தூய்மைக்கேட்டை வேரோடு அழித்தல்—இருதயத்திலிருந்தும் மனதிலிருந்தும்
யெகோவா, மனிதர்களுக்கு அசுத்தமாக அல்லது ஒழுங்கின்மையாக இருக்க ஓர் ஆசையைக் கொடுக்கவில்லை. சுத்தம், ஒழுங்கு, அழகு ஆகியவற்றை உடைய ஒரு பரதீஸாக இருக்கும்படி அவர்களுடைய கோள வீடு வடிவமைக்கப்பட்டது? இது சகிக்கமுடியாதளவிற்கு ஒரு குப்பைக்கூளமாக படிப்படியாக மாறவேண்டும் என்று கடவுள் நோக்கம்கொண்டில்லை.—ஆதியாகமம் 2:8, 9.
ஆனால், தெய்வீக வழிநடத்துதலை மனிதர்கள் ஏற்க மறுத்தப் பின்பு, அவர்கள் தங்களுக்கே சொந்தமான ஓர் உலக ஒழுங்கை அமைத்துக்கொள்ள ஆரம்பித்தனர். தெய்வீக ஞானத்தின் உதவியில்லாமல், அனுபவக்குறைவோடு, ஒரு குருட்டுத்தனமான வகையில் அவர்கள் கற்றுக்கொள்ளும்படி கட்டாயப்பபடுத்தப்பட்டார்கள். உலகச் சரித்திரம், மனிதர்கள் தங்களைத் தாங்களே வெற்றிகரமாக ஆள முடியாது என்ற பைபிள் சத்தியத்தை உண்மையென மெய்ப்பிக்கிறது; ஆயிரக்கணக்கான வருடங்களாக ‘ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்.’ (பிரசங்கி 8:9; எரேமியா 10:23) தூய்மைக்கேடு என்ற நவீன பிரச்னை, அதனுடைய எல்லா விதங்களிலும், மனிதனுடைய தவறான ஆட்சிமுறையின் பாதிப்பில் ஒன்றாகும்.
கடவுளுடைய நோக்குநிலையைப் பொருத்துதல்
கடவுளைப் பிரியப்படுத்த விரும்பும் மக்கள், சுத்தம் சம்பந்தமான சிருஷ்டிகரின் தராதரங்களின்படி வாழ்வதற்குக் கடினமாக முயற்சிசெய்கிறார்கள். எனவே, 1991-ன் மத்திபத்தில், செக்கோஸ்லோவாகியாவின் ப்ராக்-இல் நடப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த ஒரு சர்வதேச மாநாட்டில் ஒரு பிரச்னையை யெகோவாவின் சாட்சிகள் எதிர்ப்பட்டார்கள்.a ஏறக்குறைய 75,000 பேர் ஆஜராயிருப்பார்கள், ஸ்ட்ரேஹாஃப் விளையாட்டு அரங்கம் தாராளமாக இடங்கொடுக்கும் ஒரு கூட்டம்தான் இது. ஆனால், அந்த விளையாட்டு அரங்கமோ கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமலிருந்தது. சீதோஷண நிலைமைகளினால் அரங்கம் மிகவும் பாதிக்கப்பட்டு, பழுதுபார்க்கப்படவேண்டிய நிலையில் இருந்தது. சுமார் 1,500 யெகோவாவின் சாட்சிகள் அதைப் பழுதுபார்ப்பதற்கும் மறுபடியும் வர்ணம் (பெயின்ட்) அடிப்பதற்கும் 65,000-க்கும் மேற்பட்ட மணிநேரங்களைச் செலவழித்தனர். மாநாட்டுச் சமயம் வந்தபோது, இந்தச் சுத்தப்படுத்தும் பணி, மெய்த் தேவனாகிய யெகோவாவை வணங்குவதற்குத் தகுதியான ஓர் இடமாக அந்த அரங்கத்தை மாற்றியிருந்தது.
