வெற்றிகரமான ஒற்றைப் பெற்றோராக இருத்தல்
“ஒற்றைப் பெற்றோர் எல்லாருக்கும் போதுமான அளவில் ஒருபோதும் கிடைக்காமல்போகும் ஒன்று நேரம் ஆகும்.”—ஒற்றைப் பெற்றோர் பிழைத்திருப்பதற்கான வழிகாட்டி. (ஆங்கிலம்)
“பணக்கஷ்டம்தான் இருக்கிறதிலேயே மிக மோசமான பிரச்சினையாக இருக்கிறது.” —தி லண்டன் டைம்ஸ்.
‘ஒற்றைப் பெற்றோருக்கு பேரளவில் மன இறுக்கத்தைக் கொடுப்பது தனிமையே.’ —கிவ் அஸ் எ ப்ரேக், ஒற்றைப் பெற்றோர்களுக்கு ஓய்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறித்த ஒரு சுற்றாய்வு.
சவால்கள், சந்தோஷம், பிரச்சினைகள் போன்றவற்றை எல்லா பெற்றோர்களும்தான் எதிர்ப்படுகின்றனர். ஆனால் ஒற்றைப் பெற்றோர்களோ துணைவர் ஒருவர் இல்லாமலே இவற்றை எதிர்ப்படுகின்றனர். இதன் விளைவாக, நேரம், பணம், தனிமை ஆகியவை அவர்களுடைய வாழ்க்கையில் பெரும்பாலும் முக்கியமான அம்சங்களாக அமைகின்றன.
அவர்களுடைய வாழ்க்கையின் மெய்மை கடுமையானதாக இருக்கலாம். ஆனாலும் ஒற்றைப் பெற்றோர்கள் தங்களுடைய குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தமுடியும், பலர் அவ்வாறு வெற்றிகரமாக நடத்திவருகின்றனர். அவர்கள் என்ன தராதரங்களைக் கடைப்பிடிக்கின்றனர் என்பதன் பேரிலும், இவற்றிற்கு எந்தளவுக்குத் தங்களையே அர்ப்பணிக்கிறார்கள் என்பதன் பேரிலும் அதிகம் சார்ந்திருக்கிறது.
ஆர்வமூட்டும் வகையில், தற்போதைய தார்மீக மற்றும் சமூக குழப்பத்தைப்பற்றி வெகுகாலத்திற்கு முன்பே பைபிள் முன்னுரைத்தது. கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் இந்தக் குழப்பத்தைப்பற்றி சீஷனாக இருந்த இளைஞன் தீமோத்தேயுவுக்கு எப்படி எச்சரிப்பூட்டினார் என்பதை கவனியுங்கள். “கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், . . . தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும் [“உண்மைமாறாத்தன்மையற்றவர்களாகவும்,” NW], சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும் . . . இருப்பார்கள்,” என்று அவர் எச்சரித்தார்.—2 தீமோத்தேயு 3:1-3.“கடைசிநாட்களில் சமாளிக்கக் கடினமாக இருக்கும் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், . . . தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், உண்மைமாறாத்தன்மையற்றவர்களாகவும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும் . . . இருப்பார்கள்,”
இந்த பைபிள் ஏதோ இன்றைய மனநிலைகளைப்பற்றி துல்லியமாக தீர்க்கதரிசனம் உரைத்த ஒரு புத்தகம் மட்டுமல்ல. கடைப்பிடித்தால் குடும்ப வாழ்க்கையில் நிச்சயமாக வெற்றி தரக்கூடிய நியமங்களையும் தன்னுள் கொண்டதாகவும் இது இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:16, 17) நேரம், பணம், தனிமை ஆகியவற்றின் பிரச்சினையை ஒற்றைப் பெற்றோர்கள் சமாளிக்க இவற்றில் சில எவ்வாறு உதவக்கூடும் என்பதை கவனியுங்கள்.
