பைபிளின் கருத்து
விபசாரம்—மன்னிப்பதா மன்னிக்காமல் இருப்பதா?
“ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.” (மாற்கு 11:25) விபசாரத்தின் காரணமாக அமைதிகுலைவு ஏற்பட்டிருக்கும் ஒரு திருமணத்தைக் குறித்ததில், இயேசுவின் அந்த வார்த்தைகள் சவாலான சில கேள்விகளை எழுப்புகின்றன: தவறுசெய்யாத கிறிஸ்தவப் பெண் தன் துணைவரை மன்னித்து, திருமணத்தை முறியாமல் காத்துக்கொள்ளவேண்டுமா? a அவள் மணவிலக்கு செய்ய தீர்மானித்தால், கடவுளுடன் கொண்டுள்ள தன் சொந்த உறவைக் கெடுத்துக்கொள்கிறாளா? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க பைபிள் எப்படி உதவுகிறது என்று நாம் காணலாம்.
நீங்கள் எப்போதும் மன்னிக்க வேண்டுமா?
‘ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்,’ என்ற இயேசுவின் வார்த்தைகள்—துணைவர் ஒருவர் விபசாரம் செய்வது உட்பட—எல்லா காரியங்களிலும் ஒரு கிறிஸ்தவர் மன்னிக்க கடமைப்பட்டிருக்கிறார் என்று அர்த்தப்படுத்துகிறதா? மன்னிப்பைப்பற்றி இயேசு சொன்ன மற்ற குறிப்புகளையும் கருத்தில்கொண்டு அவருடைய கூற்று புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
உதாரணமாக, லூக்கா 17:3, 4-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளிலிருந்து மன்னிப்பைப் பற்றிய ஒரு முக்கியமான நியமத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்: “உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால் [“மனந்திரும்பினால்,” NW], அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் [“மனந்திரும்பியுள்ளேன்,” NW] என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.” நிச்சயமாகவே பெரிய பாவம் செய்யப்பட்டிருக்கும் சம்பவங்களில், உண்மையான மனந்திரும்புதல் இருக்குமானால் மன்னிக்க முயலும்படி தவறுசெய்யாதவர் உற்சாகப்படுத்தப்படுகிறார். யெகோவா தாமே காரியங்களை இந்த விதத்தில் நோக்குகிறார்; கடவுளிடமிருந்து மன்னிப்பைப் பெற வேண்டுமானால், நாம் உண்மையிலேயே மனந்திரும்ப வேண்டும்.—லூக்கா 3:6; அப்போஸ்தலர் 2:38; 8:22.
என்றபோதிலும், விபசாரம் செய்த துணைவர் மனந்திரும்பாதவராக, தன் பாவத்திற்கான பொறுப்பை ஏற்க மறுக்கிறவராக இருந்தால், தவறுசெய்யாத துணை மன்னிக்காமல் இருப்பதற்குத் தெரிவுசெய்துகொள்ளக்கூடும் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே என்றும் இது காண்பிக்கிறது.—1 யோவான் 1:8, 9-ஐ ஒப்பிடுக.
மன்னித்தல்—பாவத்தின் விளைவுகளைப் பற்றி என்ன?
விபசாரம் செய்தவர் மனந்திரும்புகிறவராக இருக்கிறாரென்றால், நிலைமையை எவ்வாறு கருதவேண்டும்? மனந்திரும்புதல் இருக்கும்போது மன்னிப்பதற்கு ஒரு அடிப்படை இருக்கிறது. ஆனால் மன்னித்தல் என்பது தவறுசெய்த அந்த நபர், தன்னுடைய தவறான போக்கின் எல்லா விளைவுகளிலிருந்தும் விடுபட்டிருக்கிறார் என்று அர்த்தப்படுகிறதா? யெகோவாவின் மன்னிப்பைப் பற்றிய சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
கானான் தேசத்தைக் குறித்து மோசமான அறிக்கையைக் கொடுத்த பத்து வேவுகாரர் சொன்னதைக் கேட்டு இஸ்ரவேலர் கலகம்செய்தபோது, மோசே யெகோவாவிடம் இவ்வாறு மன்றாடினார்: “இந்த ஜனங்களின் அக்கிரமத்தை, மன்னித்தருளும்.” யெகோவா இவ்வாறு பதிலளித்தார்: “உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்.” இவ்வாறு கலகம்செய்தவர்கள் தங்கள் நடவடிக்கைகளின் காரணமாக ஏற்பட்ட எவ்விதமான விளைவுகளிலிருந்தும் விலக்குதல் அளிக்கப்பட்டார்கள் என்று இது அர்த்தப்படுகிறதா? யெகோவா தொடர்ந்து சொன்னார்: “என் சத்தத்துக்குச் செவிகொடாமல் [இருந்த] . . . மனிதரில் ஒருவரும், அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்.” (எண்ணாகமம் 14:19-23) யெகோவா தாம் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றினார்; யோசுவாவையும் காலேபையும் தவிர அந்த வயதான சந்ததியினர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் காணவில்லை.—எண்ணாகமம் 26:64, 65.