சுத்தத்திற்கும் சீரொழுங்கிற்கும் உலகம் பொதுவாக இப்பேர்பட்ட குறைந்த போற்றுதலைக் காண்பிக்கும்போது, யெகோவாவின் சாட்சிகளை வித்தியாசமாக இருக்கும்படித் தூண்டுவது எது? தன்னலம், பிறருணர்ச்சி கருதாமை, பேராசை, அன்பில்லாமை இவற்றைப் போன்ற முரணான போக்குகளை வேரோடு நீக்கவேண்டும் என்ற பைபிளின் புத்திமதிக்கு அவர்கள் காட்டும் போற்றுதலே. “பழைய இயல்பையும் [ஆளுமையையும், NW] அதற்குரிய செயல்களையும் களைந்து”போடுங்கள், என்று பைபிள் சொல்கிறது. அதற்குப் பதிலாக, “தன்னை உண்டாக்கியவரின் சாயலுக்கேற்ப, உண்மை அறிவை அடையும் பொருட்டுப் புதுப்பிக்கப்பட்டு வரும் புதிய இயல்பை [ஆளுமையை, NW] அணிந்து”கொள்ளுங்கள். சுத்தம், ஒழுங்கு, நேர்த்தி ஆகியவற்றிற்கான அன்பினால் சிறப்பாக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட ஆளுமையில், தூய்மைக்கேடு செய்யும் போக்குகளுக்கு இடமில்லை.—கொலோசேயர் 3:9, 10, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்; 2 கொரிந்தியர் 7:1; பிலிப்பியர் 4:8; தீத்து 2:14.
இந்தப் புதிய ஆளுமை, அரசாங்கங்கள் கொண்டுவரும் தூய்மைக்கேடுக்கு எதிரான சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படியாமையைக் காட்டும்வகையில் புறக்கணிப்பது அல்லது வேண்டுமென்றே தூய்மைக்கேடுசெய்வது போன்றவற்றில் ஈடுபடாமலிருந்து, தூய்மைக்கேடு செய்யாமல் இருக்க ஜாக்கிரதையுள்ளவர்களாகக் கிறிஸ்தவர்கள் இருக்கவேண்டும் என்பதைத் தேவைப்படுத்துகிறது. இது குப்பைக்கூளங்களை முடிவில் உண்டாக்கும் தன்னலமுள்ள, சோம்பேறித்தனமான மற்றும் கண்டகண்ட இடங்களில் தூக்கியெறியும் மனப்பான்மையைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு உதவிசெய்கிறது. மற்றவர்களின் சொத்துகளுக்கு மரியாதையைக் காண்பிக்க உற்சாகப்படுத்துவதன்மூலம் சுவர் சித்திரங்களை, அவர்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு வழியாகவோ தீங்கற்ற நகைச்சுவையாகவோ, அல்லது கவர்ந்திழுக்கும் மாற்று கலைவடிவமாகவோ பயன்படுத்துவதை இது அனுமதிப்பதில்லை. இது வீடுகள், கார்கள், ஆடைகள், உடம்புகள் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருப்பதை தேவைப்படுத்துகிறது.—யாக்கோபு 1:21-ஐ ஒப்பிட்டுப்பாருங்கள்.
புதிய ஆளுமையைத் தரித்துக்கொள்ள விரும்பாதவர்களுக்கு, தம்முடைய வந்துகொண்டிருக்கும் பரதீஸில் ஜீவனைத் தராமல் இருப்பதற்கு தேவன்மேல் குற்றம் காண முடியுமா? நிச்சயமாக இல்லையே. இன்னும் தூய்மைக்கேடு செய்வதற்குரிய குணங்களை மறைவாகக் கொண்டிருக்கும் எவரும், மீட்கப்பட்ட கிரக பூமியின் பரதீஸிய அழகிற்கு அபாயமாக இருப்பார்கள். இது அதை நன்றாகப் பாதுகாக்க விரும்புகிறவர்களுக்குக் கவலைதருவதாக இருக்கும். ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கும்’ கடவுளுடைய தீர்மானம் நீதியானதாகவும், அன்புக்குரியச் செயலாகவும் இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 11:18; 21:8.
மும்முர ஈடுபாடா?
அப்படியென்றால், கிறிஸ்தவர்கள் தூய்மைக்கேட்டிற்கு எதிரான அல்லது சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபடவேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துமா?
தெளிவாகவே, தூய்மைக்கேடு உடல்நலத்திற்கும் பொதுப் பாதுகாப்பிற்கும் தீங்குதருவதாக இருக்கிறது. யெகோவா இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த சட்டங்களிலிருந்து, அவர் இப்படிப்பட்ட விஷயங்களில் சரியான அக்கறையுடையவராக இருக்கிறார் என்பது நமக்குப் புரிகிறது. (யாத்திராகமம் 21:28-34; உபாகமம் 22:8; 23:12-14) ஆனால் அவர், பொதுநலம் சம்பந்தமான விஷயங்களைக்குறித்து இவர்கள் மற்றவர்களைப் பலவந்தப்படுத்தவேண்டும் என்று எந்தச் சமயத்திலும் அவர் உத்தரவு கொடுக்கவில்லை; முதல் நூற்றாண்டுக் கிறிஸ்தவர்களும் அவ்வாறு செய்யும்படி ஒருபோதும் சொல்லப்படவும் இல்லை.
