வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
நிலம், கடல், காற்று—ஆகிய நம்முடைய சுற்றுப்புறம், தூய்மைக்கேடு அடையும் வேகத்தைக் குறைப்பதில் கிறிஸ்தவர்களுடைய பொறுப்பு என்ன?
யெகோவாவின் சாட்சிகளாக நாம், நம்முடைய பூமியாகிய வீட்டைப் பாதிக்கும் சூழலியல் பிரச்னைகளைக் குறித்து அதிக கவலையுள்ளவர்களாக இருக்கிறோம். ஒரு பரிபூரண மனித குடும்பத்திற்கு இந்தப் பூமி சுத்தமான, சுகாதாரமுள்ள வீடாக உண்டாக்கப்பட்டது என்பதை மற்ற யாரையும்விட நாம்தானே அதிகமாக போற்றுகிறோம். (ஆதியாகமம் 1:31; 2:15-17; ஏசாயா 45:18) கடவுள் “பூமியைக் கெடுத்தவர்களைக் கெடு”ப்பார் என்ற அவருடைய உறுதிமொழியும் நமக்கு இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 11:18) எனவே, தொடர்ந்து நம் உலகத்தை தூய்மைக்கேடு செய்துகொண்டிருக்கும் மனிதனோடு தேவையில்லாமல் நாமும் சேர்ந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கு சமநிலையான, நியாயமான முயற்சிகளை எடுப்பது சரியானதே. “நியாயமான” என்ற சொல்லிற்கு கொஞ்சம் கவனம்செலுத்துங்கள். சூழலியல் பிரச்னைகள் மற்றும் செயல்பாடுகள் நம்முடைய மிக முக்கியமான கவலையாக மாறாமல் இருக்கும்படி கவனமாக நம்மைக் காத்துக்கொள்வது வேதவாக்கியங்களின்பிரகாரமும் சரியானதே.
சாதாரண மனித வாழ்க்கையும் கழிவுகளை உண்டாக்குகின்றன. உதாரணமாக, உணவுப்பொருட்கள் வளர்க்கப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டு, பின்பு சாப்பிடப்படுவது பெரும்பாலும் அநேக கழிவுப்பொருட்களைக் கொண்டுவருகிறது. இவற்றில் பல உயிரியல் அடிப்படையில் உடனடியாக சிதைந்துவிடுகிறவையாக ஒருவேளை இருக்கலாம். (சங்கீதம் 1:4; லூக்கா 3:17) உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு தம்முடைய சீஷர்களுக்காக செய்த சூடாக்கப்பட்ட மீன் உணவு, எதிர்பார்த்தவிதமாகவே புகை, சாம்பல், மீன் எலும்புகளின் கழிவுகள் ஆகியவற்றை உண்டாக்கியிருக்கும். (யோவான் 21:9-13) ஆனால் பூமியின் உயிருள்ள மற்றும் உயிரில்லாத அமைப்புமுறைகள் அல்லது சூழற்சிகள், இப்படிப்பட்டவைகளுக்கு இடமளிக்கும்படியே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
கடவுளுடைய ஜனங்கள் சூழலியல் விஷயங்களின்பேரில் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. சூழல் மற்றும் சுகாதார முக்கியத்துவம்வாய்ந்தப் படிகளை தம்முடைய பூர்வீக ஜனங்கள் பின்பற்றும்படி யெகோவா எதிர்பார்த்தார். (உபாகமம் 23:9-14) பூமியைக் கெடுப்பவர்களைப்பற்றிய அவருடைய நோக்கத்தை நாம் அறிந்திருக்கிறபடியால், சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு நாம் செய்யவேண்டிய காரியங்களை நிச்சயமாகவே அசட்டை செய்யக்கூடாது. குப்பைகள் அல்லது கழிவுகளை, முக்கியமாக நச்சுப்பொருட்களைச் சரியான முறையில் நீக்கிப்போடுவதன்மூலம் நாம் இதைச் செய்யலாம். குப்பைகளை மறுபடியும் பயன்படுத்தும் திட்டங்களோடு நாம் மனப்பூர்வமாக ஒத்துழைக்கிறோம். அதிகாரங்களால் கட்டளையிடப்படும்போது அவ்விதமாகச் செய்வதற்குக் கூடுதலான காரணமும் இருக்கிறது. (ரோமர் 13:1, 5) நிலத்தின்மேலும் கடல்களுக்கு அடியிலும் இருக்கிற ஏராளமான குப்பைக்கூளங்களோடு போய்ச்சேரும் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சிலர், உயிரியல் அடிப்படையில் உடனடியாக சிதைந்துவிடுகிற பொருட்களைத் தங்களுடைய உபயோகத்திற்குப் பயன்படுத்துவது போன்ற இன்னும் கூடுதலான முயற்சிகளை எடுப்பதில் திருப்தியைப் பெறுகின்றனர்.
