பூரண தீர்வை கண்டுபிடித்தல்
மோட்டார் வாகனங்களால் உண்டாகும் தூய்மைக்கேட்டின் பிரச்சினையை இப்போது உள்ளடக்கும் மனிதவர்க்கத்தின் எல்லா பிரச்சினைகளையும், கடவுளுடைய பரலோக அரசாங்கம் தீர்த்துவைக்கப் போகிற ஒரு காலத்தைப் பற்றி கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் பேசுகிறது. அநேகர் எதற்காக ஜெபிக்கும்படி கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கின்றனரோ, அந்த மேசியானிய ராஜ்யம், முழுமையாகவே தூய்மைக்கேட்டை உண்டுபண்ணாத மோட்டார் வாகனத்தை தயாரிப்பதன் மூலம் பூரண தீர்வை அளிக்குமா? அல்லது பூமியிலிருந்து எல்லா மோட்டார் வாகனங்களையும் ஒழித்துப்போடுவதன் மூலம் இந்தப் பூரண தீர்வு கிடைக்குமா? பைபிள் எந்தக் குறிப்பிட்ட பதிலையும் நமக்கு கொடுக்காததன் காரணமாக, வெறுமனே பொறுத்திருந்து பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் நம்மால் செய்ய முடியாது.—மத்தேயு 6:9, 10.
ஆனால் இதைக் குறித்து நாம் நிச்சயமாய் இருக்கலாம்: இந்த ராஜ்யம் கொண்டுவரப்போகும் திரும்பநிலைநாட்டப்பட்ட பரதீஸில், தூய்மைக்கேடு சிருஷ்டிப்பின் அழகை கெடுக்கும்படி கடவுளுடைய அரசாங்கம் அனுமதிக்காது.—ஏசாயா 35:1, 2, 7; 65:17-25.
கடவுளுடைய வார்த்தையைப் பற்றியிருப்பவர்கள் தூய்மைக்கேடு இல்லாத புதிய உலகத்தில் வாழ்வதற்கு ஏற்கெனவே பயிற்றுவிக்கப்படுவதால், மோட்டார் வாகனங்களை இன்று பயன்படுத்துவதைக் குறித்து அவர்கள் எவ்வாறு உணரவேண்டும்? 1987, ஜூன் 22, விழித்தெழு! (ஆங்கிலம்) “நம் காடுகளுக்கு என்ன ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது?” என்ற பொருளைக் கலந்தாலோசித்தது. வாகன புகையின் மாசுப்பொருட்களுக்கும் அழிந்துவரும் காடுகளுக்கும் தொடர்பிருப்பதாக சில விஞ்ஞானிகள் நினைப்பதாக அது அறிக்கை செய்தது. இந்த உண்மையைக் கருத்தில்கொள்ளும்போது கிறிஸ்தவர்கள் கார்களை ஓட்டுவது சரியாக இருக்குமா என்ற கேள்வியை ஓர் அக்கறையுள்ள வாசகர் உவாட்ச்டவர் சொஸைட்டிக்கு கேட்டு எழுதும்படி இது செய்வித்தது. அவ்வாறு செய்வது யெகோவாவின் சிருஷ்டிப்புக்கு அவமரியாதை காண்பிப்பதாய் இருக்குமோ என்று அவர் யோசித்தார்.
