தரமான காபி—செடியிலிருந்து கப் வரை
பிரேஸிலிலிருந்து விழித்தெழு! நிருபர்
பின்லாந்து நாட்டவருக்கு அது தேசிய பானம். இத்தாலியர்களுக்கு அதைத் தயாரிப்பது ஏதோ பெரிய வேலை செய்வது போல. பிரான்ஸ், ஜெர்மனி, மெக்ஸிகோ, ஐக்கிய மாகாணங்கள், இன்னும் பிற இடங்களில் அது இல்லாமல் காலை உணவே இல்லை. உலகிலேயே அதுதான் டீ-க்கு அடுத்தபடியாக அனைவரும் விரும்பி அருந்தும் பானம். அது என்ன? உலகமுழுவதிலும் மூன்றில் ஒரு பங்கு ஜனம் அதன் பிரியர்களாக இருப்பதிலிருந்து தெரிகிறது—அதுதான் காபி!
உங்களுடைய ரசனை எப்படியோ, தெரியவில்லை. ஆனால் காபியின் புகழ்மணம் எங்கும் வீசத்தான் செய்கிறது. அதுசரி, தரமான காபியைத் தயாரிக்க என்னவெல்லாம் அவசியம்? அது எங்கு பயிராகிறது? அது எப்படி தயாரிக்கப்படுகிறது? காபி ரகங்களுக்கிடையே ரொம்ப வித்தியாசம் இருப்பதெல்லாம் நிஜம்தானா? அதன் தரம், மணம், விலை இவற்றை நிர்ணயிப்பது எது?
எங்கிருந்து வருகிறது?
காபி செடியிலிருந்து கிடைக்கும் கொட்டைகளை வறுத்து பொடித்து நீங்கள் குடிக்கும் காபி தயாரிக்கப்படுகிறது. இது பசுமைமாறா புதர்ச்செடி வகையில் பெரியது. இவற்றின் இலைகள் பளபளப்பாகவும் கரும்பச்சை நிறத்திலும் இருக்கும். இது மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் வளர்கிறது. பூப்புப் பருவத்தில், செடிக்கு வெண்ணிற போர்வையை மூடிவிட்டாற்போல் காட்சியளிக்கும். அதிலிருந்து மயக்கும் மல்லிகை மணமும் வீசும். ஓரிரு நாட்களுக்குப் பிறகு பார்த்தால், பூக்கள் இருந்த இடத்திலெல்லாம் செர்ரிப்பழம் போன்ற பழங்கள் பச்சை நிறத்தில் கொத்துக்கொத்தாய்க் காணப்படும். இவை மெல்ல மெல்ல பெரிதாகும். அப்போது இவை தினுசுதினுசான பச்சை நிறத்திலிருந்து பொன்னிறம் கலந்த பிரெளன் நிறத்திற்கு மாறும். அதற்குப் பிறகு சிவப்பாகவோ மஞ்சளாகவோ மெருகேறி கடைசியில் கனிந்த பழமாகும்.
குட்டையான புதர்ச்செடிகள் முதல் 12 மீட்டர் உயர மரங்கள் வரை காபி செடிகளில் கிட்டத்தட்ட 70 இனங்கள் உள்ளன. இருந்தாலும், உலகில் உற்பத்தி செய்யப்படும் 98 சதவிகித காபி, பின்வரும் இந்த இரண்டு இனங்களிலிருந்துதான் கிடைக்கிறது. இவை, காஃபியா அரேபிகா அல்லது வெறுமனே அரேபிகா என்பதும், காஃபியா கேனிஃபோரா அல்லது ரோபஸ்டா என்பதுமே. நயமான காபி வகைகள், விசேஷமாக உயரமான மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படும் அரேபிகா இனங்களிலிருந்து பெறப்படுகின்றன. இவ்வாறு விளைவிக்கப்படும் மரங்கள் நான்கு முதல் ஆறு மீட்டர் உயரம் வரை வளரும். என்றாலும் இவை பொதுவாக நான்கு மீட்டர் உயரம் இருக்கும்படியாக கத்தரிக்கப்படும். ரோபஸ்டா இனம் பெரும்பாலும் இன்ஸ்டன்ட் காபிக்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் கேஃபின் அளவு அதிகமாய் இருக்கும். பகுத்துப் பிரிக்க முடியாதபடி ஒரே மாதிரி சுவையுடையவை.
