உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 1/22 பக். 9-12
  • வெறிச்சோடிய கூட்டில் மகிழ்ச்சி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வெறிச்சோடிய கூட்டில் மகிழ்ச்சி
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நல்ல காரியங்களில் மனதை ஒருமுகப்படுத்துங்கள்
  • இன்னும் நீங்கள் பெற்றோர்தான்!
  • வீணாக தலையிடாதீர்கள்
  • திருமண பிணைப்பை புதுப்பியுங்கள்
  • பிரிந்து செல்ல அனுமதிக்கும் ஒற்றைப் பெற்றோர்
  • பிரிந்து செல்ல மகிழ்ச்சியுடன் அனுமதித்தல்
  • சிசுப்பருவத்திலிருந்தே உங்கள் பிள்ளையை பயிற்றுவியுங்கள்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
  • குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளைப் பயிற்றுவித்தல்
    குடும்ப வாழ்க்கை
  • பிரிந்து செல்ல பயிற்சி
    விழித்தெழு!—1998
  • யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 1/22 பக். 9-12

வெறிச்சோடிய கூட்டில் மகிழ்ச்சி

எவ்வளவுதான் தயாராயிருந்தாலும், பிள்ளைங்க கடைசியாக பிரிஞ்சு போறாங்கன்றது நம்மில் ரொம்ப பேருக்கு அதிர்ச்சியாத்தான் இருக்குது” என்று ஒரு பெற்றோர் ஒத்துக்கொண்டார். ஆம், பிள்ளையின் பிரிவு தவிர்க்கமுடியாததாய் இருந்தாலும்கூட, அது உண்மையில் நடக்கும்போது, அதை கையாளுவது அவ்வளவு சுலபம் இல்லை. தன்னுடைய மகனுக்கு பிரியாவிடை கொடுத்த பிறகு தான் எப்படி உணர்ந்தாரென்பதை ஒரு தகப்பன் இவ்வாறு சொல்கிறார்: “என்னோட வாழ்க்கையில நான் இதுமாதிரி எப்பவுமே அழுததில்ல . . . , அழுது அழுது என் கண்ணுல இருந்த தண்ணியெல்லாம் வத்திப் போச்சு.”

பிள்ளைகள் பிரிந்து செல்வது பெரும்பாலான பெற்றோர்களுடைய வாழ்க்கையை சூனியமாக்குகிறது—ஆறாத புண்ணைப் போன்று. பிள்ளைகளை தினமும் பார்க்கவோ, பேசவோ முடியாததால், சில பெற்றோர் அளவுக்குமீறிய தனிமையுணர்ச்சியையும், வேதனையையும், பிரிவுத்துயரையும் அடைகிறார்கள். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க பெற்றோர் மட்டுமே திண்டாடுவதில்லை. தம்பதிகளான எட்வர்ட்டும் அவ்ரலும் இவ்விதமாக நமக்கு நினைப்பூட்டுகின்றனர்: “வீட்டில மத்த பிள்ளைங்க இருந்தாங்கன்னா, அவங்களும்கூட இதேமாதிரி கஷ்டப்படுவாங்க.” இத்தம்பதி என்ன ஆலோசனை கூறுகின்றனர்? “அதனால், அவங்ககூட நேரத்தை செலவழிச்சு, அவங்கள புரிந்துகொள்ளுங்க. அந்தச் சூழ்நிலையை சமாளிக்க அது அவங்களுக்கும் உதவும்.”

ஆம், வாழ்க்கைப் பயணம் தொடருகிறது. உங்களுக்கு பராமரிப்பதற்கு மற்ற பிள்ளைகள் இருந்தாலோ, வேலை, அன்றாட அலுவல்கள் இருந்தாலோ, துக்கத்தில் மூழ்கிவிட உங்களை நீங்கள் அனுமதிக்கக்கூடாது. எனவே பிள்ளைகள் வீட்டை விட்டு சென்றபிறகு, மகிழ்ச்சியைக் கண்டடைய சில வழிகளை கவனிக்கலாம்.

