உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 9/22 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பிள்ளைகள் போதைப்பொருட்களுக்கு அடிபணிவதேன்
  • திகிலடைவதில் கிளர்ச்சியடைதல்
  • சரிவர கைகழுவுதல்
  • ஏழைகளின் பரிதாபநிலை
  • கல்லூரி வளாக குடிவெறியின் பலனை அறுத்தல்
  • பிரிட்டனில் விஷமாக்கப்பட்ட நிலம்
  • விலங்குகளுக்கு போக்குவரத்து விளக்குகளா?
  • ருமேனிய எய்ட்ஸ் அனாதைகள்
  • மலட்டுத் தம்பதிகளுக்கு புது நம்பிக்கையா?
  • பின்ஞ் டிரிங்கிங்—அதில் என்ன தவறு?
    விழித்தெழு!—2004
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1997
  • துடைக்க வேண்டும் கைகளை! விரட்டவேண்டும் நோய்களை!
    விழித்தெழு!—1998
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 9/22 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

பிள்ளைகள் போதைப்பொருட்களுக்கு அடிபணிவதேன்

“நம் பிள்ளைகளை போதைப்பொருட்கள் மற்றும் மதுபானங்களில் ஈடுபாடுகொள்ளாமல் தடைசெய்வதெப்படி? ‘வெறுமனே வேண்டாம் என்று சொல்வதை’ சில பிள்ளைகள் மற்ற பிள்ளைகளைவிட எளிதாகக் காண்பது ஏன்?” இந்தக் கேள்விகள் சமீபத்தில் பேரண்ட்ஸ் பத்திரிகையில் எழுப்பப்பட்டன. அ.ஐ.மா.-வில் உள்ள அரிஜோனா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் இருந்து, சாத்தியமுள்ள சில பதில்களை இந்தப் பத்திரிகை கண்டுபிடித்திருக்கிறது. ஆறாம் வகுப்பில் அல்லது ஏழாம் வகுப்பில் படிக்கும் கிட்டத்தட்ட 1,200 பிள்ளைகள் இந்த ஆராய்ச்சியில் சோதிக்கப்பட்டனர். போதைப்பொருட்களையும் மதுபானங்களையும் துர்ப்பிரயோகம் செய்ய பிள்ளைகளைத் தூண்டுவதாக சந்தேகப்படக்கூடிய பத்து வித்தியாசப்பட்ட காரணிகள் மீது கவனம் செலுத்தப்பட்டது. “சகாக்களின் அழுத்தத்திற்கு ஆளாவதும், மதுபானங்களையோ போதைப்பொருட்களையோ உபயோகித்த நண்பர்களோடு பழகுவதும்” முக்கியமான இரண்டு காரணிகளாக இருந்தன. மறுபட்சத்தில், கல்வியில் சாதனைகளை படைப்பது தடைசெய்யும் காரணியாக செயல்படலாம் என்றும், அதற்குக் காரணம் ஒருவேளை இது சுயமதிப்பை முன்னேற்றுவிக்கிறதும், பொருட்களைத் துர்ப்பிரயோகிக்கும் ஆட்களோடு நட்பு கொள்வதை அபூர்வமாகவே ஆதரிப்பதுமாக இருக்கலாம் என்றும் இந்த ஆராய்ச்சி கண்டுபிடித்தது.