தரமான காபி சாகுபடி
தரமான காபியை உற்பத்தி செய்வது எப்படி? ஒரு வார்த்தையில் சொன்னால், உழைப்புதான்! முதலில் பிரத்தியேகமாக இனவிருத்தி செய்யப்பட்ட கொட்டைகளை நர்சரியில் விதைக்கின்றனர். செடிக்குத் தேவையான அளவு வெயிலும் நிழலும் கிடைக்கும்படி பார்த்துக்கொள்கின்றனர். சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, நாற்றுகளைப் பிடுங்கி வயலில் நடுகின்றனர். உரத்தையும் தாதுப்பொருட்களையும் போட்டு அந்த வயலின் மண்ணை முன்கூட்டியே வளப்படுத்துகின்றனர். காபி நாற்றுக்களை மலைச்சரிவின் விளிம்புப்பகுதிகளில் வரிசை வரிசையாக நடுகின்றனர். காபி நாற்றுகள் பெரிதாக வளருகையில் ஒன்றையொன்று நெருக்காமல் இருப்பதற்காகவும் செடிகளையும் மண்ணையும் பராமரிப்பதற்காகவும் அறுவடை சமயத்தில் வசதியாக இருப்பதற்காகவும் இடைவெளி விட்டு நடப்படுகின்றன.
நல்ல மகசூலைப் பெற, வருடமுழுவதும் செடியை பக்குவமாய் பராமரிக்க வேண்டும். அதாவது, மண்ணிலிருந்து செடிக்குச் செல்ல வேண்டிய சத்துக்களை உறிஞ்சிவிடும் களைகளைப் பிடுங்க வேண்டும், விதைத் துளைப்பான் போன்ற பூச்சிகளுக்கும் துருநோய் போன்ற நோய்களுக்கும் எதிராக செடியைப் பாதுகாப்பதற்காக, பூச்சிக்கொல்லிகளையும் காளான் கொல்லிகளையும் தவறாமல் அடிக்க வேண்டும்.
இளஞ்செடிகள் பலன்தர குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் எடுக்கும். அறுப்புக்காலம் வந்துவிட்டால், வேலை தலைக்குமேல் இருக்கும். நன்றாகப் பழுத்த செர்ரி பழங்களை மட்டும் கையால் ஒவ்வொன்றாக பறிப்பதே நடைமுறையில் மிகச் சிறந்த முறையென நம்பப்படுகிறது. கொலம்பியாவிலும் கோஸ்டா ரிகாவிலும் இம்முறைதான் பின்பற்றப்படுகிறது.
இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட செர்ரி பழங்கள் ஈர முறை என்றழைக்கப்படும் முறையில் பொதுவாக பக்குவப்படுத்தப்படுகின்றன. இம்முறையில், செர்ரி பழங்கள் பிசையும் இயந்திரத்தில் போடப்படுகின்றன. இதனால் பெரும்பாலான பழங்களிலிருந்து கொட்டைகள் பிரிந்துவிடுகின்றன. அந்தக் கொட்டைகள் பெரிய தொட்டிகளில் ஒன்று முதல் மூன்று நாட்கள் போட்டுவைக்கப்படுகின்றன. அதற்குள்ளாக அவை புளிப்பேறுவதாலும், அவற்றிலுள்ள இயற்கை நொதிகளாலும், மிச்சமீதியான சதைப்பற்றிலிருந்தும் கொட்டைகள் பிரிந்துவிடுகின்றன. இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் பழக்கூழிலிருந்து கொட்டைகளை சுத்தம் செய்வதற்காக அவை கழுவப்படுகின்றன. அதன்பிறகு அவற்றில் சில, சிமெண்ட் தரையில் பரப்பி வெயிலிலோ, உலரவைக்கும் மேஜைகளிலோ உலர்த்தப்படுகின்றன. வேறு சில, சூடான காற்றைச் செலுத்தும் உலர்த்திகளின் மூலம் உலர்த்தப்படுகின்றன. கொட்டையைச் சுற்றியுள்ள காய்ந்த தோல் அடுக்குகளான வெள்ளித் தோலும் பார்ச்மென்ட் தோலும் இயந்திரத்தினால் பிரித்தெடுக்கப்படுகின்றன. ஈர முறைப்படி கொட்டையைப் பிரித்தெடுக்கும்போது புளிப்பேறுவதாலும், நன்கு பழுத்த பழங்களை மட்டுமே பயன்படுத்துவதாலும் இதமான ஏ ஒன் காபி உருவாகிறது.