இன்று, சுற்றுப்புறச்சூழ்நிலை சம்பந்தமான காரியங்கள் மிக எளிதில் அரசியல் பிரச்னையாக மாறிவிடக்கூடும். உண்மையில், சுற்றுப்புறச்சூழ்நிலை பிரச்னைகளைத் தீர்க்கும் விசேஷித்த நோக்கத்தோடுகூட சில அரசியல் கட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் சம்பந்தமாக தன்னை ஏதேனும் ஒரு கட்சியை ஆதரிக்கும்படி அனுமதிக்கிற எந்தக் கிறிஸ்தவரும் அரசியலில் நடுநிலையைக் காத்துக்கொள்பவராக இருக்க முடியாது. இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்குப் பின்வரும் நியமத்தை ஸ்தாபித்தார்: “நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.” அந்தத் தேவையை மதிக்காத கிறிஸ்தவர், ‘அழிவுக்குரிய இவ்வுலகத் தலைவர்களோடு’ சேர்ந்துகொள்ளும் அபாயத்திற்கு உட்படுகிறார்.—யோவான் 17:16; 1 கொரிந்தியர் 2:6, கத்.பை.
இயேசு, தம் காலத்திலிருந்த சமுதாய பிரச்னைகளையெல்லாம் தீர்ப்பதற்கு முயற்சிசெய்யவில்லை; அவருடைய சீஷர்களிடமும் அவ்வாறு செய்யும்படிச் சொல்லவுமில்லை. அவர் அவர்களுக்குக் கொடுத்தக் கட்டளை: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” சுற்றுப்புறச்சூழ்நிலை சம்பந்தமான திட்டங்களைப் பற்றி அவர் அவர்களுக்குக் கட்டளையிடவில்லை.—மத்தேயு 28:19, 20.
ஒரு கிறிஸ்தவருடைய வாழ்க்கையில் எது முதலிடம்பெறவேண்டும் என்பதைப்பற்றி விளக்குபவராய் கிறிஸ்து சொன்னார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் [தேடிக்கொண்டேயிருங்கள், NW].” (மத்தேயு 6:33) யெகோவா, மேசியானிய ராஜ்யத்தின்மூலம் தம்முடைய நீதியான நியமங்களை உலகமுழுவதும் அமலுக்குக் கொண்டுவரும்போது, சுற்றுப்புறச்சூழ்நிலை சம்பந்தமானப் பிரச்னைகளெல்லாம் அனைவருக்கும் திருப்தியளிக்கும் வகையில் நிரந்தரமாகத் தீர்க்கப்படும்.
எனவே, யெகோவாவின் சாட்சிகள் சமநிலையான நிலைநிற்கையை எடுக்கின்றனர். ரோமர் 13:1-7-ன் கண்ணோட்டத்தில், அவர்கள் சுற்றுப்புறச்சூழலை ஒழுங்குபடுத்தும் அரசாங்கத்தின் சட்டங்களுக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படியவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதற்கும் மேலாக, அயலகத்தாரின்மீதான தேவபக்திக்கேதுவான அன்பு, அவர்களை மற்றவர்களுடைய—பொது அல்லது தனிப்பட்ட—சொத்துகளைச் சேதப்படுத்தாமலிருக்கவும் கழிவுப்பொருட்களைத் தாறுமாறாகத் தூக்கியெறியாமலிருக்கவும் அவர்களை உந்துவிக்கிறது. ஆனால் உலகப்பிரகாரமானச் சுத்தப்படுத்தும்பணிகளை முன்னிருந்து வழிநடத்துவதைச் செய்யும்படி அவர்கள் தெளிவாகவே உத்தரவிடப்பட்டில்லை. அவர்கள் மிகச்சரியாகவே, கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி பிரசங்கிப்பதற்கு முதலிடம் கொடுக்கிறார்கள், இவ்வாறு செய்வதன்மூலமே மிகஅதிக நிரந்தரமான நன்மையைச் செய்வதாக உணர்கிறார்கள்.