திகிலடைவதில் கிளர்ச்சியடைதல்

“பருவவயதினர் திகிலூட்டப்படுவதற்கு அடிமைகளாக இருக்கின்றனர்,” என்று அறிவிக்கிறது கனடாவைச் சேர்ந்த தி க்ளோப் அண்ட் மெய்ல் செய்தித்தாள். “திகிலூட்டக்கூடிய வர்த்தக கார்டுகள், காமிக்ஸ் புத்தகங்கள், கலை வேலைப்பாடுகள், திரைப்படங்கள், இசையும்கூட, வளரிளமைப் பருவத்தினர் வட்டாரத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் அனைத்தும் இருக்கின்றன,” என்பதாக அந்தச் செய்தித்தாள் கூறுகிறது. வாசிக்கும் விஷயங்களில் அத்தகைய அதிர்ச்சிதரும் ரசனையைத் திருப்திப்படுத்துவதற்காக ஒரு புத்தக வெளியீட்டார் திகிலூட்டும் புத்தக உற்பத்தியை வருடத்திற்கு நான்கு புத்தகங்களிலிருந்து ஒரு மாதத்திற்கு ஒரு புத்தகமாக அதிகரித்துள்ளார். மற்றவர்களோ மாதத்திற்கு இரண்டு திகிலூட்டும் புத்தகங்களை வெளியிடுகின்றனர். திகிலடைவதில் ஏன் இந்தக் கிளர்ச்சி? எழுத்தாசிரியர் ஷான் ரையன் கூறுவதுபோல, “வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்த்தால், உடல்நலக் குறைவு ஏற்படும்போதோ வருத்தமாக இருக்கும்போதோ திகிலடைவது எப்போதுமே பிரபலமாகவே இருந்து வந்திருக்கிறது.” தி க்ளோப் சொல்லுவதுபோல, “தொண்ணூறுகளில், சந்தேகமேதுமின்றி நமக்கு அரசாங்கத்தின்மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது, குற்றச்செயல்களைக் குறித்து வருத்தப்பட்டு பயப்படுகிறோம். திகிலூட்டுவது பிரபலமாக இருப்பது இந்தக் காலப்பகுதிகளிலேயே” என்று திரு. ரையன் கூறினார்.

சரிவர கைகழுவுதல்

ஒழுங்காக கைகழுவினாலே அது, “சளி, ஃப்ளூ, தொண்டை அழற்சி, வயிற்றுக் கோளாறுகள் ஆகியவற்றையும் இதைவிட மோசமான வியாதிகளையும் உண்டாக்கும் கிருமிகள் மற்றும் வைரஸ்களை ஒழித்துக்கட்ட உதவிசெய்யும்,” என்று அறிவிக்கிறது தி டோரன்டோ ஸ்டார். இந்தச் செய்தித்தாள் மேற்கொண்டு சொன்னதாவது: “கைகளை சரிவர கழுவுதலே வைரஸினாலும் பாக்டீரியாவினாலும் பரவும் தொற்றுநோய்களை பேரளவில் குறைக்கமுடியும்—மேல்பாக சுவாச கோளாறுகளை 54 சதவீதம் வரையும், வயிற்றுப்போக்கை 72 சதவீதம் வரையும் குறைக்கமுடியும்—என்று மான்ட்ரீலைச் சேர்ந்த கொள்ளைநோய் நிபுணர் டாக்டர் ஜூலியோ ஸோட்டோ நடத்திய ஒரு . . . ஆராய்ச்சி காண்பிக்கிறது.” கைகளை சரிவர கழுவுதல் என்றால் ஓடும் தண்ணீரில் கையை நனைத்து, 30 எண்ணும் வரை சோப்புப்போட்டு தேய்த்து, 5 எண்ணும்வரை ஓடும் நீரில் கழுவி, வேறு யாரும் பயன்படுத்தாத சுத்தமான டவலைக்கொண்டோ காகித டவலைக்கொண்டோ அல்லது உலர்த்தும் இயந்திரத்தின்முன் கைகளைக் காண்பித்து உலர்த்துவதையோ உள்ளடக்குகிறது என்பதாக கனடாவைச் சேர்ந்த குழந்தை மருத்துவ சங்கம் ஆலோசனை கொடுக்கிறது. உணவு விடுதிகளிலும், சிற்றுண்டிச் சாலைகளிலும், தின்பண்ட சாலைகளிலும் உணவைத் தொடுபவர்கள் முக்கியமாக கைகழுவுவதற்கு மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.