காலத்தைத் தப்பவிடாமல் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்
நீங்கள் உங்களை எவ்வளவுதான் ஒழுங்கமைத்துக் கொண்டாலும் நேரம் என்பது கிடைக்காத ஒன்றாகவே இருக்கிறது. உங்களுடைய நேரத்தை நல்ல முறையில் உபயோகிக்க, நேரம் உண்மையில் எப்படித்தான் செலவழிக்கப்படுகிறது என்பதை நீங்கள் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு உங்களுக்கு மிக முக்கியமாக செய்யவேண்டிய காரியங்கள் யாவை என்பதை உங்களால் தீர்மானிக்க முடியவேண்டும். “‘நேரக் குறிப்பேடு’ ஒன்றை வைத்திருங்கள்,” என்று ஒற்றைப் பெற்றோர் சங்கம் ஒன்று ஆலோசனை கூறுகிறது. “இதில் நாள் முழுவதும் அல்லது வாரம் முழுவதும் நீங்கள் செய்கிற அனைத்தையும் குறித்து வையுங்கள், அதைச் செய்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கிறது என்று பாருங்கள். அதன் பிறகு எந்தெந்தக் காரியங்களை மாற்றியமைப்பதன் மூலம் அல்லது ஒருசில காரியங்களைச் செய்யாதிருப்பதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தமுடியும் அல்லது நன்கு பயன்படுத்தமுடியும் என்று பாருங்கள்.”
சரியான இத்தகைய ஆலோசனை அப்போஸ்தலனின் கீழ்க்காணும் இந்த அறிவுரைக்குப் பின்னால் இருக்கும் வேதப்பூர்வமான ஞானத்தைப் பிரதிபலிக்கிறது: “நீங்கள் விவேகமற்றவர்களாயல்ல விவேகமுள்ளவர்களாயிருந்து எப்படி நடந்துகொள்கிறீர்களென்பதைப் பற்றித் திட்டமாய்ப் பார்த்துக்கொள்ளுங்கள். காலத்தைத் தப்பவிடாமல் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள், நாட்கள் பொல்லாதவைகள்.”—எபேசியர் 5:15, 16, திருத்திய மொழிபெயர்ப்பு.
உதாரணமாக, உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் டிவி பார்ப்பது மிக அதிகமாக இருக்கிறதா? இந்த நேரத்தைக் குறைத்துக் கொள்வதானது உங்களுடைய குழந்தைகளோடு பேசுவதற்கும் அவர்களோடு ஒன்றாக சேர்ந்து காரியங்களைச் செய்வதற்கும் கூடுதலான நேரத்தைக் கொடுக்கும். இவ்வாறு செய்வது அவர்களோடு நல்ல ஒரு உறவுமுறையை வளர்த்துக்கொள்ள உதவக்கூடும்.
‘என்னுடைய பிள்ளைகளோடு உட்கார்ந்து பேச எடுத்த என்னுடைய முயற்சிகளெல்லாம் நெடுநேர மௌனத்தில்தான் முடிவடைந்திருக்கின்றன,’ என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். ஒருவேளை அப்படி இருக்கலாம், ஆனால் அப்படியே இருந்தாலும் அது உங்களைத் தடுத்து நிறுத்திவிட அனுமதித்துவிடாதீர்கள். உங்களுடைய பிள்ளைகள் தங்களுடைய நண்பர்களைப் பற்றியோ அல்லது தாங்கள் செய்யத் திட்டமிடுவதைப் பற்றியோ சொல்லுவது போன்ற அவர்களுடைய அன்றாட உரையாடல்களில் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளைப் பகுத்தறிந்துகொள்ளும்படி ஒற்றைப் பெற்றோர்களின் ஆலோசகர்கள் சிபாரிசு செய்கின்றனர். ஆனால் டிவி உங்களுடைய கவனத்தைக் கொள்ளைகொண்டால் அதை உங்களால் செய்ய முடியாது, முடியுமா? டிவி ஓடிக்கொண்டே இருந்து அதை நீங்கள் பார்க்காமல் இங்கு பேசிக்கொண்டிருந்தாலும்கூட, கவனச் சிதறலானது உங்களுடைய வாலிபரின் உள்ளத்தின் ஆழத்திலுள்ள எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பற்றிய இன்றியமையாத தகவல்களை நீங்கள் தவறவிட நேரிடும். ஆகவே உங்களுடைய பிள்ளைகளோடு கழிப்பதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். வீட்டு வேலைகளை ஒன்றாக சேர்ந்து செய்யுங்கள், செய்துகொண்டிருக்கும்போது அவர்களோடு பேசுங்கள்—அவர்கள் பேசும்போது கவனித்துக் கேளுங்கள்!
