1995 நம் எதிர்காலம் எப்படி இருக்கும்?
“குடியாட்சிக்கும் கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரத்துக்குமான கோரிக்கையைவிட இந்த உலகத்திற்கு ஒரு திசைமானி தேவையாக இருக்கிறது—ஆனால் ஒன்றும் கிடைத்தபாடில்லை.”—வில் ஹட்டன், கார்டியன் வீக்லி.
மனிதர்களின் நோக்குநிலையில் இந்தக் கூற்று உண்மையாகத் தோன்றலாம். சமாதானம், பாதுகாப்பு, நீதி, சமத்துவம், நல்ல அரசாங்கம் ஆகியவற்றுக்கு வழியை சுட்டிக்காட்டும் நம்பகரமான ஒரு திசைமானி இவ்வுலகத்துக்கு இல்லாததுபோல் தெரிகிறது. முடியாட்சி முதல் குடியாட்சி வரை, சர்வாதிகாரம் முதல் மக்களாட்சி வரை, மனிதன் கிட்டத்தட்ட எல்லா அரசாங்க முறையையும் பார்த்துவிட்டான். இருப்பினும் இந்த உலகம் கிட்டத்தட்ட நிர்வகிக்கமுடியாத ஒன்றாக இருப்பதாய் காண்கிறான். அவன் இப்போது எவ்வழியில் செல்லவேண்டும்?
ஒரு தெரிவு இருப்பதாக தோன்றுகிறது—அதிக வன்முறை, குற்றச்செயல், ஊழல், அநீதி, மத மற்றும் அரசியல் மாய்மாலம், தேசப்பற்றின் அடிப்படையிலான வெறுப்பு, ஏழைகளை சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்ளுதல் ஆகியவை நிறைந்த உலகமாகிய தாழ்நிலைக்குப் போகும் பாதை. குழப்பத்திற்கு வழிநடத்துவது இந்தப் பாதையே என்பதாக சிலர் சொல்லுகின்றனர்.
இல்லையெனில், பைபிளில் காணப்படும், அரசாங்கங்களுக்கான கடவுளுடைய தீர்வின் அடிப்படையிலான ஒரு மேம்பட்ட உலகத்திற்கு வழிநடத்துகிற, சுய-தியாகத்தோடு ஏறவேண்டிய கடினமான வேறொரு ஏற்றப்பாதை இருக்கிறது. அது கடினமான பாதை, ஏனென்றால் அதற்குத் தார்மீக தைரியம், தனிப்பட்ட தியாகம், வாழ்க்கையில் ஆவிக்குரிய மனநிலை, நோக்கமுள்ள ஒரு கடவுளில் நம்பிக்கை ஆகியவை தேவையாய் இருக்கின்றன. ஆனால் வெற்றிகரமாக ஏறிப்போவதற்கு, மனிதன் மனத்தாழ்மை உள்ளவனாயும்—தன் படைப்பாளருக்குமுன் மனத்தாழ்மையுள்ளவனாயும் நடந்துகொள்ள வேண்டும். நீதியுள்ள ஆட்சிக்காக அவன் கடவுளை எதிர்நோக்கியிருக்க வேண்டும். கிறிஸ்தவ அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு அறிவுரை கூறினார்: “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”—1 பேதுரு 5:6, 7; வெளிப்படுத்துதல் 4:11.
வெறுப்பைத் தூண்டிவிடுவது யார்?
இந்த உலகை நிரந்தரமாக நல்ல நிலைக்கு மாற்றுவது மனிதனால் மட்டும் ஆகாத காரியமாகும். ஏனென்றால், தன்னலவாதிகளும், கெட்ட ஆட்களும் அதிக எண்ணிக்கையிலும் மகா பலம் வாய்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்,” என்று எரேமியா தீர்க்கதரிசி எழுதியது சரிதான். (எரேமியா 10:23) கடவுளை தள்ளிவிட்டு, மனித குடும்பம் முழுவதற்கும் பலனளிக்கும் வகையில், மனிதன் தன் நடைகளை வெற்றிகரமாக நடத்தமுடியாது. ஏன் அப்படி? ஏனென்றால் பிறப்பிலிருந்தே நாம் பெற்றுக்கொண்ட அபூரணம் மட்டுமல்லாமல் ருவாண்டாவில் செய்ததுபோல, மக்கள் மத்தியில் ரத்தம் சிந்தும் சண்டைகளை கிளறிவிட தன் செல்வாக்கை உபயோகிக்க காணக்கூடாத எதிரியாகிய சாத்தான் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறான்.—ஆதியாகமம் 8:21; மத்தேயு 4:1-11.