உலகிலேயே அதிகளவில் காபி சாகுபடி செய்யப்படும் பிரேஸிலில், பெரும்பாலான சாகுபடியாளர்கள் டெரீஸா என்ற அறுவடை முறையைப் பின்பற்றுகின்றனர். இம்முறையில், ஒரே சமயத்தில் எல்லா பழங்களும், அவை அரைகுறையாகவோ அல்லது முழுமையாகவோ எப்படி பழுத்திருந்தாலும் சரி, கையால் பறிக்கப்படுகின்றன. நவீன காலங்களில், இயந்திரமயமாக்கப்பட்ட அல்லது பாதிக்குப்பாதி இயந்திரமயமாக்கப்பட்ட அறுவடை முறைகளைப் பயன்படுத்துகின்றனர். அப்போதுதான் தரத்தை உயர்த்த முடியும், விளைச்சலையும் பெருக்க முடியும். நீண்ட கையையும், அதன் முனையில் “விரல்களையும்” உடைய காற்றழுத்தக் கருவியை பயன்படுத்தி, காபி செடியின் கிளைகளை உலுக்குவதும் ஒரு முறையாகும். இதனால் நன்றாக பழுத்த பழம் மட்டுமே கீழே விழும்.
அவ்வாறு விழுந்த செர்ரி பழங்கள், கையாலோ இயந்திரத்தாலோ சேகரிக்கப்பட்டு, சலிக்கப்படுகின்றன. இவ்வாறு செய்வதால் இலை, தூசி, குச்சி எதுவுமின்றி பழங்கள் சுத்தமாகின்றன. பிறகு அவை 60 லிட்டர் கொள்ளளவுள்ள பெரிய கூடைகளில் இடப்படுகின்றன. சலிக்கப்பட்ட செர்ரி பழங்கள் சிமெண்ட் தொட்டியிலோ, இதற்காகவே வடிவமைக்கப்பட்ட இயந்திரத்திலோ கழுவப்படுகின்றன. இவ்வாறு கழுவுவதால், அழுகிப்போய் காய்ந்த பழங்களிலிருந்து, பக்குவமாய் பழுத்த பழங்களைப் பிரிக்க முடிகிறது.
கழுவியதும், அவற்றை பெரிய சிமெண்ட் தரையில் பரப்பி 15 முதல் 20 நாட்கள் வெயிலில் காயவைக்கின்றனர். சீராக காய்வதற்காக சுமார் 20 நிமிடத்திற்கு ஒரு தடவை கிண்டிவிடுகின்றனர். சிலசமயங்களில் சீக்கிரம் காயவைப்பதற்காக மெஷினைப் பயன்படுத்தி உலர்த்துகின்றனர். ரொம்பவும் காய்ந்துவிடாதிருப்பதற்காக அதன் ஈரப்பசையை கண்காணிக்கின்றனர். இல்லாவிட்டால் கொட்டைகள் எளிதில் உடையும் தன்மைபெற்று நொறுங்கிவிடும்; இதனால் அவற்றின் மதிப்பு குறையும். எதிர்பார்க்கப்படும் 11 அல்லது 12 சதவீத ஈரப்பசை வந்ததும், காபி கொட்டைகள் மெஷினில் இடப்பட்டு அவற்றின் தோல் உரிக்கப்படுகின்றன. இப்போது 60 கிலோ பிடிக்கும் சாக்குப் பைகளில் மூட்டை மூட்டையாக கட்டப்படுகின்றன. இவ்வாறு கட்டப்பட்ட மூட்டைகள் விற்பனைக் கிடங்குகளுக்கு வழக்கமாக அனுப்பப்படுகின்றன. அங்குதான் அவற்றின் ரகம் பிரிக்கப்படுகிறது.