அதைப்போலவே, நாத்தான் தீர்க்கதரிசி தாவீது அரசனை, பத்சேபாளின் தொடர்பாக அவர் செய்த பாவத்துக்காகக் கடிந்துகொண்டபோது, மனம்வருந்திய தாவீது இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்.” பின்னர் நாத்தான் தாவீதிடம் சொன்னார்: “கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்.” (2 சாமுவேல் 12:13) என்றாலும், தாவீதை யெகோவா மன்னித்தபோதிலும், அவருடைய மீதமுள்ள வாழ்நாட்காலத்தில் தாவீது தன்னுடைய பாவத்தின் விளைவுகளை அனுபவித்தார்.—2 சாமுவேல் 12:9-14; 2 சாமுவேல் 24-ம் அதிகாரத்தையும் காண்க.
கடவுளின் மன்னிப்பைப் பற்றிய இந்த உதாரணங்கள் ஒரு முக்கியமான பாடத்தைச் சிறப்பித்துக் காட்டுகின்றன: நாம் விளைவுகளுக்கு விலக்குதல் அளிக்கப்பட்டவர்களாய் பாவம் செய்யமுடியாது. (கலாத்தியர் 6:7, 8) பாவம்செய்து மனந்திரும்பும் ஒருவர், மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளக்கூடும் என்றாலும், தன்னுடைய தவறான போக்கின் விளைவுகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியென்றால், தவறுசெய்யாத துணை, விபசாரம் செய்தவரை—கசப்பான கோபதாபத்தை விட்டுவிடும் அர்த்தத்திலாவது—மன்னிக்கக்கூடும் என்றும், அவ்வாறிருந்தும் அவரை மணவிலக்கு செய்ய தீர்மானிக்கக்கூடும் என்றும் இது அர்த்தப்படுத்துகிறதா?
மன்னிப்பும் மணவிலக்கும்
இயேசு தம்முடைய ஊழியத்தின்போது, மூன்று சந்தர்ப்பங்களில் மணவிலக்கைக் குறித்துப் பேசினார். (மத்தேயு 5:32; 19:3-9; லூக்கா 16:18) அக்கறையூட்டும் விதத்தில், இந்த உரையாடல்கள் எவற்றிலும் ஒருமுறைகூட இயேசு மன்னிப்பைப்பற்றி குறிப்பிடவில்லை. உதாரணமாக, மத்தேயு 19:9-ல் காணப்படுவதுபோல, அவர் சொன்னார்: “எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.” “வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி” என்று சொல்வதன்மூலம், பாலின ஒழுக்கக்கேடானது தவறுசெய்யாத துணைக்கு, மணவிலக்கு செய்வதற்கான உரிமையை, அல்லது வேதப்பூர்வ ‘அடிப்படையை’ கொடுக்கும் என்று இயேசு ஒத்துக்கொண்டார். எனினும், தவறுசெய்யாதவர் மணவிலக்கு செய்யவேண்டும் என்று இயேசு சொல்லவில்லை. இருந்தபோதிலும், அவள் அவ்வாறு செய்யலாம் என்பதை அவர் தெளிவாகவே அர்த்தப்படுத்தினார்.
திருமணம் என்பது இருவரை ஒன்றாக இணைக்கும் ஒரு பிணைப்பாக இருக்கிறது. (ரோமர் 7:2) ஆனால் அவர்களில் ஒருவர் உண்மையற்றவராக இருக்கும்போது அந்தப் பிணைப்பு துண்டிக்கப்படக்கூடும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், தவறுசெய்யாத துணை உண்மையில் இரண்டு தீர்மானங்களை எதிர்ப்படுகிறார். முதலாவதாக, அவள் மன்னிக்கவேண்டுமா? நாம் மேலே சிந்தித்தபடி, அந்த விபசாரக்காரன் உண்மையிலேயே மனந்திரும்புகிறவராக இருக்கிறாரா இல்லையா என்பதே இங்கு ஒரு முக்கியமான காரியமாக இருக்கிறது. மனந்திரும்புதல் இருக்கும்போது, தவறுசெய்யாத துணை காலப்போக்கில் மன்னிக்கக்கூடும்—கோபதாபத்தை விட்டுவிடுவது என்ற அர்த்தத்திலாவது மன்னிக்கக்கூடும்.
