இன்று நம் உலகம் எப்படி இருக்கிறது?
நீங்கள் 1945-ஐ ஞாபகப்படுத்திப் பார்க்கக்கூடிய அளவுக்கு வயதானவராக இருந்தால், தராதரங்களிலும் ஒழுக்கநெறிகளிலும் ஏதாவது வித்தியாசத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதிக சுதந்திரத்தை அளிப்பதாக கருதப்படும் “புதிய ஒழுக்கநெறியை” லட்சக்கணக்கானோர் ஏற்றிருக்கின்றனர். ஆனால் என்ன பாதிப்புகளோடு?
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஐ.மா.-வின் கப்பற்படையில் பணியாற்றிய 70 வயது மனிதர் ஒருவர் கூறினார்: “1940-களில், ஒருவர்மேல் ஒருவர் அதிகம் நம்பிக்கை வைத்திருந்தனர். அயலார் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டனர். நாங்கள் வசித்துவந்த கலிபோர்னியாவில், எங்களுடைய வீட்டைப் பூட்டவேண்டிய அவசியம்கூட இல்லாதிருந்தது. தெருவில் குற்றச்செயல்கள் ஒன்றும் நடக்காதிருந்தது. பள்ளிகளிலும் ஆயுதங்களை உபயோகித்து வன்முறையில் ஈடுபடுவது நிச்சயமாகவே இல்லாதிருந்தது. அந்தச் சமயத்திலிருந்து ஆட்கள்மேல் வைக்கும் நம்பிக்கையானது அடியோடு மறைந்துபோயிற்று.” உலகத்தில் நீங்கள் வாழும் பகுதியில் நிலைமை இன்று எப்படி இருக்கிறது? நியூ யார்க் நகரத்தில், 14 வயதுக்கு மேற்பட்ட பருவ வயதினரில் பாதிபேர் ஆயுதங்களை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. கத்திகள், அட்டைப்பெட்டிகளை வெட்டும் கத்திகள், துப்பாக்கிகள் ஆகியவற்றைப் பள்ளிக்கூடங்களுக்குள் கொண்டுவராமல் தடுக்கும் முயற்சியில் பள்ளிகளில் உலோகக் கண்டுபிடிப்பான்கள் உபயோகிக்கப்படுகின்றன. ஐக்கிய மாகாணங்களில் ஒவ்வொரு வருடமும் சுமார் பத்து லட்சம் பருவவயது பெண்கள் கருத்தரிக்கின்றனர். இவர்களில் மூன்றிலொரு பாகத்தினர் கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர். பருவவயதின் தொடக்கத்தில் இருக்கும் பெண்கள் ஏற்கெனவே தாய்மையை அடைந்துவிட்டனர்—குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கும் பிள்ளைகள் இவர்கள்.
அதிகமதிகம் ஆட்கள் ஒத்தப்பாலின புணர்ச்சியை அங்கீகரித்து அதில் ஈடுபடுமளவுக்கு செல்வாக்குமிகுந்த ஒத்தப்பாலின புணர்ச்சி ஆதரவாளர்கள் அவர்களுடைய வாழ்க்கை-பாணியை தீவிரமாக பரப்பினர். ஆனால், மற்றவர்களோடு சேர்ந்து, இவர்களும் எய்ட்ஸைப்போன்ற பாலுறவு நோய்களின் காரணமாக வியாதிகளுக்கும் மரணத்துக்கும் பலியானார்கள். எய்ட்ஸ் கொள்ளைநோய் இருபாலின புணர்ச்சியில் ஈடுபடும் மக்களுக்கும் போதைப்பொருள் துர்ப்பிரயோகிப்பவர்களுக்கும் பரவியிருக்கிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களினூடே மரண அரிவாளை அது வீசியிருக்கிறது. அதற்கான முடிவு கண்ணுக்கெட்டிய தொலைவில் இல்லை.