ரகம் பிரித்தல்
விற்பனைக் கிடங்கில், லாரிகளிலிருந்து மூட்டைகளை ஒவ்வொன்றாக இறக்குகின்றனர். மூட்டையை பணியாளர்கள் அடுக்குவதற்கு முன்பு, ஒருவர் ஒரு பெரிய ஊசியால் குத்தி, ஒவ்வொரு சாக்கிலிருந்தும் கொஞ்சம் சாம்பிள் கொட்டைகளை சேகரித்து வைப்பார். ஒரே லாரியிலிருந்து இறக்கிய எல்லா மூட்டைகளிலிருந்தும் எடுத்த கொட்டைகளை ஒன்றுசேர்த்து ஒரே சாம்பிளாக்கி, லேபிள் இட்டு இன்ன ரகம் என்று பிரிக்கின்றனர்.
சாம்பிளை எடுத்தபிறகு, வெவ்வேறு லாரிகளிலிருந்து இறக்கிய கொட்டைகளையெல்லாம் ஒன்றுசேர்த்து அதன் தரத்தை உயர்த்த இன்னும் ஏதேதோ செய்ய வேண்டியுள்ளது. முதலில் காபி கொட்டைகளை ஒரு மெஷினில் கொட்டுகின்றனர். அது தூசி துப்பட்டைகளை நீக்கிவிடும். அடுத்து அவற்றை இயந்திர சல்லடை வழியாக செலுத்தி சலிக்கின்றனர். இது, கொட்டையை அதன் அளவுப்படி பிரிக்கிறது. பிறகு அதிர்ந்துகொண்டே இருக்கும் மேஜையின் வழியாக அனுப்புகின்றனர். அதுவோ, காபி கொட்டையை அதன் எடைக்குத் தக்கவாறு பிரிக்கிறது. அதன்பிறகு, எலக்ட்ரானிக் முறைப்படி இயங்கும், பிரித்தெடுக்கும் கருவிக்கு கொட்டைகள் அனுப்பப்படுகின்றன. இந்தக் கருவி, பானமாக தயாரிக்கப்படும் காபியின் மணத்தைக் கெடுக்கும் கறுப்பு அல்லது பச்சைநிற கொட்டைகள் ஏதாவது இருந்தால் அவற்றை நீக்கிவிடும். மீதமானவை சேகரிப்புக் கிடங்குக்கு அனுப்பப்பட்டு, பிறகு பைகளில் கொட்டப்படும். பைகளிலுள்ள கொட்டைகள் ஒரே அளவானவை, ஒரே தரமானவை. இவை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் ஏஜெண்ட்டுகளிடமோ உள்ளூரிலேயோ விற்குமளவுக்கு இப்போது தயார்.
சரி, முதன்முதலில் எடுக்கப்பட்ட சாம்பிள் எதற்கு? அந்த சாம்பிளின் ரகத்தை வைத்துத்தான், எந்த எஸ்டேட்காரர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிப்பார்கள். முதலில், சாம்பிள்களை வகை வகையாக பிரிக்கின்றனர். அதாவது 300 கிராம் சாம்பிளில் எவ்வளவு குறைகள் உள்ளனவோ அதற்கேற்ப அந்த வகை, இன்ன ரகம் என பிரிக்கப்படும். அதாவது, கறுப்புநிற கொட்டைகள், பச்சைநிற கொட்டைகள், முறிந்த கொட்டைகள், உமி, குச்சிகள், கூழாங்கற்கள் போன்ற மாசுகள் இவையெல்லாம் எந்தளவுக்கு இருக்கிறதோ அந்தளவுக்கு குறைபாடு இருப்பதாக நிர்ணயிக்கப்படுகிறது. அடுத்து, கொட்டைகளை அதனதன் அளவுக்கு ஏற்றாற்போல் பிரிக்கப்படும்படி வெவ்வேறு சல்லடைகளில் கொட்டி சலிக்கிறார்கள்.
