கடல் பார்மஸி
கனடாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
இயற்கை மருந்துகள் எங்கிருந்து பெறப்படுகின்றன? சந்தேகமின்றி உடனடியாக மனதுக்கு வருபவை தாவரங்களும் மூலிகைகளுமே. எனினும், டாக்டர் மைக்கல் ஆலன் தி மெடிக்கல் போஸ்ட் பத்திரிகைக்கு எழுதுகையில் வழக்கத்துக்கு மாறான மூலத்திலிருந்து—கடலிலிருந்து—பெறப்படும் மருந்துகளைப்பற்றி விவரிக்கிறார்.
நிச்சயமாகவே, இது ஒன்றும் புதிதல்ல; நூற்றாண்டுகளாக சீனர்கள் மீனிலிருந்து பிரித்தெடுத்த பொருட்களை நோய்களைக் குணமாக்குவதற்கு பயன்படுத்தி வந்திருக்கின்றனர். காட் லிவர் ஆயில் வெகு காலமாக உபயோகத்தில் இருந்துவந்திருக்கிறது என்பதை முதியோர் அநேகர் ஒப்புக்கொள்வர். இருப்பினும், தாவரங்களுக்கும் மூலிகைகளுக்கும் உள்ள குணப்படுத்தும் சக்தியைப்பற்றி அறிந்தவற்றோடு ஒப்பிடுகையில் கடல் உயிரினங்களுக்கு உள்ள குணமாக்கும் சக்தியைப்பற்றி மிகக்குறைவாகவே அறியப்பட்டிருக்கிறது.
இருந்தபோதிலும், இதுவரை என்ன கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறதோ அது கிளர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது. உதாரணமாக, கோள மீன்கள் (puffer fish) உற்பத்தி செய்யும் ஒரு ரசாயனப் பொருள் ஆஸ்துமா வியாதியைக் குணமாக்க பயன்படுத்தலாம். கடற்பஞ்சில் நியூக்ளியோஸைட்ஸ் அடங்கியிருப்பதானது வைரஸை எதிர்க்கும் வைடெரபின் என்ற ஒரு மருந்தைத் தயாரிப்பதற்கு வழிநடத்திற்று. பழுப்புநிற கடற்பாசி ஒன்று, புற்றுநோயைக் குணப்படுத்த பயன்படுத்தக்கூடிய, செல் பிரிவடைவதைத் தடுக்கும் ஸ்டைப்போடியோன் மருந்தை உற்பத்தி செய்திருக்கிறது. இது சும்மா தொடக்கம்தான்.
என்ன இருந்தாலும், நோய்க்கு முடிவான குணப்படுத்துதல், கடல் பார்மஸியில் இருந்து கிடைக்கப்போவதில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே கிளர்ச்சியடையச் செய்யும் இந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும்: “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.”—ஏசாயா 33:24.