ஏழைகளின் பரிதாபநிலை

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹாகனில் சமீபத்தில் நடந்த ஐநா மாநாடாகிய, சமூக வளர்ச்சிக்கான உலக மாநாட்டில் கூறியபடி உலகம் முழுவதிலுமுள்ள கிராமத்து ஏழைகள் மிகவும் கடுமையான நிலையில் இருக்கின்றனர். 100 கோடிக்கும் அதிகமானோர் வறுமையின் கொடுமையில் வாழ்கின்றனர் என்றும் இவர்களில் பாதிபேருக்குமேல் ஒவ்வொரு நாளும் பட்டினியாய் கிடக்கின்றனர் என்றும் இந்த மாநாட்டில் அறிக்கை செய்யப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு ஒருவகையில் காரணமாக இருப்பது வேலையில்லாத் திண்டாட்டமாகும். வேலையில்லாமல் இருப்பவரின் அல்லது போதுமான வேலை கிடைக்காமல் இருப்பவரின் மொத்த எண்ணிக்கை 80 கோடிவரை இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. இதெல்லாம் ஒட்டுமொத்தமாக சேர்த்துப் பார்த்தால், உலகில் வேலையில் அமர்த்தப்படக்கூடிய தொழிலாளர்களில் சுமார் 30 சதவீதத்தினர் பலனளிக்கக்கூடிய வகையில் வேலையில் அமர்த்தப்படாமல் இருக்கின்றனர். 110 கோடி முதல் 113 கோடி மக்கள் நாளொன்றுக்கு ஒரு (ஐ.மா.) டாலருக்கும் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்துகின்றனர். இந்தப் பிரச்சினையை நிச்சயமாக மோசமாக்குகிற படிப்பறிவின்மை தற்போது சுமார் 90.5 கோடி மக்களை பாதிக்கிறது. அவர்களுடைய எண்ணிக்கை ஒன்றும் வேகமாக குறையவில்லை. பள்ளிக்குப் போகும் தகுதியிருந்தபோதிலும் 13 கோடி பிள்ளைகள் பள்ளிக்குப் போவதில்லை. 2000-ம் ஆண்டில் அவர்களுடைய எண்ணிக்கை 14.4 கோடியாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லூரி வளாக குடிவெறியின் பலனை அறுத்தல்

யு.எஸ். நியூஸ் & உவர்ல்டு ரிப்போர்ட் சொல்லுகிறபடி, கல்லூரி மாணவர்கள் மதுபான களியாட்டத்தில் ஈடுபடுவது இன்றைய நாட்களில், மதுபான களியாட்டத்தில் ஈடுபடாதவர்கள் மத்தியிலும்கூட, படுமோசமான பாதிப்பைக் கொண்டிருக்கிறது. 140 கல்லூரி வளாகங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் விளைவுகளின் சுருக்கம் தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது. சுற்றாய்வு நடத்தப்பட்ட கல்லூரி மாணவர்களில் 44 சதவீதத்தினர் மதுபான களியாட்டத்தில் ஈடுபட்டவர்களாக இருந்தனர்—அதாவது கடந்த இரண்டு வாரங்களில் ஒரே சமயத்தில், ஆண்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஐந்து முறையும் பெண்கள் நான்கு முறையும் குடித்தனர் என்பதாக இந்தப் பத்திரிகை அறிவித்தது. பத்தொன்பது சதவீதத்தினர் அடிக்கடி, அதே காலப்பகுதியில் குறைந்தது மூன்று முறையாவது, மதுபான களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மதுபான களியாட்டத்தில் ஈடுபடும் அதிக சதவீதத்தினர் எதிர்பார்க்கக்கூடிய பாதிப்புகளினால் துன்புற்றனர்—அதாவது அவர்களுக்கு மிதமிஞ்சிய குடியின் பின்விளைவுகள் ஏற்பட்டன, எதிர்பாராதவிதமாக பாலுறவு கொண்டனர், வகுப்புப் பாடங்களுக்குப் போகாமலிருந்தனர், காயமடைந்தனர், உடமைகளை சேதப்படுத்தினர், இதுபோன்ற மற்ற காரியங்களையும் செய்தனர். ஆனால் மற்ற மாணவர்களும் துன்பத்திற்கு ஆளானார்கள். மதுபான களியாட்டங்களில் அதிகம் ஈடுபடும் பள்ளிக்கூடங்களில், 10-ல் 9 மாணாக்கர்கள் மற்றவர்கள் குடிப்பதனால் வரும், தேவையற்ற பாலுறவு தூண்டுதல்கள், உடமை சேதம், தூக்கத்தில் தடைகள், மானபங்கப்படுத்துதல் போன்ற சில பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியதாயிருந்தது.