இரண்டாவது தீர்மானம் என்னவென்றால், அவள் மணவிலக்கை நாட வேண்டுமா? அவள் அவனை மன்னித்துவிட்டிருந்தால் இந்தக் கேள்வி ஏன் எழும்புகிறது? b குறிப்பாக, கடந்த காலத்தில் அவளுடைய கணவன், துர்ப்பிரயோகம் செய்கிறவனாக இருந்திருந்தால் அவளுடைய சொந்த பாதுகாப்பு மற்றும் அவளுடைய பிள்ளைகளின் பாதுகாப்பைக் குறித்து அவளுக்கு நியாயமான கவலைகள் இருந்தால் என்ன செய்வது? அல்லது பாலுறவால் கடத்தப்பட்ட நோயால் தொற்றப்படக்கூடிய பயங்கள் இருந்தால் என்ன செய்வது? அல்லது அவனுடைய நம்பிக்கைதுரோகம் காரணமாக அவள் ஆழ்ந்த வருத்தமடைந்திருப்பதால், இனிமேலும் அவரை கணவன்-மனைவி உறவில் நம்பமுடியாதவளாக உணர்ந்தால் என்ன செய்வது? அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், தவறுசெய்யாத துணை தவறுசெய்த துணைவரை (கோபதாபத்தை விட்டுவிடுவது என்ற அர்த்தத்தில்) மன்னித்துவிட்டபோதிலும், அவரோடு தொடர்ந்து வாழ அவள் விரும்பாததால் மணவிலக்கு செய்யும்படியாகத் தீர்மானிக்கலாம் என்பது முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கதே. கோபதாபத்தை விட்டுவிடுவது அவள் தன்னுடைய வாழ்க்கையைத் தொடர அவளுக்கு உதவக்கூடும். வருங்காலத்தில், அந்த விபசாரம் செய்தவரிடம் கொள்ளும் எந்தத் தொடர்பையும் அதிக பண்பான முறையில் வைத்துக்கொள்ளவும் உதவக்கூடும்.
உண்மையற்ற துணையிடமிருந்து மணவிலக்கைப் பெற வேண்டுமா என்பது தனிப்பட்ட தீர்மானமாக இருக்கிறது; தவறுசெய்யாத துணை, உட்பட்டிருக்கிற எல்லா காரியங்களையும் கவனமாகவும் ஜெபத்தோடும் சீர்தூக்கிப் பார்த்தபின் எடுக்கவேண்டிய ஒன்று. (சங்கீதம் 55:22) இவ்விதமோ அல்லது அவ்விதமோ தீர்மானம் எடுக்கும்படியாக தவறுசெய்யாத துணையை வற்புறுத்தவோ வலுக்கட்டாயப்படுத்தவோ மற்றவர்களுக்கு உரிமை இல்லை. (கலாத்தியர் 6:5-ஐ ஒப்பிடுக.) தவறுசெய்யாத துணை என்ன செய்யவேண்டும் என்று இயேசு சொல்லவில்லை என்பதை நினைவில் வையுங்கள். அப்படியானால், தெளிவாகவே, சரியான வேதப்பூர்வ அடிப்படைகளின்பேரில் மணவிலக்கு செய்யத் தீர்மானிப்பவர்கள்மீது யெகோவா பிரியமற்றவராக இல்லை.
[அடிக்குறிப்புகள்]
a தவறுசெய்யாத துணையை இங்கு “அவள்” என்பதாகக் குறிப்பிட்டாலும், கலந்தாலோசிக்கப்பட்டுள்ள நியமங்கள், ஒரு கிறிஸ்தவ ஆண் தவறுசெய்யாத துணையாக இருக்கையில் அவருக்கும் சரிசமமாகவே பொருந்துகின்றன.
b மீண்டும் பாலுறவு வைத்துக்கொள்ளத் தொடங்கும்போது, தவறுசெய்த தன் துணைவரோடு அவள் மீண்டும் சமரசமாகும்படி தீர்மானித்திருக்கிறாள் என்பதை தவறுசெய்யாத துணை குறிப்பிடுவதாக இருக்கும். அதன்மூலமாக மணவிலக்கு செய்வதற்கான வேதப்பூர்வ அடிப்படை எதையும் அவள் செல்லாததாக்குகிறாள்.