ஒற்றைப் பெற்றோர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
ஆணோ பெண்ணோ, ஒற்றைப் பெற்றோர்கள் கரிசனையைப் பெறத் தகுதியுள்ளவர்களாக இருக்கின்றனர். இன்றைய சமூகநலப் பணியாளர்கள் ஒற்றைப் பெற்றோர் குடும்பத்துக்கு ஆதரவு காட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
“ஆதரவு காட்டும் நண்பர்களின் கூட்டம், கரிசனை காட்டும் உறவினர்கள், அன்போடுகூடிய தனிப்பட்ட அக்கறைகொள்ளும் ஆசிரியர்கள் ஆகியோரும், இத்தகைய குடும்பங்களை மனதில்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேஷித்த சமுதாய மற்றும் மத நடவடிக்கைகளும், ஒற்றைப் பெற்றோர்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும், அவர்களுடைய வாழ்க்கையில் முக்கியமாக உற்சாகமூட்டுதல் தேவைப்படும்போது, அவர்களுடைய மன நலனுக்கு பேரளவு உதவிசெய்யலாம்,” என்பதாக விளக்குகிறார்கள் சமூகநல வல்லுநர்களாகிய லீத்தா மற்றும் ஜான் ஸ்கேன்ஸோனி. அப்படியானால் நீங்கள் எப்படி உதவலாம்?
ஆதரவாக இருங்கள்
முதலாவதாக, ஒற்றைப் பெற்றோர்கள் காரியங்களை எவ்வாறு நோக்குகிறார்கள் என்று புரிந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள். உங்களை அவர்களுடைய நிலையில் வைத்துப் பாருங்கள். 7 மற்றும் 14 வயதிலுள்ள இரண்டு பிள்ளைகளை உடைய மார்கரெட்டை விழித்தெழு! பேட்டி கண்டது. இவர் ஐந்து வருடங்களுக்குமுன் மணவிலக்கு செய்யப்பட்டு, இதுவரை வெற்றிகரமாக நிலைமைகளை சமாளித்து வருகிறார். அவர் சொல்லும் தகவல்கள் உள்ளடங்கியிருக்கும் அதிகத்தைப் புரிந்துகொள்ள உதவும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
விழித்தெழு!: “ஒரு ஒற்றைப் பெற்றோராக, நீங்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர்ப்பட வேண்டியதாயிருந்தது?”
மார்கரெட்: “முதன் முதலாக, நான் ஒரு ஒற்றைப் பெற்றோராக ஆகிவிட்டேன் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதையே நான் மிகக் கடினமானதாகக் கண்டேன், அது திட்டமிடாத ஒன்றாக இருந்தது. ‘ஒற்றைப் பெற்றோர்’ என்ற பட்டப்பெயரே எனக்கு எரிச்சலூட்டியது. ஏனென்றால் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களை, மன இறுக்கத்தை உண்டாக்கக்கூடியவையாகவும், மந்தமானவையாகவும் கெட்ட பெயரையுடைய குழந்தைகளை உடையவையாகவும் அநேகர் கருதுகின்றனர். அது என்னுடைய கருத்தாக இல்லாமலிருந்தபடியால், முதலில் மற்றவர்கள் கொடுத்த புத்திமதியை நான் ஏற்றுக்கொள்ள மறுத்தேன். ஆனால் ஒற்றைப் பெற்றோராக இருப்பது எப்போதுமே எல்லாவற்றிலுமே எதிர்மறையானதல்ல என்று உணர்ந்துகொண்டேன்.”
ஒற்றைப் பெற்றோர்களுக்கு ஆதரவளிக்க, அவர்களுடைய உணர்ச்சிகள் எவ்வளவு எளிதில் புண்படுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு தயவுகாட்டுவதற்கு விடாமுயற்சி செய்யுங்கள்.
விழித்தெழு!: “உங்களுடைய முன்னாள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் ஒன்றும் உங்களுக்குக் கிடைப்பதில்லை. அப்படியிருக்கும்போது பண விஷயத்தில் எப்படி சமாளித்தீர்கள்?”
மார்கரெட்: “நான் பல தியாகங்களை செய்யவேண்டியதாக இருந்தது. தோழமைக் கூட்டங்களுக்காக புதிய துணிமணிகளை வாங்கி மகிழ்வது எனக்கு பழக்கமாயிருந்தது. இப்போதும் புதிய பொருட்கள் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம், ஆனாலும் முன்பு செலவழித்த மாதிரி அதிக பணம் செலவழிக்க முடியாது. நிச்சயமாகவே, பிள்ளைகள் நன்கு உடையணிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆகவே நான் வரவுசெலவை நன்கு திட்டமிடவேண்டும். ஒவ்வொரு வாரமும் கொஞ்சம் சேர்த்துவைத்து, அதைப் பத்திரமாக வைத்திருப்பதற்காக என்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு தோழியிடம் கொடுத்துவைக்கத் தொடங்கினேன். ஏனென்றால் என் கையில் இருந்தால், நான் அதை ஒருவேளை செலவழித்துவிடுவேன் என்று எனக்குத் தெரியும்.”
ஒற்றைப் பெற்றோர்கள் தங்கள் வருமானத்தை செலவுசெய்வதில் நன்கு திட்டமிடுவதில் அவர்களுக்கு உதவக்கூடிய இத்தகைய நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பராக நீங்கள் இருப்பீர்களா?
விழித்தெழு!: “தனிமை உணர்ச்சியை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்?”