எ ஹிஸ்டரி ஆஃப் ப்ரைவட் லைஃப் சொல்லுகிறது: “வன்முறை, குடிப்பழக்கம், போதைப்பொருட்கள் ஆகியவை சுவீடன் சமுதாயத்தினர் மத்தியில் காணப்படும் முக்கிய வகை மாறுபட்ட நடத்தைகளாக இருக்கின்றன.” மேற்கத்திய உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளிலும் இந்தக் கூற்று உண்மையாக இருக்கிறது. மத சம்பந்தமான மதிப்பீடுகள் தகர்ந்தழிந்ததன் காரணமாக, அநேக குருமார்கள் மத்தியிலேயும் ஒழுக்கநெறி சீர்குலைவு அலை இருந்துவந்திருக்கிறது.
போதைப்பொருள் துர்ப்பிரயோகம்—அப்போதும் இப்போதும்
1940-களில், மேற்கத்திய உலகத்தின் பொதுமக்கள் மத்தியில் போதைப்பொருள் துர்ப்பிரயோகம் கிட்டத்தட்ட அறியப்படாததாகவே இருந்தது. ஆம், மார்ஃபீன், ஓப்பியம், கொக்கெயின் என்றெல்லாம் ஜனங்கள் கேள்விப்பட்டிருக்கின்றனர்; ஆனால் ஒப்பிடுகையில் ஒரு சிறு தொகுதியினரே இந்தப் போதைப்பொருட்களைத் துர்ப்பிரயோகம் செய்தனர். இன்று நாம் அறிந்திருப்பதுபோல, போதைப்பொருள் மகாராஜாக்களோ வர்த்தகர்களோ இருந்தது கிடையாது. தெருமூலையில் இருந்துகொண்டு போதைப்பொருள் விற்றவர்கள் கிடையாது. இப்பொழுது 1995-ல் நிலைமை எப்படி இருக்கிறது? தங்களுடைய சொந்த ஊர்களில் பெற்ற அனுபவங்களில் இருந்தே விடை என்ன என்று எங்களுடைய வாசகர்களில் அநேகருக்குத் தெரியும். உலகின் அநேக முக்கிய நகரங்களில் போதைப்பொருள் தொடர்பாக நடக்கும் கொலைகள் அன்றாட சம்பவமாகிவிட்டன. செல்வாக்கு மிகுந்த போதைப்பொருள் மகாராஜாக்கள் அரசியல்வாதிகளையும் நீதிபதிகளையும் கைக்குள் போட்டுவைத்திருக்கின்றனர். ஒத்துழைக்காதிருக்கும் செல்வாக்கு நிறைந்த யாரையும் அடியாள் வைத்து தீர்த்துக்கட்ட முடியும். கொலம்பியாவின் சமீபத்திய வரலாறும் அதன் போதைப்பொருள் தொடர்புமே இதற்கு அத்தாட்சி.
இந்தப் போதைப்பொருள் கொள்ளைநோய் ஐக்கிய மாகாணங்களில் மட்டும் ஒவ்வொரு வருடமும் சுமார் 40,000 உயிர்களை சாகடிக்கிறது. இந்தப் பிரச்சினை 1945-ல் நிச்சயமாகவே இருந்ததில்லை. போதைப்பொருள் துர்ப்பிரயோகத்தை ஒழித்துக்கட்ட அரசாங்கங்கள் பல்லாண்டுகளாக முயற்சித்த பிறகு, நியூ யார்க் நகர முன்னாள் போலீஸ் ஆணையர், பேட்ரிக் மர்ஃபி, வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளுக்கு, “போதைப்பொருளுக்கு எதிரான யுத்தம் ஓய்ந்தது—போதைப்பொருள் வெற்றி பெற்றுவிட்டது”! என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். “[ஐக்கிய மாகாணங்களில்] போதைப்பொருள் வியாபாரம் . . . தற்போது மிகவும் லாபகரமான வியாபாரங்களில் ஒன்றாக இருந்துவருகிறது. அதிலிருந்து கிடைக்கும் லாபம் இந்த வருடம் 150 பில்லியன் டாலர்வரை சென்றெட்டலாம்.” இந்தப் பிரச்சினை பிரமாண்டமானதாகவும் தீர்த்துவைக்கமுடியாத ஒன்றாகவும் தோன்றுகிறது. போதைப்பொருள் துர்ப்பிரயோகம் அதிகரித்துவரும் வாடிக்கையாளர் கூட்டங்களைக் கொண்டிருக்கிறது. மற்ற அநேக கெட்டப் பழக்கங்களைப் போலவே இதன் வாடிக்கையாளர்கள் அடிமையாகின்றனர். இந்தத் தொழில்துறை அநேக நாட்டின் பொருளாதாரத்தை ஆதரித்தும்வருகிறது.