நல்ல காரியங்களில் மனதை ஒருமுகப்படுத்துங்கள்

நீங்கள் வருத்தமாகவோ தனியாகவோ உணர்ந்தால் அல்லது உங்களை புரிந்துகொள்ளும் நண்பரிடம் மனம் விட்டு பேசவோ அழவோ வேண்டுமென்று நினைத்தால் அவ்விதம் செய்வது மிகவும் நல்லது. பைபிள் இவ்வாறு சொல்கிறது: “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.” (நீதிமொழிகள் 12:25) காரியங்களை புதிய கோணத்தில் பார்ப்பதற்கு சில சமயங்களில் மற்றவர்கள் உங்களுக்கு உதவலாம். உதாரணமாக, வால்டெமார், மாரியானா தம்பதியினர் இவ்வாறு அறிவுறுத்துகின்றனர்: “இதை இழப்பா நினைக்காதீங்க, நம்மோட இலட்சியத்தை வெற்றிகரமா சாதிச்சுட்டோம்னு நினைங்க.” காரியங்களை நோக்குவதில் என்னே ஒரு சிறந்த வழி! “எங்களோட பசங்கள பொறுப்புள்ள பெரியவங்களா வளர்க்க முடிஞ்சத நினைக்கிறதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது” என்பதாக ரூடால்ப், ஹில்டா தம்பதியினர் சொல்கின்றனர்.

உங்கள் பிள்ளைகளை, “யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும்” வளர்ப்பதற்கு முயற்சித்திருக்கிறீர்களா? (எபேசியர் 6:4, NW) அப்படி வளர்த்திருந்தாலும்கூட, அவனோ அவளோ உங்களை பிரிந்து செல்லும்போது உங்களுக்கு கவலை ஏற்படும் என்பது வாஸ்தவம்தான். ஆனால், அவ்விதம் வளர்த்திருப்பவர்களுக்கு, “அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்று பைபிள் உத்தரவாதமளிக்கிறது. (நீதிமொழிகள் 22:6) உங்கள் பிள்ளை உங்களுடைய பயிற்றுவிப்புக்கு ஏற்ப வளர்ந்திருப்பதை காண்பது உங்களுக்கு மனநிறைவு அளிக்கவில்லையா? அப்போஸ்தலனாகிய யோவான் தன்னுடைய ஆவிக்குரிய குடும்பத்தைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.” (3 யோவான் 4) உங்கள் பிள்ளையைக் குறித்ததிலும் இதேவிதமான உணர்ச்சி உங்களுக்கு ஏற்படலாம்.

எல்லா பிள்ளைகளும் கிறிஸ்தவ பயிற்றுவிப்புக்கு ஏற்ப வளருவதில்லை என்பது உண்மைதான். உங்களுடைய வளர்ந்த பிள்ளையின் விஷயத்தில் இது உண்மையாக இருக்குமென்றால், ஒரு பெற்றோராக உங்களுக்கு பிள்ளையை வளர்க்கத் தெரியவில்லை என்று இது அர்த்தப்படுத்தாது. அவனை தேவபக்திக்குரிய விதத்தில் வளர்ப்பதற்கு உங்களால் ஆன எல்லாவற்றையும் செய்திருந்தீர்களென்றால், தேவையில்லாமல் உங்களை நீங்களே குற்றஞ்சாட்டிக் கொள்ளாதீர்கள். வயதுவந்த ஒரு நபராக கடவுளுக்கு முன்பு உங்கள் பிள்ளையும் கணக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறான் என்பதை புரிந்துகொள்ளுங்கள். (கலாத்தியர் 6:5) காலப்போக்கில் அவன் தன்னுடைய தெரிவுகளை மீண்டும் சிந்திப்பானென்றும், நீங்கள் எய்திய “அம்பு” அதன் இலக்கை அடையுமென்றும் நம்பிக்கையாய் இருங்கள்.—சங்கீதம் 127:5.

இன்னும் நீங்கள் பெற்றோர்தான்!

