மெளனத்தின் மத்தியில் ஒரு குரல்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு அரக்கன் கொல்லப்பட்டான். கவிழ்ந்துவிட்ட நாசி ஆட்சியைப் பார்க்க கடைசியாக உலகம் திரையை ஒரு பக்கமாக விலக்கியபோது கண்ட கோரமான காட்சி கிரகித்துக்கொள்ள முடியாத ஒரு கெட்ட கனவாக இருந்தது. படைவீரர்களும் இராணுவத்தைச் சாராதவர்களும் ஒன்றுபோல, அந்த இராட்சத கொல்லும் இயந்திரத்தின் கோரம் நிறைந்த எஞ்சிய பாகங்களை மெளனமாக திகிலோடு விறைத்துப் பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தார்கள்.
இவ்வாண்டின் ஆரம்பத்தில், சித்திரவதை முகாம்களிலிருந்து விடுதலைக்கு 50-வது ஆண்டு நினைவுநாளையொட்டி ஆயிரக்கணக்கானோர் மனித சஞ்சாரமே இல்லாத அந்த நிலத்தின்மீது ஆரவாரம் இல்லாமல் நடந்து செல்வதன் மூலம் அதைக் கொண்டாடினர். குற்றத்தின் துஷ்டத்தனத்தை ஆழ்ந்து ஆராய அவர்கள் போராடினர். ஏன், ஆஷ்விட்ஸ்-ல் மட்டுமே 15,00,000 பேர் மரண முகாமில் கொல்லப்பட்டனர்! அது மெளனமாக இருக்கவேண்டிய காலமாக, மனிதனுக்கு மனிதன் இழைத்துக்கொண்ட மனிதத்தன்மையில்லாத காரியத்தைப் பற்றி சிந்திப்பதற்குரிய ஒரு காலமாக இருந்தது. சுடுகாடு, சிப்பாய்கள் வசித்த இடங்கள், கொள்ளையடிக்கப்பட்ட புதைமிதி குவியல்கள் ஆகியவை மனதை வாட்டிக்கொண்டிருந்த கேள்விகளை எதிரொலித்துக்கொண்டிருந்தன.
இன்று மக்கள் அதிர்ச்சியடைகின்றனர்; கொதித்தெழுகின்றனர். திட்டமிட்டு லட்சக்கணக்கான பேரைக் கொன்ற அந்த சர்வநாசம் நாசிக்கொள்கை எத்தனைப் பயங்கரமான கொடுமை என்பதை வெளிப்படுத்துகிறது. ஆனால் அது சம்பவித்த அந்தக் காலத்தைப் பற்றி என்ன? தைரியமாக பேசியது யார்? யார் பேசவில்லை?
அநேக ஆட்கள் இரண்டாம் உலகப் போரின் முடிவில்தானே மாபெரும் படுகொலையைப் பற்றி முதல் முறையாக அறியவந்தனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்—இருண்ட காலத்தின் மத்தியில் புரட்சி (ஆங்கிலம்) புத்தகம் விளக்குகிறது: “1944 மற்றும் 1945-ல் நேச நாடுகள் விடுதலை செய்த, கொல்வதற்கென்று அமைக்கப்பட்ட மையங்களிலும் மரண முகாம்களிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் செய்திச்சுருள் திரைப்படங்களும் அதிர்ச்சியூட்டிய உண்மை நிலையைப் பொதுமக்களுக்கும் விசேஷமாக மேற்கத்திய நாடுகளுக்கும் முதன் முதலில் புரியவைத்தன.”
என்றபோதிலும் மரண முகாம்கள் அமைக்கப்படுவதற்கு முன்பேகூட நாசிக்கொள்கையின் ஆபத்துகளைக் குறித்து உங்கள் கையிலிருக்கும் விழித்தெழு! பத்திரிகையின்மூலம் ஒரு குரல் அறிவித்து வந்தது. அது முதலில் தி கோல்டன் ஏஜ் என்றும் பின்னர் 1937-ல் கான்சலேஷன் என்றும் பெயரிடப்பட்டது. யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்படுகிற இந்தப் பத்திரிகைகள், “உண்மை, நம்பிக்கை மற்றும் தைரியமான பத்திரிகை,” என்பதாக அவற்றின் அட்டையில் அறிவிக்கப்பட்டிருந்ததற்கு இசைவாக, அவை 1929 தொடங்கி, நாசிக்கொள்கையின் அபாயங்களைக் குறித்து தைரியமாக எச்சரித்து வந்தன.
“ஒரே சமயத்தில் பழிபாவமறியாத 40,000 பேர் கைதுசெய்யப்படுகையில், ஒரே சிறையில் ஒரே இரவில் அவர்களில் 70 பேர் கொல்லப்படுகையில், . . . எல்லா வீடுகளும், முதியோர், ஏழைகள் மற்றும் உதவியற்றோருக்கான நிறுவனங்களும் மருத்துவமனைகளும், பிள்ளைகளுக்கான எல்லா அநாதை இல்லங்களும் அழிக்கப்படுகையில் ஜெர்மனியில் இருப்பதைப் போன்று ஒரு தேசத்தில் நடக்கும் பயங்கரங்களைப்பற்றி எப்படி ஒருவர் மெளனமாக இருந்துவிட முடியும்?” என்பதாக 1939-ல் கான்சலேஷன் கேட்டது.
ஆம், ஒருவர் எவ்விதமாக மெளனமாக இருந்துவிட முடியும்? ஜெர்மனியிலிருந்தும் ஜெர்மானியர்கள் குடியேறிவிட்டிருந்த தேசங்களிலிருந்தும் சிறிது சிறிதாக வெளிவந்துகொண்டிருந்த பயங்கரமான அறிக்கைகளைப் பொதுவாக உலகம் அறியாமல் அல்லது சந்தேகித்துக்கொண்டிருந்தபோது யெகோவாவின் சாட்சிகளால் அமைதியாக இருக்கமுடியவில்லை. நாசி ஆட்சியின் கொடூரங்களை அவர்கள் நேரடியாக பார்த்திருந்தனர், அதைக் குறித்து தைரியமாக பேசுவதற்கு அவர்கள் பயப்படவில்லை.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
U.S. National Archives photo