பொருளாதார பேராசிரியர், ஜான் கே. கால்ப்ரெய்த், திருப்தியின் பண்பாடு என்ற ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு எழுதினார்: “போதைப்பொருள் வாணிகம், கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு, மற்ற குற்றச்செயல்கள், குடும்ப ஒற்றுமையைக் குலைத்து குட்டிச்சுவராக்குவது ஆகிய இவையெல்லாம் தினசரி நிகழும் அம்சங்களாக இருக்கின்றன.” அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் பலவற்றில் இருக்கும் சிறுபான்மை சமுதாயங்கள், “தற்போது பேரச்சம் மற்றும் மனமுறிவு ஆகியவற்றின் மையங்களாக இருக்கின்றன,” என்பதாக அவர் சொல்கிறார். “பெரும் கிளர்ச்சியும் சமுதாய கலவரங்களும் எதிர்பார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் எழுதுகிறார். ஏன் அப்படி? ஏனென்றால், அவர் சொல்லுகிறார், பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகவும், எண்ணிக்கையில் அதிகரித்துவரும் “தாழ்ந்த வகுப்பினராகிய” ஏழைகள் பரம ஏழைகளாகவுமே ஆகிவருகின்றனர்.
குற்றங்கள் சர்வதேசத்திற்கும் பரவுகின்றன
குற்றச்செயல் கூட்டங்கள் தங்கள் ஆதிக்கத்தை உலகமுழுவதும் பரப்புகின்றன என்பதற்கான அத்தாட்சிகள் இப்பொழுது ஏராளமாக இருக்கின்றன. “குற்றச்செயல் குடும்பங்களை” உடைய குற்றச்செயல் அமைப்புகள் இத்தாலிக்கும் ஐக்கிய மாகாணங்களுக்கும் இடையே பல வருடங்களாக தொடர்பு வைத்திருந்திருக்கின்றன. ஆனால் இப்பொழுது ஐநா பொதுச் செயலர் பூட்ரோஸ் பூட்ரோஸ்-காலி, “தேசிய எல்லைகள் கடந்த அளவில் நடத்தப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் . . . எல்லைகளைப் பொருட்படுத்தாமல் ஒரு சர்வதேச சக்தியாக மாறுகிறது,” என்று எச்சரித்திருக்கிறார். “தீய சக்திகள் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய கண்டங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன, எந்தச் சமுதாயமும் விட்டுவைக்கப்படவில்லை,” என்று சொன்னார். அவர் தொடர்ந்து கூறியதாவது: “தேசிய எல்லை கடந்த குற்றச்செயல் . . . சர்வதேசிய மக்களாட்சி ஒழுங்கமைப்பின் அடித்தளங்களையே பலவீனப்படுத்துகிறது. [அது] வர்த்தக சூழ்நிலைமையை சீரழியச்செய்கிறது, அரசியல் தலைவர்களை ஊழல் நிறைந்தவர்களாக்கி, மனித உரிமைகளை பலவீனப்படுத்துகிறது.”
அதன் வரைபடம் மாறிவிட்டது
செக் குடியரசின் தலைவர், வாக்லேவ் ஹேவல், அ.ஐ.மா., பிலடெல்ஃபியாவில் கொடுத்த ஒரு பேச்சில், 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற இரண்டு முக்கிய அரசியல் சம்பவங்கள் குடியேற்றக் கோட்பாடு தகர்ந்துபோனதும், கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸம் வீழ்ச்சியடைந்ததுமேயாகும் என்று சொன்னார். 1945-ம் வருடத்திய வரைபடம் ஒன்றை 1995-ம் வருடத்திய வரைபடத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், உலக மேடையில், முக்கியமாக ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற கிளர்ச்சிகள் உடனடியாக காணப்படுகின்றன.