அவர்களோடு சேர்ந்து படிக்கவும் செய்யுங்கள். ஐந்து வயதில் ஒரு குழந்தையின் படிப்பறிவுக்கும் அதைத் தொடர்ந்துவரும் அவனுடைய சாதனைகளுக்கும் இடையே ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. அவர்களோடு சேர்ந்து வாசிக்க நேரத்தைத் தப்பவிடாமல் பிரயோஜனப்படுத்திக்கொள்ள இது இன்னும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. படுக்கச் செல்வதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்னோ அல்லது மாலைப் பொழுதில் நீங்கள் அதிக களைப்படைவதற்கு முன்னோ உள்ள சமயம் ஞானமாய்ப் பயன்படுத்திக்கொள்வதற்கான சமயமாகும்.
அவசியமானவற்றை வைத்து திருப்தியடையுங்கள்
ஒற்றைப் பெற்றோர்களில் அநேகர் ஒரு கொடிய பண சுழற்சியில் மாட்டிக்கொள்கின்றனர். போதுமான வீட்டுவசதி, உணவு, துணிமணிகள் ஆகியவற்றிற்கு போதுமான பணத்தை அவர்கள் எப்படியாவது பெறவேண்டும். ஆனால் வேலை செய்வதற்காக வெளியே போவதானது பிள்ளைகளை தகுந்த வகையில் பராமரிப்பது சம்பந்தமாக கேள்விகளை எழுப்புகிறது.
குழந்தைப் பராமரிப்பு ஏற்பாடுகள் எப்பொழுதும் அவ்வளவு எளிதாக கிடைப்பவையாக இல்லை, மலிவானவையாகவும் இல்லை. தங்களுடைய உறவினர்கள்—தாத்தாப்பாட்டிகள், அத்தைமார்கள், சித்திமார்கள், மாமாமார்கள், சித்தப்பாமார்கள்—செய்யும் உதவிகளைப் பயன்படுத்திக்கொண்டு வெற்றியடைகின்றனர். மற்றவர்கள் தங்களை வேலைக்கு அமர்த்தியவர்கள் அளிக்கும் சிசுப்பள்ளிகள், விளையாட்டுத் திடல்கள், குழந்தைப் பராமரிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின்மீது சார்ந்திருக்கின்றனர். அரசாங்க உதவித்தொகை அப்படியே கிடைத்தாலும், இத்தகைய குழந்தைப் பராமரிப்புக்கு ஆகும் செலவை எப்பொழுதும் ஈடுகட்டிவிடாது. சில நாடுகளில், குழந்தைகளையுடைய சில ஒற்றைப் பெற்றோர்களால் வேலை ஒன்றும் தேடாமல், வீட்டிலேயே இருந்து அரசாங்கம் கொடுக்கும் பணத்தை வைத்தே ஓட்டிவிட தீர்மானிக்க முடிகிறது.
கவனித்துக் கொள்ளப்பட வேண்டிய ஒற்றைப் பெற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக, அரசாங்கங்கள், யாரை பொறுப்பாளிகளாகக் காண்கின்றனவோ அவர்களையே நோக்கி இருக்கின்றன. பிரிட்டனில் இந்த நிலைமை ஏற்கெனவே குடும்பத்தைவிட்டு, தலைமறைவாகி, தங்களுடைய பிள்ளைகளுக்கு பண உதவி ஒன்றும் தராத தகப்பன்மார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழிநடத்திற்று. பணம் கொடுக்கத் தவறும் தகப்பன்மார்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலித்துத்தர குழந்தைப் பராமரிப்பு அமைப்புகள் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கின்றன. ஒற்றைத் தாய்மார்கள் அத்தகப்பன்மார்களைக் கண்டுபிடிக்க அமைப்புகளுக்கு உதவிசெய்ய மறுப்பார்களேயானால், அவர்கள் கொஞ்சம் பண உதவியை இழக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. “ஸ்வீடனில் பண உதவி கொடுக்கத் தவறுபவர்களில் 40 சதவீதத்தினர் உள்ளூர் சமூக காப்பீட்டுக் கழகங்களினால் பிடிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. பிரான்ஸில் ஆதரவுத் தொகை சம்பந்தமாக ஆணையிடுதலையும் பணம் கொடுக்கத் தவறுபவர்களைக் கண்டுபிடிப்பதையும் நீதிமன்றம் நடைமுறைப்படுத்துகிறது,” என்று லண்டனின் தி டைம்ஸ் அறிவிக்கிறது.
நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கிறதோ இல்லையோ அரசாங்கம் உதவித்தொகை வழங்குகிறதோ இல்லையோ, அநேக ஒற்றைப் பெற்றோர்கள் முன்பு செலவுசெய்து பழக்கப்பட்டதைவிட குறைந்த பணத்தை வைத்து பிழைப்பு நடத்த வழிகளைக் கண்டுபிடித்துக் கொள்கின்றனர். எப்படி? வித்தியாசமாக வரவுசெலவுகளைத் திட்டமிடுவதன்மூலம்.
வித்தியாசமாக வரவுசெலவுகளைத் திட்டமிட கற்றுக்கொள்வது ஒரு திறமையாக இருக்கிறது. இது பொதுவாகவே செலவழிப்பதில் முன்னுரிமைகளை மாற்றியமைப்பதை அவசியப்படுத்துகிறது. உதாரணமாக, வீட்டுக்கும், வெப்பமாக்குவதற்கும் ஆகும் செலவுகளுக்கான பணத்தை முதலில் தனியே ஒதுக்கிவைப்பதையும், அதன்பிறகு, உணவுப் பொருட்களை வாங்கவும், கடன் கட்டவும் பணத்தை ஒதுக்கி வைப்பதையும் தேவைப்படுத்துகிறது. “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்,” என்று அப்போஸ்தலன் பவுல் விவரித்தார்.—1 தீமோத்தேயு 6:8.
ஆகும் செலவுகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதைப்பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா? மற்ற பெற்றோர்களோடு சேர்ந்து உணவுப் பொருட்களையும் வீட்டுக்கு வேண்டிய மற்ற பொருட்களையும் ஒட்டுமொத்தமாக வாங்குவது உங்களுக்கு பணத்தை மிச்சப்படுத்தும். வரவுசெலவை நீங்கள் எப்படித்தான் திட்டம்போட்டாலும், உட்கார்ந்து உங்கள் செலவுகளைக் கணக்குப்போட்டு பார்க்கவேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். (லூக்கா 14:28, 30-ஐ ஒப்பிடுக.) வரவுசெலவைத் திட்டமிடும்போது உங்களுடைய வாலிபர்களிடமிருந்து வரும் உதவியையும் ஏன் பட்டியலில் சேர்த்துக்கொள்ளக்கூடாது? அப்படி செய்தால் உங்களுடைய வரவுசெலவு திட்டத்தை நீங்கள் கடைப்பிடிக்க உங்களுக்கு உதவிசெய்வதை ஒரு சிலாக்கியமாக அவர்கள் கருதலாம். ஒருவேளை பணத்தை சேமித்து வைப்பதையும் சாத்தியமானதாகக்கூட நீங்கள் காணலாம்.
நண்பர்களைச் சம்பாதிக்க, நண்பர்களாக இருங்கள்
“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்,” என்று புத்திமதி கூறினார் இயேசு. “நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.” (லூக்கா 6:38) சொந்த உறவுமுறைகளைப் பொறுத்ததிலும் இதுவே உண்மையாக இருக்கிறது. நீங்கள் மற்றவர்கள்மீது காண்பிக்கும் கரிசனையானது நட்புறவான பிரதிபலிப்பைப் பெறலாம். தனிமையை வெல்வதற்கான மிகச் சிறந்த வழியானது நண்பர்களை உருவாக்க முன்முயற்சிகள் எடுப்பதேயாகும். நீங்கள் மற்றவர்களைப் போய் பார்த்துவிட்டு வரும்படி, உங்களுடைய குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் நம்பகரமான நண்பர்களை நீங்கள் ஒருவேளை கண்டடையலாம். உங்களை வந்து பார்த்துவிட்டுப் போகும்படி ஏன் உங்களுடைய நண்பர்களிடம் கேட்கக்கூடாது, அது இன்னும் நன்றாக இருக்குமல்லவா?
