உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 4/8 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யூனிட்டேரியன்கள் ஒத்தப்பாலின திருமணத்தை ஆதரிக்கின்றனர்
  • என்ன குழந்தை என முன்பே தீர்மானித்தல்
  • தீங்குண்டாக்கும் மழலைப் பேச்சு
  • நீர் தூய்மைக்கேட்டை கட்டுப்படுத்த சீனா நடவடிக்கை
  • “புனித” பயங்கரவாதிகள்
  • பறவைகளைக்காட்டிலும் பெரும் அபாயத்திலிருக்கும் பாலூட்டிகள்
  • வாசிப்புத் திட்டம் குற்றச்செயலைக் குறைக்கிறது
  • ஒலிம்பிக் விளையாட்டும் வறுமையும்
  • நீண்டநேர காபி இடைவேளைகள்
  • வெப்பமுண்டாக்கும் செடிகள்
  • இவான்ஜலிக்கல் சர்ச் தவறுகளுக்கு பொறுப்பேற்கிறது
  • அருகிவரும்—உயிரினங்கள் பிரச்சினையின்
    விழித்தெழு!—1996
  • தரமான காபி—செடியிலிருந்து கப் வரை
    விழித்தெழு!—1999
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1995
  • உலகை வலம் வந்த கொட்டை
    விழித்தெழு!—2006
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 4/8 பக். 28-29

உலகை கவனித்தல்

யூனிட்டேரியன்கள் ஒத்தப்பாலின திருமணத்தை ஆதரிக்கின்றனர்

ஒத்தப்பாலின திருமணங்களை அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கும் முதல் ஐமா மதப்பிரிவு யூனிட்டேரியன் சர்ச்சுதான் என க்ரிஸ்டியன் சென்ச்சுரி அறிக்கை செய்கிறது. “ஒருவருக்கொருவர் ஒப்புக்கொண்ட எந்த இரு நபர்களும் திருமணத்திற்கு தகுதியானவர்கள் என அறிவிப்பதற்கு” அந்த மதப்பிரிவின் வருடாந்தர மாநாட்டிற்கு சென்றிருந்த பிரதிநிதிகள் முழு ஆதரவு அளித்தனர். அந்த மதப் பத்திரிகை இவ்வாறு சொல்கிறது: “சர்ச் சட்டங்களின்படி, அதன் 1,040 சபைகள் ஒவ்வொன்றும் ஒத்தபாலின திருமணத்தை ஆதரிக்குமா என்பதையும் அப்படிப்பட்ட திருமணங்களை நடத்திவைக்குமா என்பதையும் தானே முடிவுசெய்துகொள்ளலாம்.”

என்ன குழந்தை என முன்பே தீர்மானித்தல்

“தகப்பனின் விந்துவை வகைப்படி பிரிப்பதன் மூலம் குழந்தையின் பாலினத்தை முன்பே தீர்மானிக்க முடியும், ஏனென்றால் விந்துவின் வகை பாலினத்தை தீர்மானிக்கிறது,” என பாப்புலர் சைன்ஸ் என்ற பத்திரிகை சொல்கிறது. முதலில் விந்து ஃபுளாரஸன்ட் சாயத்தால் நிறமூட்டப்படுகிறது. பின், X (பெண்) விந்துவையும் Y (ஆண்) விந்துவையும் அடையாளங்காண லேசர் ஒளிக்கதிர் பாய்ச்சப்படுகிறது. கம்ப்யூட்டர் வித்தியாசத்தைக் கண்டுகொள்கிறது; ‘இரத்தப் பரிசோதனைக்காக பொதுவாக பயன்படுத்தப்படும்’ ஒரு கருவி ‘X விந்துக்கு பாஸிட்டிவ் சார்ஜ்ஜையும் (positive charge) Y விந்துக்கு நெகடிவ் சார்ஜ்ஜையும் (negative charge) அளிக்கிறது. பின் நேரெதிரான சார்ஜ் பெற்றுள்ள இணைப்புகள் பொருத்தப்பட்டு விந்து பிரிக்கப்படுகிறது.’ கால்நடை வளர்ப்பில் முதன்முதலில் இந்த முறையை அறிமுகப்படுத்திய அறிவியலாளரின்படி, இவ்வாறு பிரித்தெடுத்தல் சுமார் 90 சதவீதம் திருத்தமாக இருக்கிறது. அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் விந்து பெண் கருமுட்டைகளோடு சினைப்படுத்தப்படுகிறது; அதன்பின் “விரும்பப்படும் பாலின கருக்கள் கருப்பையில் புகுத்தப்படுகின்றன.” ஆனாலும் இதுவரை இந்த முறையில் ஒரேவொரு குழந்தைதான் பிறந்திருக்கிறது.

