ஏற்கத்தகுந்த தீர்வுகளைத் தேடி
மோட்டார் வாகனங்கள் மாத்திரமே தூய்மைக்கேட்டை உண்டாக்குவதில்லை. தனிப்பட்ட குடும்பங்கள், தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவையும்கூட இதற்குப் பங்களிப்பவையாய் இருக்கின்றன. எனினும், உலகளாவிய தூய்மைக்கேட்டில் மோட்டார் வாகனங்கள் வகிக்கும் பங்கு கணிசமானதாகும்.
உண்மையில், கிரகத்தைக் காப்பாற்ற 5000 நாட்கள் இவ்வாறு துணிந்து சொல்கிறது: “இந்த எல்லா சேதங்களுக்கும்—முக்கியமாக கார்பன்டையாக்சைடு வெளியீட்டினால் நம் காலநிலைக்கு ஏற்படும் சேதத்திற்கும்—பதில் சொல்ல வேண்டியதாயிருந்தால், அப்போது ஒருவேளை கார்கள் அதற்குப் பிறகு உற்பத்திச் செய்யப்படவே மாட்டாது.” இருந்தபோதிலும், அது இவ்வாறு ஒப்புக்கொள்கிறது: “ஆனால் இது, கார் உற்பத்தியாளர்களோ, அல்லது சாலை அமைப்பு தொழிற்சாலைகளோ, அல்லது அரசாங்க நிறுவனங்களோ, அல்லது தனிப்பட்ட போக்குவரத்தில் அதிகமாக சார்ந்திருக்கும் பொதுமக்களோகூட கருத்தில்கொள்ளத் தயாராயில்லாத ஒரு தேர்வுரிமையாகும்.”
மனிதனைச் சந்திரனுக்குக் கொண்டுசெல்ல முடிந்த தொழில்நுட்பம் தூய்மைக்கேட்டை உண்டாக்காத ஒரு காரையும் உற்பத்திசெய்ய வேண்டுமல்லவா? செய்வது சொல்வதைப் போல் சுலபமானதல்ல, ஆகவே தூய்மைக்கேட்டை உண்டாக்காத ஒரு காரை தயாரிப்பதற்கு இருக்கும் தடைகள் நீக்கப்படும் வரையாக, மற்ற ஏற்கத்தகுந்த தீர்வுகளுக்கான தேடுதல் தொடர்கிறது.
மாசுப்பொருட்களை குறைத்திடுங்கள்
மாசுப்பொருட்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, மோட்டார் வாகனங்களில் கருவிகளைப் பொருத்துவதைத் தேவைப்படுத்தும் சட்டத்தை ஐக்கிய மாகாணங்கள் 1960-களில் ஏற்படுத்தியது. அது முதற்கொண்டு மற்ற நாடுகளும் அரசாங்கங்களும் இதைத்தான் செய்திருக்கின்றன.
ஈயமில்லாத கேசோலினின் உபயோகத்தைத் தேவைப்படுத்தும் வினையூக்கிகள், தீங்குண்டாக்கும் மாசுப்பொருட்களை வடித்தெடுக்க இப்பொழுது பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. 1976-க்கும் 1980-க்கும் இடையே, ஈயமில்லாத பெட்ரோலை மோட்டார் வாகன ஓட்டுநர்களில் அநேகர் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, அமெரிக்கர்களின் இரத்தத்திலுள்ள ஈய அளவு மூன்றில் ஒரு பகுதிக்கு குறைந்தது. அது அந்தளவுக்குக் குறைந்தது நன்மைக்கே, ஏனெனில் அதிகளவான ஈயம் நரம்பு மண்டலத்தை பாதித்து, கற்றுக்கொள்ளும் திறமையை தடை செய்யலாம். எனினும், வருந்தத்தக்க விதத்தில், வளர்ச்சியடைந்திருக்கும் அநேக நாடுகளில் ஈய அளவில் குறைவு ஏற்பட்டிருந்தாலும், குறைவாக வளர்ச்சியடைந்திருக்கும் நாடுகளில் இது இவ்வாறு இல்லை.
