்தியில் ஏறக்குறைய 30 முதல் 40 சதவீதத்தை எரிபொருளாக மாற்றப்படும் நிலையில் இழந்துவிடுகிறது. பயிர் செய்வது, எரிபொருள் எடுப்பது போன்ற காரியத்தில் உட்பட்டிருக்கும் செலவின் காரணமாக, எத்தனால் தானே அளித்திடும் எரிசக்தியைவிட அதை உற்பத்தி செய்வதற்கு அதிக எரிசக்தி தேவைப்படுகிறது என்ற முடிவுக்குச் சில நிபுணர்கள் வந்திருக்கின்றனர்!
மெத்தனால், இயற்கை வாயுவிலிருந்து அல்லது நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் ஒரு சாராயம் குறைந்த செலவை உட்படுத்துகிறது. சில எரிபொருள்கள் வாகனத்துக்கு அவ்வளவு நல்ல ஓட்டத்தைக் கொடுக்காவிடினும், மெத்தனால் அதிக வேகத்தைக் கொடுக்கிறது. உண்மை என்னவெனில், பந்தயத்தில் ஓடும் கார்கள் பெரும்பாலும் மெத்தனாலில் ஓடுகின்றன, ஏனென்றால் பெட்ரோலைவிட அதில் வெடிக்கும் தன்மை குறைவாயிருக்கிறது. ஜூன் 1989-ல் ஐக்கிய மாகாணங்களின் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மாற்று எரிபொருள் திட்டத்தை ஆரம்பித்துவைத்தார். அப்பொழுது 1995-க்குள் 5,00,000 ஐ.மா. கார்களுக்கு மெத்தனால் எரிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற அழைப்பைக் கொடுத்தார். அதன் திட்டம் வாகனத்தால் ஏற்படும் நச்சுக்கலப்பை வெகுவாகக் குறைத்துவிடும் என்று அரசு உரிமைப்பாராட்டுகிறது.
ஆனால் மெத்தனாலுக்கும் அதற்குரிய பிரச்னைகள் உண்டு. எரியும்போது பெட்ரோலைவிட குறைந்தளவு கார்பனையே வெளிவிடுவதாக இருந்தாலும், அது இன்னொரு நச்சுப் பொருளை வெளிவிடுகிறது: ஃபார்மல்டிஹைடு, புற்றுநோய் உண்டாக்குவதாகக் கருதப்படும் ஒரு வஸ்து. மேலும், மெத்தனால் கார்களைக் குளிர்காலங்களில் இயக்க ஆரம்பிப்பது கடினமாயிருக்கும்.
இயற்கை வாயு
வீடுகளில் சமையல் செய்யப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இந்த இயற்கை வாயுவை வாகனத்துக்கு எரிபொருளாகப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க நன்மைகள் இருக்கின்றன. அது ஒரு சாதாரண கலவைப்பொருள்—பெரும்பாலும் மீத்தேன் என்ற வெடிநீரகக் கரியவாயு—அது சுத்தமாக எரிகிறது. அது பெட்ரோல் வெளியிடுமளவுக்குக் கார்பனை ஏற்படுத்துவதில்லை, மற்றும் டீசல் ஏற்படுத்தும் அந்தக் கரும்புகையையும் வெளியிடுவதில்லை. அப்படிப்பட்ட சுத்தமான எரிபொருளை எரித்திடும் இயந்திரங்களுக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. இயற்கை வாயு அதிக செலவை உட்படுத்துவதில்லை, அது இன்னும் ஏராளமாகக் கிடைக்கக்கூடியது.
இயற்கை வாயுவின் ஆற்றலில் ஓடும் கார்கள் ஏற்கெனவே இத்தாலி, சோவியத் யூனியன், நியுஸிலாந்து, மற்றும் கானடாவில் ஓடுகின்றன. ஆனால் இந்த வாயுதாமே பிரச்னைகளுக்கு விலகியில்லை. பெட்ரோலில் அல்லது டீசலில் ஓடும் வாகனத்தை இயற்கை வாயுவில் ஓடும் வாகனமாக மாற்றுவது அதிக செலவை உட்படுத்துகிறது. மேலும், இந்த வாயு (அடைக்கப்பட்டாலுங்கூட) அதிக கொள்ளிடத்தைத் தேவைப்படுத்துகிறது. காரின் பெட்டியில் அநேக பெரிய கொள்கலங்களைப் பொருத்த வேண்டும். அப்படிச் செய்தும், கார் கொஞ்ச தூரமே செல்லும், எனவே அடிக்கடி வாயுவால் நிரப்பப்படவேண்டும்.