பிள்ளை உங்களை விட்டு பிரிந்து செல்வதென்பது நிறைய மாற்றங்களை ஏற்படுத்துவதென்னவோ உண்மைதான், இருந்தாலும், பெற்றோராக உங்களுடைய பொறுப்பு முடிந்துவிட்டது என்பதை இது அர்த்தப்படுத்தாது. மனநல நிபுணர் ஹோவர்ட் ஹல்பர்ன் இவ்வாறு சொல்கிறார்: “இறக்கும் வரை நீங்கள் உங்கள் பிள்ளைக்கு பெற்றோர்தான். ஆனால் இப்போது கொடுக்கிறதிலும், பராமரிப்பதிலும் நீங்கள் சிறிது மாற்றம் செய்துகொள்ள வேண்டும்.”

பிள்ளை பெரியதாக வளர்ந்துவிட்டதென்பதால் பெற்றோரின் கடமை முடிந்துவிடவில்லை என்று பைபிள் வெகு நாட்களுக்கு முன்னரே தெளிவாக்கியது. நீதிமொழிகள் 23:22 இவ்வாறு சொல்கிறது: “உன்னை பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.” ஆம், பெற்றோருக்கு ‘வயதாகிவிட்டாலும்,’ பெரியவர்களாகிவிட்ட பிள்ளைகளின் வாழ்க்கையில் அவர்கள் இன்னும் செல்வாக்கு செலுத்தமுடியும். சில சரிப்படுத்துதல்கள் செய்து கொள்ளவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், எல்லா உறவுகளையுமே புதுமைக்குன்றாமலும் திருப்தியுள்ளதாகவும் வைத்துக் கொள்வதற்கு அவ்வப்போது சிறுசிறு மாற்றங்கள் அவசியமாயிருக்கிறது. எனவே இப்போது உங்கள் பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால், அவர்களோடுள்ள உங்கள் உறவை வயதுவந்தவர்களின் தோரணைக்கேற்ப மாற்றிக்கொள்ளுங்கள். ஆர்வத்துக்குரியவிதமாக, பிள்ளைகள் வீட்டைவிட்டு சென்றபிறகு பெற்றோர்-பிள்ளை உறவு பெரும்பாலும் மேம்படுகிறது என்றே ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன! தினசரி வாழ்வின் பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்திப்பதால், பிள்ளைகள் பெரும்பாலும் தங்கள் பெற்றோரை புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்குகின்றனர். ஹார்ட்மூட் என்ற ஜெர்மானியர் இவ்வாறு சொல்கிறார்: “இப்ப நான் என்னோட பெற்றோர்களை ரொம்ப நல்லா புரிஞ்சுகிட்டேன்; அதோட சில காரியங்களை அவங்க ஏன் அப்படி செஞ்சாங்கன்னும் இப்பத்தான் எனக்கு புரியுது.”

வீணாக தலையிடாதீர்கள்

இருப்பினும், உங்களுடைய வளர்ந்த பிள்ளையின் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் வீணாக தலையிட்டால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படலாம். (1 தீமோத்தேயு 5:13, NW-ஐ ஒப்பிடுக.) தன்னுடைய கணவனின் பெற்றோரால் அதிகமான மனவுளைச்சலை அனுபவிக்கும் ஒரு பெண் இவ்வாறு புலம்புகிறாள்: “நாங்க அவங்கள நேசிக்கிறோம்; ஆனா எங்க வாழ்க்கையில யாரும் குறுக்கிடக்கூடாதுன்னும் சொந்தமா தீர்மானமெடுக்கனும்னுதான் நாங்க விரும்புறோம்.” எந்த அன்பான பெற்றோருமே தங்களுடைய வளர்ந்த பிள்ளைகள் பெரும் துன்பத்தில் சிக்கிக்கொண்டதைப் பார்த்துக்கொண்டு நிச்சயமாகவே சும்மா நிற்க மாட்டார்கள். ஆனால், உங்களுடைய ஆலோசனை எவ்வளவு ஞானமுள்ளதாக, அர்த்தமுள்ளதாக இருந்தாலும்சரி, உங்களிடம் கேட்கப்படாதபோது நீங்களாக போய் ஆலோசனைக் கொடுப்பதைத் தவிருங்கள். பிள்ளை திருமணம் செய்தபிறகு இது குறிப்பாக உண்மையாய் இருக்கிறது.