முடிவாக, ருசிபார்க்கும் சோதனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு சாம்பிளிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து லேசாக வறுத்து அரைக்கிறார்கள். அவற்றிலிருந்து ஒரு பகுதியை அளந்தெடுத்து ஒவ்வொரு கிளாஸிலும் போடுகிறார்கள். அவற்றில் கொதிநீர் சேர்த்து கலக்கின பின்பு, அனுபவம்வாய்ந்த ஆய்வாளர் ஒவ்வொரு கிளாஸிலிருந்து வரும் மணத்தையும் முகர்ந்துபார்க்கிறார். அவற்றின் சூடு ஆறும்படி விடப்படுகிறது. இதற்குள் காபி தூளெல்லாம் அடியில் தங்கிவிடுகிறது. பிறகு அவர் குழிவான ஒரு சிறிய ஸ்பூனில் சிறிதளவை எடுத்து வாயில் ஊற்றி ருசித்த பிறகு உடனே துப்பிவிடுகிறார். அடுத்தடுத்த கிளாஸ்களிலுள்ள காபியையும் இவ்வாறே ருசிபார்க்கிறார். எல்லா சாம்பிள்களையும் இவ்வாறு ருசிபார்த்தபிறகு, அதன் ருசிக்குத் தக்கவாறு தரம் பிரிக்கிறார். அதாவது, இதமான (இனிய, மிருதுவான, கிட்டத்தட்ட இனிப்பு) சுவையுடையது எதுவென்றும், (அயோடின் போன்ற கசப்பான) அதிக நெடியுள்ள சுவையுடையது எதுவென்றும் சொல்கிறார்.
ருசிபார்க்கும் ஆய்வாளருக்கு ருசிக்கும் திறமை இருக்க வேண்டும். அத்துடன், எது எப்படிப்பட்ட சுவையுடையது என்பதை நுட்பமாக பகுத்துப் பார்த்து தரம்பிரிக்கும் அறிவும் அனுபவமும் இருக்க வேண்டும். ஏனென்றால் சில சுவைகள் கண்டுபிடிக்கப்படாதவாறு டபாய்த்துவிடும்! இதை வைத்து காபி கொட்டையின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு தரமான காபி தூளை தயாரிப்பதில் உட்பட்டிருக்கும் அடுத்த கட்டத்திற்கு இச்சோதனை மிகவும் அத்தியாவசியம்.
கலந்து வறுத்தல்
பொதுவாக கொட்டைகளை வறுக்காமலேயே கலந்துவிடுவர். இது ஒரு தனிக்கலையென்றே சொல்லலாம். ஏனென்றால் ஒரு வகை காபியிலுள்ள குறையை மற்றொரு வகை காபி நிறைவு செய்யும் வண்ணமாய் அவை கலக்கப்பட்டு, சுவை, மணம், சத்து, தோற்றம் ஆகியவற்றை மக்கள் விரும்பும் அளவுக்கு நம்பர் 1 ரகமாக உயர்த்த வேண்டும். பானமாக தயாரிக்கப்படுகையில் அபாரமான காபி என்ற தரம் மாறிவிடாமல் ஒரேமாதிரியாய் இருக்க வேண்டுமே! அதுதான் இவ்வாறு கலப்பவர்களுக்கு இருக்கும் பெரிய சவால்.
அடுத்த கட்டம், வறுத்தல். இதுவும் தரமான காபிக்கு அத்தியாவசியம். இந்தக் கட்டத்தில் காபி கொட்டைக்குள்ளேயே சிக்கலான வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்து காபிக்கே உரிய மணத்தை வெளியிடுகிறது. காபி கொட்டைகளை லேசாகவோ, மிதமாகவோ, ரொம்பவோ வறுக்கலாம். இது விரும்பப்படும் மணத்தையும் பானம் தயாரிக்கும் முறையையும் பொறுத்தது. என்றாலும், அளவுக்குமிஞ்சி கறுக வறுத்துவிட்டால் கொட்டைகள் பளபளப்பாகிவிடும். அதற்குக் காரணம், அவற்றுக்குள்ளிருந்த மணம் வீசும் எண்ணெய்ப் பொருட்கள் வெளிவந்துவிடும். இதனால், வாசனை போய்விட்ட கசப்பான காபியே கிடைக்கும்.
நல்ல தரமான காபி தயாரிக்க, கொட்டைகளை சரிவர அரைப்பதும் முக்கியம். அரவை பக்குவம், பானம் தயாரிக்கும் முறையை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக, மிதமாக அரைத்த தூளை, துணியால் அல்லது பேப்பரால் வடிகட்டும் முறையில் தயாரிக்கப்படும் பானத்தில் பயன்படுத்துகின்றனர். நைஸாக அரைத்த தூளையோ, துருக்கிய காபி என்றழைக்கப்படும் வடிகட்டப்படாத காபி தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.