இந்த விஷயத்தில் ஒரு எச்சரிக்கை அவசியமாக இருக்கிறது. “கெட்ட கூட்டுறவு நல்ல பழக்கங்களைக் கெடுக்கும்,” என்பதை நினைவில் வையுங்கள். (1 கொரிந்தியர் 15:33, NW) “மோசம்போகாதிருங்கள், கெட்ட கூட்டுறவு நல்ல பழக்கங்களைக் கெடுக்கும்.” NWநீங்கள் வளர்க்கும் நட்பு மெய்யாகவே கட்டியெழுப்புவதாகவும் திருப்தியைக் கொண்டுவருவதாகவும் இருந்தாலொழிய, தனிமையை நீங்கள் திருப்திகரமாக வெல்லமுடியாது.
தாயாகவும் தந்தையாகவும் இருத்தல்
ஒற்றைப் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்கவேண்டியிருக்கிறது—யாருக்கும் இது அவ்வளவு எளிதானது அல்ல. குழந்தைகள் பிறக்கும்போதிலிருந்தே பெற்றோர்களைப் பார்த்து அப்படியே செயல்படுபவர்களாக இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் பெரியவர்களாக வளர்ந்து எவ்வளவு பொறுப்புள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதைப் பார்த்துதான் அவர்களும் வளர்ந்து பொறுப்புள்ளவர்களாக இருப்பது எவ்வாறு என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். அப்படியானால், உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படிப்பட்ட லட்சிய மாதிரியாக இருக்கிறீர்கள் என்பதன்பேரில் அதிகம் சார்ந்திருக்கிறது. அமெரிக்க நகரங்களின் முக்கிய பகுதிகளில் வளரும் அதிக எண்ணிக்கையைக் கொண்ட பையன்களுக்கு தகப்பன்மார்கள் இல்லாததைப்பற்றி சொல்லும்போது, லண்டனைச் சேர்ந்த தி ஸண்டே டைம்ஸ் கூறுகிறதாவது: “ஒரு ஆண் தலைமுறையில் சுமார் பாதிபேர், வளர்ந்து ஒரு ஆளான ஆணாக இருப்பதென்றால் என்ன என்ற ஒரு கட்டுப்பாட்டுணர்ச்சியின்றி வளரிளமைப் பருவத்திற்கு வளரும்போது அத்தலைமுறை எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதை . . . வன்முறையும் சமூக குழப்பநிலையும் நமக்குச் சொல்லுகின்றன.”
பிள்ளைகள் ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படும்போது, அவர்களுடைய ஆரோக்கியமும், பள்ளிக்கூட பாடங்களும், அவர்களுடைய பொருளாதார வாய்ப்புகளும்கூட மோசமாக பாதிக்கப்படலாம் என்று தி ரிலேஷன்ஷிப் ரெவலூஷனில் டங்க்கன் டார்மெர் கூறுகிறார். மற்ற ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கண்டுபிடிப்புகளை சர்ச்சைக்குள்ளாக்குகின்றனர். வறுமையின்மீதும் சமூக இழப்புகளின்மீதுமே அவர்கள் பழியைப் போடுகின்றனர். இருந்தபோதிலும், சமூக விஞ்ஞானியான சார்லஸ் முர்ரேயின் இந்த மதிப்பீட்டை அநேகர் ஒத்துக்கொள்கின்றனர்: “அப்பா இல்லாமல் அம்மாவோடு மட்டும் வாழும், அப்பாமார்களே இல்லாமல் அம்மாமார்கள் மட்டுமே இருக்கும் சூழலில் வாழும் ஒரு பிள்ளை, தான் காண்பதை வைத்தே காரியங்களை சீர்தூக்கிப் பார்க்கிறது. சமூகநலப் பணியாளர்களையும், பள்ளி ஆசிரியர்களையும், குருமார்களையும் ஒரு வாலிப பையனிடத்திற்கு அனுப்பி அவன் வளர்ந்தபின் தன்னுடைய பிள்ளைக்கு ஒரு நல்ல அப்பாவாக இருக்கவேண்டும் என்று சொல்லவைக்கலாம். ஆனால் அவன் அதை நேரில் பார்த்தாலொழிய ஒரு நல்ல அப்பாவாக இருப்பது என்னவென்று அவனுக்குத் தெரியாது.” ஆம், பையன்களுக்கு அப்பா அம்மா இருவருமே தேவையாயிருக்கிறார்கள், பெண்களுக்கும்தான்.
