பரதீஸா குப்பைக்கூளமா—உங்களுக்குப் பிரியமானது எது?
அவர் யாராக இருந்தாரோ அப்படியேத்தான் எவரும் அவரைப் புரிந்துகொண்டிருப்பர்: பரதீஸைப்போன்ற தோற்றமுடைய ஒரு தீவில் சூரியவெயிலை அனுபவிக்கவேண்டும் என்ற ஆவலோடு சிறிது ஓய்வு தேவைப்பட்ட ஓர் ஐரோப்பிய சுற்றுலாப்பயணியாக அவர் இருந்தார். மிகப்பரந்த கடற்கரை ஓரமாக மணற்குன்றுகளின் வழியாகக் கடந்துபோகிறவராக அவர், களையப்பட்ட புட்டிகள், தகரக்குவளைகள் (கேன்கள்), குழைமப் (பிளாஸ்டிக்) பைகள், மெல்லு-மிட்டாய் மற்றும் சாக்லேட்டின் காகித உறைகள், செய்தித்தாள்கள், பத்திரிகைகள் ஆகியவற்றின் குப்பைக்கூளங்களின் மத்தியில் மிகவும் ஜாக்கிரதையாக தன்னுடைய வழியைத் தேர்ந்தெடுத்தார். வெளிப்படையாகவே கோபம்கொண்டவராக, இந்தப் பரதீஸைக் காண்பதற்காகவா அவர் பிரயாணம்செய்தார் என்று நொந்துகொண்டார்.
இப்படிப்பட்ட ஓர் அனுபவத்தை நீங்கள் எப்போதாவது பெற்றிருக்கிறீர்களா? மக்கள் ஒருவித பரதீஸில் விடுமுறைக்காலத்தைச் செலவழிக்க ஏங்கிக்கொண்டிருந்துவிட்டு, ஆனால் அவர்கள் அங்குப் போனப் பிறகோ, அதை ஒரு மெய்யான குப்பைக்கூளமாக மாற்றுவதில் எந்தவிதமான மனச்சாட்சி உறுத்தல்களையும் உடையவர்களாக இல்லாமல் ஏன் இருக்கிறார்கள்?
“பரதீஸ்”-இல் மட்டும் அல்ல
அநேக உல்லாசப் பயணிகள் திரள்திரளாக செல்லும் “பரதீஸைப் போன்ற இடங்கள்”-க்கு மட்டுமல்ல இந்த அழகு, ஒழுங்கு, சுத்தம், ஆகியவற்றிற்கான வெளிப்படையான அவமரியாதை. நவீன சமுதாயத்தில் ஏறக்குறைய எங்குப் பார்த்தாலும் தூய்மைக்கேடு கொடூரமாகப் பரவியிருக்கிறது. அநேக வர்த்தகங்கள், டன்கள் கணக்காகக் கழிவுப்பொருட்களை உண்டாக்குவதன்மூலம் பெரிய அளவில் தூய்மைக்கேட்டை உண்டாக்குகின்றன. சரியாக ஒழித்துக்கட்டப்படாத விஷமிக்க கழிவுகள், தற்செயலாக நடக்கும் எண்ணெய்க் கசிவுகள், நம் பூமியின் பெரும்பகுதிகளை நாசப்படுத்தி, அவற்றை உயிர்வாழ்வதற்குத் தகுதியற்றதாக மாற்றுகின்றன.
யுத்தங்களும் தூய்மைக்கேடுசெய்கின்றன. உலகம் பயத்தில் பார்த்துக்கொண்டிருந்தபோது, 1991 பாரசீக வளைகுடா யுத்தம் ஒரு புதிய போக்கை ஆரம்பித்தது. ஈராக் படைகள் வேண்டுமென்றே சுமார் 600 எண்ணெய்க் கிணறுகளுக்குத் தீ வைத்தது, இது ஓர் ஐரோப்பிய செய்தித்தாள் விளக்கியதுபோல “நரகத்தின் ஒரு தரிசனத் தோற்றமாகக்” குவைத்தை மாற்றியது. இந்தப் பயங்கரக் காட்சியை “இதுவரை மனிதர்களால் கொண்டுவரப்பட்ட சுற்றுப்புறச் சூழ்நிலைக் கேடுகளில் மிகப்பெரியது” என்று ஜெர்மன் பத்திரிகை கேவோ குறிப்பிட்டது.
யுத்தம் முடிவடைந்தபோது, ஒரு சுத்தப்படுத்தும் பணி உடனே ஆரம்பிக்கப்பட்டது. எரிந்துகொண்டிருந்த எண்ணெய்க் கிணறுகளை அணைப்பது மட்டும் அநேக மாதங்களுக்குக் கடின முயற்சியைத் தேவைப்படுத்தியது. குவைத்தில் தூய்மைக்கேட்டின் அதிகரிப்பு, அங்கு மரண விகிதத்தை 10 சதவிகிதம் அதிகரிக்கலாமென உலகச் சுகாதார அமைப்பு அறிவிப்பு செய்தது.