பிரிட்டனில் விஷமாக்கப்பட்ட நிலம்

போர்க்கருவிகள் சம்பந்தமான மாசுபடுத்துதலின் காரணமாக ஒருபோதும் விற்கமுடியாத அளவுக்கு விஷப்படுத்தப்பட்ட அநேக நிலப்பகுதிகளை தன் வசம் வைத்திருப்பதாக பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறது என்று நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்தது. பிரிட்டனில் மொத்தம் 5,98,000 ஏக்கர் பரப்பளவுள்ள 3,400 நிலப்பகுதிகளை இந்த அமைச்சகம் தனது உடமையாக வைத்திருக்கிறது. இவற்றில் மூன்றிலிரண்டு பாக நிலத்தை பயிற்சி மைதானங்களாகவும் துப்பாக்கி சுடும் பயிற்சியளிக்கும் இடங்களாகவும் பயன்படுத்துகிறது. ராணுவ வரவுசெலவுத் திட்டத்தில் குறைவு ஏற்பட்டதன் காரணமாக இந்த நிலங்களில் சிலவற்றை விற்கும் கட்டாயம் அமைச்சகத்திற்கு ஏற்பட்டது. ஆனால் எத்தனை நிலங்கள் மனித குடியிருப்புக்கு தகுதியற்றளவுக்கு மாசுபடுத்தப்பட்டுள்ளன என்று தெரியவில்லை. ராணுவ திசைகாட்டும் கருவிகளிலும் இயந்திரங்களின் பெயர் பலகைகளிலும் ஒரு காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட, இருளில் ஒளிவீசும் பெயின்ட்டிலிருந்து வரும் கதிர்வீச்சுகள் குறைந்தது எட்டு நிலங்களையாவது மாசுபடுத்தியிருப்பதாக கருதப்படுகிறது. துப்பாக்கி சுடுபயிற்சித் தளங்களில் அநேகம் பயங்கரமான வெடிக்காத குண்டுகளினால் மாசுபடுத்தப்பட்டிருக்கின்றன. 1918-ல் சரிவர அகற்றப்படாத நச்சாவி திரவம் அடங்கியுள்ள முதல் உலகப்போரின் குண்டுகளால் குறைந்தது ஒரு நிலமாவது மாசுபடுத்தப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

விலங்குகளுக்கு போக்குவரத்து விளக்குகளா?

விலங்குகள் நெடுஞ்சாலைகளைக் கடந்து செல்வது வாகனம் ஓட்டுபவர்களுக்கும் விலங்குகளுக்கும் வெகு காலமாகவே மிகுந்த ஆபத்தாக இருந்துவந்திருக்கிறது. இரவு நேரத்தில் காடுகளில் உள்ள சாலைகளைக் கடக்கும் விலங்குகளால் ஏற்படுத்தப்படும் எண்ணற்ற விபத்துகளின் விளைவாக, பிரெஞ்சு தேசிய வனத்துறை அலுவலகங்களின் டெக்னீஷியன்கள் ஆச்சரியப்படுத்தும் கண்டுபிடிப்பு ஒன்றை வெளிப்படுத்தியிருக்கின்றனர் என்பதாக பிரெஞ்சு நாட்டு இயற்கை பத்திரிகையாகிய டெர் சோவாஷ் அறிவிக்கிறது. விலங்குகள் சிகப்பு விளக்கைக் கண்டு நிற்கின்றன! சிகப்பு விளக்கின் அதிர்வெண் விலங்குகளைத் தற்காலிகமாக செயலற்றுப்போகச் செய்யும் விளைவை உடையதாக பரிசோதனைகள் காண்பித்திருக்கின்றன. பிரான்ஸில் காட்டுச் சாலைகளின் நெடுகே, வந்துகொண்டிருக்கும் வாகனங்களின் ஹெட்லைட்டுகளில் இருந்து வரும் சிகப்பொளியைப் பெற்று பிரதிபலிக்கும் பரப்புகளை (reflectors) நிறுத்தி வைத்திருக்கின்றனர். ஆனால் இவை ஒளியைத் திரும்பவும் வாகனத்தை ஓட்டிவருபவரை நோக்கியே பிரதிபலிக்காமல் ஒளியைக் காட்டுக்குள் திருப்பிவிடுகின்றன. சாலைக்குத் துள்ளி குதித்து ஓடுவதற்கு முன்பு அவை இப்போது அந்த வெளிச்சம் மறையும்வரை காத்திருக்கின்றன.