தீங்குண்டாக்கும் மழலைப் பேச்சு

மழலைகள் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் முதல் வார்த்தைகள் மதுரமானவை, அநேக பெற்றோர் அவற்றைக் கேட்டு தாங்களும் செல்லமாக அதேபோல் கொஞ்சலாக அவர்களிடம் பேசுகின்றனர். ஆனால் இது குழந்தையின் பேச்சு வளர்ச்சியைப் பாதிக்கலாம் என வேஜா பத்திரிகையில் பிரேஸில் நாட்டைச் சேர்ந்த எலியானி ரேஜினா கார்ராஸ்க்கூ என்ற பேச்சு நிபுணர் எழுதுகிறார். குழந்தையின் தவறான உச்சரிப்புகளையே பெற்றோர் திரும்பச் சொன்னால், அது “குறையுள்ள பேச்சை இன்னும் ஊக்குவிப்பதாய் அமையும்” என கார்ராஸ்க்கூ சொல்கிறார். இது அநேக பேச்சுக் கோளாறுகளை உண்டுபண்ணலாம் என்பதாக அவர் சொல்கிறார். பிள்ளையின் சமூக உறவுகளையும்கூட இது பாதிக்கலாம் என்பதாகவும் அவர் சொல்கிறார். “பெரும்பாலும், அப்படிப்பட்ட பிள்ளைகள் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பார்கள், பயந்த சுபாவத்துடன் இருப்பார்கள், பாதுகாப்பற்று உணருவார்கள், [பரிகாசத்திற்கு] ஆளாக வேண்டிய சூழ்நிலைகளை எப்போதும் தவிர்ப்பார்கள்.” சிறு குழந்தைகள் வார்த்தைகளை தவறாக உச்சரிப்பது சகஜம், ஆகவே உடனடியாக அவர்களைத் திருத்த வேண்டியதில்லை என கார்ராஸ்க்கூ குறிப்பிடுகிறார். ஆனால் அவர்களிடம் சரியாக பேசுவதும், “அவர்கள் புத்திசாலிகள், கற்றுக்கொள்வதற்கான திறமை உள்ளவர்கள்” என்பவற்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுவதும் முக்கியம்.

நீர் தூய்மைக்கேட்டை கட்டுப்படுத்த சீனா நடவடிக்கை

“நீர் தூய்மைக்கேடு சீனாவின் மிகப் பெரிய பிரச்சினை, அதைக் கட்டுப்படுத்துவதற்கு அவசரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சீனாவின் சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்ஸியின் பேச்சாளர் சொல்கிறார். சீனாவில் ஏற்கெனவே படுமோசமாக மாசுபடுத்தப்பட்டுள்ள ஆறுகளையும் ஏரிகளையும் மேலும் தூய்மைக்கேடாக்காதபடி பாதுகாக்க சீன அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறதென்பதாக இன்றைய சீனா என்ற ஆங்கிலப் பத்திரிகை அறிக்கை செய்கிறது. உதாரணத்திற்கு, அந்நாட்டிலேயே படுமோசமாக மாசுபடுத்தப்பட்டிருக்கும் ஆறுகளில் ஒன்றான ஹூயை ஆற்றில் கழிவுகள் கலக்கப்படுவதைக் கட்டுப்படுத்த, அந்த அரசாங்கம் “அப்பள்ளத்தாக்கிலுள்ள 999 சிறிய காகித-உற்பத்தித் தொழிற்சாலைகளை மூடிவிட்டது.” சீனாவிலேயே பெரியளவில் தானியமும் மின்னாற்றலும் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் ஒன்றான ஹூயையே பள்ளத்தாக்கில் ஏறக்குறைய 15.4 கோடி மக்கள் வாழ்கின்றனர்.