1983-ம் வருடத்தில் விழித்தெழு! இத்தகைய அறிவுரையைக் கொடுத்தது: “உங்களுடைய மாறிவிட்ட ஸ்தானத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தை நடக்க ஆரம்பிக்கையில் பால்கொடுப்பதை நிறுத்திக்கொண்டீர்கள். அதைப் போலவே, இப்போதும் பராமரிப்பாளர் என்ற உங்களுடைய விருப்பமான ஸ்தானத்தை ஆலோசகர் என்ற ஸ்தானத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பிள்ளைகளுடைய வாழ்க்கையின் இக்கால கட்டத்தில் நீங்கள் அவர்களுக்காக தீர்மானம் செய்வது, ஏப்பம் விடுவதற்காக அவர்களுடைய முதுகை தட்டுவதைப் போன்றோ பால்கொடுப்பதைப் போன்றோ அந்தளவு பொருத்தமற்றதாக உள்ளது. ஆலோசகராக, உங்களுக்கு குறிக்கப்பட்ட வரம்புகள் இருக்கின்றன. இனிமேலும் பெற்றோருக்குரிய அதிகாரத் தோரணையை நீங்கள் வெளிக்காட்ட முடியாது. (‘நான் சொல்றேனில்ல இத செய்யி.’) உங்களுடைய பிள்ளையின் வயதுக்கு மரியாதை காட்ட வேண்டும்.” a

உங்களுடைய பிள்ளை மற்றும் அவனுடைய அல்லது அவளுடைய துணை செய்யும் எல்லா தீர்மானங்களையும் உங்களால் ஒத்துக்கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால், திருமணத்தின் புனிதத்தன்மையை மதிப்பதானது உங்களுடைய அக்கறையை கட்டுப்படுத்திக் கொள்ளவும் தேவையில்லாமல் தலையிடுவதைத் தவிர்க்கவும் உதவும். உண்மையில், இளம் தம்பதிகள் தங்களுடைய பிரச்சினைகளை தாங்களாகவே தீர்த்துக்கொள்ள அனுமதிப்பதே பொதுவாக நல்லது. திருமண வாழ்க்கையின் இக்கட்டான சமயத்தில் இருக்கும்போது மருமகனோ மருமகளோ சாதாரணமாக ஏதாவது சொன்னாலும்கூட சீக்கிரம் புண்பட்டு விடலாம்; அத்தகைய சமயத்தில் நீங்கள் கொடுக்கும் தேவையற்ற ஆலோசனையால் வீணான சிக்கலை எதிர்ப்படுவீர்கள். மேலே குறிப்பிடப்பட்ட விழித்தெழு! கட்டுரை கூடுதலாக இவ்விதம் அறிவுரை கூறியது: “மருமகனையோ மருமகளையோ எதிரியாக மாற்றக்கூடிய முடிவற்ற, கேட்கப்படாத ஆலோசனைகளை கொடுப்பதற்கான தூண்டுதலை அடக்குங்கள்.” ஆதரவாக இருங்கள்—நினைப்பதை சாதிப்பவராக இராதீர்கள். உங்கள் பிள்ளையோடு நல்ல உறவை காத்துக் கொள்வதன் மூலம் ஆலோசனை உண்மையில் தேவைப்படுகையில் அவர் உங்களை அணுகுவதை எளிதாக்குகிறீர்கள்.

திருமண பிணைப்பை புதுப்பியுங்கள்

அநேக தம்பதிகளுக்கு, வெறிச்சோடிப்போன வீடு மண வாழ்க்கையின் மகிழ்ச்சியை அதிகரிப்பதற்கான வாய்ப்பை திறந்துவைக்கிறது. வெற்றிகரமான பெற்றோராயிருப்பதிலேயே தங்களுடைய நேரத்தையும் முயற்சியையும் பெரும்படியாக செலவழித்த தம்பதிகள் தங்களுக்கிடையே ஆன உறவை பொருட்படுத்தாமல் விட்டிருக்கலாம். ஒரு மனைவி இவ்வாறு சொல்கிறார்: “இப்போது பிள்ளைகள் சென்றுவிட்டதால், கான்ராடும் நானும், குழந்தைங்க பிறக்கறதுக்கு முன்னாடி எப்படி வாழ்ந்தோமோ அதேபோல ஒருத்தருக்காக ஒருத்தர் வாழ முயற்சி பண்றோம்.”