பைபிள் சங்கீதம் 68:5-ல் யெகோவா தேவனை ‘தகப்பனற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனாய்’ இருக்கிறார் என்று விவரிக்கிறது. வழிநடத்துதலுக்காக கடவுளை எதிர்நோக்கியிருக்கிற தாய்மார்கள் அவர் தங்களுடைய பிள்ளைகளுக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருப்பதாக காண்கின்றனர். தங்களுடைய பிள்ளைகளைத் தனியாக வளர்த்துவரும் அப்பாமார்கள் பொறுப்புள்ள முதிர்ச்சியடைந்த பெண்களிடமிருந்து வரும் உதவியை மதிக்கின்றனர். ஆம், ஒற்றைப் பெற்றோர் அனைவருக்கும் தேவையாய் இருப்பது அன்போடுகூடிய ஆதரவே ஆகும். இந்த விஷயத்தில் ஒருவேளை நீங்கள் உதவலாம்.
[பக்கம் 6-ன் பெட்டி]
“தாய்மார்களாகவும்” இருக்கும் தந்தைமார்கள்
ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களில் தலைமை வகிக்கும் தந்தைமார்கள் சிறுபான்மையினரே. ஆனால் அநேக திருமணங்கள் முறிந்துகொண்டிருக்கையில், அநேக ஆண்கள் தங்கள் பிள்ளைகளைத் தனியாகவே வளர்த்துக்கொள்ள தீர்மானிக்கின்றனர். “இந்த நிலைமையில் இருக்கும் ஆண்கள் எதிர்ப்படும் மிகப் பெரிய கஷ்டங்களில் ஒன்று வளரிளமைப் பருவத்திலுள்ள மகளாவாள்,” என்று ஒற்றைப் பெற்றோர் பிழைத்திருப்பதற்கான வழிகாட்டி விவரிக்கிறது. சங்கோஜம் சில தகப்பன்மார்கள் பாலியல் விஷயங்களைப் பேசுவதைத் தடைசெய்கிறது. மற்றவர்களோ உறவினர்களில் உள்ள ஒரு நம்பகரமான பெண்ணைத் தங்களுடைய மகள்களிடம் பேசும்படி கேட்டுக்கொள்கிறார்கள். ஆண், பெண் ஆகிய ஒற்றைப் பெற்றோர்கள் அனைவரும், தங்களுடைய பிள்ளைகளோடு இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தை சேர்ந்து படிப்பதால் அதிக பலனடைவர்.* இந்தப் புத்தகத்தில் “பாலுறவும் ஒழுக்க நெறிகளும்” மற்றும் “எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு, காதல் மற்றும் எதிர்பாலினம்” ஆகிய தலைப்புகளைக் கொண்ட பகுதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் கலந்துபேசுவதற்கான கேள்விகள் என்றழைக்கப்படும் அம்சத்தோடு முடிகின்றன. இவை மிகவும் தனிப்பட்ட, அந்தரங்க விஷயங்களைக்கூட விட்டுவிடாமல் தகுந்தமுறையில் மறுபார்வை செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன.
[அடிக்குறிப்புகள்]
*உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் வெளியிடப்பட்டது.
[பக்கம் 7-ன் படம்]
உங்கள் பிள்ளைகளோடு நேரத்தை செலவழிப்பதானது நல்ல உறவை வளர்க்கிறது
[பக்கம் 7-ன் படம்]
வரவுசெலவை நீங்கள் எப்படித்தான் திட்டம்போட்டாலும், உட்கார்ந்து உங்கள் செலவுகளைக் கணக்குப்போடுங்கள்