“புனித” பயங்கரவாதிகள்

“தேசிய சர்ச்சாக தன்னையே நிலைநாட்டிக்கொள்ள” முயற்சி எடுப்பதாய், ருமேனிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் “மற்ற பிரிவுகளை குற்றம்சாட்டி அவற்றிற்கெதிராக தீங்குண்டாக்கும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தது” என்பதாக காம்ப்பஸ் டைரக்ட் என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் வில்லி ஃபோட்ரே குறிப்பிடுகிறார். அவர் மேலும் சொல்வதாவது: “ருமேனியாவிலுள்ள ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை சேர்ந்த உயர் பதவியிலுள்ள தலைவர்களும் உள்ளூர் பாதிரிமார்களும் சிறுபான்மை மதத் தொகுதியினரை அச்சுறுத்தி அவர்களது அடிப்படை மத உரிமைகளை பறிப்பதற்கு” அநேக கோஷ்டிகளை தயார் செய்திருக்கிறார்கள். ரேடியோவில் மத போதனையளிக்கும் இவான்ஜலிக்கல் மதப்பிரிவினரை “எங்கள் முற்பிதாக்களின் விசுவாசத்தைக் கறைபடுத்துவோர்” என அழைத்து, சூச்சாவா மற்றும் ராடெயூட்ஸ் பட்டணங்களின் தலைமை குரு ருமேனியாவிலுள்ள ரேடியோ மற்றும் தொலைக்காட்சி ஒலிபரப்புகளை மேற்பார்வையிடும் குழுவின் பிரெஸிடென்ட்டிற்கு இவ்வாறு எழுதினார்: “உங்களைக் கையெடுத்து கும்பிடுகிறோம், அவர்களை தடை பண்ணுங்கள் அல்லது அவர்களது நடவடிக்கைகளையாவது கட்டுப்படுத்துங்கள்; ஏனென்றால் அவர்கள் வெட்கங்கெட்டவர்கள், நமது சொந்த நாட்டிலேயே வெளிப்படையாக மதமாற்றம் செய்வதில் இறங்கியிருக்கின்றனர்.”

பறவைகளைக்காட்டிலும் பெரும் அபாயத்திலிருக்கும் பாலூட்டிகள்

“அழிந்துபோவதில் பறவைகளைக் காட்டிலும் பாலூட்டிகளே அதிக அபாயத்தில் இருக்கின்றன” என்பதாக நியூ ஸைன்டிஸ்ட் என்ற பத்திரிகை அறிக்கை செய்கிறது. அழிந்துவரும் உயிரினங்களைப் பற்றி உலகப் பாதுகாப்பு யூனியன் வெளியிட்டுள்ள பட்டியலை அடிப்படையாகக்கொண்ட இந்தக் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துவது இதைத்தான்: உலகளாவிய விதத்தில் பறவை இனங்களில் 11 சதவீதம் அழிந்துவருகின்றன, பாலூட்டி இனங்களில் 25 சதவீதம் இப்போது அழியும் அபாயத்திலிருக்கின்றன. பிரைமேட்ஸ் இனம்தான் மிகவும் அபாயத்தில் இருக்கிறது, இந்த இனத்தில் 46 சதவீதம் அழிந்துவரும் தறுவாயிலிருக்கிறது. அடுத்து பட்டியலில் வருவது 36 சதவீதம் அழிந்துவரும் பூச்சியுண்ணிகள், அதன்பின் வருபவை 33 சதவீதம் அழிந்துவரும் பன்றிகளும் மான்களும். பறவையினங்களில் அதிகம் அழிந்துவருவது கொக்கு; இது 26 சதவீதம் அழிந்துவருகிறது. பாலூட்டிகள் அதிகமாக அழிந்துவருவதற்கு ஒரு காரணம், அவற்றின் வாழ்விடம் மறைந்துபோகையில் பறவைகளைப்போல் சுலபமாக வேறொரு இடத்திற்கு அவற்றால் செல்ல முடியாததே.

