ஆல்ப்ஸ் மலை தேசியப் பூங்காக்களின் அழகு
பிரான்ஸிலிருந்து விழித்தெழு! நிருபர்
பெருக்கெடுத்து ஓடும் தெள்ளிய நீர், காற்றில் சலசலக்கும் இலைகளின் மெல்லோசை, மேகங்களில்லா வானம், மரங்களினூடே புகுந்துவரும் சூரியனின் கிரணங்கள். இந்த இனிமையான காட்சிகளும் ஓசைகளும்தான் நம்மை வரவேற்கின்றன; அவை சிறப்புவாய்ந்த ஓர் நாளிற்கான முன்னுரை மட்டுமே என நாம் நிச்சயமாய் இருக்கிறோம். நாம் எங்கே இருக்கிறோம்? பிரான்ஸிலுள்ள டோஃபினே ஆல்ப்ஸில் அமைந்துள்ள ஏக்ரான் தேசியப் பூங்காவில்.
கூடாரமடிப்பது, நெருப்பு மூட்டுவது போன்றவை தடை செய்யப்பட்டிருப்பதை கானகத்தின் கடைக்கோடியில் அமைந்திருக்கும் எல்ஃப்பர்வாடிலுள்ள பூங்காவின் நுழைவாயில்கள் ஒன்றிலுள்ள அறிவிப்பு பலகைகள் எச்சரிக்கின்றன. எந்தக் குப்பையையும் நம்மோடு வீட்டிற்கு எடுத்துச்செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறோம். அவ்விடத்தைச் சேர்ந்த மிருகங்களை நாய்கள் பயமுறுத்தலாம் அல்லது தொந்தரவு செய்யலாம் என்பதால் அவற்றிற்கு அனுமதியில்லை என்பதையும் நாம் கவனிக்கிறோம்.
அவற்றின் நோக்கம்
ஆனால், தேசியப் பூங்கா என்றால்தான் என்ன, அதன் நோக்கம்தான் என்ன? 1872-ல் ஐக்கிய மாகாணங்களிலுள்ள வியோமிங் மாகாணத்தில் யெல்லோ ஸ்டோன் தேசியப் பூங்கா முதலாவதாக நிறுவப்பட்டது. அந்த சமயத்திலிருந்து ஒவ்வொரு கண்டத்திலும் அநேக தேசியப் பூங்காக்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. பிரான்ஸில் ஏழு தேசியப் பூங்காக்கள் இருக்கின்றன; அவற்றுள் மூன்று பிரான்ஸிலிருந்து ஆஸ்திரியாவரை நீண்டிருக்கும் ஆல்ப்ஸ் பிறைவடிவப் பகுதியில் அமைந்திருக்கின்றன. ஐரோப்பாவில் முதலாவது தேசியப் பூங்கா, 1914-ல் ஸ்விட்ஸர்லாந்திலுள்ள கிரௌபுன்டன் (கிரிஷான்ஸ்) மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு 1922-ல், இத்தாலியில் கிரான்பரடீஸோ தேசியப் பூங்கா தொடங்கப்பட்டது. ஆல்ப்ஸ் பிறைவடிவப் பகுதியில் அமைந்திருக்கும் மற்ற தேசியப் பூங்காக்களாவன: ஜெர்மனியில் பெர்க்டஸ்காடன், ஆஸ்திரியாவில் ஹோடௌர்ன், இத்தாலியில் ஸ்டெல்வியோ, ஸ்லோவேனியாவில் ட்ரீக்லவ். பிரான்ஸில் முதலாவது தேசியப் பூங்காவான வன்வாஸ், 1963-ல் அமைக்கப்பட்டது.