அவர் கடிதத்திற்கு பதிலளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதி இவ்வாறு வாசிக்கிறது: “தூய்மைக்கேட்டை குறைப்பதற்காக அரசாங்க அதிகாரங்களால் ஏற்படுத்தப்படும் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு யெகோவாவின் சாட்சிகள் உண்மையோடு கீழ்ப்படிகின்றனர். (ரோமர் 13:1, 7; தீத்து 3:1) அரசாங்கம் தேவைப்படுத்துவதற்கும் மேலாக நடவடிக்கைகள் எடுப்பது ஒவ்வொரு நபரின் சொந்தத் தெரிவைச் சார்ந்தது. இனிமேலும் கார் ஓட்டுவதில்லை என்று எவராவது தீர்மானம் எடுத்தால், அது அவருடைய சொந்த விஷயம். எனினும், விழித்தெழு! கட்டுரை பக்கம் 8-ல் சில ஜனங்கள் எவ்வாறு உணருகின்றனர் என்பதைக் காண்பித்தது: ‘நியாயமாக எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு காற்றின் தூய்மை கெடுக்கப்படுவதை தவிர்ப்பதற்கு நடைமுறையான படிகளை அநேகர் எடுத்துவருகின்றனர். மெதுவாக ஓட்டுகின்றனர், குறைவாக பயணம் செய்கின்றனர், காரில் பலர் சேர்ந்து செல்கின்றனர், ஈயமில்லாத கேசோலினைப் பயன்படுத்துகின்றனர், தூய்மைக்கேட்டை நீக்குவதற்கென அரசாங்கம் பரிந்துரைக்கும் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்.’ ”
கிறிஸ்தவ சமநிலை
மேற்குறிப்பிடப்பட்ட இந்தப் பதில் கிறிஸ்தவ சமநிலையை வெளிக்காட்டியது. மோட்டார் வாகனங்கள் மாத்திரமே தூய்மைக்கேட்டை உண்டுபண்ணுகிறதில்லை என்பது ஞாபகத்தில் வைக்கப்பட வேண்டும். விமானங்களும், இரயில் வண்டிகளும், சொல்லப்போனால் பெரும்பாலான நவீன போக்குவரத்துகள் தூய்மைக்கேட்டை உண்டாக்குகின்றன. ஆனால் இந்தப் போக்குவரத்து சாதனங்கள் தூய்மைக்கேட்டை உண்டுபண்ணவேண்டும் என்ற குறிப்பிட்ட நோக்கத்திற்காக தயாரிக்கப்படவில்லை. இவற்றால் விளைவடைந்திருக்கும் தூய்மைக்கேடு ஒரு பக்கபாதிப்பாகும், வருந்தத்தக்கதுதான் ஆனால் குறைவான அறிவினாலும் அபூரண மனப்பான்மைகளாலும் விளைவடைந்த ஒன்று.
ஏப்ரல் 1, 1993, காவற்கோபுரம், இந்தக் காரியத்தை கலந்தாலோசிக்கையில் பக்கம் 31-ல் இவ்வாறு சொல்கிறது: “யெகோவாவின் சாட்சிகளாக நாம், நம்முடைய பூமியாகிய வீட்டைப் பாதிக்கும் சூழலியல் பிரச்னைகளைக் குறித்து அதிக கவலையுள்ளவர்களாக இருக்கிறோம். ஒரு பரிபூரண மனித குடும்பத்திற்கு இந்தப் பூமி சுத்தமான, சுகாதாரமுள்ள வீடாக உண்டாக்கப்பட்டது என்பதை மற்ற யாவரையும்விட நாம்தானே அதிகமாக போற்றுகிறோம். (ஆதியாகமம் 1:31; 2:15-17; ஏசாயா 45:18) . . . எனவே, தொடர்ந்து நம் உலகத்தை தூய்மைக்கேடு செய்துகொண்டிருக்கும் மனிதனோடு தேவையில்லாமல் நாமும் சேர்ந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கு சமநிலையான, நியாயமான முயற்சிகளை எடுப்பது சரியானதே. ‘நியாயமான’ என்ற சொல்லிற்கு கொஞ்சம் கவனம்செலுத்துங்கள். . . . கடவுளுடைய ஜனங்கள் சூழலியல் விஷயங்களின்பேரில் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. சூழல் மற்றும் சுகாதார முக்கியத்துவம்வாய்ந்தப் படிகளை தம்முடைய பூர்வீக ஜனங்கள் பின்பற்றும்படி யெகோவா எதிர்பார்த்தார். (உபாகமம் 23:9-14) பூமியைக் கெடுப்பவர்களைப்பற்றிய அவருடைய