மோட்டார் வாகனங்கள் இல்லாத ஓர் உலகம்?
மோட்டார் வாகனங்கள் இல்லாத ஓர் உலகத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அல்லது மோட்டார் வாகனங்களைப்போல், சென்ற நூற்றாண்டில் ஜனங்களுடைய வாழ்க்கை பாணியையும் நடத்தையையும் அடிப்படையில் மாற்றியிருக்கும் ஒரு கண்டுபிடிப்பை உங்களால் குறிப்பிட முடியுமா? மோட்டார் வாகனங்கள் இல்லையென்றால், மோட்டார் பிரயாணிகள் தங்கும் விடுதிகள் இருக்காது, டிரைவ்-இன் ரெஸ்டரன்டுகள் இருக்காது, டிரைவ்-இன் தியேட்டர்களும் இருக்காது. அதிமுக்கியமாக, பஸ்ஸோ, டாக்ஸிகளோ, கார்களோ அல்லது ட்ரக்குகளோ இல்லாமல் நீங்கள் எப்படி வேலைக்கோ பள்ளிக்கோ செல்ல முடியும்? எவ்வாறு விவசாயிகளும் உற்பத்தியாளர்களும் தங்கள் விற்பனைப் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியும்?
“ஒவ்வொரு ஆறு ஐ.மா. வியாபாரங்களிலும் ஒரு வியாபாரம் மோட்டார் வாகனங்களின் உற்பத்தியின் பேரிலோ, விநியோகிப்பின் பேரிலோ, பழுதுபார்ப்பதன் பேரிலோ அல்லது பயன்படுத்துவதன் பேரிலோ சார்ந்திருக்கிறது,” என்பதாக தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது. அது கூடுதலாக இவ்வாறு சொல்கிறது: “மோட்டார் வாகன நிறுவனங்களின் விற்பனைகளும் ரசீதுகளும், அந்நாட்டின் மொத்த வியாபாரத்தில் ஐந்தில் ஒரு பகுதிக்கு அதிகத்தையும், அதன் சில்லறை வியாபாரத்தில் நான்கில் ஒரு பகுதிக்கு அதிகத்தையும் காண்பிக்கின்றன. மற்ற நாடுகளில் இந்த வீதங்கள் சற்று குறைவானதாக இருக்கின்றன, ஆனால் ஜப்பானும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஐ.மா.-வின் நிலையை வேகமாக எட்டிவருகின்றன.”
இருந்தபோதிலும், மோட்டார் வாகனங்கள் இல்லாத ஓர் உலகம் மேம்பட்ட ஓர் இடமாக இருக்கும் என்பதாக சில ஜனங்கள் சொல்கின்றனர். இதை முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக அவர்கள் சொல்கின்றனர்.
உலகளாவிய போக்குவரத்து நெரிசல்
வாகனத்தை நிறுத்துவதற்கான இடத்தைத் தேடி நீங்கள் எப்போதாவது வெகு நேரமாக தெருக்களைச் சுற்றிவந்திருந்தீர்களென்றால், கார்கள் பயனுள்ளவையாய் இருந்தாலும் ஜனநெருக்கடியுள்ள இடத்தில் அளவுக்கதிகமான கார்கள் பயனற்றவை என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டியதேயில்லை. படுமோசமான போக்குவரத்து நெரிசல் ஒன்றில் நீங்கள் எப்போதாவது மாட்டியிருந்திருந்தால், நகருவதற்கென்றே தயாரிக்கப்பட்டிருந்தும் இப்போது நகர முடியாதபடி நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் ஒரு வாகனத்தில் சிக்கிக்கொண்டிருப்பது எவ்வளவு ஏமாற்றமளிப்பதாய் இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
1950-ல், ஐக்கிய மாகாணங்களில் மாத்திரமே காரின் வீதம், ஒவ்வொரு 4 நபர்களுக்கும் 1 என இருந்தது. 1974-க்குள், பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, கிரேட் பிரிட்டன், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் அந்த நிலையை எட்டின. ஆனால் அதற்குள்ளாக, ஐ.மா.-வில் காரின் வீதம், ஒவ்வொரு 2 நபர்களுக்கும் 1 என அதிகரித்திருந்தது. இப்போது ஜெர்மனியிலும் லக்ஸம்பர்கிலும் காரின் வீதம் ஒவ்வொரு 2 குடிமகனுக்கும் கிட்டத்தட்ட 1 என இருக்கிறது. பெல்ஜியம், பிரான்ஸ், கிரேட் பிரிட்டன், இத்தாலி, நெதர்லாந்து ஆகியவற்றிலும் கிட்டத்தட்ட இதே நிலை இருக்கிறது.
பெரும்பாலான பெரிய நகரங்கள், உலகத்தில் எந்தப் பகுதியிலிருந்தாலும், மிகப் பெரிய வாகன நிறுத்தும் இடங்களாக காட்சியளித்து வருகின்றன. உதாரணத்திற்கு, இந்தியாவில், 1947-ல் சுதந்திரம் கிடைத்த சமயத்தின்போது, 11,000 கார்களும் ட்ரக்குகளும் அதன் தலைநகரமான புது டில்லியில் இருந்தன. 1993-க்குள் அந்த எண்ணிக்கை 22,00,000-ஐத் தாண்டியது! பேரளவான அதிகரிப்பு—ஆனால் டைம் பத்திரிகையின்படி “நூற்றாண்டின் முடிவிற்குள்ளாக இரட்டிப்பாகும்படி எதிர்பார்க்கப்படும் ஓர் எண்ணிக்கை.”