வினையூக்கிகளின் வெற்றி சந்தோஷத்தை அளிக்கிறது, ஆனால் அவற்றின் உபயோகம் தொடர்ந்து தர்க்கத்திற்குரியதாகவே இருக்கிறது. ஈயம் இனியும் சேர்க்கப்படாததால் ஏற்பட்ட செயலாற்றக்குறைவின் காரணமாக, கேசோலினின் ஹைட்ரோகார்பன் கலவை மாற்றப்பட்டது. பென்சீன் மற்றும் சாயப்பிசின் போன்ற மற்ற புற்றுநோய் காரணிகளின் வெளியேற்றம் அதிகரித்திருப்பதில் இது விளைவடைந்திருக்கிறது. இந்தக் காரணிகளின் வெளியேற்ற அளவை வினையூக்கிகள் குறைப்பதில்லை.
இதைத் தவிர, பிளாட்டின உபயோகிப்பையும் வினையூக்கிகள் தேவைப்படுத்துகின்றன. பிரிட்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியரான இயன் தார்ன்டனின்படி, அவற்றின் பக்கவிளைவுகளில் ஒன்று, சாலையோர தூசியில் படிந்திருக்கும் பிளாட்டினத்தின் அளவு அதிகரித்திருப்பதாகும். “பிளாட்டினத்தின் கரையும் வகைகள் உணவுச்சுழற்சியில் நுழையும்” சாத்தியத்தைக் குறித்து அவர் எச்சரித்தார்.
“வட அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பல ஐரோப்பிய நாடுகள் ஆகிய இடங்களில் வினையூக்கிகளின்” எந்த விதமான வெற்றியின் மத்தியிலும், கிரகத்தைக் காப்பாற்ற 5000 நாட்கள், “உலகம் முழுவதுமாக கார்களின் எண்ணிக்கையிலுள்ள மாபெரும் அதிகரிப்பு காற்றின் தரத்தினுடைய பயன்களை செல்லாததாக ஆக்குகிறது,” என்பதாக உண்மையில் ஒப்புக்கொள்கிறது.
வேகத்தைக் குறைப்பது
காரின் மாசுப்பொருட்களின் வெளியேற்றங்களை குறைப்பதற்கு மற்றொரு வழி மெதுவாக ஓட்டுவதாகும். ஆனால், ஐக்கிய மாகாணங்களிலுள்ள சில மாநிலங்கள் வேக கட்டுப்பாட்டின் வரம்பை சமீபத்தில் அதிகரித்திருக்கின்றன. ஜெர்மனியில், கட்டுப்பாடுகளை விதிப்பது மக்களால் விரும்பப்படுவதில்லை. மணிக்கு 150 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தை சுலபமாக அனுமதிக்கும் பலமான மோட்டார் வாகனங்களை தயாரிக்கும் திறமையை சிறப்பம்சமாகக் கொண்டிருக்கும் கார் உற்பத்தியாளர்கள், அதிக எண்ணிக்கையான ஓட்டுநர்கள் செய்வதைப் போல், இயல்பாகவே எதிர்க்கின்றனர். எனினும், அதிகம் அதிகமான ஜெர்மானியர்கள், சுற்றுச்சூழல் காரணங்களுக்காக மாத்திரமல்லாமல் பாதுகாப்பின் காரணமாகவும்கூட வேக கட்டுப்பாட்டின் வரம்புகளை ஏற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாய் இருப்பதாக இப்பொழுது தோன்றுகிறது.