வாசிப்புத் திட்டம் குற்றச்செயலைக் குறைக்கிறது

இங்கிலாந்திலுள்ள ப்ராட்ஃபர்ட்டில் பள்ளிச் சிறுவர்களது வாசிக்கும் திறனை முன்னேற்றுவிப்பதற்கு அரசாங்க நிதியுதவியால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் வெற்றிகரமான விளைவுகளைக் கொண்டிருக்கிறது என்பதாக தி இன்டிப்பென்டென்ட் என்ற பிரிட்டிஷ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. இந்த வாசிப்புத் திட்டம் வெறுமனே வாசிக்கும் திறமைகளை முன்னேற்றுவிப்பதற்கு மாத்திரமல்லாமல் குற்றச்செயலைக் குறைக்க உதவிவருவதற்காகவும் நற்பெயர் எடுத்திருக்கிறது! “கன்னமிட்டுத்திருடும் பிள்ளைகளது எண்ணிக்கைக்கும் பள்ளிக்கு மட்டம்போடும் பிள்ளைகளது எண்ணிக்கைக்கும் நேரடியான சம்பந்தம் இருக்கிறது” என மேம்பட்ட வாசிப்பு கூட்டுச்செயல்பாட்டின் தலைவரான ஜான் வாட்ஸன் சொல்கிறார். “பிள்ளைகளுக்கு வாசிக்கத் தெரிந்தால் அவர்கள் பள்ளியில் என்ன நடக்கிறதென்பதில் பெரும்பாலும் ஆர்வமுள்ளவர்களாய் இருப்பார்கள், மட்டம்போடவும் மாட்டார்கள். இப்படியாக அவர்கள் தெருக்களுக்கு வராததால் கன்னமிட்டுத் திருடவும் மாட்டார்கள்.”

ஒலிம்பிக் விளையாட்டும் வறுமையும்

“ஒலிம்பிக் விளையாட்டுகளில் சில நாடுகள் வென்றிருக்கும் பதக்கங்களின் எண்ணிக்கையும், விளையாட்டு வசதிகளுக்காக மற்றும் கம்பெனி நிதி ஆதரவுகளுக்காக முதலீடு செய்யப்பட்ட மொத்த தொகையும், வறுமையை ஒழிப்பதற்கு உலகத்திற்கு இருக்கும் பொறுப்பைப் பற்றி சந்தேகங்களை எழுப்புகின்றன” என ஸ்விட்ஸர்லாந்தின் இஎன்ஐ புல்லட்டின் அறிக்கை செய்கிறது. “இது, மனிதத் திறமை மற்றும் சகிப்புத்தன்மையின் சிறப்பை விளம்பரப்படுத்தவோ அவற்றின் அபூர்வ செய்கைகளை பாராட்டவோ கூடாது என்பதை அர்த்தப்படுத்துவதில்லை” என ஆஸ்திரேலியாவின் உவர்ல்ட் விஷன் ஏஜென்ஸியைச் சேர்ந்த க்ரெக் ஃபுட் சொல்கிறார். “ஆனாலும் நாம் சமநிலையோடுதான் செயல்படுகிறோமா என்பதையும் கேட்டுக்கொள்ள வேண்டும், ஏனென்றால் கோடிக்கணக்கான நமது அயலார் போதிய உணவில்லாமல் ஒடிந்து விழுந்துவிடுவதுபோல இருக்கையில் உயர்வாகக் கருதப்படும் விளையாட்டுவீரர்களுக்கு நாம் சத்துள்ள உணவளிக்க அந்தளவுக்கு செலவிடுகிறோம்” என அவர் சொல்கிறார். அட்லாண்டாவில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் நடைபெற்ற அந்த இரு வாரங்களின்போது பசியாலும் தடுக்க முடிந்த வியாதிகளாலும் உலகம் முழுவதும் 4,90,000 பிள்ளைகள் இறந்தனர் என்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

நீண்டநேர காபி இடைவேளைகள்

வேலைபார்க்கும் சிலர் 10 மணி வாக்கில் காபி அருந்துவதற்கென்றே எழுந்து செல்கின்றனர். சொல்லப்போனால், அநேகர் வேலைபார்க்கும் இடத்தைவிட்டு வேறெங்காவது செல்கின்றனர். காபிக் கடைகள், காபி சுவையில் கரைகண்டவர்களது விருப்பத்திற்கேற்ப காபி தயாரித்துத் தருவதால், வேலையாட்கள் தங்கள் பிரியத்தின்படி ஸ்ட்ராங்காக காபி அருந்த ஆபீஸைவிட்டு தலைதெறிக்க ஓடுகின்றனர். அதன் காரணமாக, “காபிக்கான இடைவேளை என்ற சாக்கில் காப்பிக்காக வேலைக்கு டிமிக்கி கொடுப்பதுதான் நடக்கிறது,” என தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சொல்கிறது. ஆனால் முதலாளிகளோ அப்பகுதியிலுள்ள காபிக் கடைகளுக்கு சாவகாசமாக சென்றுவர செலவிடப்படும் நேரத்தைக் குறித்து கவலைப்படுகின்றனர். இவ்வாறு காபிக்காக வேலைக்கு டிமிக்கி கொடுப்போரது எண்ணிக்கையை குறைப்பதற்காக சில ஆபீஸுகள் இன்ஸ்டன்ட் காபி இயந்திரங்களை அங்கேயே வைத்துவிடுவதன் மூலம் அப்பழக்கத்தை மட்டுப்படுத்துகின்றன என ஜர்னல் பத்திரிகை சொல்கிறது.