அந்த இரண்டு வருடங்களிலும் இருந்த அரசியல் சூழ்நிலைமைகளை ஒப்பிட்டுப் பாருங்கள். இடைப்பட்ட இந்த 50 ஆண்டுகளின்போது, பெரும்பாலான முன்னாளைய கம்யூனிஸ நாடுகளில், கம்யூனிஸம் அதன் உச்சக்கட்டத்தை அடைந்து அதற்குப் பிறகு கீழே தள்ளப்பட்டது. அந்நாடுகளில் சர்வாதிகார ஆட்சி ஏதாவது ஒருவகை “குடியாட்சியால்” மாற்றீடு செய்யப்பட்டது. எனினும், அநேகர் தங்களுடைய சமுதாயம் சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறியதன் பாதிப்புகளினால் துன்பப்படுகின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது, பெரும்பாலும் பணத்திற்கு மதிப்பே இருப்பதில்லை. 1989-ல் ரஷ்யன் ரபிள் ஒன்று 1.61 (ஐ.மா.) டாலர் மதிப்புடையதாக இருந்தது. ஆனால் இது எழுதப்படுகிற சமயத்தில், ஒரு டாலருக்கு சமம் ஆக 4,300-க்கும் மேற்பட்ட ரபிள் தேவைப்படுகிறது!
இன்று சுமார் நான்கு கோடி ரஷ்யர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர் என்று மாடர்ன் மெச்யூரிட்டி என்ற பத்திரிகை அறிவித்தது. ஒரு ரஷ்ய நபர் சொன்னார், “சாவதற்குக்கூட எங்களுக்கு பணம் இல்லை. இறுதிச் சடங்கு செய்வதற்குக்கூட எங்களிடம் பணம் இல்லை.” மிகவும் சிக்கனமான இறுதிச் சடங்குக்குக்கூட கிட்டத்தட்ட 4,00,000 ரபிள் தேவைப்படுகிறது. பிணக்கிடங்குகளில் புதைக்கப்படாத சடலங்கள் குவிந்து கிடக்கின்றன. அதேசமயத்தில், ஐக்கிய மாகாணங்களில் 3.6 கோடிக்கும் மேற்பட்ட ஆட்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர் என்பது கவனிக்கப்படவேண்டும்!
கார்டியன் வீக்லி செய்தித்தாளின் நிதித்துறை நிருபர் வில் ஹட்டன் கிழக்கு ஐரோப்பாவின் பிரச்சினைகளைப்பற்றி எழுதினார். “கவலையின் காலத்தினுள் காலெடுத்து வையுங்கள்” என்ற தலைப்பின்கீழ் அவர் சொன்னதாவது: “கம்யூனிஸத்தின் வீழ்ச்சியும், ரஷ்யா 18-ம் நூற்றாண்டிலிருந்து அதன் மிகச் சிறிய அளவுக்கு பிரிந்ததும், அவற்றின் பாதிப்புகள் இன்னும் புரிந்துகொள்ளப்படாத நிகழ்ச்சிகளாக இருக்கின்றன.” முன்னாள் சோவியத் பேரரசை சுமார் 25 புதிய அரசுகள் மாற்றீடு செய்திருக்கின்றன. அவர் இவ்வாறு சொன்னார்: “கம்யூனிஸத்தின் வீழ்ச்சி கொண்டாடப்பட்ட அந்த வெற்றிக்களிப்பு இப்போது எதிர்காலத்தைப் பற்றிய அதிகரித்துவரும் கவலையாக மாறியிருக்கிறது. . . . பொருளாதார மற்றும் அரசியல் குழப்பத்திற்குள் வீழ்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன—மேற்கு ஐரோப்பா இதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கமுடியாது.”
அத்தகைய நம்பிக்கையற்ற மனநிலையோடு ஹட்டன் தன்னுடைய கட்டுரையை இவ்வாறு சொல்லி முடிக்கிறார் என்பதில் ஆச்சரியமேதுமில்லை: “குடியாட்சிக்கும் கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரத்துக்குமான கோரிக்கையைவிட இந்த உலகத்திற்கு ஒரு திசைமானி தேவையாக இருக்கிறது—ஆனால் ஒன்றும் கிடைத்தபாடில்லை.” ஆகவே தீர்வுக்காக தேசங்கள் எங்குப் போகமுடியும்? பின்வரும் கட்டுரை இதற்குப் பதிலளிக்கும்.