சில நாடுகளில், தூய்மைக்கேடு ஏற்றுக்கொள்ள முடியாத அளவை எட்டும்போது ஓட்டுநர்கள் வேகத்தைக் குறைக்கும்படியோ அல்லது ஒருவேளை முழுமையாகவே ஓட்டுவதை நிறுத்தும்படியோ கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஓசோன் செறிவு மிக அதிகமானால், அப்போது ஜெர்மானியர்களில் 80 சதவீதத்தினர் வேக கட்டுப்பாட்டின் வரம்புகளுடைய அறிமுகத்தை ஏற்றுக்கொள்வர் என்பதாக 1995 வாக்கெடுப்பு காட்டியது. ஆதன்ஸ் மற்றும் ரோம் உட்பட உலகமுழுவதுமாக அநேக நகரங்கள், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஓட்டுவதை தடை செய்வதற்கான படிகளை ஏற்கெனவே எடுத்திருக்கின்றன. மற்றவையும் அதையே செய்வதைக் குறித்து யோசித்துக்கொண்டிருக்கின்றன.
சைக்கிள்களைப் பயன்படுத்துவது
சில நகரங்கள், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பஸ் பயண கட்டணத்தைக் குறைத்திருக்கின்றன. மற்றவை, கிடைக்கும் இடங்களில் தங்கள் கார்களை நிறுத்துவதற்கு சிறு தொகையைச் செலுத்தும் ஓட்டுநர்களுக்கு இலவச பஸ் பயணத்தை அளிக்கின்றன. மற்ற நகரங்கள், பஸ்கள் மற்றும் டாக்ஸிகளின் போக்குவரத்தை அதிகரிப்பதற்கென்றே, ஒருவழி பாதைகளை அமைத்திருக்கின்றன.
பிரச்சினையை எதிர்த்து போராடுவதற்கான ஒரு புதுமையான வழியை தி யூரோப்பியன் என்ற ஆங்கில செய்தித்தாள் சமீபத்தில் குறிப்பிட்டது: “1960-ன் பிற்பகுதியில் நெதர்லாந்தில் ஒரு பிரச்சாரத்தினால் தூண்டப்பட்டவர்களாய், கையாளும் திறமைமிக்க டென்மார்க் நாட்டவர், நான்கு சக்கர வாகனங்களுக்கு பதிலாக இரண்டு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துமாறு ஜனங்களை தூண்டுவதன் மூலம் காற்றின் தூய்மைக்கேட்டையும் போக்குவரத்து நெரிசலையும் குறைப்பதற்கான திட்டத்தைக் கொண்டுவந்திருக்கின்றனர்.” கோபன்ஹாகன் தெருக்கள் முழுவதிலும் வெவ்வேறு இடங்களில் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சாதனத்திற்குள் நாணயம் ஒன்றை போட்டால் ஒரு சைக்கிளை பயன்படுத்துவதற்கென்று அது விடுவிக்கிறது. சைக்கிள் ஒரு சாதகமான இடத்தில் திரும்ப வைக்கப்படும்போது செலுத்தப்பட்ட தொகை மீண்டும் கோரப்படலாம். இந்தத் திட்டம் நடைமுறையானதாக மெய்ப்பிக்கப்பட்டு பிரபலமாகுமா என்பதைக் காலம் சொல்லும்.
கார்களுக்கு பதிலாக சைக்கிள்களைப் பயன்படுத்துமாறு உற்சாகப்படுத்துவதற்கு, சில ஜெர்மானிய நகரங்கள் ஒருவழி தெருக்களில் எதிர்புறமாக சைக்கிளை ஓட்டிச்செல்வதற்கு ஓட்டுநர்களை அனுமதிக்கின்றன! நகரத்தில் செய்யப்படும் எல்லா பயணங்களிலும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி பிரயாணங்களும், கிராமங்களில் மூன்றில் ஒரு பகுதிக்கு அதிகமான பிரயாணங்களும் மூன்று கிலோமீட்டருக்கும் குறைவானவையாகவே இருப்பதன் காரணமாக, அநேக குடிமக்கள் இவற்றை நடந்தோ அல்லது சைக்கிளிலோ சுலபமாக கடந்துசெல்லலாம். இது தூய்மைக்கேட்டை குறைப்பதற்கு உதவும்; அதே சமயத்தில், ஓட்டுநர்கள் தேவையான உடற்பயிற்சியையும் பெறுவர்.