பெற்றோராயிருப்பதன் அன்றாட பொறுப்பிலிருந்து விடுபட்டவர்களாய், ஒருத்தருக்கொருத்தர் செலவிட உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கலாம். ஒரு பெற்றோர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இப்ப எங்களுக்கு நிறைய நேரம் இருக்கு. . . . அதனால் எங்களை பத்தி யோசிச்சு பாக்கவும், எங்களோட உறவிலிருந்து அதிகமா கத்துக்கவும், எங்க தேவைகளை பூர்த்தி செய்யற காரியங்கள்ல ஈடுபடவும் நாங்க கவனம் செலுத்தறோம்.” அவர் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “ஒருத்தரைப்பத்தி ஒருத்தர் நிறைய தெரிஞ்சிக்கவும், கணவன் மனைவிங்கிற உறவை வளர்த்துக்கிறதுக்குமான காலம் இது; திருமணமாகறதுக்கு முன்னாடி இருந்த வாழ்க்கையைப்போல இப்ப மாறினதுனாலேயும் இவ்வளவு காலமாக இருந்த வாழ்க்கைமுறை மாறிட்டதாலேயும் சிலசமயம் கொஞ்சம் சங்கடமா உணர்ந்தாலும்கூட, இந்த சூழ்நிலை உற்சாகமாவும் இருக்கு.”

சில தம்பதிகளுக்கு நிறைய பணமும்கூட மிச்சமாகிறது. பாதியில் நிறுத்திவிடப்பட்டிருந்த விருப்ப வேலைகளையும், வாழ்க்கைத் தொழிலையும் இப்போது தொடரலாம். யெகோவாவின் சாட்சிகளின் மத்தியிலுள்ள அநேக தம்பதிகள் புதிதாக கிடைத்த தங்களுடைய சுதந்திரத்தை ஆவிக்குரிய காரியங்களை முன்னேற்றுவிக்க பயன்படுத்துகிறார்கள். தன்னுடைய பிள்ளைகள் வீட்டை விட்டு சென்றபிறகு தானும் தன் மனைவியும் முழுநேர ஊழியத்தை உடனடியாக தொடர்ந்ததாக ஹெர்மான் என்ற தகப்பன் சொல்கிறார்.

பிரிந்து செல்ல அனுமதிக்கும் ஒற்றைப் பெற்றோர்

வெறிச்சோடிப்போன கூட்டில் வாழ்வது ஒற்றைப் பெற்றோருக்கு குறிப்பாக கடினமாக இருக்கலாம். இரண்டு பிள்ளைகளையுடைய ஒற்றைத் தாய் ரெபேக்கா இவ்வாறு விளக்குகிறார்: “பிள்ளைங்க வீட்டைவிட்டு போனப்புறம் எங்களோட இருக்கவும் அன்பு காண்பிக்கவும் எங்கள் கணவர் எங்களோடு இல்லையே.” தனியாக வாழும் தாய் ஒருத்தி தன் உணர்ச்சிப்பூர்வ தேவைகளுக்காக தன் பிள்ளைகளை சார்ந்திருக்கிறாள். அதோடு வீட்டுக்கு தங்கள் பங்கில் பிள்ளைகள் பணவுதவி செய்துவந்திருந்தால், அவர்களுடைய பிரிவு பணசம்பந்தமான நெருக்கடியையும் ஏற்படுத்தலாம்.