இயற்கை தாவரங்களையும் மிருகங்களையும் பாதுகாப்பதே தேசியப் பூங்காக்களின் முக்கிய குறிக்கோளாகும். இதே இலக்குடைய ஆனால் தேசியத் தகுதி பெறாத மற்ற அநேகப் பூங்காக்களும் இருக்கின்றன என்பதையும் கவனத்தில் வைக்கவேண்டும். பிரான்ஸிலுள்ள வெர்கார் மண்டலப் பூங்கா, ஆஸ்திரியாவிலுள்ள கார்வென்டல் சரணாலயம் போன்றவை இவற்றுள் சில. என்றபோதிலும், அதிலுள்ள காவலர்களுக்கு குறிப்பிட்ட அதிகாரத்தை அளிக்கும் ஒரு விசேஷித்த தகுதியை தேசியப் பூங்காக்கள் பெறுகின்றன. பூங்கா விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களிடம் அபராதம் விதிக்க அவர்களுக்கு அதிகாரமிருக்கிறது. உதாரணமாக, ஸ்விட்ஸர்லாந்திலுள்ள பூங்கா ஒன்றிற்குள் ஒரு நாயை கொண்டுவந்தால் 500 ஸ்விஸ் பிரான்க்ஸ் (350 ஐ.மா. டாலர்) வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கலாம்.
ஒருவேளை அது மிகவும் அதிகம் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், சில தடைகளும் அபராதங்களும் விதித்திருப்பதற்கு காரணங்கள் இருக்கின்றன. இதை சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒருசமயம் தென்கிழக்கு பிரான்ஸிலுள்ள மாரிடைம் ஆல்ப்ஸில் அமைந்திருக்கும் மெர்கான்டூர் தேசியப் பூங்காவிற்கு நாங்கள் சென்றிருந்தபோது, ஒரு சிறிய குட்டி வரைமானை சந்தித்தோம். அது ஏகாந்தமாக, நிராதரவானதுபோல் காட்சியளித்தது. ஆனாலும், நாங்கள் அதைத் தொடவில்லை. அதன் தாய் தன் குட்டியை மறுபடியும் ஏற்றுக்கொள்வதை மனித வாடை தடை செய்யக்கூடும் என்று நாங்கள் நினைத்ததே காரணம். ஆனால் எங்களுடன் ஒரு நாய் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை கற்பனை செய்துபாருங்கள்! முக்கியமாக நாய் குரைக்க ஆரம்பித்திருந்தால், அந்தப் பரிதாபகரமான வரைமான் மருண்டு போயிருக்கும்.
அப்படியானால், காவலர்கள் வெறுமனே பூங்காப் போலீஸ்காரர்கள் மட்டும்தானா? நிச்சயமாகவே இல்லை. அப்போதுதான் கடந்து சென்றிருந்த வரைமான் கூட்டம் ஒன்று, புதிதாக பெய்திருந்த பனியில் அதன் காலடித்தடங்களை விட்டுச் சென்றிருந்ததை மெர்கான்டூர் பூங்காவில் நாங்கள் சந்தித்த ஒரு காவலர் எங்களுக்குக் காண்பித்தார். அவற்றின் குளம்புகள் விட்டுச்சென்றிருந்த தடயங்களின் அமைப்பை சுட்டிக்காட்டினார். பூங்காவிலுள்ள இயற்கை சமநிலையை பாதுகாப்பதோடு, செய்திகொடுப்பதும் கற்பிப்பதும்கூட அந்தக் காவலர்களின் பொறுப்புகளில் ஒன்று என்பதை மதித்துணர இது எங்களுக்கு உதவியது.
இயற்கையின் கவர்ச்சியூட்டும் மிருகவகைகள்
எங்கள் வழியில் தொடர்ந்து செல்கையில் தூரமான ஒரு மலையிலுள்ள நேவேக்களில், அதாவது பனிக்கட்டிகள் நிறைந்த நிலங்களில், வரைமான்கள் துள்ளி விளையாடும் காட்சியை காண்கிறோம். கற்பாறைகள் நிறைந்த சரிவுகளில் இரண்டு மார்மட்டுகள் குதித்தோடுவதையும் பார்க்கிறோம். இந்த மார்மட்டுகளில் சில மிகவும் சாதுவானவை; ஏதாவது உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மலை ஏறுபவர்களிடம் நெருங்கி வருகின்றன.