மாற்று வடிவம் கொடுத்தல்
தூய்மைக்கேட்டை உண்டாக்காத மோட்டார் வாகனங்களை வடிவமைக்கும் வேலை தொடர்கிறது. பேட்டரிகளால் இயங்கும் எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் வேகத்திலும் செயல்படும் நேரத்திலும் அவை குறைவுபடுகின்றன. சூரிய ஒளியால் இயங்கும் கார்களிலும் இதுவே உண்மையாயிருக்கிறது.
ஆராய்ச்சி செய்யப்பட்டுவரும் மற்றொரு சாத்தியக்கூறு, ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்துவதாகும். ஹைட்ரஜன் மாசுப்பொருட்களை சிறிதும் வெளியேற்றுவதில்லை, ஆனால் அதன் விலை ஒவ்வாததாக இருக்கிறது.
மோட்டார் வாகனத்தை புதிதாக கண்டுபிடிப்பதற்கான தேவையை உணர்ந்தவராய், ஐ.மா.-வின் ஜனாதிபதியான கிளின்டன், எதிர்காலத்திற்கான காரை வடிவமைப்பதில் அரசாங்கமும் ஐ.மா.-வின் மோட்டார் வாகன தொழில்துறையும் ஒத்துழைக்கும் என்பதாக 1993-ல் அறிவித்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “நம் தேசம் இதுவரையாக முயன்றிருப்பதைப் பார்க்கிலும் பிரமாண்டமான தொழில்நுட்ப திட்டம் ஒன்றைத் துவங்க நாங்கள் முயற்சி செய்யப்போகிறோம்.” அவர் பேசிய “பூரண திறன்வாய்ந்ததும் சூழியலுக்கு சாதகமானதுமான வாகனத்தை, 21-வது நூற்றாண்டிற்காக உண்டாக்குவது” சாத்தியமா என்பது இன்னும் நிச்சயமற்றதாய் இருக்கிறது. பத்தாண்டுகளுக்குள்ளாக ஒரு மாதிரிப் படிவத்தை உற்பத்தி செய்யும்—எனினும், மாபெரும் விலையில் உற்பத்திசெய்யும்—குறிக்கோளை அத்திட்டங்கள் கொண்டிருக்கின்றன.
கேசோலின் மற்றும் மின்சாரத்தின் கலவையினால் இயங்கும் மாதிரி கார்களை தயாரிப்பதற்கு சில கார் உற்பத்தியாளர்கள் முயற்சி செய்கின்றனர். ஏற்கெனவே ஜெர்மனியில் அதிக விலைக்கு ஓர் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் கிடைக்கக்கூடியதாய் இருக்கிறது. அது ஒன்பது நொடிகளுக்குள்ளாக, நிறுத்தப்பட்டிருக்கும் நிலையிலிருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றலைப் பெற்றுள்ளது, அதிக பட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் என்ற வேகத்தை நோக்கி முன்னேறுகிறது. ஆனால் 200 கிலோமீட்டருக்கு பிறகு, அதன் பேட்டரிகள் குறைந்தபட்சம் மூன்று மணிநேரத்திற்காவது ரீசார்ஜ் செய்யப்படும்வரை நின்றுவிடுகிறது. ஆராய்ச்சி தொடர்கிறது, கூடுதலான முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரச்சினையின் ஓர் அம்சம்தான்
விஷமுள்ள மாசுப்பொருள் வெளியேற்றங்களை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பது பிரச்சினையின் ஒரே ஓர் அம்சம்தான். கார்கள் இரைச்சல் தூய்மைக்கேட்டையும் உண்டுபண்ணுகின்றன, நெரிசலான சாலை அருகே வசிக்கும் எவருக்கும் நன்கு அறிந்த ஒரு காரியம் இது. தொடர்ச்சியான போக்குவரத்து இரைச்சல் உடல்நலத்தை அதிகமாக பாதிக்கக்கூடும் என்ற காரணத்தினால், இதுவும்கூட பிரச்சினையின் ஒரு முக்கிய பாகமாக, தீர்வுக்கான தேவையோடிருக்கிறது.