சிலர் பொருள்சம்பந்தமாக தங்களை பராமரித்துக் கொள்வதற்காக வேலை பயிற்சி திட்டங்களில் அல்லது குறுகிய கால பள்ளி பயிற்சிகளில் சேர்ந்துகொள்கிறார்கள். ஆனால், தனிமை என்கிற மிகப்பெரிய சூனியத்தை ஒருவர் எவ்விதம் நிரப்பலாம்? ஒற்றைத் தாய் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “எப்பவுமே என்னை பிஸியா வெச்சுக்கறது எனக்கு உதவி செய்யுது. அது, பைபிளை வாசிக்கிறது, வீட்டை சுத்தம் செய்யறது, வெளியில போய் கொஞ்சநேரம் சுறுசுறுப்பா நடந்திட்டு, இல்லைனா ஓடிட்டு வரது இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனா ஒரு ஆவிக்குரிய நண்பர்கிட்டே பேசறது தனிமையுணர்ச்சியைப் போக்கறதுக்கு எனக்கு ரொம்பவும் பலனுள்ள வழியா இருக்குது.” ஆம், ‘அன்பை விரிவாக்கி’ புதிய திருப்தியுள்ள நட்புறவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். (2 கொரிந்தியர் 6:13, NW) உங்களால் இனிமேலும் தாங்கமுடியாததாக உணரும்போது, ‘வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருங்கள்.’ (1 தீமோத்தேயு 5:5) இந்தக் கடினமான காலப்பகுதியை சமாளிக்க தேவையான பலத்தையும் ஆதரவையும் யெகோவா உங்களுக்கு கொடுப்பார் என்பதில் நிச்சயமாயிருங்கள்.

பிரிந்து செல்ல மகிழ்ச்சியுடன் அனுமதித்தல்

உங்களுடைய சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும்சரி, பிள்ளைகள் வீட்டைவிட்டு சென்றவுடன் வாழ்க்கை அதோடு முடிவடைந்துவிடுவதில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். குடும்ப உறவுகளும்கூட முடிந்துபோவதில்லை. பைபிளில் விவரிக்கப்பட்டிருக்கும் ஆரோக்கியமான அன்பு, தூரமாக வாழ்ந்தாலும்கூட மக்களை ஒன்றாக இணைக்கும் அளவுக்கு பலமுள்ளதாக இருக்கிறது. அன்பு, “சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது” என்று அப்போஸ்தலன் பவுல் நமக்கு நினைப்பூட்டுகிறார். (1 கொரிந்தியர் 13:7, 8) உங்கள் பிள்ளைகள் பிரிந்து செல்கிறார்கள் என்பதால் உங்கள் குடும்பத்தில் நீங்கள் வளர்த்திருக்கும் சுயநலமற்ற அன்பு ஒழிந்துபோய்விடாது.

ஆர்வத்துக்குரியவிதமாக, பிள்ளைகளுக்கு பிரிவின் துயரமும் வீட்டைப் பற்றிய ஏக்கமும் ஏற்படும்போதும் அல்லது பொருளாதார நெருக்கடியின் துன்பங்களை உணர ஆரம்பிக்கும்போதும், பெரும்பாலும் அவர்கள்தாமே பெற்றோருடன் முதலில் தொடர்பு கொள்வார்கள். ஹான்ஸூம் இங்கிரிட்டும் இவ்வாறு ஆலோசனை சொல்கிறார்கள்: “உங்கள் வீட்டின் கதவு அவர்களுக்காக எப்போதுமே திறந்திருக்கிறதென்று பிள்ளைகள் தெரிந்திருக்கட்டும்.” தவறாமல் சென்று சந்திப்பது, கடிதம் எழுதுவது, அல்லது எப்போதாவது தொலைபேசியில் உரையாடுவது போன்றவை அவர்களோடு தொடர்ந்து தொடர்பு வைத்திருக்க உதவும். “அவர்களுடைய அலுவல்களை வேவுபார்க்காமல் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் ஆர்வம் கொள்ளுங்கள்” என்று ஜாக், நோரா தம்பதியினர் இதை விவரிக்கின்றனர்.

