இளைஞர் கேட்கின்றனர்
தற்காப்பை நான் கற்றுக்கொள்ள வேண்டுமா?
“பள்ளியில் உண்மையிலேயே இந்த மோசமான கும்பல் இருக்கிறது,” என்று ஜெஸி கூறுகிறார். “பள்ளியின் நடைபாதையில் அவர்கள் உங்களைக் கண்டால், உங்கள் காலணிகள், மேற்சட்டை அல்லது உங்கள் கால்சட்டைகளைக்கூட கேட்கிறார்கள், அவற்றை எடுத்துக்கொள்ளவும் செய்கிறார்கள். அதைப் புகார் செய்தீர்களென்றால், அவர்கள் மறுபடியும் உங்களைத் தாக்குவார்கள்.”
வன்முறையைச் சமாளிப்பது அநேக இளைஞருக்கு ஒரு வாழ்க்கை முறையாகவே ஆகிவிட்டது. USA டுடே இவ்வாறு சொன்னது: “மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் ஐந்து பேருக்கு ஒருவர், சுடுவதற்கான ஆயுதம், கத்தி, சவரக்கத்தி, குறுந்தடி, அல்லது ஏதாவதொரு கருவியை ஒழுங்கான அடிப்படையில் தங்களுடன் வைத்திருக்கிறார்கள். அநேகர் அவற்றைப் பள்ளிக்கு எடுத்துச்செல்கிறார்கள்.” பருவவயதினனாகிய ஹைரோ இதை நேரடியாக அறிந்திருக்கிறான். “[நியூ யார்க் நகரில்] முதல்முதலாக எங்கள் பள்ளியே உலோகங்காணிகளை (metal detectors) பயன்படுத்தியது; ஆனால் அதுதானே, கத்திகளையும் துப்பாக்கிகளையும் பிள்ளைகள் வைத்திருப்பதை நிறுத்துவதில்லை. அவர்கள் எப்படி அவற்றை உள்ளே கொண்டுவருகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் கொண்டுவந்துவிடுகிறார்கள்,” என்று அவன் சொல்லுகிறான்.
தாக்கப்படுவதற்கான அச்சுறுத்தல், அநேக இளைஞர்கள் தங்களைத்தாங்களே எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதைக் குறித்து சிந்திக்க வைப்பது புரிந்துகொள்ளத்தக்கதே. இளம் லோலா இவ்வாறு குறிப்பிடுகிறாள்: “என்னுடைய பள்ளியிலுள்ள ஒரு மாணவி, அவளுடைய கம்மல்களுக்காகக் குத்திக்கொல்லப்பட்டபின், பள்ளியில் தற்காப்பு வகுப்புகளை நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் பெயர்களைக் கொடுத்தார்கள்.” மற்ற இளைஞர்கள் இரசாயன தெளிப்பான்களையும் மற்ற கருவிகளையும் எடுத்துச்செல்வதைத் தெரிந்துகொண்டிருக்கின்றனர். கேள்வி என்னவென்றால், தற்காப்பு முறைகள் உண்மையிலேயே உங்களைப் பாதுகாக்கின்றனவா?
தற்காப்புக் கலைகள்
அதை எப்போதும் டிவியில் காண்பிக்கிறார்கள்—தற்காப்புக் கலை வல்லுநர்கள், எகிறிக்கொண்டு உதைப்பதும் குத்துவதுமாக நடனமாடுகிறவர்களுடைய நளினத்துடன் காட்சி அளிக்கிறார்கள். ஒருசில நொடிகளுக்கு அந்த மோசமான நபர்கள் அசைவின்றி தரையில் கிடக்கின்றனர். வியப்பூட்டுவதாக இருக்கிறது! தற்காப்புக் கலைகளே முடிவான பாதுகாப்பாகத் தோன்றுகின்றன. இருந்தாலும், திரைப்படங்களில் இருப்பதுபோல் நிஜத்தில் வாழ்க்கை இருப்பதில்லை. கராத்தேயில் பலவருட அனுபவமுள்ள ஒருவர் சொல்கிறார்: “ஒரு துப்பாக்கிக்குண்டுதான் தேவைப்படுகிறது. சற்று தொலைவில் இருக்கும் ஒருவர் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தால், உங்களுக்குத் தப்பிப்பதற்கு வாய்ப்பில்லை. ஓடுவதற்கு இடமின்றி அதிக நெருக்கமான இடத்தில் மாட்டிக்கொண்டாலும், உண்மையில் பெரிதாக ஒன்றும் செய்யமுடியாது.”
தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்றவராவதற்கு, ஒருவர் அதிகமான பணத்தை செலவுசெய்யவும், பலவருட கடும்பயிற்சியை மேற்கொள்ளவும் வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து பயிற்சியெடுக்காவிட்டால், அந்த விசேஷித்த அசைவுகளைச் செய்யும் திறமை வெகு சீக்கிரத்தில் மிகவும் துருப்பிடித்துவிடும். குத்துச்சண்டை போன்ற மற்ற தற்காப்பு வகைகளைக் குறித்தும் அவ்வாறே சொல்லப்படலாம். அது மட்டுமல்லாமல், எப்படி சண்டைபோட வேண்டும் என்று அறிந்திருக்கும் ஒருவராக அறியப்பட்டிருப்பது தேவையற்ற கவனத்தை ஈர்க்கவும்கூடும். தொந்தரவு உண்டாக்குபவர்கள் உங்களிடம் சண்டைபோடுவதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ளக்கூடும்.
ஆயினும், தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்வதில் இன்னும் அதிக அபாயம் ஒன்று இருக்கிறது. தி எக்கானமிஸ்ட் பத்திரிகை சமீபத்தில் இவ்வாறு அறிக்கைசெய்தது: “தற்காப்புக் கலைகளில் எல்லாம் இல்லையென்றாலும், பெரும்பாலானவை புத்தமதம், தாவ் நெறி, கன்பூசியஸ் நெறி என்ற மூன்று முக்கிய கிழக்காசிய மதங்களுடன், அவற்றிலிருந்து பிரிக்கப்படமுடியாத தொடர்பைக் கொண்டிருக்கின்றன.” மற்றொரு ஆதாரமூலம் மேலுமாகச் சொல்லுகிறது: “கராத்தேயில் செய்யப்படும் அனைத்தும்—ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு உணர்ச்சியும்—சென்னிலுள்ள ஏதாவதொரு நியமத்துடன் தொடர்புடையதாகக் காணப்படலாம்.” சென் என்பது, மத சம்பந்தமான தியானத்தை அழுத்திக்காண்பிக்கும் ஒரு புத்த மதப் பிரிவாக இருக்கிறது. “ஆனபடியால், நீங்கள் அவர்கள் [பொய் வணக்கத்தார்] நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்,” என்று 2 கொரிந்தியர் 6:17-ல் சொல்லப்பட்ட பைபிள் வார்த்தைகளின் நோக்கில், இந்தவிதமான மத அடிப்படைகள் கிறிஸ்தவர்களுக்குக் கடுமையான பிரச்சினையை முன்வைக்கிறது.
ஆயுதங்களின் பயன்பாடு
ஒரு துப்பாக்கியையோ ஒரு கத்தியையோ எடுத்துச் செல்வதைக்குறித்து என்ன? அவ்வாறு செய்வது உண்மையில் உங்களை உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாக உணரச் செய்யும். ஆனால் நீங்கள் தேவையற்ற துணிச்சல்களை மேற்கொள்ள அல்லது தொந்தரவை வரவழைக்கவைக்கும் விதத்தில் நடந்துகொள்ள ஆரம்பித்தால் அந்த நம்பிக்கை ஆபத்தானதாக நிரூபிக்கக்கூடும். பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.” (நீதிமொழிகள் 11:27) வேண்டப்படாத குழப்பம் ஏற்பட்டால், உங்கள் ஆயுதத்தை உருவுவது நிச்சயமாகவே ஒரு சச்சரவாக உருவெடுக்கும். நீங்கள் கொல்லப்படலாம்—அல்லது யாராவது ஒருவரை நீங்கள் கொல்லுவதில் முடிவடையலாம். நீங்கள் வன்முறையைத் தவிர்க்க முடிந்திருந்திருக்கும் என்றால், உங்கள் செயல்களை ஜீவ ஊற்றாகிய கடவுள் எவ்வாறு நோக்குவார்?—சங்கீதம் 11:5; 36:9.