குறைவாக ஆபத்திற்குரியது ஆனால் மிகவும் எரிச்சலூட்டுவது
பேரளவிலான சுற்றுப்புறச் சூழ்நிலைக்கேட்டின் ஒவ்வொரு பெரிய, படுமோசமான எடுத்துக்காட்டுக்கும் ஆயிரக்கணக்கான சிறியளவு எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. பொதுஇடங்களில் குப்பை போடுகிறவர்களும் சுவர்களில் சித்திரங்களை வரையும் (graffiti) “ஓவியர்கள்” ஒருவேளை கொஞ்சம் குறைவான தூய்மைக்கேட்டைச் செய்பவர்களாக இருக்கலாம், ஆனாலும் ஒரு பரதீஸாக இருப்பதற்கு, பூமி தேவைப்படுத்தும் அதன் தன்மையை இழக்கச்செய்வதில் அவர்கள் பங்கும் இருக்கிறது.
சில இடங்களில் சுவர் சித்திரங்கள் அவ்வளவு அதிகமாகக் தோன்றுவதால், குடிமக்கள் “சுவர் சித்திர குருடராக” மாறி, அவற்றை கண்டும் காணாததுபோல் இருக்கிறார்கள். அவை, சுரங்கப்பாதை இரயில்களிலும், கட்டடங்களின் சுவர்களிலும், தொலைபேசிக் கூடங்களிலும் காணப்படுகின்றன. பொதுக்கழிவறை சுவர்களில் மட்டும் காணப்படுபவையாகச் சுவர் சித்திரங்கள் இனிமேலும் இல்லை.
சில நகரங்கள், குடியிருக்கமுடியாத, பாழாய்ப்போன கட்டடங்களால் நிறைந்திருக்கின்றன. குடியிருப்புப் பகுதிகள் சீரமைவில்லாத வீடுகளாலும், முற்றங்களாலும் அசிங்கப்படுத்தப்படுகிறது. சின்னாபின்னமான கார்கள், பயனில்லாத இயந்திர சாதனங்கள், மற்றும் பழமையான கழிவுகள் பண்ணை வெளிகளை அலங்கோலப்படுத்துகின்றன, மற்றபடி இந்த இடங்கள் மிகவும் கவர்ச்சிதருவதாக இருந்திருக்கக்கூடும்.
ஒருசில வட்டாரங்களில் மக்கள், அசுத்தமான, அழுக்கடைந்த உடல்களைக் கொண்டிருப்பதைப்பற்றி கவலையற்று இருப்பதுபோல் தோன்றுகிறது. தாறுமாறாகத் தொங்குகிற ஆடைகளையும் பரட்டைத் தலைமுடியையும் உடைய ஒரு பகட்டான தோற்றத்தைக் கொடுப்பது, ஏற்கத்தக்கதாக இருப்பதோடுகூட, புதுப் பாணியாகவும் இருக்கலாம். நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருக்க விரும்புகிறவர்கள், உருப்படாத பழைய பாணியைப் பின்பற்றுபவர்களாக நோக்கப்படுகிறார்கள்.
என்னே ஒரு மிகப்பெரிய வேலை!
சுற்றுலா பத்திரிகைகளின் ஜொலிக்கும் அட்டைப்படங்களில் காணப்படுவதுபோல், நம் பூமிக்குரிய வீட்டின் மலைகள், காடுகள், கடற்கரைகள் ஆகியவற்றை மாற்றுவதற்கு என்னே ஒரு மிகப்பெரிய சுத்தப்படுத்தும் பணி தேவையாயிருக்கும்—கூடுதலாக மாநகரங்கள், பட்டணங்கள், பண்ணைகள், ஏன் மக்களுக்கும்கூட என்னே வேலை செய்யப்படவேண்டியதிருக்கும்!
முன்னால் குறிப்பிடப்பட்ட அந்தச் சுற்றுலாப் பயணி, ஒரு சுத்தப்படுத்தும் குழு அந்த இடத்திற்கு அந்த நாளின் இறுதியில் சென்று பெரிய குப்பைகளையெல்லாம் நீக்கிப்போடுவதைக் காண்பதில் மகிழ்ச்சியடைந்தார். எனினும், அவர்கள் உடைந்த கண்ணாடித் துண்டுகள், புட்டிகளின் மூடிகள், தகர-கேன், மற்றும் அநேக சிகரெட் துண்டுகள் ஆகியவற்றை மீதியாக விட்டுவிட்டுச் சென்றனர். எனவே, சுத்தப்படுத்தும் பணி நடந்த பின்பும், அந்த இயற்கைக் காட்சி, பரதீஸைவிட இன்னும் அதிகமாக ஒரு குப்பைக்கூளத்தைப் போல்தான் என்பதற்கு அதிகமான சான்று இருந்தது.
ஒரு முழு உலகக் குப்பைக்கூளமாக மாறாதபடி கிரக பூமியைப் பாதுகாப்பதற்கான ஒரு முழு உலகச் சுத்தப்படுத்துதல், இந்தக் கழிவுகளின் எல்லா தடயங்களையும் முழுவதுமாக நீக்கிப் போடுவதை தேவைப்படுத்தும். இப்படிப்பட்ட ஒரு சுத்தப்படுத்துதல் நடந்தேறும் என்பதற்கு ஏதேனும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றனவா? அவ்வாறெனில், எப்படி? யார் இதைச் செய்வார்கள்? எப்பொழுது?