மக்களின் இருதயத்திலும் மனதிலும் தப்பெண்ணம், வெறுப்பு, கொலை ஆகியவற்றைத் தூண்டிவிடும்படிக்கு, தங்களுடைய தேசம், இனம், மதம்தான் உயர்ந்தது என்ற எண்ணத்தை சாத்தான் தேசத்தினர் மத்தியில் வளர்த்திருக்கிறான். வெறுப்புணர்ச்சியில் ஆழ்ந்த இந்தக் கல்வியானது, தங்களுடைய மனது பெரும்பாலும் நூற்றாண்டுகணக்கில் பரம்பரை பரம்பரையாக அதிலேயே மூடப்பட்டுக் கிடக்கும் பெற்றோர்களால், குழந்தைப் பருவத்திலிருந்தே மனதில் பதிக்கப்படுகிறது. இந்தப் பாரம்பரியமானது பின்னர் பள்ளிக்கூட அமைப்புகளாலும் மத போதனைகளாலும் உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய இருதயங்களில் வெறுப்புணர்ச்சியோடும் தப்பெண்ணங்களோடும் வளர்க்கப்படுகின்றனர். நெறிகெட்ட அரசியல் மற்றும் மதத் தலைவர்களின் கட்டளைக்கிணங்க, தங்களுடைய சகமனிதர்களுக்கு எதிராக கிளம்பும்படி அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே மாற்றப்பட்டு, மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றனர். யோசனையில்லாமல் எழுப்பும் கோஷங்களும், அரசாங்க செய்தியறிக்கைகளும்கூட குழப்பத்தை ஏற்படுத்தி நிலைமை காட்டுத்தீயைப் போல பரவச்செய்து “இன அழிவில்” அல்லது படுகொலையில் சென்று முடிவடைகிறது.
அண்மையிலிருக்கும் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதைக் குறிப்பிடுபவராக, இஸ்ரேலைச் சேர்ந்த ராணுவ வரலாற்று ஆசிரியர், மார்ட்டின் ஃபான் க்ரேஃப்வெல்ட், தி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆஃப் வார் என்ற தனது புத்தகத்தில் இவ்வாறு எழுதினார்: “தற்போதைய நிலைமைகளின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, கடந்த 300 வருடங்களிலேயே” மேற்கத்திய உலகில் வேறெந்தக் காலப்பகுதியில் இருந்ததைவிட, “ஆயுதப் போரைத் தூண்டிவிடுவதில் மத . . . வெறி பெரும்பங்கை வகிப்பதற்கு அனைத்து வாய்ப்புக்களும் இருப்பதாகத் தோன்றுகிறது.” இவ்வாறு மதமானது, சமாதானத்தின் சக்தியாக செயல்பட்டு, மனிதவர்க்கத்தை ஆவிக்குரிய வகையில் உயர்த்துவதற்குப் பதிலாக, வெறுப்புணர்ச்சி, போர், கொலை ஆகியவற்றைத் தூண்டுவதில் வகிக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பங்கையே தொடர்ந்து நிறைவேற்றி வந்திருக்கிறது.
வித்தியாசமான எதிர்காலம் வாக்களிக்கப்பட்டிருக்கிறது
நீதி வாசமாயிருக்கும் ஒரு புதிய பூமியில் வாழ்வதற்கு மனிதவர்க்கம் தகுதிபெறவேண்டுமானால், ஏசாயாவின் இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் அவர்கள் பங்குகொள்ளவேண்டும்: “அவர் [யெகோவா] தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; . . . அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”—ஏசாயா 2:3, 4.
மிக உன்னதமான இந்தத் தீர்க்கதரிசனத்திற்கு உலகமுழுவதிலும் இன்று செவிகொடுப்பவர்கள் யார்? ருவாண்டாவில் வேறொரு இனத்தைச் சேர்ந்த தங்கள் சக விசுவாசிகளைக் கொலை செய்வதற்குப் பதிலாக இறந்தவர்கள் யார்? ஹிட்லரின் ராணுவப்படைகளில் சேவிப்பதைவிட நாசி சித்திரவதை முகாம்களில் இறந்தவர்கள் யார்? போரைக் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக பல நாடுகளிலும் சிறைவாசம் இருந்தவர்கள் யார்? இவர்கள், “உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்,” என்று சொல்கிற ஏசாயா 54:13-ன் நிறைவேற்றத்தை மகிழ்ந்து அனுபவித்திருப்பவர்களே.
உலகமுழுவதும் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் அந்தச் சமாதானம் இப்போது நிலவுகிறது. ஏனென்றால் யெகோவாவின் வார்த்தையாகிய பைபிளிலிருந்து வரும் அவருடைய போதனையை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். கிறிஸ்து இயேசுவின் போதனைகளையும் முன்மாதிரியையும் பின்பற்றுகின்றனர். அவர் என்ன சொன்னார்? “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்,” என்றார். (யோவான் 13:34, 35) வட அயர்லாந்தில் யெகோவாவின் சாட்சிகள், முன்பு கத்தோலிக்கர்களாகவும் புராட்டஸ்டண்டினராகவும் இருந்திருந்தாலும்கூட இப்போது இசைவாக ஒன்றுபட்டு வேலை செய்கின்றனர். இவர்கள் அந்தளவுக்கு அந்த அன்பை நடைமுறையில் காட்டுகின்றனர். இஸ்ரேலிலும் லெபனானிலும் மற்ற தேசங்களிலும் ஒருகாலத்தில் மத விரோதிகளாக இருந்திருந்தாலும்கூட, இவர்கள் இப்போது கிறிஸ்தவர்களாக ஒத்துழைக்கின்றனர். இவர்கள் இனியும் யுத்தத்தைக் கற்பது கிடையாது. உலகத்தின் ஜனங்கள் அனைவரும் இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, தங்களுடைய வாழ்க்கையில் நடைமுறையில் காண்பித்தால் என்னே ஒரு வித்தியாசத்தை அது உண்டுபண்ணும்!