கொல்லக்கூடிய முறைகளைச் சிலர் பயன்படுத்த உத்தேசிப்பதில்லை என்பது உண்மைதான். தொல்லைகொடுப்பவர்களைப் பயமுறுத்துவதற்காகவே அவர்கள் ஆயுதத்தைக் கொண்டுசெல்வதாகச் சொல்லக்கூடும். ஆனால் ஹெல்த் பத்திரிகை சொல்லுகிறது: “வெடிக்கும் போர்க்கருவி பயிற்றுனர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்: நீங்கள் உபயோகிக்கப்போவதில்லை என்றால் ஒரு துப்பாக்கியை வாங்காதீர்கள். ஏமாற்றி பயப்படுத்துவதற்காக, வெடிக்கும் போர்க்கருவி ஒன்றைச் சுழற்றிக் காண்பிப்பது, தாக்கவரும் சிலரை பயமுறுத்தலாம், ஆனால் மற்றவர்களை அது கோபமூட்டவே செய்யும்.”
இரசாயன தெளிப்பான்கள் போன்ற “அதிக பாதுகாப்பான” கருவிகளைக் குறித்து என்ன? சில இடங்களில் அவை சட்டவிரோதமானவையாக இருப்பதோடு, இந்தக் கருவிகள் கடுமையான குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றன. போதைமருந்து பித்தனாகிய தாக்குகிறவனை செயலற்றவனாக்குவதற்கு மாறாக அவை அவனுக்கு வெறியூட்டுவதிலேயே வெற்றிகாணக்கூடும். காற்று, அந்த இரசாயனப் பொருளை தாக்குபவரின் பக்கமாக வீசுவதற்குப் பதிலாக, உங்கள் பக்கமாக வீசியடிக்கும் சாத்தியமும் இருக்கிறது; அவருக்கு முன்பு உங்கள் மீது அது தெளிக்கப்பட்டுவிட்டதென்று வைத்துக்கொள்வோம். நீங்கள் உங்கள் பாக்கெட்டுகளுக்குள் அல்லது பர்ஸுக்குள் தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்து, ஒரு துப்பாக்கியை எடுக்க நீங்கள் முயல்கிறீர்கள் என்று தாக்கவந்தவர் நினைத்துக்கொண்டு, தாமாக ஏதாவதொரு தாக்குதல் நடவடிக்கையை எடுக்கத் தீர்மானிக்கிறார். இதனால், துப்பறியும் போலீஸ் ஒருவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இரசாயன தெளிப்பானோ மற்ற எந்த ஆயுதமோ நடைமுறையானதாக இருக்கும் என்பதற்கு எவ்வித உறுதியும் இல்லை. அதை உடனடியாக வேண்டிய நேரத்தில் பயன்படுத்த முடியும் என்றும் சொல்லமுடியாது. ஆயுதங்கள் அவ்விதமான சூழ்நிலையில் ஒருபோதும் உதவியாக இருப்பதில்லை. மக்கள் அவற்றில் மிக அதிகமான நம்பிக்கை வைக்கிறார்கள்.”
ஆயுதங்கள்—கடவுளுடைய நோக்கு
இயேசுவின் நாளிலேயே வன்முறையைக் குறித்த அச்சுறுத்தல் நிஜமானதாக இருந்தது. நல்ல சமாரியன் உவமை என்று பொதுவாக அழைக்கப்பட்ட அவருடைய மிகப் பிரபலமான உவமைகளில் ஒன்று, வன்முறையான கொள்ளை உட்பட்ட ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டது. (லூக்கா 10:30-35) இயேசு தம்முடைய சீஷர்களிடம் பட்டயங்களை வைத்துக்கொள்ளும்படி சொன்னபோது, அது பாதுகாப்பிற்காக அல்ல. உண்மையில், அவர் இந்த நியமத்தைக் கூறுவதற்கு அது வழிநடத்தியது: “பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்.”—மத்தேயு 26:51, 52; லூக்கா 22:36-38.