இதற்கிடையில், மேற்கு ஐரோப்பாவில் ஒவ்வொரு நபரிடமும் உள்ள மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதியை மாத்திரமே கிழக்கு ஐரோப்பா கொண்டிருந்தாலும், அங்கு கிட்டத்தட்ட 40 கோடி எதிர்கால வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இப்போதுவரையாக 40 கோடி சைக்கிள்களுக்கு புகழ்பெற்ற சீனாவிலுள்ள நிலைமை சில வருடங்களுக்குள்ளாக மாறுபட்டிருக்கும். 1994-ல் அறிக்கை செய்யப்பட்டபடி, “மோட்டார் வாகன தயாரிப்பை வேகமாக அதிகரிப்பதற்காக சீன அரசாங்கம் திட்டங்களைப் போட்டுக்கொண்டிருக்கிறது,” கார்களின் எண்ணிக்கை, ஆண்டொன்றிற்கு 13 லட்சம் என்பதிலிருந்து நூற்றாண்டின் முடிவுக்குள் 30 லட்சத்திற்கு அதிகரிக்கும்.
தூய்மைக்கேட்டின் அச்சுறுத்தல்
அக்டோபர் 28, 1994-ன் தி டெய்லி டெலிகிராஃப் இவ்வாறு சொன்னது, “கிடைக்கும் தூய்மையான காற்றை பிரிட்டன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.” இது ஒருவேளை மிகையானதாய் இருக்கலாம், இருந்தபோதிலும் கவலைக் கொள்ள வேண்டிய அளவுக்கு உண்மையானதாய் இருக்கிறது. இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஸ்ட்யுயர்ட் பென்கெட் இவ்வாறு எச்சரித்தார்: “நம் காற்றுமண்டலக் கலவையின் இயல்பு முழுவதையும் மோட்டார் வாகனங்கள் மாற்றிவருகின்றன.”
அதிக செறிவுள்ள கார்பன் மோனாக்சைடின் தூய்மைக்கேடு “பிராணவாயுவை உடம்பு இழக்கும்படி செய்விக்கிறது, பகுத்துணர்வையும் சிந்திக்கும் ஆற்றலையும் சேதப்படுத்துகிறது, மறிவினை வேகத்தை குறைக்கிறது, தூக்க கலக்கத்தை ஏற்படுத்துகிறது” என்பதாக கிரகத்தைக் காப்பாற்ற 5000 நாட்கள் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. “ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் உள்ள நகரவாசிகளில் கிட்டத்தட்ட பாதியளவானோர், ஏற்கமுடியாத உயர்ந்த அளவிலான கார்பன் மோனாக்சைடின் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்,” என்பதாக உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது.
சில இடங்களில் மோட்டார் வாகனம் வெளியேற்றும் புகை, காற்றுமண்டல சேதத்திற்காக நூற்றுக்கணக்கான கோடிகள் செலவிட வைப்பது மாத்திரம் அல்லாமல் ஒவ்வொரு வருடமும் அநேக ஜனங்களை கொல்லுகிறது என்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. பிரிட்டன் நாட்டில் சுமார் 11,000 பேர், காரினால் ஏற்படும் காற்று தூய்மைக்கேட்டினால் ஒவ்வொரு வருடமும் இறக்கின்றனர் என்பதாக 1995 ஜூலையில் ஒரு தொலைக்காட்சி செய்தியின் அறிக்கை சொன்னது.
1995-ல் ஐக்கிய மாகாணங்களின் தட்பவெப்பநிலை பற்றிய கருத்தரங்கு பெர்லினில் நடைபெற்றது. 116 நாடுகளின் பிரதிநிதிகள் ஏதாவது செய்யப்பட வேண்டும் என்பதாக ஒப்புக்கொண்டனர். ஆனால் அநேகருக்கு ஏமாற்றம் உண்டாக்கும் விதத்தில், குறிப்பான இலக்குகளை ஏற்று, திட்டவட்டமான விதிமுறைகளை நிறுவி, அல்லது துல்லியமான திட்டங்களை வகுக்கும் வேலை தள்ளிப்போடப்பட்டது.
1990-ல் கிரகத்தைக் காப்பாற்ற 5000 நாட்கள் என்ற புத்தகம் சொல்லியதை கருத்தில் கொள்ளும்போது, இந்த முன்னேற்றமில்லாத தன்மை ஒருவேளை எதிர்பார்க்கப்பட இருந்தது. “காற்றுமண்டல அழிவை எதிர்த்து போராடுவதற்கான நடவடிக்கைகள், பொருளாதார செயல்முறைகளோடு தலையிடாமல் இருக்கும்போது மாத்திரம்தான் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை நவீன தொழில் சமுதாயத்தில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதார சக்தியின் இயல்பு நிர்ணயிக்கிறது,” என்பதாக அது சுட்டிக்காண்பித்தது.
இவ்வாறு, “காற்றுமண்டலத்தில் சேகரிக்கப்படும் கார்பன்டையாக்சைடும் மற்ற கண்ணாடி அறை வாயுக்களும், கிரகத்தை படிப்படியாக வெப்பமாக்கும் சாத்தியத்தை உண்டாக்குகின்றன. அநேக விஞ்ஞானிகளின்படி, வறட்சி, உருகும் பனிக்கவிகை, கடல் மட்ட உயர்வு, கடற்கரைப்பகுதி வெள்ளம், கடும் புயல் காற்று, மற்ற தட்பவெப்ப நிலை சேர்ந்த சேதங்கள் ஆகியவை அதன் விளைவாக ஏற்படலாம்,” என்பதாக டைம் சமீபத்தில் எச்சரித்தது.
தூய்மைக்கேட்டினுடைய பிரச்சினையின் தீவிரம் ஏதாவது செய்யப்படுவதை தேவைப்படுத்துகிறது. ஆனால் எதை?