சட்டம் தேவைப்படுத்தினால் தவிர, மற்றபடி இந்த விஷயத்தில் எவ்வளவு தூரத்திற்கு ஒரு கிறிஸ்தவன் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பது ஒரு தனிப்பட்ட விஷயமாக இருக்கிறது. செய்திகளின் போக்கைப்பார்க்கும்போது அபூரண மனிதர் ஒருவிதமான மட்டுக்குமீறிய நிலைக்குப் போகும் கண்ணியில் எளிதில் விழுந்துவிடுவார்கள் என்பது தெளிவாக இருக்கிறது. இயேசுவின் புத்திமதி நிச்சயமாகவே மிகப்பொருத்தமாக இருக்கிறது: “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் . . . நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?” (மத்தேயு 7:1, 3) இதை மனதில் வைத்திருப்பது மற்ற அத்தியாவசியமான விஷயங்களையும் அசட்டைசெய்யாமல் இருப்பதற்கு உதவியாக இருக்கலாம்.
எரேமியா தீர்க்கதரிசி எழுதினார்: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23) இந்த நியமத்தை மறந்தது மனிதகுலத்தை 2 தீமோத்தேயு 3:1-5-ல் குறிக்கப்பட்டுள்ள ‘கையாளுவதற்குக் கடினமான காலங்களை’ நேருக்குநேர் எதிர்ப்படச் செய்திருக்கிறது. வெளிப்படுத்துதல் 11:18-ல் கடவுள் பதிவுசெய்திருப்பது, தூய்மைக்கேட்டையும் உட்படுத்தும், பூமியின் பேரளவான சூழலியல் பிரச்னைகளைப் பூமியிலிருந்து நீக்க எடுக்கப்படும் மனிதரின் முயற்சிகள் முற்றிலும் வெற்றிபெறமுடியாது என்பதை நிரூபிக்கிறது. ஆங்காங்கே ஒருசில முன்னேற்றங்கள் இருக்கலாம், ஆனால் நிரந்தரமான ஒரே தீர்வு கடவுளுடைய தலையிடுதலைத் தேவைப்படுத்துகிறது.
இதன் காரணமாகவே நாம் நம்முடைய முயற்சிகள், பொருள்வளங்கள் அனைத்தையும், மேற்போக்கான அறிகுறிகளைத் தீர்ப்பதற்கு முயல்வதில் ஒருமுகப்படுத்துவதற்குப் பதிலாக, தெய்வீகத் தீர்வின்மீது ஒருமுகப்படுத்துகிறோம். இதில், தம்முடைய ஊழியத்தின் பெரும்பகுதியைச் ‘சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுப்பதற்காக’ பயன்படுத்திய இயேசுவின் மாதிரியை நாம் பின்பற்றுகிறோம். (யோவான் 18:37) உலகத்தைப் போஷிப்பதை அல்லது தூய்மைக்கேட்டையும் உட்படுத்தும் பேரளவான சமுதாய பிரச்னைகளைத் தீர்ப்பதை இயேசு செய்துகொண்டிருந்திருப்பதற்குப் பதிலாக, மனிதகுலத்தைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கு ஒரு முழுத்தீர்வைச் சுட்டிக்காட்டினார்.—யோவான் 6:10-15; 18:36.
நிலம், காற்றுமண்டலம், அல்லது நீர்த்தேக்கங்கள் போன்றவற்றை அநாவசியமாக தூய்மைக்கேடுசெய்வதைத் தவிர்க்கும்படி, உடன் மானிடருக்குக் காட்டப்படவேண்டிய அன்பு நம்மைத் தூண்டுவதாக இருந்தாலும், நாம் சத்தியத்தைக்குறித்துத் தொடர்ந்து சாட்சிக்கொடுத்துக்கொண்டே இருப்போம். இது, பைபிள் சத்தியத்தைப் பொருத்திப்பிரயோகிப்பதன்மூலம், புகை, அளவுக்குமீறின மது, அல்லது கேடுவிளைவிக்கும் போதைப்பொருட்கள் ஆகியவற்றால் தங்களுடைய உடம்புகளை கெடுத்துக்கொள்வதைத் தவிர்க்கும்படி மக்களுக்குப் போதிப்பதை உட்படுத்துகிறது. இலட்சக்கணக்கான புதியவர்கள் சீஷர்களாகி தங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கங்களையும் மற்றவர்களுக்குக் கரிசனை காண்பிப்பதையும் கற்றறிந்திருக்கிறார்கள். ஆகவே, இன்றுள்ள பொதுவான தூய்மைக்கேடுப் பிரச்னைக்குச் சொல்லர்த்தமானப் பங்கை இந்தப் பிரசங்கவேலை கொடுத்திருக்கிறது. ஆனால் மிக முக்கியமாக, கிறிஸ்தவ சீஷர்கள், கடவுள் தம்முடைய உண்மையான வணக்கத்தாருக்குச் சீக்கிரத்தில் கொடுக்கப்போகும் சுத்தமான பரதீஸான பூமியில் வாழ்வதற்கு அவர்களைத் தகுதியாக்கும்பொருட்டு தங்கள் பண்பியல்புகளையும் பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ள கடுமையாக முயற்சி செய்கிறார்கள்.