ஆல்ப்ஸ் பூங்காக்கள் சிலவற்றில் இபெக்ஸ் கூட்டங்கள் வாழ்கின்றன. இத்தாலியிலுள்ள கிரான்பரடீஸோ தேசியப் பூங்காவில் இவை மிகவும் அதிகம் காணப்படுகின்றன. மெர்கான்டூரிலும் சிலவற்றைப் பார்த்தபோது நாங்கள் கிளர்ச்சியடைந்தோம். தெற்கே அமைந்துள்ள இந்த ஆல்ப்ஸ் பூங்காவில் ஏராளமான மிருக ஜீவன்கள் காணப்படுகின்றன. ஒரு வகை காட்டு ஆடாகிய முஃப்ளோன்கள், உல்லாசமாக உலவுகின்றன; சமீப காலங்களில் ஓநாய்கள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. ஆனாலும் பார்வையாளர்கள் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், அவை மனிதர்களை தவிர்க்க விரும்புகின்றன; ஆகவே, நடைபாதை அருகே தலைகாட்டுவதில்லை. முன்பு கரடிகளும் ஸ்விஸ் ஆல்ப்ஸில் வலம் வந்திருக்கின்றன, ஆனால் கடைசியாக அங்கு காணப்பட்ட ஒன்று 1904-ல் கொல்லப்பட்டது. இப்போது பிரௌன்நிற கரடிகள், மேற்கு ஐரோப்பாவில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெய்னின் எல்லையிலுள்ள பிர்ரானிஸிலும் வட ஸ்பெய்னிலுள்ள கான்டேபிரியன் மலைகளிலும் மத்திய இத்தாலியிலுள்ள அப்ருட்சி தேசியப் பூங்காவிலும் காணப்படுகின்றன. மறுபட்சத்தில், மான்கள் அதிக எண்ணிக்கையிலுள்ள ஸ்விஸ் தேசியப் பூங்காவில் ஒரு ஆண் மானின் உரத்த சத்தத்தை எப்போதாவது நீங்கள் கேட்கலாம்.
என்றபோதிலும், இந்தப் பெரிய மிருகங்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களை குதூகலப்படுத்தும் அநேக சிறிய மிருகங்களும் இருக்கின்றன—மரநாய்கள், குளிர்காலத்தில் வெள்ளைநிறமாக மாறும் முயல்கள், நரிகள், மார்மட்டுகள், அணில்கள் போன்றவை. கூடுதலாக, வண்ணமிக்க பட்டாம்பூச்சிகளும் சுறுசுறுப்பான எறும்புகளும் உட்பட கோடிக்கணக்கான பூச்சிகளும் இந்தப் பகுதியில் வாழ்கின்றன. பறவைப்பிரியர்கள் நிச்சயமாகவே ஏமாந்துபோக மாட்டார்கள். உங்கள் தலைக்கு மேலே, உயரத்தில் ஒரு கழுகு வட்டமிடுவதையும் ஸ்விஸ் தேசியப் பூங்காவிலும், வன்வாஸ், மெர்கான்டூர் பூங்காக்களிலும் ஒரு லாம்மர்கேயரை அல்லது தாடியுள்ள கழுகைக்கூட நீங்கள் பார்க்கலாம். பூச்சிகளைத் தேடி மரத்தைக் கொத்திக்கொண்டிருக்கும் ஒரு மரங்கொத்தியின் வினோதமான சத்தத்தையும் பொதுவாக கேட்கலாம். மலையில் வாழும் இவை, ஆல்ப்ஸில் குளிர்காலத்தை எப்படி சமாளிக்கின்றன என்று அநேகர் கேட்கின்றனர். இந்த மிருகங்கள் இந்தச் சுற்றுச்சூழலை அனுசரித்துப்போகின்றன. இருந்தாலும், வியாதியாயும் வயதாகியும் இருப்பவை கடினமான சூழ்நிலைகளை தாக்குப்பிடிப்பதில்லை.
ஆல்ப்ஸின் தாவர வகைகள்
இந்தப் பூங்காக்களில் தாவரங்களும்கூட பாதுகாக்கப்படுகின்றன. இதன் காரணமாக, நாங்கள் நடந்துசெல்லும் பாதையின் இரு மருங்கும் கண்ணைக் கவரும் ஆரஞ்சு லில்லிப்பூ உட்பட, பூக்களைப் பறிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏன் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். புகழ்பெற்ற ஈடெல்வெய்ஸ், ஆல்ப்ஸ் அனிமோன், ஆல்ப்ஸ் ரோஜா, மலை புளூவெட், சில வகை ஜென்ஷியன்கள் உட்பட சில தாவரங்கள் அரியவை; அவை தொடர்ந்து வாழ்ந்திருப்பதை நிச்சயப்படுத்த அவற்றை பாதுகாக்க வேண்டியது இன்றியமையாதது. விதவிதமான மலர்கள் உண்மையில் மனதை ஈர்க்கின்றன.