நோக்கத்தை நாம் அறிந்திருக்கிறபடியால், சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு நாம் செய்யவேண்டிய காரியங்களை நிச்சயமாகவே அசட்டை செய்யக்கூடாது. . . . சட்டம் தேவைப்படுத்தினால் தவிர, மற்றபடி இந்த விஷயத்தில் எவ்வளவு தூரத்திற்கு ஒரு கிறிஸ்தவன் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பது ஒரு தனிப்பட்ட விஷயமாக இருக்கிறது. . . . அபூரண மனிதர் ஒருவிதமான மட்டுக்குமீறிய நிலைக்குப் போகும் கண்ணியில் எளிதில் விழுந்துவிடுவார்கள். . . . தூய்மைக்கேட்டையும் உட்படுத்தும், பூமியின் பேரளவான சூழலியல் பிரச்னைகளைப் பூமியிலிருந்து நீக்க எடுக்கப்படும் மனிதரின் முயற்சிகள் முற்றிலும் வெற்றிபெறமுடியாது. . . . ஆங்காங்கே ஒருசில முன்னேற்றங்கள் இருக்கலாம். ஆனால் நிரந்தரமான ஒரே தீர்வு கடவுளுடைய தலையிடுதலைத் தேவைப்படுத்துகிறது. இதன் காரணமாகவே நாம் நம்முடைய முயற்சிகள், பொருள்வளங்கள் அனைத்தையும், மேற்போக்கான அறிகுறிகளைத் தீர்ப்பதற்கு முயல்வதில் ஒருமுகப்படுத்துவதற்குப் பதிலாக, தெய்வீகத் தீர்வின்மீது ஒருமுகப்படுத்துகிறோம்.”
கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்த செய்தியை உலகம் முழுவதுமாக பிரசங்கிக்க அவர்கள் பெற்றிருக்கும் தெய்வீக கட்டளையை மனதில் கொண்டு, பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்கும்போது கிறிஸ்தவர்கள் சமநிலையுள்ளவர்களாக இருக்கின்றனர். (மத்தேயு 24:14) வேறெதுவும் இதைக் காட்டிலும் அதிக முக்கியமானதாகவோ அல்லது அதிக அவசரமானதாகவோ இல்லை! போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பின் நவீன சாதனங்கள், இந்தக் கடமையை நிறைவேற்ற கிறிஸ்தவர்களுக்கு உதவுமென்றால், அவற்றைப் பயன்படுத்துவது நிச்சயமாகவே நியாயமானதுதான். அதே சமயத்தில், அளவுக்கதிகமாகவோ அல்லது வேண்டுமென்றோ தூய்மைக்கேட்டை உண்டாக்குவதை அவர்கள் தவிர்க்கின்றனர். இவ்வாறு அவர்கள் மனிதனுக்கு முன்பாகவும் கடவுளுக்கு முன்பாகவும் ஒரு நல்ல மனசாட்சியை காத்துக்கொள்கின்றனர்.
ஆகவே தூய்மைக்கேட்டின் பிரச்சினையும் மோட்டார் வாகனத்தின் பிரச்சினையும் உண்மையிலேயே எவ்வாறு முடிவில் தீர்த்துவைக்கப்படும் என்பதை இன்று நாம் அறியாவிட்டாலும், அது எப்படியும் தீர்த்துவைக்கப்படும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். உண்மையில், பூரண தீர்வு மிகவும் அருகாமையில் இருக்கிறது.
[பக்கம் 9-ன் பெட்டி]
தூய்மைக்கேட்டை எதிர்த்து போராடுதல்
• கூடுமானால் நடந்து செல்வது அல்லது சைக்கிளில் செல்வது
• காரில் பலர்சேர்ந்து செல்வது
• காரை ஒழுங்காக சர்வீஸ் செய்வது
• குறைவாக தூய்மைக்கேட்டை உண்டுபண்ணும் எரிபொருளைப் பயன்படுத்துவதில் அக்கறை காண்பிப்பது
• தேவையில்லாத பயணத்தை தவிர்ப்பது
• மிதமான ஆனால் சீரான வேகத்தில் ஓட்டுவது
• கூடுமான சமயத்திலும் சாத்தியமாயிருக்கும்போதும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவது
• எவ்வளவு நேரம் வாகனம் நிறுத்திவைக்கப்பட்டாலும் என்ஜினை ஆன் செய்த நிலையில் வைப்பதற்குப் பதிலாக ஆஃப் செய்துவைப்பது