காபி கொட்டையை அரைத்து தூளாக்கியதும், பேக் செய்து அனுப்பிவிடுகின்றனர். பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்யப்பட்ட காபி பொடி சுமார் 60 நாள்வரை கெடாமல் இருக்கும். அதே சமயத்தில் காற்றுப்புகாதவாறு பேக் செய்யப்பட்டவையோ ஒரு வருடமானாலும் கெட்டுப்போகாது. ஆனால் ஒரு தடவை திறந்துவிட்டால், அதை காற்றுப்புகாத டப்பாக்களில் போட்டு மூடிவைத்துவிட வேண்டும். ஃபிரிஜ்ஜில் வைத்தால் ரொம்ப நல்லது.
‘ஏ ஒன் காபி’
நடுவது, வளர்ப்பது, அறுவடை செய்வது, சுத்தம்செய்வது, ரகம் பிரிப்பது, கலப்பது, வறுப்பது, அரைப்பது போன்ற வேலைகளையெல்லாம் செய்துமுடித்த பிறகு, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கட்டத்திற்கு வருகிறோம். அதுதான் அந்த ‘ஏ ஒன் காபி’ தயாரிக்கும் விதம்! துருக்கிய முறை, தானே வடிதல், இத்தாலிய மோகா போன்றவை ஒருசில காபியின் வகைகள். இதுபோல் அநேக விதத்தில் காபியை வடித்தெடுக்கலாம். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வழிகளில் தயாரிக்கப்பட வேண்டும். என்றாலும், நீங்கள் ஆறு முதல் எட்டு டேபிள் ஸ்பூன் காபி தூளை ஒரு லிட்டர் நீரில் கலந்து தயாரிக்கும்படி பொதுவாக சிபாரிசு செய்யப்படுகிறது. அப்போதைக்கு எத்தனை பேருக்குத் தேவையோ அந்தளவு மட்டும் தயாரித்து வழங்குங்கள். காபி மண்டியை மறுபடியும் பயன்படுத்த வேண்டாம். காபி போடும் பாத்திரம், ஃபில்டர், பிற பாத்திரங்கள் இவை அனைத்தையும் உடனே நன்றாக கழுவுவது நல்லது.
பிரேஸில் நாட்டு காஃபெஸின்யோ என்றாலும்சரி, கொலம்பிய டிண்டோ என்றாலும்சரி, இத்தாலிய எஸ்பிரஸோ என்றாலும்சரி, அல்லது நீங்களே விசேஷமாக தயாரித்தாலும் சரி, மணமும் சுவையும் நிறைந்த, உங்களுக்குப் பிடித்தமான காபியை அடுத்த முறை சுவைக்கையில், கொஞ்சம் நிறுத்தி, தரமான இந்தக் காபியை—செடியிலிருந்து கப் வரை—கிடைக்கச் செய்ததற்குப் பின்னே இருக்கும் கடின உழைப்பை சற்று அசைபோட்டுத்தான் பாருங்களேன்.
[பக்கம் 24-ன் படம்]
நர்சரியில், செடிகளுக்குத் தேவையான அளவு வெயிலும் நிழலும் கிடைக்கிறது
[பக்கம் 24-ன் படம்]
முதிர்ந்த காபி செடி வளரும் எஸ்டேட்டுகள்
[பக்கம் 25-ன் படம்]
காபி செர்ரி பழங்களை கிளைகளிலிருந்து உதிர்த்து சேகரித்தல்
[பக்கம் 25-ன் படம்]
இலைதழைகளை நீக்க பிரேஸில் நாட்டைச் சேர்ந்த இவர் செர்ரி பழங்களை கையாலேயே சலிக்கிறார்
[பக்கம் 26-ன் படம்]
300 கிராம் கொட்டைகளில் எவ்வளவு குறைகள் உள்ளனவோ அதற்கேற்ப அந்த சாம்பிள் இன்ன ரகம் என பிரிக்கப்படும்
[பக்கம் 26-ன் படம்]
ருசிபார்க்கும் ஆய்வாளருக்கு நிறைய அனுபவம் வேண்டும்