பரலோக அரசாங்கத்தால் ஆளப்படும் ஒரு உலகமாகிய, கடவுளால் வாக்குக்கொடுக்கப்பட்ட புதிய உலகம் விரைவில் வரும் என யெகோவாவின் சாட்சிகள் நம்புகின்றனர். அவர்களுடைய அத்தகைய நிச்சயமான நம்பிக்கையின் ஆதாரமென்ன?
கடவுளால் வாக்களிக்கப்பட்ட தீர்வான நடவடிக்கை
கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் அனைத்திற்கும் நீதியுள்ள ஆட்சி ஒன்றை கடவுள் தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் வாக்களித்திருக்கிறார். இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையின் இறுதி கட்டத்தின் கடைசி காலத்தில், தாம் ஒரு நிரந்தரமான மற்றும் நீதியுள்ள அரசாங்கத்தை ஸ்தாபிக்கப்போவதாக தம்முடைய தீர்க்கதரிசியாகிய தானியேல் மூலம் தீர்க்கதரிசனம் உரைத்தார். “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) புகழ்பெற்ற தமது ஜெபத்தில் இதே ராஜ்ய அரசாட்சிக்காக ஜெபிக்கும்படிதான், கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்குப் போதித்தார்: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.”—மத்தேயு 6:9, 10.
கடவுளுடைய நீதியுள்ள அரசாட்சி சம்பந்தமான அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றி வைக்கும்படி நாம் அந்த ஜெபத்தில் கேட்கிறோம். கடவுளால் பொய் சொல்லமுடியாது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். “பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி”னதைக் குறித்து பவுல் பேசினார். (தீத்து 1:3; எபிரெயர் 6:17, 18) கடவுள் எதை வாக்களித்திருக்கிறார்? அப்போஸ்தலன் பேதுரு பதிலளிக்கிறார்: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.”—2 பேதுரு 3:13; ஏசாயா 65:17; வெளிப்படுத்துதல் 21:1-4.
நீதியுள்ள அந்த அரசாட்சியை பூமியின்மேல் முழுவதுமாக அனுபவிக்கப்போகுமுன்பு ஒரு மகா சுத்தப்படுத்தும் வேலை செய்யப்படவேண்டியிருக்கிறது. சாத்தானிய உலகத்தையும் அவனுடைய தீய சக்திகளையும் துடைத்தழிப்பதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கவிருக்கிறது என்பதாக பைபிளின் தீர்க்கதரிசனங்கள் இணைந்து சுட்டிக்காட்டுகின்றன. (பார்க்கவும்: மத்தேயு, அதிகாரம் 24; லூக்கா, அதிகாரம் 21; மாற்கு, அதிகாரம் 13.) சுத்தப்படுத்தும் இந்த முடிவான நடவடிக்கை அர்மகெதோன் யுத்தம், ‘தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தம்’ என்றழைக்கப்படுகிறது.—வெளிப்படுத்துதல் 16:14, 16.
அநேகர் என்ன நினைத்தாலும், 2000 வருடம் முக்கியமானது கிடையாது. அந்தத் தேதி கிறிஸ்தவமண்டலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். மற்ற மதத்தினருக்கு அவர்களுக்கென்று காலக்கணக்கீட்டு முறைகள் இருக்கின்றன. குறிப்பிடத்தக்கது என்னவென்றால், கடவுளிடமும் அவருடைய வார்த்தையிடமாகவும் திரும்பி, “நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம்” இன்னதென்று உங்களுக்கே மெய்ப்பித்துக் கொள்வதற்கு இதுவே தருணம் என்பதேயாகும். (ரோமர் 12:1, 2) கடவுளால் ஆசீர்வதிக்கப்படும் எதிர்காலத்தினுள் பிரவேசிப்பதா அல்லது சாத்தானின் உலகம் அளிக்கும் ஏமாற்றத்தின் பாதையில் தொடர்ந்து செல்வதா என்பதை நீங்கள் தெரிவு செய்வதற்கான தருணம் இதுவே என்பது முக்கியமாக இருக்கிறது. கடவுளுடைய வழியைத் தெரிந்துகொள்ளும்படி நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். ஜீவனைத் தெரிந்துகொள்ளுங்கள்!—உபாகமம் 30:15, 16.
[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]
“அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” —2 பேதுரு 3:13
[பக்கம் 13-ன் படம்]
கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின்கீழ் மட்டுமே தேசங்கள் உண்மையிலேயே தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்பார்கள்