ஆகவே, உண்மைக் கிறிஸ்தவர்கள் தங்கள் உடன்மனிதருக்கு கெடுதல் செய்யும்படி தங்களிடம் ஆயுதங்களை வைத்திப்பதில்லை. (ஏசாயா 2:4-ஐ ஒப்பிடுக.) அவர்கள் ரோமர் 12:18-லுள்ள புத்திமதியைப் பின்பற்றுகிறார்கள்: “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.” தற்காப்பின்றி இருப்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லவே இல்லை!
ஞானம்—ஆயுதங்களைவிடச் சிறந்தது
ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு இயந்திரத்தை வைத்திருப்பதைப்போலத் தோன்றும் இந்த சகாப்தத்தில் மனிதனால் உண்டாக்கப்பட்ட எந்தக் கருவியையும்விட மிக அதிக திறம்பட்ட தற்காப்பு உதவி ஒன்றை நீங்கள் வைத்திருக்கலாம் என்பது உங்களுக்கு ஆச்சரியமளிக்கக்கூடும். பிரசங்கி 9:18-ல் நாம் வாசிக்கிறோம்: “யுத்த ஆயுதங்களைப்பார்க்கிலும் ஞானமே நலம்.” “தெருவீரம்” என்பதாக சிலர் அழைப்பதைக் காட்டிலும் இந்த ஞானம் கூடுதலானது. இது பைபிள் நியமங்களைப் பொருத்திப்பிரயோகிப்பதாக இருக்கிறது; மேலும் முதலாவதாக, வன்முறையான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கு அது உங்களுக்குப் பெரும்பாலும் உதவி செய்யும்.
உதாரணமாக, தன்னுடைய வன்முறையான பள்ளியைக் குறித்து ஆரம்பத்தில் விவரித்த ஹைரோ, ‘அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும் வேண்டும்’ என்று சொல்லப்பட்ட 1 தெசலோனிக்கேயர் 4:12-லுள்ள பைபிள் வார்த்தைகளைப் பொருத்திப்பிரயோகித்து தொந்தரவிலிருந்து விலகி நிற்கிறான். ஹைரோ சொல்லுகிறான்: “ஒரு சண்டை நடக்கப்போகிறது என்று அறிந்தால், அதில் உட்படாமல் வீட்டுக்குப் போய்விடுங்கள். சிலர் அங்கேயே கும்பலுடன் இருக்கிறார்கள்; அப்போதுதான் குழப்பத்தில் மாட்டிக்கொள்கிறார்கள்.”
“நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தி என்பதை எல்லாரும் அறிந்துகொள்ளச் செய்வதே என்னுடைய மிகச் சிறந்த பாதுகாப்பாக இருக்கிறது,” என்று இளம் லோலா கூறுகிறாள். “நான் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கப்போவதில்லை என்பதை அவர்கள் அறிந்திருப்பதால் என்னை விட்டுவிடுகிறார்கள்.” “நீங்கள் ஒரு சாட்சி என்பதை வெறுமனே சொல்வதைவிட அதிகம் உட்பட்டிருக்கிறது,” என்று எலியூ மேலுமாக கூறுகிறான். “நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்கள் என்பதை அவர்கள் காணவேண்டும்.” கிறிஸ்தவர்கள் ‘உலகத்தின் பாகமாக இருக்கக்கூடாது.’ (யோவான் 15:19) ஆனால், மேல்நிலையில் இருக்கும் ஒருவர் என்ற மனநிலையைக் கொடுக்காதபடி கவனமாக இருக்கவேண்டும். (நீதிமொழிகள் 11:2) ஒரு இளைஞன் இவ்வாறு சொன்னான்: “உங்களுக்கே சொந்தம் என்பதுபோல் நடைபாதைகளில் நடக்காதீர்கள்.” இது கோபத்தைத் தூண்டக்கூடும். லூச்சி என்ற இளம் பெண் கூறுகிறாள்: “நான் சிநேகப்பான்மையுள்ளவளாக இருக்கிறேன், என்னுடைய வகுப்பு சகாக்களுடன் பேசுகிறேன்; ஆனால் அவர்களைப்போல் நடந்துகொள்ளாமல் இருக்கிறேன், அவ்வளவுதான்.”