இப்படியாக மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்துவதில் பொதுவாக இருக்கும் ஒரு தடை எரிபொருள் நிரப்புவது. அந்த மாற்று எரிபொருளை விற்பனைச்செய்யும் நிலையங்களைக் காண்பது கடினமாக இருக்குமானால், மாற்று எரிபொருள் பயன்படுத்தும் காரை வாங்கிட யார் விரும்புவர்? மறுபட்சத்தில், மக்கள் அவற்றை வாங்குவார்கள் என்ற நிச்சயமற்ற நிலையில் எரிபொருள் நிலையங்கள் ஏன் மாற்று எரிபொருளைக் கொண்டிருக்க வேண்டும்? எனவே எது முதலில் வரும், எரிபொருளை வாங்குபவர்களா, அல்லது விற்பவர்களா?
இந்த இரண்டக நிலைக்கு ஒரு பரிகாரமாகக் கூறப்படுவது என்னவென்றால், கார்கள் இரண்டு வகை எரிபொருள்களில் ஓடும்படிச் செய்வது. ஏற்கெனவே இப்படியாக இரண்டு வகை எரிபொருள்களில் ஓடும் கார்கள் உள்ளன, அதாவது இயற்கை வாயுவும் பெட்ரோலும், இயற்கை வாயுவும் டீசலும், சாராயமும் பெட்ரோலும், அல்லது ஒரே கொள்கலத்தில் வித்தியாசமான இரண்டு எரிபொருள்களின் கலவை பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட இரட்டை எரிபொருள் கார்கள் எரிபொருள் நிரப்புவதை எளிதாக்குகிறது என்றாலும், ஒரே சுத்தமான எரிபொருளில் ஓடுவதற்கென்று வடிவமைக்கப்பட்ட கார்களைப் போன்று அவை அவ்வளவு சுத்தமாக, திறமையாகப் பிரச்னைகளின்றி ஓடாது.
மறைந்திருக்கும் எண்ணெய் இருப்பு
எண்ணெய் உபயோகத்தில் நம்முடைய பிரச்னைகளைக் குறைத்திட உடனடியான, மிக முக்கியமான ஒரு வழி, அதன் முழு திறனைப் பயன்படுத்துதலாகும். எண்ணெய் ஏற்படுத்தும் நச்சுத்தன்மையை இது ஒழித்திடாது, ஆனால் மாற்று எரிபொருட்கள் கண்டுபிடிக்கப்படுகையில் அது கடுமையான எண்ணெய் பற்றாக்குறையை தாமதித்திடும். ஒரு காலனுக்கு 35 மைல் ஓட்டம் தரும் அமெரிக்க வாகனங்களை வாங்குவதுதானே “2000-வது ஆண்டுக்குள் நாளொன்றுக்கு 6,60,000 பீப்பாய் எண்ணெயை சேமிக்க உதவும்” என்று ஓர் ஐ.நா. சட்டமன்ற உறுப்பினர் உரிமைப்பாராட்டினார். எண்ணெய் வயல்களின் எஞ்சிய ஆயுள் என்று கருதப்படும் 30 ஆண்டுகளில் அது 7.8 நூறு கோடி பீப்பாய்கள் எண்ணெயைக் குறிக்கிறது. அது எண்ணெய்த் தொழிற்சாலைகள் அலாஸ்காவில் கண்டுபிடிக்கவிருக்கும் அளவைவிட அதிகமாகும்.”—தி நியு யார்க் டைம்ஸ் (The New York Times), ஏப்ரல் 15, 1989.