[பக்கம் 10-ன் பெட்டி/படம்]
1945 முதற்கொண்டு ஐநா
1945-ல் ஸ்தாபிக்கப்பட்ட ஐநா இத்தனை அநேக போர்களைத் தவிர்க்கமுடியாமல் போனதேன்? ஐநா பொதுச் செயலர் பூட்ரோஸ் பூட்ரோஸ்-காலி, “சமாதானத்துக்கான ஒரு அஜன்டா” என்ற தன்னுடைய உரையில் இவ்வாறு சொன்னார்: “பாதுகாப்பு சபையில் (Security Council) மறுப்பு தெரிவிப்பதற்கான அதிகாரத்தின் (vetoes) காரணமாக இந்தப் பிரச்சினைகளில் பலவற்றை—279 பிரச்சினைகளை—கையாளுவதற்கான அதிகாரம் ஐக்கிய நாடுகளுக்கு இல்லாமல் போய்விட்டது. இதுதானே அக்காலகட்டத்தில் நிலவிவந்த பிரிவினைகளின் [முதலாளித்துவ நாடுகளுக்கும் கம்யூனிஸ அரசாங்கங்களுக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போரின்] பகிரங்கமான வெளிக்காட்டாக இருந்தன.”
நாடுகளுக்கிடையில் சமாதானத்தை நிலைநாட்ட ஐநா முயற்சியெடுக்காமல் விட்டுவிட்டதா? முயற்சியெடுத்தது, ஆனால் ஏகப்பட்ட செலவில். “1945 முதல் 1987 வரை அமைதிப் பாதுகாப்புக்காக பதிமூன்று முறையும்; அதுமுதற்கொண்டு 13 முறையும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஜனவரி 1992 வரை ராணுவத்தினரும், காவல் துறையினரும், ராணுவம் சாராதவர்களும் சேர்ந்து 5,28,000 பேர் ஐக்கிய நாடுகளுக்காக சேவை செய்திருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பின் சேவையில் 43 நாடுகளில் இருந்துவந்தவர்களில் 800-க்கும் அதிகமான ஆட்கள் இறந்திருக்கிறார்கள். 1992 வரை இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் ஆன மொத்த செலவு சுமார் 8.3 பில்லியன் டாலர்.”
[படத்திற்கான நன்றி]
Tank and missile: U.S. Army photo
[பக்கம் 11-ன் பெட்டி]
தொலைக்காட்சி
போதனையாளரா நெறிபிறழ வைப்பவரா?
1945-ல் ஒப்பிடுகையில் ஒருசில வீடுகளிலேயே தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. அதில் இன்னும் பழம்பாணியாகிய கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில்தான் உருவங்கள் தெரிந்தன. இன்று, டிவியானது வளர்ச்சியடைந்த நாடுகளின் ஒவ்வொரு வீட்டிலும், வளர்ந்துவரும் நாடுகளின் ஒவ்வொரு கிராமத்திலும் அங்கீகரிக்கப்பட்ட நேரத் திருடனாகவும் தலையிடுபவனாகவும் இருக்கிறான். சிறுபான்மையான நிகழ்ச்சிகள் கல்வி புகட்டுபவையாகவும் கட்டியெழுப்புபவையாகவும் இருக்கின்றன. ஆனால் பெரும்பான்மையானவை தார்மீக மதிப்பீடுகளை கீழ்த்தரமாக்குபவையாகவும், பொதுமக்களின் கீழ்த்தரமான ஆசைகளை திருப்தி செய்துகொள்ள துணைபுரிபவையாகவும் இருக்கின்றன. வீடியோ திரைப்படங்கள் பிரபலமாக ஆகிவிட்டதனால், ஆபாசங்களையும் A முத்திரையிடப்பட்ட திரைப்படங்களையும் தவறாக பயன்படுத்துவது நல்ல ரசனை மற்றும் நல்ல ஒழுக்கநெறிகளின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் மற்றொரு ஆணியாக இருக்கிறது.
[பக்கம் 9-ன் பெட்டி]
1945 முதற்கொண்டு வியட்நாமில் நடந்த போரைப் போன்றவை இரண்டு கோடிக்கும் அதிகமான உயிர்களை கொன்றிருக்கின்றன
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
Patrick Frilet/Sipa Press
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
Luc Delahaye/Sipa Press