மார்கரெட்: “பகல் நேரம் முழுவதும் எனக்கு வேலை இருந்துகொண்டே இருந்தது. இரவில் பிள்ளைகள் படுக்கைக்குச் சென்றதும் நான் மிகவும் தனிமையாய் உணருகிறேன். ஒரு உறவினரையோ நண்பரையோ தொலைபேசியில் அழைத்து பேசுவேன். சில சமயங்களில் பேசிக்கொண்டிருக்கும்போதே கண்ணீர் வடிப்பேன். அந்த நாளில் நடந்தவற்றைப்பற்றி பேசிக்கொண்டிருப்பேன். செவிகொடுத்துக் கேட்கும் ஒருவர் இருப்பதுதானே அவ்வளவு உதவியாக இருக்கிறது.”
நீங்கள் ஒருவேளை முன்முயற்சி எடுத்து தனிமையாய் உணருபவர்களோடு தொலைபேசியில் பேசலாம். நீங்கள் செவிகொடுத்துக் கேட்பதுதானே அதிக ஆறுதலளிக்கமுடியும்.
விழித்தெழு!: “ஒற்றைப் பெற்றோராக உங்களுக்கு மிகமிகக் கடினமானதாக இருப்பதென்ன?”
மார்கரெட்: “சரியான ஒழுக்கநெறிகளில் பிள்ளைகளை வளர்த்து வருவதுதான். சீரழிந்துவரும் சமுதாய மற்றும் ஒழுக்க தராதரங்கள் என்னுடைய பிள்ளைகளின் மனதில் நல்ல மதிப்பீடுகளைப் பதியவைப்பதற்கான என்னுடைய ஆசையை மக்கள் கேள்விக்குரியதாக்கும்படி செய்கின்றன.”
கடவுளுடைய தராதரங்களைக் கடைப்பிடித்து நடப்பதில் நீங்கள் வைக்கும் முன்மாதிரியானது, மற்றவர்களும் அவ்வாறே செய்யும்படி நிச்சயமாகவே உற்சாகப்படுத்தும்.
விழித்தெழு!: “இரண்டு வாலிப பிள்ளைகளையும் வளர்ப்பதற்கு அதிக நேரம் தேவைப்படுமே. உங்களுக்கு விருப்பமானதைச் செய்ய உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?”
மார்கரெட்: “எனக்காக கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி வைத்துக்கொள்ள நான் முயற்சிக்கிறேன். உதாரணமாக, ஒரு தோழி பிள்ளைகளுக்கு இசை கற்றுக்கொடுக்கும்போது எனக்கென செலவழிக்க ஒரு மணிநேரம் கிடைக்கிறது. நான் உட்கார்ந்திருப்பேன், டிவியை ஆன் பண்ணமாட்டேன். மௌனமாகவே அந்த நாளில் செய்த அனைத்தைப் பற்றியும் நான் சிந்தித்துப் பார்ப்பேன். எது சரி, எது தப்பு என்பதைப்பற்றி எப்போதுமே அதிக கவனமுள்ளவளாய் இருப்பேன். ஆகவே இன்னும் மேம்பட்ட முறையில் செய்திருக்க முடியுமா என்று பார்ப்பதற்கு நான் ஏற்கெனவே செய்ததைப் பற்றி சிந்தித்துப் பார்க்க விரும்புகிறேன்.”
அவ்வப்போது அவருடைய பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள நீங்கள் முன்வந்தால், அப்படியெல்லாம் சிந்தித்துப் பார்ப்பதற்கு ஒற்றைப் பெற்றோருக்கு மிகவும் விலையேறப்பெற்ற நேரம் கிடைக்கிறது.
நடைமுறையான உதவியளியுங்கள்
விழித்தெழு!: “எந்த உதவியை மிகவும் நடைமுறையானதாகக் கண்டிருக்கிறீர்கள்?”
மார்கரெட்: “மற்றொருவருடைய வீட்டுக்கு நான் அழைக்கப்படுவதில் சந்தோஷமடைகிறேன். மற்றவர்கள் உங்கள்மேல் கரிசனை காட்டுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்போது, அது அதிகம் உதவிசெய்கிறது. உங்களுக்கு மட்டும்தான் பிரச்சினைகள் இருக்கின்றனவென்று சிலசமயங்களில் நினைக்கிறீர்கள். அதுமட்டுமல்லாமல், நான் என் பிள்ளைகளை வளர்க்கும் விதத்தைப்பற்றி யாராவது பாராட்டுதல் தெரிவிக்கும்போதும், அது எனக்கு அவ்வளவு பெரிய உதவியாக இருக்கிறது! பிறகு, அலங்கரித்தல், தோட்டம் அமைத்தல், கடைக்குச் சென்று வருதல் போன்ற நடைமுறையான காரியங்களும் இருக்கின்றன. . . . ம்ம், சொல்லவேண்டுமானால் இப்படி சொல்லிக்கொண்டே போவேன்!”
ஒரேவொரு பெற்றோர் மட்டும் இருக்கும்போது காரியங்கள் அதிக நேரத்தைத் தேவைப்படுத்துகின்றன, அதிகக் கடினமானவையாகவும் தோன்றுகின்றன. ஆகவே உங்களுக்குக் கிடைத்திருக்கும் பரிசாகிய நேரத்தின் மதிப்பை குறைவாய் எடைபோட்டுவிடாதீர்கள். ஒற்றைப் பெற்றோருக்கு இது மிகவும் அருமையான பரிசுகளில் ஒன்றாக இருக்கிறது.
[பக்கம் 9-ன் படம்]
ஒற்றைப் பெற்றோர்களுக்கு உண்மையில் உதவியாய் இருக்க, அவர்களோடு சேர்ந்து நேரத்தைச் செலவழியுங்கள்