ஆவிக்குரிய சுத்தப்படுத்துதல்
பூர்வ இஸ்ரவேலர், இரத்தத்தைச் சிந்துதலின்மூலமோ, ஒழுக்கமற்ற வாழ்க்கைப் பாணியைப் பின்பற்றுவதன்மூலமோ, அல்லது பரிசுத்தக் காரியங்களுக்கு அவமரியாதையை காண்பிப்பதன்மூலமோ பூமிக்குத் தூய்மைக்கேடுசெய்தால் அதற்கேற்றப் பலன்களைப் பெறுவார்கள் என்பதாக அவர்கள் திரும்பத்திரும்ப எச்சரிக்கப்பட்டார்கள். (எண்ணாகமம் 35:33; எரேமியா 3:1, 2; மல்கியா 1:7, 8) குறிப்பிடத்தக்கவிதமாகவே, அவர்கள் ஒருவேளை மாம்சத்திற்குரிய தூய்மைக்கேட்டைக்குறித்து குற்றமுள்ளவர்களாக இருந்திருக்கலாம் என்றாலும் அதற்காக அல்லாமல் இந்த ஆவிக்குரிய தூய்மைக்கேட்டிற்காகவே அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.b
ஆதலால், ஆவிக்குரிய தூய்மைக்கேட்டை அல்லது அசுத்தத்தையே ஒரு கிறிஸ்தவர் மிக முக்கியமாக தவிர்ப்பதற்குப் போராடவேண்டும். இதை அவர், தூய்மைக்கேடுசெய்யும் மனச்சாய்வுகளை இருதயத்திலிருந்தும் மனதிலிருந்தும் வேரோடு நீக்கிப்போடும் “புதிய ஆளுமையை” தரித்துக்கொள்வதன்மூலம் அவ்வாறு செய்கிறார். இந்த ஆவிக்குரிய சுத்தப்படுத்துதலிலிருந்து 40 லட்சத்துக்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகள் பயனடைந்து வருகின்றனர், தங்கள் மத்தியில் மத மற்றும் ஒழுக்க சுத்தத்தையும், குறிப்பிடத்தக்க மாம்சப்பிரகாரமான சுத்தத்தையும் முயன்று பெற்றிருக்கின்றனர்.—எபேசியர் 4:22-24, NW.
இந்தக் காலம், ஆவிக்குரிய சுத்தப்படுத்துதலில் மும்முரமாக ஈடுபடவேண்டிய காலம். ஒரு பெளதீக சுத்தப்படுத்துதல் ஏற்பாடு, பூமியளவில் சரியான சமயத்தில் பின்தொடர்ந்து, இதற்குத் தகுதியான ஒரு தூய்மைக்கேடில்லாத சுற்றுப்புறச்சூழ்நிலையைக் கொடுப்பதன்மூலம், குப்பைக்கூளமாக மாற்றப்படுவதிலிருந்து நம் வீட்டைப் பாதுகாக்கும்.—பிரசங்கி 3:1.
[அடிக்குறிப்புகள்]
a கிழக்கு ஐரோப்பாவில் நடந்த இந்தத் தொடர் மாநாடுகள் பற்றிய விவரமான அறிக்கைக்கு, டிசம்பர் 22, 1991 ஆங்கில விழித்தெழு! பார்க்கவும்.
b இஸ்ரவேலர்கள் உருக்கியெடுக்கும் முறையை நன்கு அறிந்தவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய சில வெண்கல சுரங்கங்களின் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன; ஆலயத்திற்காக ஆராதனை சாதனங்களைத் தயாரிக்க வெண்கலம் உருக்கப்பட்டது. (1 இராஜாக்கள் 7:14-46-ஐ ஒப்பிடுக.) ஒருவேளை மற்ற கேடான விளைவுகளோடு, புகைகள், உலோக மாசுகள், உலோக கசிவுகள் வடிவில் சிறிதளவேனும் தூய்மைக்கேட்டைச் செய்யாமல், இந்த உலோக உருக்கும் முறை, பின்பற்றப்பட்டிருக்க முடியாது என்பதுபோல் தெரிகிறது. ஆனாலும், இந்தக் குறைந்த ஜனத்தொகை நெருக்கடியுள்ள தனிப்பட்ட பகுதியில் உண்டாகும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள்ளான சிறிதளவு அசுத்தத்தைப் பொறுத்துக்கொள்ள யெகோவா தெளிவாகவே மனமுள்ளவராக இருந்தார்.