பிள்ளைகள் வீட்டைவிட்டு செல்லும்போது உங்கள் வாழ்க்கை மாறுகிறது. ஆனால் வெறிச்சோடிப்போன கூட்டிலும்கூட உங்கள் வாழ்க்கை சுறுசுறுப்பாக, செயல்மிக்கதாக, திருப்தியுள்ளதாக இருக்கமுடியும். அதோடு உங்கள் பிள்ளைகளோடுள்ள உங்கள் உறவும் மாறுகிறது. இருப்பினும், அது இன்னும் சந்தோஷமான திருப்தியான உறவாக இருக்கமுடியும். பேராசிரியர்களான ஜெப்ரி லி மற்றும் கேரி பீட்டர்ஸன் இவ்வாறு சொல்கின்றனர்: “பிள்ளைகள் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து சென்று தனி வாழ்க்கையை அமைத்துக்கொள்வதென்பது பெற்றோர்மீதான அன்பு, உண்மைத்தன்மை அல்லது மதிப்பு ஆகியவற்றை இழந்துவிட்டதை அர்த்தப்படுத்தாது. . . . உண்மையில், பலமான குடும்ப பந்தங்கள் பெரும்பாலும் வாழ்க்கைச்சூழற்சி முழுவதற்கும் தொடர்ந்து இருக்கும்.” ஆம், நீங்கள் உங்கள் பிள்ளைகளை நேசிப்பதை ஒருபோதும் நிறுத்த மாட்டீர்கள்; அதோடு நீங்கள் பெற்றோராயிருப்பதும் ஒருகாலும் முடிவடையாது. உங்கள் பிள்ளை தனியாக வாழ்க்கை நடத்த அனுமதிக்குமளவுக்கு நீங்கள் அவர்களை நேசித்திருக்கிறீர்கள் என்பதால், உண்மையில் நீங்கள் அவர்களை இழந்துவிடவில்லை.

[அடிக்குறிப்பு]

a பிப்ரவரி 8, 1993 ஆங்கில விழித்தெழு!-வில் “பெற்றோராக உங்கள் கடமை முடிவடைவதில்லை” என்ற கட்டுரையைக் காண்க.

[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]

“என்னோட வாழ்க்கையில நான் இதுமாதிரி எப்பவுமே அழுததில்ல . . . , அழுது அழுது என் கண்ணுல இருந்த தண்ணியெல்லாம் வத்திப் போச்சு”

[பக்கம் 10-ன் பெட்டி/படம்]

வளர்ந்த பிள்ளைகளுக்கு ஒரு ஆலோசனை—பிரிந்து செல்வதை எளிதாக்க பெற்றோருக்கு உதவுங்கள்

பிரிந்து செல்வது சுலபம்; பிரிவின் துயரை தாங்குவதுதான் மிகவும் கஷ்டம். எனவே இப்போது தனிப்பறவையாக, வயதுவந்தவராக வாழ்க்கையில் நீங்கள் மகிழ்கிறபோதிலும், உங்கள் பெற்றோர் இச்சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள கஷ்டப்படுவார்களென்றால் அவர்களிடத்தில் தயவோடும் புரிந்துகொள்ளுதலோடும் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்கள்மேல் தொடர்ந்து அன்பையும் பாசத்தையும் கொண்டிருக்கிறீர்கள் என்று அவர்களுக்கு உறுதிப்படுத்துங்கள். ஒரு சுருக்கமான கடிதம், எதிர்பாராத பரிசு, அல்லது ஒரு நட்பான தொலைபேசி அழைப்பு போன்றவை வாடியிருக்கும் பெற்றோரை குஷிப்படுத்த அதிகத்தை செய்யும்! உங்களுடைய வாழ்க்கையில் நடந்த குறிப்பிடத்தக்க சம்பவங்களை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். குடும்பப் பிணைப்பு இன்னும் பலமாகத்தான் இருக்கிறது என்று இது அவர்களுக்கு தெரியப்படுத்தும்.

வயதுவந்தவராக வாழ்க்கையின் அழுத்தங்களை நீங்கள் எதிர்ப்படும்போது, உங்களை சீராட்டி பாராட்டி வளர்ப்பதற்கு உங்கள் பெற்றோர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்கள் என்பதை எப்போதைக் காட்டிலும் இப்போது அதிகமாக போற்றுவீர்கள். ஒருவேளை உங்கள் பெற்றோரிடம் இவ்வாறு சொல்லும்படி இது உங்களை தூண்டும்: “நீங்க எனக்காக செஞ்ச எல்லாத்துக்கும் உங்களுக்கு நன்றி!”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்