என்றபோதிலும், எரிபொருளின் முழு திறத்தைப் பயன்படுத்துதல் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடிய ஐக்கிய மாகாணங்களில் அது அதிகமாக மதிக்கப்படுவதில்லை. உலகத்தின் மற்ற கார்கள் மொத்தமாகப் பயணம்செய்யும் தூரத்திற்கு ஐ.மா.வின் கார்கள் பயணம்செய்கின்றன. இப்படியாக, அமெரிக்கர்கள் தங்களுடைய கண்ணுக்கு முன்பாக—அல்லது, திறனில் குறைந்த, எண்ணெய் ஏராளமாகக் குடிக்கும் என்ஜின்கள் அமைக்கப்பட்டிருக்கும் கார்கள் மற்றும் லாரிகளில்—இவ்வளவு ஏராளமான எண்ணெய் இருப்பைக் கொண்டிருக்கின்றனர்.
கார்கள் அதிக மைல்கள் ஓடும்படியாகச் செய்வது கூடிய காரியமா? ஆம். உண்மை என்னவெனில், காலனுக்கு 35 மைல்கள் ஓடும் கார்கள் பொதுவாகக் காணப்படுகின்றன. 1970-களில் எண்ணெய் விலை வேகமாக உயர்ந்த சமயத்தில் தேவையை முன்னிட்டு அதிக திறன்கொண்ட கார்கள் உருவாக்கப்பட்டன. அதுமுதல், வாகன உற்பத்தியாளர்கள் புதிய இயந்திர வடிவமைப்பைப் பயன்படுத்தியும் எடையில் குறைந்த ஆனால் உறுதியான பொருட்களைப் பயன்படுத்தியும் பெரும்பாலும் காற்றைத் துளைத்துச்செல்லும் உருவில் அதிகமான மைல்கள் செல்லும் கார்களை உருவமைத்துமிருக்கின்றனர். காலனுக்கு 71 மைல்கள் கொடுக்கும் கார்களை ஓல்வோ தயாரித்திருக்கிறது. ஓக்ஸ்வேகன் காலனுக்கு 85 மைல்கள் கொடுக்கும் கார்களை உற்பத்திசெய்திருக்கிறது. காலனுக்கு 124 மைல்கள் கொடுக்கும் ஒரு மாதிரி காரை ரேனால்ட் கொண்டிருக்கிறது!
என்றபோதிலும் அதிலும் ஒரு பிரச்னை இருக்கிறது. இந்தக் கார்களில் எதையுமே நீங்கள் வாங்க முடியாது; அவை செய்யப்படுவதில்லை. எண்ணெயின் விலை 1986-ல் சரிந்ததால், கார் வாங்குபவர்கள் எரிபொருள் சிக்கனம் குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை என்று வாகன உற்பத்தியாளர்கள் உணருகின்றனர். பியுகெயாட் தன்னுடைய அதிக மைல் கொடுக்கும் காரை—காலனுக்கு 73 மைல்கள் கொடுக்கும் காரை—இருப்பில் வைத்திருக்கிறது, அதை நெருக்கடிக்கால கார் என்று அழைக்கிறது.
ஐ.மா. வாகன உற்பத்தியாளர்களில் பெரும்பாலோர் “நெருக்கடிக்கால கார்களை” இருப்பில் கொண்டிருப்பதுமில்லை, புதிய எரிபொருள் சிக்கன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதுமில்லை என்று உவர்ல்டு வாட்ச் (World Watch) பத்திரிகை குறிப்பிடுகிறது. ஏன்? உவர்ல்டு வாட்ச் பத்திரிகை இப்படியாகப் பதிலளிக்கிறது: “புதிய உற்பத்தி வளர்ச்சியின் செலவுக்குப் பதிலாக காலாண்டு இலாபங்களிலும் முதலீட்டுக்குரிய விலைகளிலும் ஈடுபாடு கொண்டிருப்பதே பிரச்னையின் பாகமாக இருக்கிறது.” வேறு வார்த்தைகளில் குறிப்பிடவேண்டுமானால், பின்னால் ஒரு நெருக்கடி நிலையைத் தவிர்ப்பதைக் காட்டிலும், இப்பொழுது பணம் சம்பாதிப்பதே முக்கியமாயிருக்கிறது.