இந்தப் பூங்காக்களை அழகுபடுத்தும் மரங்களிலும் இயற்கையின் வனப்பு பளிச்சிடுகிறது. இலையுதிர் காலத்தில், பொன்னிற லார்ச் மரங்கள் காட்டை சிங்காரிக்கின்றன. மறுபுறத்தில் அரோலா அல்லது ஸ்விஸ் ஊசியிலை மரங்கள், குளிர்காலத்தின் கொடுமையை எதிர்த்து சமாளிப்பவையாய் தோன்றுகின்றன; கொட்டை உடைப்பான் என்று பொதுவாக அறியப்பட்டிருக்கும் பறவைக்கு இவை அமுதசுரபி. அது சேகரித்த ஊசியிலை மரக் கொட்டைகளை தொண்டைப் பைக்குள் சேமித்துக்கொண்டு பிறகு உபயோகிப்பதற்காக அவற்றை புதைத்து வைக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம், வாய்ப்பே இல்லாத இடங்களிலும் ஊசியிலை மரங்கள் வளர அது உதவுகிறது. எங்களை சூழ்ந்திருக்கும் அழகை ரசிக்க நாள் முழுவதையும்கூட செலவழிக்கலாம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் மலையில் அமைந்திருக்கும் குடிலை அடையவேண்டுமென்றால், நாம் தொடர்ந்து செல்லவேண்டும்.
நாம் தொடர்ந்து நடந்துசென்று, சீக்கிரத்தில் அதிக கடினமான ஒரு பாதையை அடைகிறோம். வரைமான்கள் எங்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததுபோல் தோன்றுகிறது; சில ஃபோட்டோக்களை எங்களால் எடுக்கமுடிகிறது. என்றபோதிலும், நாங்கள் அவற்றை நெருங்கும்போது, மருண்ட இந்த அழகுள்ள பிராணிகள் ஓடிவிடுகின்றன. ஏசாயா 11:6-9-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் கடவுளுடைய மகத்தான ஆசீர்வாதத்தை நாங்கள் சிந்தித்துப் பார்க்கிறோம்: “அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறுபையன் அவைகளை நடத்துவான். பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும். . . . என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை.” சீக்கிரத்தில் முழு பூமியும் மிகப்பெரிய பூங்காவைப்போன்ற பரதீஸாகும் என்ற எதிர்பார்ப்பில் நாம் களிகூருகிறோம். அங்கே மனிதனும் மிருகமும் எந்தப் பயமும் இல்லாமல் ஒன்றாக வாழலாம்.
[பக்கம் 13-ன் படம்]
பிரெஞ்சு ஆல்ப்ஸில் சௌகரியமாக இருக்கும் ஒரு வரைமான்
[பக்கம் 14-ன் படம்]
பிரான்ஸிலுள்ள வன்வாஸ் தேசியப் பூங்காவிலிருக்கும் ஜாக்கிரதையான ஒரு மார்மட்டு
[பக்கம் 14-ன் படம்]
பிரான்ஸ், மெர்கான்டூர் தேசியப் பூங்காவில் ஒரு கழுகு
[பக்கம் 15-ன் படம்]
பிரெஞ்சு ஆல்ப்ஸில் வரைமான்கள் ஏறுகின்றன
[பக்கம் 15-ன் படம்]
ஒரு சிறிய வரைமான்
[பக்கம் 16-ன் படம்]
ஆல்ப்ஸ் ரோஜா
[பக்கம் 16-ன் படம்]
காட்டு ஆர்டிகோக்
[பக்கம் 16-ன் படம்]
ஆங்காலி டெஷால்ப்
[பக்கம் 16-ன் படம்]
இபெக்ஸ்
[பக்கம் 17-ன் படம்]
ஆரஞ்சு லில்லிப்பூ
[பக்கம் 17-ன் படம்]
டர்க்ஸ்-கப் லில்லிப்பூ
[பக்கம் 17-ன் படம்]
பானிகோ டெஷால்ப்
[பக்கம் 17-ன் படம்]
மார்மட்டு