நீங்கள் எவ்வாறு உடுத்துகிறீர்கள் என்பதும் முக்கியமானது. “கவனத்தை ஈர்க்கும் உடைகளை அணியாதபடி கவனமாக இருக்கிறேன்” என்று ஒரு இளைஞன் சொல்கிறான். “நல்ல தோற்றமளிப்பதற்காக மிகவும் விலையுயர்ந்த பிரான்ட் துணிகளை நான் அணியவேண்டியதில்லை என்று தீர்மானிக்கிறேன்.” அடக்கமாக உடுத்துவதற்கான பைபிள் அறிவுரையைப் பின்பற்றுவது, இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்கும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்கும் உங்களுக்கு உதவக்கூடும்.—1 தீமோத்தேயு 2:9, 10.
நீங்கள் வன்முறையை எதிர்ப்பட்டால்
கேடு வருவதற்கான வழியிலிருந்து விலகி நிற்பதற்கு நீங்கள் முயற்சிகள் எடுக்கிறபோதிலும் வன்முறையால் அச்சுறுத்தப்பட்டால் என்ன செய்வது? முதலாவதாக, நீதிமொழிகள் 15:1-லுள்ள நியமத்தைப் பொருத்த முயலுங்கள்: “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.” இளம் எலியூ பள்ளியில் இருந்தபோது அவ்வாறு செய்தான். அவன் சொல்லுகிறான்: “சில சமயங்களில் வலியச்சண்டை செய்ய முனைகிற கூற்றுக்களைக் கேட்டு அவ்வளவு உணர்ச்சிவசப்படாமல் இருப்பதே அவசியமானதாக இருக்கிறது. அநேக சமயங்களில், நீங்கள் பிரதிபலிக்கும் விதமே குழப்பத்தை உண்டுபண்ணுகிறது.” ‘தீமைக்குத் தீமை செய்ய’ மறுப்பதன்மூலம் நீங்கள் ஒரு சூழ்நிலையை கட்டுக்கடங்காது சென்றுவிடாமல் வைத்துக்கொள்ளக்கூடும்.—ரோமர் 12:17.
என்றபோதிலும், சாதுரியமான முறை தவறிவிட்டால், உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான படிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். உங்கள் ஸ்னீக்கர்களையோ ஏதாவது விலையுயர்ந்த பொருட்களையோ இளைஞர் கும்பல் கேட்கிறார்கள் என்றால், அவற்றைக் கொடுத்துவிடுங்கள்! நீங்கள் வைத்திருக்கும் பொருட்களைவிட உங்கள் உயிர் மிகவும் அருமையானது. (லூக்கா 12:15) வன்முறை சம்பவிக்கப்போவதாகத் தோன்றினால், அங்கிருந்து போய்விடுங்கள்—அங்கிருந்து ஓடிவிடுவது அதைவிட மேலானது! “விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு” என்று நீதிமொழிகள் 17:14 கூறுகிறது. (ஒப்பிடுக: லூக்கா 4:29, 30; யோவான் 8:59.) தப்பிச்செல்வது சாத்தியமற்றதாக இருந்தால், உங்களால் முடிந்தவரை வன்முறையைத் தடுப்பதைத்தவிர வேறு வழி இல்லாதிருக்கக்கூடும். பின்னர், என்ன நடந்தது என்பதை நிச்சயமாக உங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்துங்கள். ஒருவேளை ஏதாவது வழியில் அவர்கள் உங்களுக்கு உதவி செய்யலாம்.
பைபிள் தீர்க்கதரிசனமுரைத்ததுபோல, நாம் வன்முறையான காலங்களில் வாழ்கிறோம். (2 தீமோத்தேயு 3:1-5) ஆனால் ஒரு துப்பாக்கியை எடுத்துச்செல்வதோ கராத்தே உதைகளைக் கற்றுக்கொள்வதோ உங்களை எவ்விதத்திலும் பாதுகாப்புள்ளவர்களாக ஆக்காது. எச்சரிப்புடன் இருங்கள். குழப்பத்தை எதிர்ப்படும்போது தெய்வீக ஞானத்தைப் பயன்படுத்துங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவில் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் கொண்டிருங்கள். சங்கீதக்காரனைப்போல நீங்களும் நம்பிக்கையுடன் ஜெபிக்கலாம்: “கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.”—சங்கீதம் 18:48.
[பக்கம் 13-ன் படம்]
தற்காப்புக் கலைகள் கிறிஸ்தவர்களுக்கான பரிகாரம் அல்ல