ஆனால் தன்னல அக்கறைகள் பெரிய ஸ்தபனங்களுக்குரிய தனித்தன்மையாக இல்லை. வாகன உற்பத்தியாளர்கள் தங்களுடைய வாடிக்கையாளர் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிய முற்படுகின்றனர். மனிதவர்க்கம் எண்ணெயை அதிகமாகச் சார்ந்திருப்பதற்கு எளிய விடைகள் தற்போது கிடையாது என்பதை அவர்கள் முழுவதும் அறிந்திருக்கிறார்கள். மாற்று முறைகள் அனைத்துமே வியாபாரத்திற்கு அப்பால் இருக்கின்றன. காற்றை நச்சுப்படுத்தாத அல்லது எண்ணெய் இருப்பைக் குறைத்திடாத ஒரு கார் எரிபொருளை அதிகமாகக் குடிக்கும் பழைய வாகனத்தின் வேகத்தையோ, வசதியையோ அல்லது சொகுசையோ கொண்டிராமல் இருக்கக்கூடும், மற்றும் எரிபொருள் அந்தளவுக்கு வசதியாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லாமலிருக்கலாம்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர்களுடைய பிள்ளைகளோ அல்லது பிள்ளைகளின் பிள்ளைகளோ கார்கள் ஓட்டும் காலத்தில் இந்த நெருக்கடி நிலை முழு மூர்க்கத்துடன் தாக்காமலிருப்பதைத் தவிர்க்க மக்கள் இப்படிப்பட்ட ஒரு தியாகத்தைச் செய்ய மனமுள்ளவர்களாக இருக்கிறார்களா? மனிதன் இந்தப் பூமியையும் அவனுடைய சந்ததியினரின் சுதந்தரத்தையும் கையாண்டிருக்கும் விதம், “யாருக்கு அக்கறை?” என்ற உடனடியான விடையையே ஒலிக்கிறது.
கடைசியாகப் பார்க்கும்போது, இந்தக் கோளத்தைக் கெடுக்காமல் எரிபொருளுக்கான நம்முடைய தேவையைப் பூர்த்திசெய்தல், எண்ணெக்கு மாற்றுப் பொருள் கண்டுபிடிப்பதைவிட அதிகத்தை உட்படுத்துகிறது. நமக்குத் தேவை மாற்று மனநிலைகள், பேராசைக்கும் குறுநோக்குக்கும் மாற்றீடுகள். மனிதன் இந்தக் கோளத்தின் எரிபொருள் உட்பட மற்ற இயற்கை வளங்களைச் சரியாகப் பயன்படுத்தாததுதானே, பைபிள் வெகுகாலத்துக்கு முன் சொன்னவற்றிற்கு ஆதாரத்தைக் குவிக்கின்றன—மனிதன் தன்னைத்தானே ஆளுவதற்குரிய உரிமையற்றவனாகவும் திறமையற்றவனாகவும் இருக்கிறான்.—எரேமியா 10:23.
ஆனால் பைபிள் மாணாக்கர்களுக்கோ கதை அதோடு முடிந்துவிடுவதில்லை. சமீப எதிர்காலத்தில் நம்முடைய சிருஷ்டிகர் மனித சமுதாயத்தை நடத்துவதில் அதிகமான பாகத்தை வகிப்பார் என்று பைபிள் காட்டுகிறது. நம்முடைய சொந்த கூட்டை நாசப்படுத்தாமல் இந்தக் கோளத்தின் வளத்தை எவ்விதம் பயன்படுத்தவேண்டும் என்பதை அவர் நமக்குப் போதிப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நம்பிக்கையுள்ள ஓர் எதிர்காலத்திற்கு அதுவே மிகச் சிறந்த மாற்றுவழி. அதுவே ஒரே மாற்றுவழி.—ஏசாயா 11:6–9. (g89 11/22)
[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]
பேராசைக்கும் குறுநோக்குக்கும் நமக்கு மாற்றீடுகள் தேவை