வெப்பமுண்டாக்கும் செடிகள்

தாமரைப் பூக்களுக்கு அவற்றின் சொந்த வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திறன் இருப்பதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். இதற்குமுன், வெப்ப-இரத்தமுள்ள மிருகங்கள் மாத்திரமே இந்தத் திறனைப் பெற்றிருப்பதாக எண்ணப்பட்டது. அடிலெய்ட் தாவரவியல் தோட்டத்தில் வேலைசெய்யும் டாக்டர் ராஜர் சேமோரும் டாக்டர் பால் ஷுல்ட்ஸ்-மோட்டெலும், மலரும் தாமரைப் பூக்களது வெப்பத்தையும் அவற்றின் மற்ற பண்புகளையும் பதிவுசெய்வதற்காக அவற்றில் கருவிகளைப் பொருத்தினர். அவர்கள் எதைக் கண்டுபிடித்தார்கள்? காற்றின் வெப்பநிலை 50 டிகிரிக்கு குறைந்தபோதும் தாமரைப் பூவின் வெப்பநிலை 86-லிருந்து 95 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவே இருந்தது. இந்தக் காரியத்தை இன்னும் ஆராய்ச்சியாளர்களால் விளக்க முடியவில்லை. எனினும், த நியூ யார்க் டைம்ஸ்-ன்படி, அ.ஐ.மா.-விலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தாவர உயிர்வேதியியல் வல்லுநராக பணியாற்றும் டாக்டர் ஹான்னா ஸ்கூபாட்ஸ் இவ்வாறு சொன்னார்: “வெப்ப-உற்பத்தி உண்மையில் அநேக தாவரங்களில் நடைபெறுவதாய் இருக்கலாம், ஆனால் அதைக் கண்டுபிடிப்பதுதான் கடினம்.”

இவான்ஜலிக்கல் சர்ச் தவறுகளுக்கு பொறுப்பேற்கிறது

“இன்றுள்ள இவான்ஜலிக்கல் மதப்பிரிவு பைபிளுக்கான உண்மைப் பற்றுறுதியையும் ஒழுக்க தராதரத்தையும் மிஷனரி வைராக்கியத்தையும் இழந்துவருகிறது” என்பதாக “பாவ அறிக்கை செய்யும் இவான்ஜலிக்கல் பிரிவினரது ஒப்பந்தத்தின் கேம்ப்ரிட்ஜ் அறிவிப்பு” என்ற பெயர்கொண்ட ஆவணம் குறிப்பிடுகிறது. இந்தக் கடுமையான குறைகூறுதல் எங்கிருந்து வந்தது? போட்டியிடும் மற்றொரு சர்ச் பிரிவிலிருந்தா? இல்லை, இது இவான்ஜலிக்கல் பிரிவினரிடமிருந்தேதான் வந்தது. கேம்ப்ரிட்ஜிலுள்ள மாஸச்சூஸட்ஸில் சமீபத்தில் ஒன்றுகூடிய 100-க்கும் அதிகமான இவான்ஜலிக்கல் தலைவர்களால் அந்த ஆவணம் வெளியிடப்பட்டது. அந்த ஆவணத்தை எழுதியோர், தாங்களும் மதத் தலைவர்களும் “புகழ்பெற்ற கலாச்சார நடத்தை தங்கள்மீது செல்வாக்குசெலுத்த அனுமதிப்பதற்கு வருந்தி மனந்திரும்ப” வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டனர். “சர்ச்சுக்கு எது தேவைப்படுகிறது, அது எப்படி செயல்படுகிறது, அது எதை அளிக்கிறது என்பவற்றின் பேரில் கடவுளுடைய வார்த்தையைக்காட்டிலும் அதிக செல்வாக்கு செலுத்துபவை, மருத்துவ சிகிச்சை முறைகளும், வணிக தந்திரங்களும், பொழுதுபோக்கு உலகமும்தான்” என்பதாகவும் அந்த ஆவணம் ஒப்புக்கொண்டது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்