ருமேனிய எய்ட்ஸ் அனாதைகள்

ருமேனியாவில், எய்ட்ஸுக்கு வழி நடத்தும் HIV தொற்று உள்ள அனைத்து நோயாளிகளிலும் 93 சதவீதத்தினர் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் மத்தியில் இருக்கின்றனர் என்பதாக எழுதுகிறார் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர் ரோக்ஸானா டாஸ்காலு. ஐரோப்பாவில் HIV பாஸிடிவ் உள்ள பிள்ளைகள் துறைமுக நகரமாகிய கான்ஸ்டன்டாவில்தான் மிக அதிகமாக இருக்கின்றனர். இங்கு இத்தகைய 1,200 பிள்ளைகள் இருந்துவந்திருக்கின்றனர், இவர்களில் ஏற்கெனவே 420 பேர் இறந்துவிட்டனர். இப்பிள்ளைகளில் பாதிபேர், 1989-ல் பழைய ஆட்சி கவிழ்ந்ததற்குமுன், ரத்தமேற்றுதலினாலும் கிருமிகள் நீக்கப்படாத ஊசிகளினாலும் பாதிக்கப்பட்டனர் என்பதாக தெரிவிக்கப்படுகிறது. வறுமையில் உழன்ற மாலுமிகளால் விற்கப்பட்ட, எய்ட்ஸினால் கறைபடுத்தப்பட்ட ரத்தத்தின் பெரும்பகுதி நேரடியாக மருத்துவமனைகளுக்கும் அனாதை இல்லங்களுக்கும் சென்றது. HIV-யால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளைப் பேணும் காப்பகத்தில் வெற்றியானது, “பிழைப்பு வீதத்தை வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை, ஆனால் பிள்ளைகள் தங்களுடைய இறுதிநாட்களை எப்படி கழிக்கின்றனர், அவர்கள் மரணத்தை எப்படி எதிர்ப்படுகின்றனர் என்பதை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது,” என்பதாக இந்த அறிக்கை சொல்லுகிறது. இந்தக் காப்பகத்தின் பணியாளர் ஒருவர் சொன்னதாவது: “பிள்ளைகள் படுக்கையில் தனியே இருந்து இறக்கும்படி நாங்கள் விட்டு வைப்பதில்லை. ஒரு நர்ஸ் அவர்களை தன்னுடைய கரங்களில் எடுத்து வைத்துக்கொண்டு, இந்தச் சாய்ந்தாடும் நாற்காலியில் உட்கார்ந்து சாய்ந்தாடுகிறாள்.”

மலட்டுத் தம்பதிகளுக்கு புது நம்பிக்கையா?

கருவுரும் திறமை இல்லாத தம்பதிகளுக்கு ஒரு புதிய மருத்துவ முறை தங்களுடைய மலட்டுத்தன்மையை மேற்கொள்ள உதவுகிறது என்பதாக ஃப்ரான்ஸ்-ப்ரெஸ் என்ற பிரெஞ்சு செய்தி நிறுவனம் அறிவிக்கிறது. டென்மார்க்கில் முன்னோடியாக கையாளப்பட்ட இம்முறையானது, மிகமிக மெல்லிய கண்ணாடி ஊசியானது ஒரேவொரு ஆண் விந்துவை பெண்ணுக்குள் இருக்கும் ஒரு முட்டையின் மேல் வைப்பதை உட்படுத்துகிறது. இந்த முறை மிகமிக கவனமாக செய்யப்படவேண்டிய ஒன்றாகவும், அதிக திறமையை அவசியப்படுத்துவதாகவும் (ஒரு விந்து ஒரு மில்லிமீட்டரின் ஆயிரத்தில் இரண்டு பாகமும், ஒரு முட்டை ஒரு மில்லிமீட்டரில் பத்திலொரு பாகமாகவும் இருக்கிறது), இருந்தபோதிலும் இது வெற்றிகரமான ஒன்றாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. முன்பின் தெரியாத யாரோ ஒருவருடைய விந்துவைவிட பெண்ணின் சொந்த கணவனுடைய விந்தை உபயோகித்து, பெண்ணின் உடலிற்குள்ளேயே நடைபெறும் கூடுதலான அனுகூலத்தை இது பெற்றிருக்கிறது. இவ்வாறு உணர்ச்சியை மிகவும் எளிதில் கிளறிவிடும் தார்மீக மற்றும் மத சம்பந்தமான கேள்விகளைத் தவிர்க்கிறது. கருவுறும் திறமை இல்லாது இருக்கும் எல்லா தம்பதிகளிலும் மூன்றிலொரு பகுதியினருக்கு தரம் குறைந்த விந்துவே காரணமாக இருப்பதால், இந்த முறையைப் பயன்படுத்தும் ஒரு டாக்டர் அநேக தம்பதிகளுக்கு குடும்ப வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை அளிக்கலாம் என்று நம்புகிறார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்