இயற்கை அழகு நிறைந்த நாட்டுப்புறச் சூழல்களில் அநேகம், விகாரமான வர்த்தக இடங்களுடனும் சுற்றி அமைந்திருக்கும் விளம்பரப் பலகைகளுடனும் பல மைல் தூரத்திற்கிருக்கும் அசிங்கமான நெடுஞ்சாலைகளால் கெடுக்கப்பட்டிருக்கின்றன என்பதாகவும்கூட இயற்கையை நேசிப்பவர்கள் சுட்டிக்காண்பிப்பார்கள். ஆனால் கார்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, இன்னுமதிக சாலைகளுக்கான தேவையும் அதிகரிக்கிறது.
சில மோட்டார் வாகனங்கள், அவற்றின் சொந்தக்காரர்கள் உபயோகிக்கையில் பல வருடங்களாக தூய்மைக்கேட்டை உண்டுபண்ணிய பின்னர், “இறந்த பிறகும்” தூய்மைக்கேட்டை தொடர்ந்து உண்டுபண்ணுகின்றன. மக்களால் வேண்டாமென்று ஒதுக்கப்பட்ட கார்கள், பார்க்க சகிக்காதவையாக, அவ்வளவு பிரச்சினையை ஏற்படுத்தியிருப்பதன் காரணமாக நாட்டுப்புறத்தின் அழகை கெடுப்பதைத் தவிர்ப்பதற்கென்று சில இடங்களில் சட்டம் ஏற்படுத்தப்பட வேண்டியதாய் இருந்திருக்கிறது. சுலபமாக மீண்டும் பயன்படுத்தப்படக்கூடிய பொருட்களைக் கொண்டு, குறையே இல்லாத மோட்டார் வாகனம் எப்போதாவது உற்பத்தி செய்யப்படுமா? அப்படிப்பட்ட ஒரு வாகனம் ஒருபோதும் உற்பத்தி செய்யப்படாது.
“பெரும்பாலான ஜெர்மானியர்கள் சுற்றுச்சூழலைக் குறித்து மிகவும் அக்கறையுள்ளவர்களாக இருக்கின்றனர், ஆனால் வெகு சிலரே அதற்காக செயல்படுகின்றனர்,” என்பதாக ஒரு சமீபத்திய செய்தித்தாள் குறிப்பிடுகிறது. அரசாங்க உத்தியோகஸ்தர் ஒருவர் இவ்வாறு சொல்வதாக மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது: “ஒருவருமே தன்னை குற்றவாளி என்பதாக நினைப்பதுமில்லை, எவருமே பொறுப்பாளியாக விரும்புவதுமில்லை.” ஆம், “தற்பிரியராயும்,” “இணங்காதவர்களாயும்” இருக்கும் ஜனங்களால் நிறைந்திருக்கும் ஓர் உலகத்தில் பிரச்சினைகளைத் தீர்ப்பது கடினமானதாகும்.—2 தீமோத்தேயு 3:1-3.
இருந்தபோதிலும், ஏற்கத்தகுந்த தீர்வுகளைத் தேடுவது தொடர்கிறது. தூய்மைக்கேட்டுக்கும் மோட்டார் வாகனங்களுக்கும் ஒரு பூரண தீர்வு கண்டடையப்பட முடியுமா?
[பக்கம் 7-ன் படம்]
பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ, கார்களில் பலர்சேர்ந்து செல்வதன் மூலமோ, சைக்கிளை ஓட்டுவதன் மூலமோ தூய்மைக்கேட்டை குறைக்கமுடியுமா?